Published:Updated:

வீதியெங்கும் மரண ஓலங்கள்... தொடர்ச்சியாக எரியும் சடலங்கள்! - அலட்சிய புதுச்சேரி அரசு

புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி

104 எண்ணைத் தொடர்புகொண்டால், ‘‘படுக்கைகள் விவரத்தை இணையத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்று அலட்சியமாகக் கூறுகிறார்கள்.

வீதியெங்கும் மரண ஓலங்கள்... தொடர்ச்சியாக எரியும் சடலங்கள்! - அலட்சிய புதுச்சேரி அரசு

104 எண்ணைத் தொடர்புகொண்டால், ‘‘படுக்கைகள் விவரத்தை இணையத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்று அலட்சியமாகக் கூறுகிறார்கள்.

Published:Updated:
புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, ஒட்டுமொத்த புதுச்சேரியையும் சிதைத்துப் போட்டிருக்கிறது. அந்த மாநிலத்தின் வீதிகள் மரண ஓலங்களால் திணறிக்கொண்டிருக்கின்றன. இடைவிடாமல் எரிக்கப்படும் சடலங்களின் நெடியைத் தாங்க முடியாமல் மயானங்களைச் சுற்றிக் குடியிருக்கும் மக்கள், உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைகிறார்கள். மக்களின் அலட்சியத்தாலும், சுகாதாரத்துறையின் குளறுபடிகளாலும் கொத்துக் கொத்தாக உயிர்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது கொரோனா.

புதுச்சேரியில் எம்.எல்.ஏ-க்களும் அமைச்சரவையும் இன்னும் பதவியேற்காத நிலையில், மாநில நிர்வாகத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கவனித்து வருகிறார். அவர் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் காட்டிவரும் அலட்சியத்தால், தொடக்கம் முதலே அசுர வேகத்தில் சீறிப்பாய்கிறது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை. ‘முழு ஊரடங்கு தேவை’ என்று மருத்துவர்கள் கூறியபோது கேட்காத அதிகாரிகள், தொற்றின் எண்ணிக்கை நாளொன்றுக்கு இரண்டாயிரத்தைத் தாண்டியபோதுதான் பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்தினார்கள். முழு ஊரடங்கை இதுவரை அமல்படுத்தவில்லை. இப்போது கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 40 முதல் 50-ஆக இருக்கிறது. இதன்படி மக்கள்தொகையின் அடிப்படையில், இந்திய அளவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் இரண்டாமிடத்தில் இருக்கிறது புதுச்சேரி.

வீதியெங்கும் மரண ஓலங்கள்... தொடர்ச்சியாக எரியும் சடலங்கள்! - அலட்சிய புதுச்சேரி அரசு

‘‘கொரோனா தொற்றுக்குத் தேவையான மருந்துகளும், ஆக்ஸிஜன் படுக்கைகளும், வென்டிலேட்டர்களும் தயாராக இருக்கின்றன. அரசு மருத்துவமனைகளிலும், ஆறு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தலா 300 படுக்கைகள் தயாராக இருக்கின்றன. இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 65, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் 280 என வென்டிலேட்டர் வசதிகளுடன் படுக்கைகள் இருக்கின்றன. 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கைகளின் விவரத்தைத் தெரிந்துகொள்ளலாம்’’ என்று ஆளுநர் தமிழிசை அடுக்கினாலும், மூச்சுத்திணறலுடன் மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகள் ‘படுக்கைகள் இல்லை’ என்று திருப்பி அனுப்பப்படுவது தொடர்கிறது. 104 எண்ணைத் தொடர்புகொண்டால், ‘‘படுக்கைகள் விவரத்தை இணையத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்று அலட்சியமாகக் கூறுகிறார்கள். இணையத்தில் படுக்கைகள் காலியாக இருக்கும் விவரத்தைப் பார்த்து ஒவ்வொரு மருத்துவமனையாகச் செல்லும் நோயாளிகள், அலைக்கழிக் கப்பட்டே உயிரை விடுகிறார்கள்.

சுகாதாரத்துறையின் செயல்பாட்டை அறிய 104-ஐ தொடர்புகொண்டு ‘‘65 வயது தொற்றாளருக்கு ஆக்ஸிஜன் குறைந்துவிட்டது. எங்கு படுக்கை இருக்கிறது?’’ என்று கேட்டோம். அதற்கு, ‘‘இன்டர்நெட்டில் கலிமா ஏஜென்சியைத் தேடித் தொடர்புகொள்ளுங்கள். வேறு எங்கும் இல்லை’’ என்று தொடர்பைத் துண்டித்து விட்டனர். அதன் பிறகு அந்த நிறுவனத்தின் எண்ணைக் கண்டுபிடித்து தொடர்புகொண்ட போது யாரும் போனை எடுக்கவில்லை. அவர்கள் கூறிய அந்த நிறுவனம் ஆக்ஸிஜன் விற்பனை செய்யும் தனியார் நிறுவனம். இந்த லட்சணத்தில்தான் செயல்படுகிறது சுகாதாரத்துறை.

‘‘புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை, கதிர்காமத்தில் இயங்கும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, புதுச்சேரி அரசு மருத்துவமனை மட்டுமின்றி மேலும் ஆறு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் தரமான கொரோனா சிகிச்சை வழங்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கிறார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். ஆனால், முதல்வர் ரங்கசாமி தொடங்கி முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ-க்கள், அரசு உயரதிகாரிகள் வரை தொற்று ஏற்பட்டவுடன் சிகிச்சைக்காக சென்னையை நோக்கிப் படையெடுக்கிறார்கள் என்றால், ‘இங்கிருக்கும் மருத்துவமனைகளின் தரம்தான் என்ன?’ என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

இது ஒருபுறமிருக்க... 600 சிறப்பு சிகிச்சை நிபுணர்கள், 130 மருத்துவ அதிகாரிகள், 2,600 செவிலியர்கள், 1,200-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களுடன் 2,000 படுக்கைகளைக் கொண்ட ஜிப்மர் மருத்துவமனை, தொற்றைக் காரணம் காட்டி வெளிப்புற சிகிச்சையை நிறுத்திக்கொண்டதுடன், வெறும் 250 கொரோனா தொற்றாளர்களுக்கு மட்டும் சிகிச்சை கொடுப்பதுடன் ஒதுங்கிக்கொண்டது. ‘‘ஜிப்மர் மருத்துவமனை சுமார் 1,700 கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கலாம். ஆனால், மத்திய அரசு அதைச் செய்ய முன்வரவில்லை’’ என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வருத்தமாகச் சொல்கிறார்.

வீதியெங்கும் மரண ஓலங்கள்... தொடர்ச்சியாக எரியும் சடலங்கள்! - அலட்சிய புதுச்சேரி அரசு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகள், தொற்று உறுதிசெய்யப்படும் ஒருவரை உடனே கொரோனா சிறப்பு மருத்துவமனையான இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள். அனைவரும் அங்கேயே குவிவதால் படுக்கைகள் இல்லாமல் தரையிலும், கொரோனா தொற்றால் இறந்த உடல்களுக்கு மத்தியிலும் சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. ‘‘தொற்று உறுதி செய்யப்படும் ஒருவரை, படுக்கை இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க 104 வார் ரூம் பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும். அப்படிச் செய்தால், அந்த நோயாளியின் அலைச்சலும் மிச்சமாகும்; அவரால் மற்றவர்களுக்குத் தொற்று ஏற்படும் அபாயமும் குறையும்’’ என்கிறார்கள் இந்திராகாந்தி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள்.

சுகாதாரத்துறைச் செயலர் அருணிடம் பேசினோம். ‘‘தொற்று அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனையை அணுகுங்கள் என்று வலியுறுத்திவருகிறோம். ஆனால், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் வைக்கும் நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு வருவதால்தான் படுக்கைகள் பற்றாக்குறையும், இறப்புகளும் ஏற்படுகின்றன. முதல் அலையில் இருந்ததைவிட நான்கு மடங்கு ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரித்திருக்கிறோம். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 65 வென்டிலேட்டர்கள் இருக்கின்றன. மக்களும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். 104 விவகாரம் குறித்து உடனே விசாரிக்கிறேன்’’ என்றார்.

முதல்வர் ரங்கசாமியும் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்போதுதான் வீடு திரும்பியிருக்கிறார். அமைச்சர்கள் பங்கீட்டில் ஏற்பட்டிருக்கும் இழுபறியால் எம்.எல்.ஏ-க்களும் அமைச்சரவையும் பதவியேற்கவில்லை. பேரிடர் காலத்தில் மொத்தமாக புதுச்சேரி அரசு முடங்கிக்கிடக்கும் நிலையில், நிர்வாகத்தை கவனித்து வரும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்தான் ஒட்டுமொத்த குளறுபடிகளுக்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism