Published:Updated:

கவின்கேர் இன்னோவேஷன் அவார்ட்... புதிய படைப்பாளிகள்... புதுமை விருதுகள்!

Innovation awards
பிரீமியம் ஸ்டோரி
News
Innovation awards

விருது

னித நாகரிகத்தின் வளர்ச்சி, புதுமையைக் கண்டுபிடித்து, அதைச் செயல்படுத்துவதில்தான் இருக்கிறது. குகைகளில் வாழ்ந்த மனிதன் இன்று செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் நினைத்ததையெல்லாம் செய்துமுடிக்கக் காரணம், பல புதுமையான கண்டுபிடிப்புகள்தான். இந்த உண்மையைச் சரியாக உணர்ந்த கவின்கேர் நிறுவனம், புதுமையான படைப்புகளை உருவாக்கிய நான்கு பேருக்கு ‘சின்னி கிருஷ்ணன் இன்னோவேஷன் அவார்ட்’ கொடுத்து கெளரவித்தது. கடந்த எட்டு வருடங்களாக நடந்துவரும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார் கவின்கேர் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன்.

புத்தாக்கம்தான் இன்றையத் தேவை

‘‘இந்த விருதின்மூலம் நமது இந்தியாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் தொழில்முனைவோர்களை அங்கீகரிக்க விரும்புகிறோம். புதுமையான படைப்புகள், கண்டுபிடிப்புகள் இன்னும் அதிக அளவில் நம் நாட்டில் நிகழ்த்தப்பட வேண்டும். எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் புதுமைகள் படைப்பதுதான் இன்றைக்கு மிகவும் முக்கியம்’’ என்றார்.

விருதுக்கான தேர்வு

இந்த விருதுக்கான தேர்வு நடைமுறைகள் குறித்து விளக்கினார் ஏர்னஸ்ட் அண்டு யெங் நிறுவனத்தின் இன்னோவேஷன் பிரிவின் தலைவரான டெரி தாமஸ். ‘‘இந்த விருதுக்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மொத்தம் 396 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 208 விண்ணப்பங்கள் முழுமையாக இருந்தன; பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றிலிருந்து 101 விண்ணப்பங்கள் ‘இன்னோவேஷன்’ விருதுக்கும் 107 விண்ணப்பங்கள் ‘கிரேட் ஐடியாஸ்’ விருதுக்கும் வழங்கப்பட்டன. இவற்றிலிருந்து 11 விண்ணப்பங் கள் மட்டும் இறுதி முடிவுக்குப் பரிசீலிக்கப்பட்டன. இதிலிருந்து மூன்று விருதுகள் ‘இன்னோவேஷன்’ விருதுக்கும், ஒரு விருது ‘கிரேட் ஐடியாஸ்’ விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

‘கிரேட் ஐடியாஸ்’ விருது

இந்தப் பிரிவின் ஒரே விருது ‘ஸ்மார்ட் இன்ட்ரா-வீனஸ் ட்ரிப்பரை’க் (SID) கண்டுபிடித்த பிராஜ்வெல் கருணாவுக்குக் கிடைத்தது. உடலில் தேவையான தண்ணீர் இல்லாத நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. இந்த குளுக்கோஸை எவ்வளவு வேகத்தில் செலுத்த வேண்டும், நோயாளியின் உடலில் குளுக்கோஸ் முழுமையாக ஏற எவ்வளவு நேரம் ஆகிறது என்பதையெல்லாம் மருத்துவமனையில் வேலை பார்க்கும் நர்ஸ் அடிக்கடி சோதித்தறிய வேண்டியிருக்கிறது.

கவின்கேர் இன்னோவேஷன் அவார்ட்... புதிய படைப்பாளிகள்... புதுமை விருதுகள்!

இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வாக, நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றப்படும்போது, அதனை இந்த எஸ்.ஐ.டி கருவியுடன் இணைத்துவிட்டால், அதன் செயல்பாட்டை கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்க முடியும். குளுக்கோஸ் ஏற்றும் வேகத்தைச் சற்று அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ கம்ப்யூட்டர்மூலமே செய்ய முடியும். இதனால் மருத்துவமனை ஊழியர்கள் தேவையில்லாமல் அலைய வேண்டியதில்லை.இந்தப் புதுமையான கருவியை உருவாக்கியதற்காக ரீகிண்டில் ஆட்டோமேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த பிராஜ்வெல் கருணாவுக்குத் தரப்பட்டது.

இன்னோவேஷன் விருதுகள்

இந்தப் பிரிவில் முதல் விருது, ஈடன் கார்டன் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.ராஜரத்தினத்துக்குக் கிடைத்தது. இலைகளின்மூலம் வேர்களை வளர விட்டு, தரம்மிக்க மரக்கன்றுகளை உருவாக்கும் புதுமையை இவர் படைத்திருக்கிறார். ‘‘இந்தத் தொழில்நுட்பம் மிக எளிமையானது, அதிகம் செலவு பிடிக்காதது; படிக்காத மக்களுக்கும் வேலைவாய்ப்பைத் தருவது’’ என தனது புத்தாக்கப் படைப்புக்கான விருதினைப் பெற்றபின் பேசினார் ராஜரத்தினம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தப் பிரிவில் இரண்டாவது விருது, இயற்கை யான முறையில் சானிட்டர் வேரைத் தயாரித்த பிளிஸ் நேச்சுரல் நிறுவனத்தைச் சேர்ந்த நிவேதாவுக்கும் கெளதமுக்கும் கிடைத்தது. புளிச்சைக்கீரையின் (Kenaf) தண்டுப்பகுதி யிலிருந்து இந்த சானிட்டரி வேர் தயாரிக்கப் பட்டுள்ளது. காட்டனைக் கொண்டு தயாரிக்கப் படும் சானிட்டரி வேரைவிட இது சிறந்தது என்பதே இதற்கு விருது கிடைக்கக் காரணம்.

கவின்கேர் இன்னோவேஷன் அவார்ட்... புதிய படைப்பாளிகள்... புதுமை விருதுகள்!

இந்தப் பிரிவில் மூன்றாவது விருது, கடலின் ஆழத்தைக் கப்பலிலிருந்து பார்த்து ரசிக்க உதவும் ஒரு புதுமையான படைப்பினை உருவாக்கிய ‘ஹெவன் ஆன் ஓசன்’ நிறுவனத்தைச் சேர்ந்த பிரசன்னா, ரவி, கெளதமன் ஜெயராமனுக்குக் கிடைத்தது. தெற்காசியாவிலேயே இதுமாதிரியான ‘செமி சப்மெரைன்’ எங்கும் இல்லை என்பதே இந்த விருது இவர்களுக்குக் கிடைக்கக் காரணம். அந்தமான் தீவுகளில் கடலின் ஆழத்தில் இருக்கும் அழகினைக் கண்டு ரசிக்கிற மாதிரி இந்தக் கப்பல்மூலம் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இந்த விருதுகளை வழங்கியபின் சிறப்புரை ஆற்றினார் இந்தியாவின் பிரபல எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான மாரிகோ நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் மாரிவாலா. ‘‘தேவைதான் புதுமைகளைக் கண்டுபிடிக்கத் தூண்டுகிறது. சமையல் எண்ணெய்த் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நாங்கள் டின்களில் அடைத்து அதை விற்பனையாளர் களுக்கு அனுப்பி வைத்தோம். இந்த டின்கள் உடைந்துவிட்டால், அதிலிருந்து எண்ணெய் வீணாவதுடன், அந்த எண்ணெய் வைத்திருந்த இடத்தையும் சுத்தப்படுத்த வேண்டியிருக்கும்.

இந்த நிலையில், இதை பிளாஸ்ட்டிக்கில் அடைத்துவிற்க முடிவு செய்தோம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே எங்களுக்கு எப்படிப்பட்ட பிளாஸ்ட்டிக்கைப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை. சோதனை முயற்சியாக ஒன்றிரண்டு முறை செய்து பார்த்தபோது, ஒரு சொட்டு எண்ணெய்கூட ஒழுகாத ஒரு பிளாஸ்ட்டிக் கேனை எங்களால் கண்டறிய முடிந்தது. ஆனால், இந்த மாற்றத்தை நாங்கள் கொண்டுவந்தபிறகு எங்கள் பிசினஸ் பல மடங்கு உயர்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்கள் தயாரிப்புகளில் தொடர்ந்து பல புதுமையான விஷயங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற சிந்தனை இதன்பிறகு உருவானது. இதனால்தான் 2003-ம் ஆண்டே மாரிகோ இன்னோவேஷன் பவுண்டேஷன் என்கிற அமைப்பை உருவாக்கி, புத்தாக்க முயற்சிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம்.

ஒரு நிறுவனத்தின் புத்தாக்க முயற்சிகள் அதிகம் நடைபெற வேண்டுமெனில், புதுமையான கண்டுபிடிப்புகளைச் செய்யும் ஊழியர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஊழியர்கள் சொல்லும் ஐடியாக்களைத் திறந்தமனதுடன் கேட்கவேண்டும்.

அந்த ஐடியாக்கள் தோல்வி அடைந்தாலும், அதற்காக அவர்களைத் தண்டிக்கக்கூடாது. புதுமையான யோசனைகளுக்கு நாங்கள் தொடர்ந்து முக்கியத்துவம் தருவதால்தான், இன்றைக்குப் பல நாடுகளிலும் எங்களால் சிறப்பாக பிசினஸ் செய்ய முடிகிறது’’ என்று பேசினார்.

புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறவர்கள் கவின்கேர் இன்னோவேஷன் அவார்ட் நிகழ்ச்சிக்கு அடுத்த ஆண்டாவது விண்ணப்பிக்கலாமே!

தொழில்முனைவோர்களுக்கு உதவ நாங்கள் தயார்!

தொழில்முனைவோர்களுக்குத் தாங்கள் செய்துவரும் தொழில் குறித்து பலவிதமான சந்தேகங்களும் கேள்விகளும் இருப்பது இயற்கை தான். இந்தச் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதிலைத் தந்து, தொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலை இன்னும் சிறப்பாகச் செய்வ தற்கான வழிகளைக் காட்டுகிறது ‘அசென்ட் ஃபவுண்டேஷன்’ (Ascent Foundation). இந்த அறக்கட்டளையை நடத்திவரும் மாரிகோ நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் மாரிவாலா, கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்தபோது, இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துச் சொன்னார்.

கவின்கேர் இன்னோவேஷன் அவார்ட்... புதிய படைப்பாளிகள்... புதுமை விருதுகள்!

‘‘கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கி ‘அசென்ட் ஃபவுண்டேஷனை’ நடத்திவருகிறோம். பல வகையான தொழில்முனைவோர்கள் மாதந்தோறும் ஓரிடத்தில் கூடி, மூன்று, நான்கு மணி நேரத்துக்கு அவர்கள் தங்கள் தொழிலில் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி மனம்விட்டுப் பேசிக் கொள்கிறார்கள்.

இன்றைக்குத் தொழில்முனைவோர்கள் எப்படிப்பட்ட தொழிலைச் செய்வதாக இருந்தாலும், அவர்கள் சந்திக்கும் பிரச்னை ஒரே மாதிரியான தன்மை கொண்டதாகவே இருக்கிறது. சிலருக்கு நிதி சம்பந்தமான பிரச்னை, இன்னும் சிலருக்கு மனிதவளத்தை நிர்வாகம் செய்வதில் பிரச்னை, இன்னும் சிலருக்கு மார்க்கெட்டிங் செய்வது தொடர்பான பிரச்னை இருக்கிறது.

இவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் பற்றி பேசும்போது அவர்கள் செய்யும் தொழிலை 360 டிகிரி கோணத்தில் புரிந்துகொண்டு செய்ய முடிகிறது.

இப்படிக் கூடும் தொழிலதிபர்களிடம் நாங்களே பேசி, பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தர முயல்கிறோம். நிபுணர்களை அழைத்துவந்து பேச வைக்கிறோம். கருத்தரங்கம் நடத்தி, அவர்களைப் பங்குகொள்ள வைப்பதன்மூலம் தொழில் பற்றி இன்னும் ஆழமான புரிந்துகொள்ளலை அவர்களிடம் ஏற்படுத்த விழைகிறோம்.

தொழில் பற்றி வெறும் தியரியாகப் பேசாமல், பிராக்டிகலான வழிமுறைகளைச் சொல்லி, தொழில்முனைவோர்களை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே எங்கள் நோக்கம்.

சேவைத் துறையில் ரூ.1 கோடி டேர்ன் ஓவர், உற்பத்தித் துறையில் ரூ.5 கோடி டேர்ன் ஓவர் கொண்ட நிறுவனங்களை நடத்தும் தொழில் முனைவோர்கள் அசென்ட் ஃபவுண்டேஷனில் உறுப்பினராகலாம்.

மும்பையில் 350 தொழில்முனைவோர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சென்னையைப் பொறுத்தவரை, தற்போது 56 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 2020-க்குள் சென்னையின் உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைந்தபட்சம் நூறாக உயர்த்த வேண்டும் என்பது எங்கள் இலக்காக இருக்கிறது.

‘அசென்ட்’ அமைப்பில் சேர விரும்புகிறவர்கள் www.ascentfoundation.in என்கிற இணைய தளத்துக்குச் சென்று எங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். தொழில் முனைவோர்களுக்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.