Published:Updated:

கல்வெட்டில் காத்திருக்கும் ஆச்சர்யங்கள்!

பத்மாவதி
பிரீமியம் ஸ்டோரி
பத்மாவதி

படங்கள்: என்.எஸ்.நாணா

கல்வெட்டில் காத்திருக்கும் ஆச்சர்யங்கள்!

படங்கள்: என்.எஸ்.நாணா

Published:Updated:
பத்மாவதி
பிரீமியம் ஸ்டோரி
பத்மாவதி

சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோயில்...கூட்டம் இல்லாத மதிய நேரம்.

ஒரு பெண்மணி உள்ளே செல்ல, ஆண்களும் பெண்களுமாக முப்பதுக்கும் மேற்பட்டோர் அவரைச் சூழ்ந்தபடியே உள்ளே நுழைகிறார்கள்.

‘இது, சோழர் காலத்துக்கு முன்பே கட்டப்பட்ட கோயில். இரண்டாயிரம் வருஷ வரலாறு இந்தக் கோயிலுக்கு உண்டு. பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் என்று அடுத்தடுத்து வந்த மன்னர்கள் காலத்தில் தொடர்ந்து இந்தக் கோயில் மேற்கொண்டும் புனரமைக்கப்பட்டிருக்கிறது. புதுப் புதுக் கோயில்களும் இந்த வளாகத்திலேயே கட்டப்பட்டிருக்கின்றன’ என்று ஆரம்பித்து ஒவ்வொரு தூணையும், சிற்பங்களையும், கோபுரங்களையும், விமானங்களையும் காட்டிக்காட்டி அந்தப் பெண்மணி பேசப்பேச, மெய் மறந்து கேட்டுக்கொண்டிருக்கிறது கூட்டம்.

 திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோயிலில்...
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோயிலில்...
 திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோயிலில்...
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோயிலில்...
 திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோயிலில்...
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோயிலில்...

கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாகிவிட்டது. மாலை மங்கிவிட்டது. அப்படியே ஒரு மண்டபத்தில் அந்தப் பெண்மணி சம்மணமிட்டு அமர, ஒட்டு மொத்தக் கூட்டமும் கூடவே அமர்கிறது. வரலாற்றையும் புராணத்தையும் பிரித்துப் பிரித்து அந்தப் பெண்மணி சொல்லச் சொல்ல, கொஞ்சமும் சளைக்காமல் கேட்டுக் கொண்டிருக்கும் கூட்டம்... கூடவே, கேள்வி களை எழுப்பி சந்தேகத்தையும் தீர்த்துக் கொள்கிறது.

அந்தப் பெண்மணி... பத்மாவதி. தொல்லியல் ஆய்வாளர்.

தமிழகக் கோயில்களைப் பற்றி எந்தத் தகவலைக் கேட்டாலும் அதன் வரலாறு, கலையம்சம் என அவர் விளக்குவதைக் கேட்கும்போது, அந்தக் கோயில் கட்டப்பட்ட காலத்துக்கே நாம் சென்றுவிடும் அளவுக்கான உணர்வை உண்டாக்கிவிடுகிறார் பத்மாவதி. கோயிலுக்குச் செல்கிறோம், வழிபடுகிறோம், வந்துவிடுகிறோம் என்றில்லாமல் அதன் மகத்துவத்தை நமக்குள் கடத்தும் வித்தை பத்மாவதிக்கு நன்றாகவே கைவரப் பெற்றிருக் கிறது.

எப்படி வந்தது இவருக்கு இந்த ஆர்வம்; எங்கிருந்து கற்றார் இந்தக் கலையை?

பத்மாவதியே பேசுகிறார்... ‘‘எனக்குப் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங் குளி. பாளையங்கோட்டையில் உள்ள சாராள் தக்கர் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பைப் படித்தேன். வரலாற்றின் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த ஆர்வம் உண்டு. அதனடிப்படையில்தான் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்.

கல்வெட்டு மற்றும் தொல்லியலில் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தேன். அதிலேயே ஆய்வுகள் செய்து பி.ஹெச்டி முடித்திருக்கிறேன். தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நூல்களில் பங்களித்திருக்கிறேன். அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். தனிப்பட்ட ஆறு நூல்களை வெளியிட்டிருக் கிறேன். நான் எழுதிய ‘புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு’ என்ற நூல் சமீபத்தில் முதலமைச்சரால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வெளியிடப்பட்டிருக் கிறது.

கல்வெட்டில் காத்திருக்கும் ஆச்சர்யங்கள்!

தொடர்ந்து தொல்லியல் துறைக்காக கல்வெட்டுகளைப் படித்து அதில் உள்ள விஷயங்களைப் பதிப்பித்து நூலாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். மாணவர்களுக் காக இணைய வழியில் வகுப்புகள் எடுத்து வருகிறேன். பல்கலைக்கழகங்கள், அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளில் தமிழர் வரலாறு, கோயில்கள் பற்றி சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகிறேன்” என்று படபடவென பத்மாவதி பேசிய கொஞ்ச நேரத்திலேயே நம் கண்முன் பாக நரசிம்ம பல்லவன், ராஜாராஜ சோழன், பாண்டிய நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் என்று பலரும் நடமாட ஆரம்பித்துவிட்டார்கள்.

தொடர்ந்தவர், ``தமிழக அரசு தொல்லியல் துறையில் கல்வெட்டாய்வாளர் என்ற பதவி வகித்தபோது கிடைத்த அனுபவங்கள் ஏராளம். ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கல்வெட்டு ஆய்வு செய்வதுதான் முக்கியமான பணி. கல்வெட்டுகளைப் படியெடுத்து வந்து, பழைய எழுத்துகளிலுள்ள அக்கல்வெட்டு களைப் படித்து, இக்காலத் தமிழில் எழுத வேண்டும். பிறகு, வரலாற்றுக் குறிப்புரை களுடன் அதைப் புத்தகமாக வெளியிட வேண்டும்.

தமிழ்நாட்டு வரலாற்றை எழுதுவதற்கு மிக முக்கிய ஆதாரங்களுள் கல்வெட்டும் ஒன்று. ஒவ்வோர் ஊருக்கும் சென்று ஆய்வு செய்து கல்வெட்டு இருக்கும் கோயில்கள், பாறைகள் போன்ற பல இடங்களிலும் உள்ள கல்வெட்டு களைப் படியெடுத்திருக்கிறோம். இவற்றை வைத்து வெளியிடப்பட்ட புத்தகங்கள், இன்றைக்கும் வரலாற்று மூலாதாரங்களாக இருக்கின்றன’’ என்று சொல்லிக்கொண்டே போனவரிடம்... ‘‘வரலாறாகத் தெறிக்கவிடு கிறீர்களே?’’ என்று சிரித்துக்கொண்டே கேட்டோம்.

“சும்மா இல்லை.... ஒருகாலத்தில் கோயில்கள் தான் எல்லாமுமாக இருந்தன. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று சொன்னது அதற்காகத்தானே. கோயில்களை அடிப்படையாகக் கொண்டுதான் கிராமங் களும் நகரங்களும் உருவாக்கப்பட்டன.

கல்வெட்டில் காத்திருக்கும் ஆச்சர்யங்கள்!
கல்வெட்டில் காத்திருக்கும் ஆச்சர்யங்கள்!
கல்வெட்டில் காத்திருக்கும் ஆச்சர்யங்கள்!

கோயில் திருச்சுற்றாலைகளில்தான் நூல் நிலையங்களும் பள்ளிக்கூடங்களும் நடத்தப் பட்டன. `ஆதூல சாலை' என்ற பெயரில் மருத்துவமனைகளும் செயல்பட்டன. கோயிலைச் சேர்ந்த நிலங்களில் இருந்து வரும் நெல்லைப் பாதுகாக்க நெற்களஞ்சியங்கள் இருந்தன. மொத்தத்தில் வரலாற்றின் பொக்கிஷங்களைக் கோயில்களில்தான் மிக முக்கியமாகக் காணமுடியும். இவை மூலமாக அன்றைய வரலாற்றை மட்டுமல்ல, சட்டத் திட்டங்களையும் பல்தொழிற்சார்ந்த நுணுக்கங்களையும் நாம் கற்றுக்கொள்ள முடிகிறது’’ என்று பிரமிப்பைக்கூட்டியவர், இத்துறையில் பெண்களின் பங்களிப்பு பற்றியும் பகிர்ந்தார்.

``நாங்கள் நான்கு பெண்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்று விட்டோம். இப்போதும் பல பெண்கள் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். இந்தத் துறையில் பெண்கள் பணிபுரிவதில் எந்தச் சிரமமும் இருக்காது. வேலையில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் எத்தனை தடைகள் வந்தாலும்கூட அது சாதகமாக மாறிவிடும். நான் வேலையில் சேர்ந்தது 1970-ம் ஆண்டுகளில்தான். அப்போது பஸ் வசதி மிகமிகக் குறைவு. ஊர் ஊராகச் செல்வதில் சிரமமும் காலதாமதமும் ஏற்படும். சைக்கிளில்கூட பயணிப்போம். சைக்கிள் கிடைக்காத ஊர்களில் நடந்தும் மாட்டு வண்டி, குதிரை வண்டி, டிராக்டர் என் கிடைத்த வாகனங்களில் எல்லாம் பயணம் செய்திருக்கிறோம். ஆற்றை நீந்தி கடந்திருக்கிறோம். பல மலைகள் ஏறி இறங்கியிருக்கிறோம். சைக்கிளில் செல்லும் போது நாய்களால் துரத்தப்பட்டு சைக்கிளில் இருந்து விழுந்து காயப்பட்டிருக்கிறோம்.

பணியில் சேர்ந்தது முதல் ஓய்வுபெறும் வரையில் கல்வெட்டு ஆய்வாளராகவே பணி புரிந்தேன். என்னுடன் வசந்த கல்யாணி, மார்க்சிய காந்தி ஆகிய பெண்களும் பணியாற்றினார்கள். இந்தத் துறையைப் பெண்கள் தாராளமாகத் தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கு நாங்களே சிறந்த உதாரணம். சிறப்பாக பங்களிப்பதன் மூலமாக நமக்கான வேலைவாய்ப்பையும் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்’’ என்ற பத்மாவதி, தமிழ்நாட்டில் தொல்லியல் கல்வி வழங்கப் படும் இடங்கள் பற்றியும் பகிர்ந்தார்.

``தமிழகத்தில் முதன்முதலில் தொல்லியல் துறை ஆரம்பிக்கப்பட்டுக் கற்றுக்கொடுத்தது சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைதான். ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்ற வர்கள், இந்தப் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறை முதுகலை பட்டப்படிப்பில் சேரலாம். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர் களுக்கு பட்டய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் தொல்லியல் படிக்கலாம்.

கல்வெட்டில் காத்திருக்கும் ஆச்சர்யங்கள்!

தொல்லியல் துறையில் தற்போது பலர் அதிக ஆர்வம் காட்டி வருவதால், அவர்கள் பயன்பெறும் பொருட்டு 10-ம் வகுப்பு படித்திருந்தாலே போதுமென்று ஆர்வமுடன் வருபவர்களுக்குச் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ஓராண்டு கல்வெட்டு மற்றும் தொல்லியல் பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது. வயது வரம்பில்லாமல் யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயிலலாம். ஆனால்...’’ என்று நிறுத்திய பத்மாவதி,

``வரலாற்றின் மீதும் மொழியின் மீதும், கலாசாரத்தின் மீதும் ஆர்வமும் மரியாதையும் உள்ளவர்கள் மட்டுமே இதில் பரிமளிக்க முடியும்” என்பதை அடிக்கோடிட்டுச் சொல்லி நிறைவு செய்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism