Published:Updated:

மிரட்டும் போதை ஊசி... நடுநடுங்கும் கோவை!

போதை ஊசி
பிரீமியம் ஸ்டோரி
போதை ஊசி

மருந்து உள்ளே சென்ற 15-வது நிமிடத்தில் ‘போதை’ ஏறத் தொடங்கும். அடுத்த எட்டு மணி நேரத்துக்கு அவர்கள் நிலா, செவ்வாய் கிரகம் என்று உலகையே தாண்டிச் சென்று விடுவார்களாம்.

மிரட்டும் போதை ஊசி... நடுநடுங்கும் கோவை!

மருந்து உள்ளே சென்ற 15-வது நிமிடத்தில் ‘போதை’ ஏறத் தொடங்கும். அடுத்த எட்டு மணி நேரத்துக்கு அவர்கள் நிலா, செவ்வாய் கிரகம் என்று உலகையே தாண்டிச் சென்று விடுவார்களாம்.

Published:Updated:
போதை ஊசி
பிரீமியம் ஸ்டோரி
போதை ஊசி

சிறுவாணி தண்ணீருக்கும், கொஞ்சும் கொங்குத் தமிழுக்கும் பெயர்பெற்ற கோவையின் சில பகுதிகளில், சமீபகாலமாகப் புதிய புதிய போதைப்பொருள்களின் பயன்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. முன்பு, மருத்துவமனைகளில் ஏறி குதித்து மயக்க மருந்துகளைத் திருடி போதையேற்றிக்கொண்டவர்கள் இப்போது, மருந்தகங்களில் கிடைக்கும் வலி நிவாரணி மாத்திரையைக் கரைத்து, நரம்பில் ஏற்றிக்கொள்கிறார்கள். இதில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் 15-25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான் பெரிய அதிர்ச்சி!

முட்புதர்கள் நிறைந்த பகுதியில், கும்மிருட்டில், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மாத்திரைகளைத் தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றுகிறார்கள் சில இளைஞர்கள். பிறகு, ஊசி மூலம் ‘சர்... சர்...’ரென்று அந்த மருந்தை நரம்பில் பாய்ச்சுகிறார்கள். பின், பல்வேறு கெட்டவார்த்தைகளைப் பேசி அவர்கள் ‘உற்சாகம்’ அடைகிறார்கள். கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அந்தக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரைப் பிடித்து விசாரணை நடத்திவருகிறது போலீஸ். வைரலான அந்த வீடியோவை வெளியிட்ட மற்றொரு போதை ஊசி கும்பலுக்கும் புல்லுக்காடு கும்பலுக்கும் இடையே ‘கேங் வார்’ நடந்திருக்கிறது.

எங்கிருந்து தொடங்குகிறது இந்தப் பழக்கம்... எப்படிச் செயல்படுத்துகிறார்கள்? களத்தில் இறங்கி பல்வேறு தரப்புகளிலும் விசாரித்தோம்...

மிரட்டும் போதை ஊசி... நடுநடுங்கும் கோவை!

ஐந்தே ரூபாயில் செவ்வாய் கிரகம்!

கோவை ஒரு கல்வி நகரம். பல்வேறு மாநில மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள். புதிய புதிய போதை கலாசாரங்களை இங்கு அறிமுகப்படுத்துவதில் கேரளா மாணவர்கள்தான் முன்னோடிகள். அவர்கள் மூலம்தான் மற்ற மாணவர்களுக்கும் பரவுகிறது. ‘எளிய முறையில் அதிக போதை’ என்பதுதான் இந்த போதை ஊசியின் கான்செப்ட். மருந்தகங்களில் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி, டிஸ்டில்டு வாட்டரில் கரைத்து போதை ஊசியாகப் போட்டுக்கொள்கிறார்கள்.

மருந்து உள்ளே சென்ற 15-வது நிமிடத்தில் ‘போதை’ ஏறத் தொடங்கும். அடுத்த எட்டு மணி நேரத்துக்கு அவர்கள் நிலா, செவ்வாய் கிரகம் என்று உலகையே தாண்டிச் சென்று விடுவார்களாம். மது குடித்தால், நாற்றம் காட்டிக் கொடுத்துவிடும். போதை ஊசியில் நாற்றம் தெரியாது. அதனால் யாரும் கண்டுபிடிக்க முடியாது. மருந்தகங்களில் அந்த வலி நிவாரணி மாத்திரை நான்கைந்து ரூபாய்தான். சிறிய செலவில் பெரிய போதை. ஆரம்பத்தில் இது எளிதில் கிடைக்கவில்லை. மருந்தகங்களில் மருத்துவக் குறிப்பு இல்லாமல் அதிகபட்சம் இரண்டு மாத்திரைகள்தான் கொடுக்க முடியும். மீறிக் கொடுத்தால், விவரங்கள் பதிவேட்டில் தெரிந்துவிடும். அதையும் மீறி ஒருசில மருந்தகங்களில் ரெகுலர் கஸ்டமர்களுக்காகச் சிறப்பு சலுகைகளுடன் அந்த மாத்திரையை வழங்குகிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

போதை ஊசிக்கான சண்டையில் நண்பன் கொலை!

இந்த நெட்வொர்க் 90 சதவிகிதம் கள்ளச்சந்தைதான். நேரடியாக மருந்து விற்கும் நிறுவனங்கள், மெடிக்கல் ரெப் ஆகியோர் மூலம் மாத்திரைகள் கைமாறுகின்றன. கள்ளச்சந்தையில் விலை சற்று அதிகம். சராசரியாக ஒரு அட்டை 60 ரூபாய் என்றால், கள்ளச்சந்தையில் 200 - 300 ரூபாய் வரை விற்கிறார்கள். டிமாண்ட் அதிகமாகும்போது விலை இன்னும் எகிறும்.

மருந்து உள்ளே செல்லும் வரைதான் அப்பா, அம்மா, நண்பன் எல்லாம். அதன் பிறகு எதிரில் யார் இருந்தாலும் அவன் எதிரிதான். மதுக்கரைப் பகுதியில் நண்பருடன் தங்கியிருந்த ஜீவானந்தம் போதை ஊசிக்கு அடிமையாகியிருந்தார். அவருடன் தங்கியிருந்த மணிகண்டன்தான் அவருக்கு போதை ஊசி பார்ட்னர். கடந்த மாதம் போதை ஊசிக்கு ஏற்பட்ட தகராறில் ஜீவானந்தத்தை மணிகண்டன் கொலை செய்துவிட்டார்.

சமீபகாலமாகப் பெண்களும் இந்த போதை ஊசிக்கு அடிமையாகிறார்கள் என்பது மற்றோர் அதிர்ச்சி. கல்லூரிப் படிப்பு முடித்து வீட்டிலிருந்த ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண், போதை ஊசிக்கு அடிமையாகியிருக்கிறார். அவர் அடிக்கடி சந்திக்கும் உற்ற தோழி ஒருவரிடமிருந்து இந்தப் பழக்கம் தொற்றியுள்ளது. நாளடைவில், போதை ஊசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குச் சென்றுவிட்டார். குடும்பத்தினர் எவ்வளவு சொல்லியும் அந்தப் பெண் கேட்கவில்லை. ‘யாரும் எனக்கு முக்கியம் இல்லை. அவதான் முக்கியம். அவளையே நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்’ என்று அந்தப் பெண் சொல்லவே, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரைத் தனிமைப்படுத்தியிருக்கிறார்கள். இரண்டு முறை தற்கொலைக்கு முயன்ற அவருக்குப் பல்வேறு முறையில் சிகிச்சையளித்து குடும்பத்தினர் மீட்டுவருகிறார்கள்.

மிரட்டும் போதை ஊசி... நடுநடுங்கும் கோவை!

செல்போன் திருட்டு... பிளாக்மெயில்!

பெண்கள் தற்கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றால், ஆண்கள் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். தன் போதை ஊசிப் பழக்கத்துக்குத் தடையாக நின்றால், யாராக இருந்தாலும் கேட்க முடியாத கொடூர கெட்டவார்த்தைகளால் திட்டுவார்கள். கையில் கிடைக்கும் ஆயுதங்களால் பதம் பார்க்கவும் தயங்க மாட்டார்கள். குடும்பத்தினரிடம் காசு கேட்டு கிடைக்காதவர்கள், செல்போன், செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். அப்படித் திருடும் செல்போன்களை ஆன்லைன் மூலம் விற்கிறார்கள். திருட்டு செல்போன்களில் பெண்கள் சம்பந்தமான ரகசியம் இருந்தால், அதைவைத்து பிளாக்மெயில் செய்து காசு பார்ப்பார்கள். இப்படி... ஒரு குற்றம் பல குற்றங்களாக விரிந்து சீரழிவு உச்சமாகிறது. ஊரடங்கு காரணமாக கோவையில் கஞ்சா விலை ஏறிவிட, ஒரு பெருங்கூட்டம் இந்த போதைக்குள் வந்திருக்கிறது.

இந்தவகை இளைஞர்களுக்கு சதையே இருக்காது. மெலிந்த தேகத்தோடு நோஞ்சானாகவே இருப்பார்கள். ஊசி போட்டவுடன் கழுத்து ஒருவிதமான இறுகிய நிலைக்குச் சென்றுவிடுவதால், சரியாகச் சாப்பிட முடியாது. உடம்பும் தேறாது.

‘‘இதுவரை மூன்று போதை மாத்திரை வழக்குகளில் 12 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 713 போதை மாத்திரைகளும், பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மருத்துவர் பரிந்துரை இல்லாமல் அவர்களுக்கு மாத்திரைகளை விற்ற மருந்துக்கடை உரிமையாளர் ஒருவரும் கைதுசெய்யப் பட்டிருக்கிறார். இது போன்ற சட்டவிரோதச் செயல்கள் குறித்து, 94981 81213 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்’’ என்று காவல்துறை கூறியிருக்கிறது.

கோவை போதைத் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி (பொறுப்பு) மனோகரனிடம் பேசினோம்... ‘‘பி.பார்ம் படித்த ஓர் இளைஞர், தடாகம் அருகே மருந்துக்கடை வைத்திருக்கிறார். அது நஷ்டமானதால், லாபம் ஈட்ட மாற்றுவழியை யோசித்திருக்கிறார். அப்படித்தான் இந்த மாத்திரைகளுக்கான கள்ளச்சந்தையைப் பெரிதாக்கியிருக்கிறார். பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்கள் பெரிதாக எதிலும் ஈடுபாடு காட்டாமல், மந்தமாகத் தனிமையில் இருந்தால் உடனே உஷாராகிவிட வேண்டும்’’ என்று எச்சரித்தார்.

இளைஞர்களை அளவுக்கு அதிகமாகத் தனிமையில்விடுவது விபரீதங்களைக் கொண்டுவரும். கவனம் பெற்றோர்களே!

*****

என்னென்ன பாதிப்புகள் வரும்?

கோவையைச் சேர்ந்த மூத்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் அசோகன், ‘‘இந்த போதை, ஒருவித பரவச நிலையைக் கொடுக்கும். நாளடைவில் செல்கள் பாதிக்கப்பட்டு, மூளை சுரப்பியில் பிரச்னை ஏற்படும். மூளையின் செயல்பாடும் பாதிக்கும். பகை உணர்வு, முன்கோபம், எரிச்சல் அதிகமாகி, தீய எண்ணங்கள் உருவாகும். முக்கியமாக, கொலை செய்யும் எண்ணம் உருவாகும். வலி நிவாரணிகளைத் தொடர்ந்து எடுப்பதால், சிறுநீரகம் செயலிழக்கும். பக்கவாதம், வலிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நினைவுகளை இழக்க நேரிடுவது உட்பட பிரச்னைகள் ஏராளம். நோயாளியின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதிலிருந்து மீள வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

மிரட்டும் போதை ஊசி... நடுநடுங்கும் கோவை!

‘தற்கொலை’யில் போதை!

கோவையில் சத்தமே இல்லாமல் பரவிக்கொண்டிருக்கும் மற்றொரு போதையின் பெயர், ‘தற்கொலை’ போதை. இந்த வகை போதையிலும் நண்பர்கள் கூட்டாக ஈடுபடுகிறார்கள். கயிற்றால் ஒருவரின் கழுத்தை நெரித்துக் கட்டுகிறார்கள். அவரின் மூக்கு, வாயை மூடி மூச்சை நிறுத்துகிறார்கள். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தால் உயிர் பிரியும் என அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், அந்த நிலைக்குச் சற்று முன்பு அனைத்திலிருந்தும் ரிலீஸ் செய்துவிடுகிறார்கள். சம்பந்தப்பட்டவர் கண்களில் போதை மிதக்க, இரண்டு மூன்று முறைச் சுழன்று கீழே விழுந்து ‘பரவச’ நிலையை அடைகிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism