குழந்தை பிறக்க வேண்டி கோமியம் குடிக்க வைத்து பெண் டாக்டரை டார்ச்சர் செய்து, வரதட்சணை கொடுமை செய்து அவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவர், மாமியாருக்கு விதிக்கப்பட்ட ஏழு ஆண்டு சிறைத்தண்டனையை சமீபத்தில் உறுதிசெய்தது சென்னை உயர் நீதிமன்றம். குழந்தை யின்மைக்காகக் குடும்பங்களில் பெண்கள் உள்ளாக்கப்படும் கொடுமைகள் குறித்த வாசகர்களின் அனுபவங்கள், கருத்து களை அவள் விகடன் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்கில் அவர்கள் பகிர்ந்தவற்றில் சில இங்கே...
Lavanyavathi Bharathidhasan
ஒருமுறை என் அம்மா, புதுச்சேரி அருகே ஒரு கோயிலுக்கு என்னை அழைத்துச் சென்று, அங்கே குழந்தைப்பேற்றுக்கான சிறப்பு டோக்கன்(!) பெற்று பிரசாதம் வாங்கிச் சாப்பிட ஏற்பாடு செய்தார். இப்படி, பல பெண்களுக்கும் ‘எதை தின்னா பித்தம் தெளியும்’ நிலைதான் இங்கு. எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்களுக்குப் பின் குழந்தை பிறந்தது. குழந்தைப்பேற்றுக்கு சாமியார் மீடியேட்டர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை.
Saranya Vani
திருமணத்துக்கு முன் ஒரு பெண்ணுக்கு நோய் வந்தால், அவளது திருமண வாழ்க்கை பற்றி சமூகம் கவலைகொள்கிறது. திருமணத்துக்குப் பிறகு அவள் நோய்வாய்ப்பட்டால், அவளுடைய கர்ப்பத்தைப் பற்றி சமூகம் கவலைப்படுகிறது. கர்ப்பத்துக்குப் பிறகு அவள் ஆரோக்கியம் குன்றினால், சமூகம் அவளுடைய குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி கவலைகொள்கிறது. முதுமையில் அவள் உடல்நலப் பிரச்னைகளைச் சந்திக்கும்போது, சமூகம் அவள் கணவனுக் காகப் புலம்புகிறது. பெண்ணுக்கு என்று ஒரு வாழ்வு இல்லையா?!
Saraswathy Padmanaban
தன் மகன்தான் குழந்தையின்மைக்குக் காரணம் என்று தெரிந்த பின்பும் மருமகள்களைக் கொடுமைப்படுத்தும் மாமியார்களை என்ன செய்வது? இதில் பையனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கும் அம்மாக்களும் உண்டு. ஆண், பெண் யாராக இருந்தாலும் குழந்தையின்மை என்பது அவமானம் இல்லை, குற்றம் இல்லை. குழந்தை இல் லாத வாழ்விலும் ஒரு குறையும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சமூக மதிப்பீடுகளைப் புறந்தள்ள வேண்டும்.
Mahalakshmi Subramanian
படித்த பெண்களுக்கே இந்த நிலைமை என்றால் படிக்காத பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை என்னவென்று சொல்வது? பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாக நிற்கும் குற்றங்களில், குழந்தையின்மைக் கொடுமைகள் மிக முக்கிய மான குற்றம். இதற்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். பாதிக்கப்படும் பெண்களுக்கு இது குறித்த மனநல ஆலோசனைகளையும், சட்ட உதவிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும்.
Valli Subbiah
நானறிந்த தம்பதி அவர்கள். குழந்தையின்மை சிகிச்சைகள் பலனளிக்காமல் போக, தற்போது ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து, சந்தோசமாக வாழ்கிறார்கள். பார்க்கும் நமக்கே அத்துணை மனநிறைவாக உள்ளது. குழந்தையின்மைக் கான தீர்வாக சிகிச்சையை மட்டுமே முன்னிலைப்படுத்தாமல், தத்தெடுப்பையும் பரவலாக்க வேண்டும்.
Munirun Nisha
என் வளைகாப்பில், உறவினர் பெண் ஒருவர், அத்தனை பேர் மத்தியில், என் வளையல்களில் சிலவற்றை குழந்தை இல்லாத அவர் மருமகளுக்குக் கொடுக்கச் சொன்னார்... அந்த ராசியில்(!) அவர் கர்ப்பம் தரிப்பார் என்று. அதைக் கேட்ட எனக்கே மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது எனில், அந்த மருமகள் எந்தளவுக்குக் காயப்பட்டிருப்பார்? இப்படித்தான், விதவிதமாக நம் குடும்பங்கள் வதைக்கின்றன குழந்தையில்லாத பெண்களை.
Devi Ignatius
குடும்ப விசேஷங்களில் குழந்தையில்லாத பெண்கள் கலந்துகொள்வது என்பது, சில நேரங்களில் மிகவும் துன்பமாக அமையும். அவர் வாயைத் திறந்து பேசினாலும் குற்றம், பேசாவிட்டாலும் குற்றம்.