Published:Updated:

கோடிகள்... பிளாட்... பிக்னிக்... கார்... மறைமுக பேரம்... கரன்சி கொட்டும் தேர்தல்!

மறைமுக பேரம்...
பிரீமியம் ஸ்டோரி
மறைமுக பேரம்...

இந்தச் சுயேச்சைகள் ஆறு பேருமே தி.மு.க-வில் சீட் கொடுக்காததால் தனித்து நின்று வெற்றிபெற்றவர்கள். இவர்களில் நான்கு பேர் தற்போது தி.மு.க-வை ஆதரிக்கிறார்கள்.

கோடிகள்... பிளாட்... பிக்னிக்... கார்... மறைமுக பேரம்... கரன்சி கொட்டும் தேர்தல்!

இந்தச் சுயேச்சைகள் ஆறு பேருமே தி.மு.க-வில் சீட் கொடுக்காததால் தனித்து நின்று வெற்றிபெற்றவர்கள். இவர்களில் நான்கு பேர் தற்போது தி.மு.க-வை ஆதரிக்கிறார்கள்.

Published:Updated:
மறைமுக பேரம்...
பிரீமியம் ஸ்டோரி
மறைமுக பேரம்...

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தலைமைப் பொறுப்புகளுக்கான மறைமுகத் தேர்தல், மார்ச் 4-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில், தங்களுக்குப் பெரும்பான்மை இல்லாத இடங்களில், கவுன்சிலர்களை இழுக்க கட்சிகள் நடத்தும் பேரங்கள் குறித்த செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கொலுசு, குக்கர், ஹாட் பாக்ஸ், வெள்ளி - தங்க நாணயம், 20,000 ரூபாய் வரை பணம் என மக்களின் வாக்குகளைப் பெற கரைவேட்டிகள் வாரி இறைத்தனர். தற்போது கவுன்சிலர்களை இழுக்க, கார், பிளாட், பிக்னிக் தொடங்கி உடனடி செட்டில்மென்ட்டாக லட்சத்தில் தொடங்கி கோடிகளில் நடக்கிறது பேரம்!

மொத்தமுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைமைப் பதவிகளில், பெரும்பான்மையான இடங்களைப் பிடிக்கும் அளவுக்கு தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். அப்படி இல்லாத ஒருசில இடங்களில்தான் இந்தக் களேபரங்கள் நடந்துவருகின்றன. கரூர், வேலூர், பெரம்பலூர், திருப்பத்தூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, ஈரோடு மாவட்டங்களைப் பொறுத்தவரை பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் அனைத்து இடங்களும் ஆளும் தரப்பின் வசமாகிவிட்டன. மீத இடங்களில்தான் பேரங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்தப் பேரத்தில், ஆளும் தி.மு.க மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியான அ.தி.மு.க தொடங்கி பல்வேறு கட்சிகளும் இறங்கியிருப்பதுதான் ஹைலைட்!

ஓசூர் மட்டுமே தலைவலி... ஆளுக்கு ஒரு கோடி!

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில், 20 மாநகராட்சிகள் ஆளும் தி.மு.க கூட்டணியின் வசமாகியிருக்கின்றன. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் மாநகராட்சி மட்டுமே இன்னும் இழுபறி நிலையில் நீடித்துவருகிறது. அங்கு மொத்தமுள்ள 45 இடங்களில், தி.மு.க 21 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடத்திலும், அ.தி.மு.க 16 இடங்களிலும், பா.ஜ.க., பா.ம.க தலா 1 இடத்திலும், சுயேச்சைகள் 5 பேரும் வெற்றிபெற்றிருக்கின்றனர். மேயர் பதவியைப் பிடிக்க ஆளும் தரப்புக்கு இன்னும் ஒரு கவுன்சிலரின் ஆதரவு வேண்டும். அ.தி.மு.க-வுக்கு இன்னும் ஏழு கவுன்சிலர்களின் ஆதரவு வேண்டும். இந்த நிலையில், ரெடியாக ஒரு கோடி ரூபாய், இன்னோவா கார் ஆஃபருடன் கவுன்சிலர்களை இழுப்பதற்குக் கடும் பேரம் நடந்துவருகிறது. தி.மு.க சார்பில் முன்னாள் புள்ளி ஒருவரும், அ.தி.மு.க சார்பில் முன்னணி நிர்வாகி ஒருவரும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள். தவிர, தங்கள் கட்சி கவுன்சிலர்களைக் குளிர்வித்து, கூடவே வைத்துக்கொள்ள கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு பிக்னிக் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மாநகராட்சியில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் யாருமே இப்போது ஓசூரில் இல்லை என்பதுதான் கள நிலவரம்.

கோடிகள்... பிளாட்... பிக்னிக்... கார்... மறைமுக பேரம்... கரன்சி கொட்டும் தேர்தல்!

குமாரபாளையம் குஸ்தி... அ.தி.மு.க - தி.மு.க கூட்டு!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில், தி.மு.க 14, அ.தி.மு.க 10, சுயேச்சைகள் 9 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளனர். தி.மு.க-வுக்கு இன்னும் மூன்று கவுன்சிலர்களும் அ.தி.மு.க-வுக்கு ஏழு கவுன்சிலர்களின் ஆதரவும் வேண்டும். இரண்டு தரப்புமே ஆரம்பத்தில் சுயேச்சைகளிடம் தனித்தனியே பேரம் பேச ஆரம்பித்தன. ஆனால், யாரும் எதிர்பார்க்காதவாறு சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற ஒரு புள்ளி, 7 தி.மு.க கவுன்சிலர்கள், 7 சுயேச்சைகள், 3 அ.தி.மு.க கவுன்சிலர்களை வளைத்து இரண்டு பெரிய கட்சிகளுக்கும் டஃப் கொடுத்திருக்கிறார். குறைந்தபட்சம் ரூ. 25 லட்சம் தொடங்கி அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரை ஒரு தலைக்குத் தொகை நிர்ணயித்துள்ளாராம். மீதியுள்ள ஒரு சுயேச்சை கவுன்சிலர், தி.மு.க-வுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆனால், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் தங்கமணிக்கும், தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்திக்கும் இது கௌரவப் பிரச்னை என்பதால், அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ‘ரகசிய உடன்பாடு’ செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது, ‘தி.மு.க-வுக்கு நகராட்சி தலைவர்; அ.தி.மு.க-வுக்கு நகராட்சித் துணைத் தலைவர் பதவி’ என்பதுதான் டீல். ஆனால், சுயேச்சையான ‘பேர’ புள்ளிக்கு 17 கவுன்சிலர்களின் ஆதரவு இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க சேர்ந்தாலும்கூட 15 தலைகள்தான் வருகின்றன. தி.மு.க., அ.தி.மு.க ‘கூட்டணிக்கு’ இன்னும் இரண்டு கவுன்சிலர்கள் தேவைப்படுவதால், அவர்களும் கவுன்சிலர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இதனால், ‘பேரத் தொகை’ ஐபிஎல் ஏலம்போல நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது என்கிறார்கள்.

சீர்காழி ஜாக்பாட்... ஆளுக்கொரு பிளாட்!

சீர்காழி நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில், தி.மு.க. - 11, ம.தி.மு.க - 1 , அ.தி.மு.க - 4, பா.ம.க - 2, சுயேச்சைகள் - 6 இடங்களில் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்தச் சுயேச்சைகள் ஆறு பேருமே தி.மு.க-வில் சீட் கொடுக்காததால் தனித்து நின்று வெற்றிபெற்றவர்கள். இவர்களில் நான்கு பேர் தற்போது தி.மு.க-வை ஆதரிக்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் இந்த நகராட்சியை ம.தி.மு.க விடாப்பிடியாகக் கேட்டுவருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை, மேல்மட்டத்தில் முடிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ம.தி.மு.க-வின் தொழில்புள்ளி ஒருவர், தங்களை ஆதரிக்கும் கவுன்சிலர்களுக்குத் தலைக்கு ரூ.30 லட்சம் பெறுமானமுள்ள பிளாட் மற்றும் தேர்தலில் செய்த செலவுத்தொகை தரப்படும் எனப் பேரம் பேசிவருகிறார்.

செங்கம் டீல்... ஒரு ‘கோடி’யும் பதவியும்!

18 வார்டுகளைக்கொண்ட செங்கம் பேரூராட்சியில், நேரடியாக தி.மு.க 8 வார்டுகளையும், அ.தி.மு.க 7 வார்டுகளையும், பா.ம.க., பா.ஜ.க மற்றும் மனித நேய மக்கள் கட்சிகள் தலா ஒரு இடத்தையும் கைப்பற்றின. பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, இரண்டு கட்சிகளும் முட்டி மோதி வருகின்றன. இந்நிலையில், 18-வது வார்டில் வெற்றிபெற்ற பா.ம.க கவுன்சிலர் கடத்தப்பட்டதாகவும், அவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்றும் அக்கட்சியின் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. அவர் விடுவிக்கப் பட்டதையடுத்து, சாலைமறியல் முடிவுக்கு வந்தது. இந்தக் களேபரங்களுக்குப் பிறகு, ‘ஆதரவு தர வேண்டுமென்றால், ஒரு கோடி ரூபாய் ரெடி கேஷ் மற்றும் துணைத் தலைவர் பதவி’ என்று ஒரு கவுன்சிலர் தரப்பில் வைத்த டிமாண்டை ஏற்றுக்கொண்டு டீலை முடித்திருக்கிறது ஆளும் தரப்பு. இதேபோல தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியிலும் பா.ம.க கவுன்சிலர்களுக்கு 50 லட்சம் பணமும் து.தலைவர் பதவியும் தருவதாக தி.மு.க., அ.தி.மு.க இரண்டு தரப்பிலும் பேரம் பேசப்பட்டுவருகிறது.

தலைசுற்றவைக்கும் தக்கோலம்... ஆதரவுக்கு ஒரு கோடி!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மொத்தமுள்ள ஆறு நகராட்சிகளையும் தி.மு.க தன் வசமாக்கியுள்ளது. அதேபோல மொத்தமுள்ள எட்டு பேரூராட்சிகளில், நான்கில் தி.மு.க கூட்டணி பலமாக உள்ளது. கலவை பேரூராட்சியில் அ.தி.மு.க மெஜாரிட்டியுடன் கைப்பற்றும் நிலையில் உள்ளது. ஆனால், மீதமுள்ள, அம்மூர், நெமிலி, தக்கோலம் ஆகிய மூன்று பேரூராட்சிகளில்தான் இழுபறி நீடிக்கிறது. அதிலும் தக்கோலம் பேரூராட்சியில், மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க-7, அ.தி.மு.க-6, சுயேச்சை-1, பாமக-1 இடங்களைப் பிடித்திருக்கிறார்கள்.

இதில், கூடுதலாக ஒரு கவுன்சிலரின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே தி.மு.க., தலைவர் பதவியைப் பிடிக்க முடியும். பா.ம.க-வும், சுயேச்சையும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக இருப்பதால், பணப் பேரம் நடக்கிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு கவுன்சிலரை இழுக்க தி.மு.க தரப்பில் ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டிருப்பதாக, தலைசுற்றவைக்கிறார்கள்.

குற்றாலத்தில் நடக்கும் குதிரைப் பேரம்!

ஓட்டுக்கே அதிக தொகை கொடுத்த குற்றாலம் பேரூராட்சியில், கவுன்சிலர்களுக்கான பேரமும் களைகட்டுகிறது. இங்குள்ள எட்டு வார்டுகளில், தி.மு.க மற்றும் அ.தி.மு.க சார்பாக, தலா நான்கு வார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனால் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளைக் கைப்பற்ற இரண்டு கட்சிகளுக்குமிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இரு தரப்பும் கடுமையான குதிரைப் பேரத்தில் ஈடுபட்டுவருகின்றன. தங்கள் கவுன்சிலர்கள் மாற்றுக் கட்சிக்குச் சாதகமாக வாக்களித்துவிடக் கூடாது என்பதற்காக, இரண்டு கட்சியினருமே கவுன்சிலர்களை வெளியூர்களில் அறையெடுத்து தங்கவைத்துள்ளனர். ஆளுங்கட்சியினர் பேரூராட்சியைக் கைப்பற்ற, தலைக்கு 50 லட்சம் எனத் தொடங்கிய பேரம் தற்போது கோடியை எட்டியுள்ளதாகக் கிசுகிசுக்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

நீடாமங்கலத்தில் மல்லுக்கட்டும் அ.தி.மு.க!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள். இங்கு தி.மு.க 7 வார்டுகளிலும், அ.தி.மு.க 7 வார்டுகளிலும் வெற்றிபெற்று சம பலத்தில் உள்ளன. ஒரு வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றுள்ளது. பேரூராட்சித் தலைவர் தேர்வுக்கு நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தலில், 7 தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியான சி.பி.எம் கட்சியின் கவுன்சிலரும் தி.மு.க-வின் தலைவர் வேட்பாளருக்கு வாக்களித்தால், அவர்தான் வெற்றிபெறுவார். ஆனால், நீடாமங்கலம் பேரூராட்சித் தலைவர் பதவியைக் கண்டிப்பாகக் கைப்பற்றியே தீர வேண்டும் என்பதில் அ.தி.மு.க தரப்பு முனைப்பாக இருக்கிறது. டெல்டா மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் பெரும்பாலான வார்டுகள், தி.மு.க வசம் சென்றுவிட்ட நிலையில், நீடாமங்கலம் பேரூராட்சி மட்டும்தான் அ.தி.மு.க-வுக்கு வெற்றிபெற ஓரளவுக்குச் சாதகமாக உள்ளது. இதனால் அ.தி.மு.க தரப்பில், தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்கான காய்நகர்த்தலில், கவுன்சிலர்களுக்கு 20 முதல் 50 லட்சம் வரை பேரம் பேசப்படுகிறதாம்.

பரபரக்கும் பட்டுக்கோட்டை!

பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் தி.மு.க கூட்டணி 13 வார்டுகளிலும், அ.தி.மு.க கூட்டணி 13 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தி.மு.க-வில் சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 7 பேர் வெற்றிபெற்றுள்ளனர். தி.மு.க-வுக்குள்ளேயே 3 பேர் சேர்மன் பதவியைப் பிடிக்க முயன்று வருகின்றனர். தி.மு.க கூட்டணியிலுள்ள ம.தி.மு.க-வும் சேர்மன் பதவியைக் கேட்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க தரப்பில், ‘என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை, சேர்மன் பதவியைப் பிடித்துவிட வேண்டும்’ எனக் களத்தில் டஃப் கொடுத்து வருகின்றனர். இதனால், சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றவர்களின் காட்டில், கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது கரன்சி. இப்போதைக்கு, ரூபாய் 50 லட்சமும் இன்னோவா காரும் எனப் பேரம் பேசிவருகின்றனர். கடைசி நேரத்தில் இந்தப் பேரம் இன்னும் அதிகமாகலாம் என்கிறார்கள்.

கோடிகள்... பிளாட்... பிக்னிக்... கார்... மறைமுக பேரம்... கரன்சி கொட்டும் தேர்தல்!

பணம்... பேரம்... பதவி... எங்கும் ஒரே காட்சி!

இதுதவிர, தென்காசி மாவட்டத்தில் சுரண்டை நகராட்சியைத் தவிர, மற்ற ஐந்து நகராட்சிகளிலும் ஆளும் தரப்புக்குப் பெரும்பான்மை இல்லை. ஆனால், அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் பெரும்பான்மையாக இருக்கும் செங்கோட்டை தவிர மற்ற நான்கு நகராட்சிகளில் இனிஷியல் அமைச்சர் முன்னிலையில் பணம் கைமாறி பேரம் முடிந்திருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில், போட்டியிடும் ‘ஒப்பந்தப்புள்ளி’ வேட்பாளர் ஒருவர் ஒரு கோடி ரூபாயும், இன்னோவா காரும் தருவதாகப் பேரம் பேசிவருகிறார். தேனி மாவட்டம், போடி நகராட்சியில் ஆளும் தரப்பு பிரபலங்கள் இருவர் தலைமைப் பொறுப்புக்கு வர அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினரிடம் மிகப்பெரிய அளவில் பேரம் நடத்திவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில், தி.மு.க-வுக்குப் பெரும்பான்மை இல்லாத கொல்லங்கோடு நகராட்சி, புதுக்கடை, திங்கள்நகர், களியக்காவிளை, மணவாளக்குறிச்சி, கணபதிபுரம், மருங்கூர் ஆகிய பேரூராட்சிகளிலும் பேரம் களைகட்டுகிறது.

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளை தி.மு.க கைப்பற்றிவிட்டது. மீதமுள்ள வெள்ளளூர் மற்றும் மோப்பிரிபாளையம் பேரூராட்சிகளில் பெரும்பான்மை இல்லாததால், 20 - 30 லட்சம் வரை கொடுத்து கவுன்சிலர்களை இழுக்க மிகத் தீவிர முயற்சிகள் நடந்துவருகின்றன. அதேபோல, ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சி, நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சி, தேனி மாவட்டம் வடுகபட்டி, பி.சி.பட்டி, கம்பம் புதுப்பட்டி ஆகிய பேரூராட்சிகளிலும் லட்சங்களில் பேரங்கள் நடந்துவருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, சாயல்குடியில் சுயேச்சைகளே அதிகம் வெற்றிபெற்றுள்ளதால், அவர்களை தி.மு.க-வுக்கு இழுக்க முன்னணி நிர்வாகி ஒருவர் பல கோடிகளைச் செலவு செய்து வருகிறார். மதுரை, பாலமேடு பேரூராட்சியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் களிடம் அமைச்சர் ஒருவர் தரப்பில் கோடிகளில் டீல் பேசப்பட்டு வருகிறதாம். பெரும்புதூர் பேரூராட்சி, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை, ஆரணி பேரூராட்சிகளிலும் கார், ரொக்கம் என ஆளும் தரப்பால் பேரம் பேசப்பட்டுவருகிறது. திருநெல்வேலி, தென்காசி, சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், தங்களுக்குப் பெரும்பான்மை இல்லாத பேரூராட்சிகளிலும் கட்சிகள் கரன்சிகளால் வெற்றியைத் தீர்மானிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு, வார்டு கவுன்சிலர் வாக்குக்கே கோடிகளில் பேரம் பேசப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இப்படிப் பணத்தைக் கொடுத்தும் பெற்றும் தலைமைப் பொறுப்புக்கு வருபவர்கள், தூய்மையான மக்கள் பணி செய்வார்கள் என்று எப்படி நம்புவது? நல்லது நடக்கும் என ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ, நபருக்கோ வாக்களித்த மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாளிகளாக்கப்படும் நிலை எப்போது மாறும்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism