Published:Updated:

அலட்சியப்போக்கில் மின்சார வாரியம்... பறிபோகும் உயிர்கள்!

அலட்சியப்போக்கில் மின்சார வாரியம்
பிரீமியம் ஸ்டோரி
News
அலட்சியப்போக்கில் மின்சார வாரியம்

திருச்சி திடுக்

தாழ்ந்து தொங்கும் மின்கம்பிகள், அறுந்து விழுந்த மின்கம்பிகள் போன்றவற்றால் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்வதால், அதிர்ச்சியில் இருக்கிறது திருச்சி மாவட்டம்.

திருச்சி, மணிகண்டம் பகுதியை அடுத்துள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் 2019 டிசம்பர் 22 அன்று, தாயார் ஒப்பாயி மற்றும் மகன் குணசேகரன் ஆகியோருடன் நெல் வயலுக்கு உரமிடச் சென்றார். அப்போது அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்துவிட்ட குணசேகரன், மின்சாரம் தாக்கி அடுத்த விநாடியே சுருண்டு இறந்துவிட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற ஒப்பாயி, ராமமூர்த்தி ஆகியோரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தில் மூன்று பேர் பலியான சம்பவம், அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியது. வீட்டுக்காக உழைத்துச் சம்பாதித்த இரண்டு ஆண்களும் இறந்துபோனதால், நிர்க்கதியில் இருக்கிறது ராமமூர்த்தியின் குடும்பம்.

தாழ்வாகச் செல்லும் மின்கம்பி
தாழ்வாகச் செல்லும் மின்கம்பி

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த பரனூரைச் சேர்ந்தவர் மகேந்திரன். 2019, நவம்பர் 20 அன்று, மகேந்திரனின் மனைவி சந்தியா ‘எர்த் கம்பி’யின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்தக் கம்பியிலிருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டார். அவரைக் காப்பாற்ற முயற்சி செய்த மகேந்திரனும் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார். இவர்களின் இரண்டு குழந்தைகளும் தற்போது பாட்டியின் அரவணைப்பில் இருக்கின்றனர். ‘அம்மா எங்கே?’ எனக் கேட்கும் இளம் குழந்தைகளுக்கு பதில் சொல்ல முடியாமல், தவித்துவருகிறார் மகேந்திரனின் அம்மா லெட்சுமி. ‘மின் ஊழியர்கள் கவனிக்காமல் விட்டதால், எர்த் கம்பியில் மின்சாரம் பாய்ந்ததுதான் இந்த விபத்துக்குக் காரணம்’ என்று சொல்லியிருக்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.

இதேபோல், 2019 ஆகஸ்ட் 10 அன்று, மணப்பாறை அருகே உள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்த ஜான்சிராணி மற்றும் அவரின் கணவர் தர்மர் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். 2019 ஆகஸ்ட் 18 அன்று, துறையூர் பள்ளிநத்தத்தைச் சேர்ந்த பழனியம்மாள், அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்றியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 2019 டிசம்பர் 21 அன்று, திருச்சி வேதாந்திரி நகரைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரின் மகன் செந்தில் ஆகியோர், மின் கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். ஜனவரி 18-ம் தேதி, இனாம்புலியூரைச் சேர்ந்த அங்காயி என்பவர் மின் விபத்தில் பலியானார்.

அலட்சியப்போக்கில் மின்சார வாரியம்
அலட்சியப்போக்கில் மின்சார வாரியம்

துறையூர் அடுத்த மாராடி கிராமத்தைச் சேர்ந்த குமார், மின்கம்பத்தில் பழுது நீக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பெருகமணியைச் சேர்ந்த மாணவர் அஜீத்குமார் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இப்படி மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. மின்வாரியப் பணியாளர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்த விபத்துகளில்தான் பெரும்பாலானோர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து மின்வாரிய பணியாளர்களிடம் பேசியபோது, ‘‘முன்பெல்லாம் நல்ல தரமான மின்கம்பிகளை வாங்கிப் பொருத்தினார்கள். அவை 50 ஆண்டுகள்கூட உழைக்கும். தற்போது மின்வாரியம் வாங்கும் கம்பிகள் தரமற்றவையாக இருக்கின்றன. அதனால்தான் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. அதேபோல் மின்கம்பமும் சரியாகத் தயாரிக்கப்படுவதில்லை. ஆட்கள் பற்றாக்குறை, நிதி ஒதுக்கீடு செய்யாதது போன்ற காரணங்களால் புதிதாக ஊன்றும் கம்பங்களையும் சரியான முறையில் ஊன்றுவதில்லை. இப்படி பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டேபோகலாம். இதுபோன்ற விஷயங்கள்தான் விபத்துக்குக் காரணமாக அமைகின்றன’’ என்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் திருச்சி பெருநகர மேற்பார்வைப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது, ‘‘தமிழகம் முழுவதும் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து ஆய்வு செய்துவருகிறோம். பொதுமக்கள், தங்கள் பகுதி களில் மின்கம்பிகள், கம்பங்கள் சேதமடைந்து இருந்தாலோ, மின்கம்பிகள் பாதுகாப்பற்ற முறையில் இருந்தாலோ 1912 என்ற எண்ணுக்கு தகவல் சொல்லலாம். மேலும், 94861 11912 என்ற எண்ணுக்கு திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, கரூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வாட்ஸப் மூலமும் தகவல் அனுப்பலாம்.

அலட்சியப்போக்கில் மின்சார வாரியம்... பறிபோகும் உயிர்கள்!

அதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மின்சாரம் தாக்கி இறந்துபோன சம்பவங்களில் விபத்தின் காரணம்குறித்து விசாரணை செய்து, உயிரிழந்த வர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்’’ என்றவர்,

‘‘மின் விபத்தில் சிக்கிய நபரை, எக்காரணத்தைக் கொண்டும் தொடக் கூடாது. அந்த நேரத்தில், நிதானமாகச் செயல்பட வேண்டும். இல்லை யெனில், பலி எண்ணிக்கை கூடிவிடும். மின் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டும். யு.பி.எஸ் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். வீடுகளில் மின் விபத்துகளைத் தடுத்திட இ.எல்.சி.பி எனும் நவீன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால், இழப்புகளைத் தடுக்கலாம்’’ என்றார்.