அரசியல்
அலசல்
Published:Updated:

ஒழுங்கீனம்... பாலியல் அத்துமீறல்... பாதுகாப்பின்மை... அரசுப் பள்ளி மாணவிகள் விடுதி அவலம்!

அரசுப் பள்ளி மாணவிகள் விடுதி
பிரீமியம் ஸ்டோரி
News
அரசுப் பள்ளி மாணவிகள் விடுதி

நான் பணிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. இங்குள்ள மாணவிகளில் சிலரை ‘கன்ட்ரோல்’ செய்ய முடியவில்லை.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் 1,324 பள்ளி, கல்லூரி விடுதிகள் நடத்தப்பட்டுவருகின்றன. போக்குவரத்து வசதி இன்மையும், உணவு, உறைவிடப் பிரச்னையும் கிராமப்புறங்களில் இருக்கும் அவர்களின் மேற்படிப்புக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதே இந்த விடுதிகள் தொடங்கப்பட்டதன் நோக்கம். இந்த விடுதிகளில் உணவு, உறைவிடம் மட்டுமின்றி தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் முதல் நூலகம் வரையில் பல வசதிகளும் ஏற்படுத்தியிருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால், சில விடுதிகளில் மாணவிகளின் பாதுகாப்பே பல்லிளிக்கிறது. அதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது திண்டுக்கல் மாவட்டம், பழநியிலுள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மாணவிகள் விடுதி!

பழநி சத்யா நகரிலுள்ள இந்த விடுதியில் 75 மாணவிகள் தங்கி, அருகேயுள்ள பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்துவருகின்றனர். இங்கு வெளி ஆண்கள் உள்ளே நுழையும் அளவுக்கு மிக மோசமான பாதுகாப்புக் குறைபாடு நிலவுவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்களும் மாணவிகளும்.

ஒழுங்கீனம்... பாலியல் அத்துமீறல்... பாதுகாப்பின்மை... அரசுப் பள்ளி மாணவிகள் விடுதி அவலம்!

அவர்களிடம் பேசினோம். “தொடர் விடுமுறையில், விடுதி மூடப்படும் நாள் தவிர அனைத்து நாள்களும் விடுதிக் காப்பாளர் விடுதியிலேயே இருக்க வேண்டும் என்பது விதி. அதேபோல காவலாளியும் தினமும் இருக்க வேண்டும். ஆனால், இருவரும் வேலை நாள்களில்கூட முறையாகப் பணிக்கு வருவதில்லை. இதனால், கட்டுப்பாடின்றி யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. ப்ளஸ் டூ மாணவிகள் சிலர் விடுதிக்கு அருகே இருக்கும் இளைஞர்களுடன் பழகியதுடன், இரவு நேரத்தில் அவர்களுடன் வெளியே செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இது குறித்து அரசல் புரசலாகத் தெரிந்தும், விடுதிக் காப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அந்த இளைஞர்கள் இரவு நேரத்தில் டார்ச் லைட் அடித்து சிக்னல் கொடுப்பது, தாழ்வான பின்புற காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைவது என்று எல்லை மீறியிருக்கிறார்கள். விவகாரம் பெரிதான பிறகே, அவர்களின் பெற்றோரை வரவழைத்து அந்த மூன்று மாணவிகளையும் விடுதியிலிருந்தே அனுப்பிவைத்துவிட்டார்கள்” என்றனர்.

இந்தப் பிரச்னையால் கோபமடைந்த விடுதி மாணவிகள் தேர்வுக்குழு உறுப்பினரும், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியருமான நந்திவர்மன், விடுதி மாணவிகள் அனைவரையும் அழைத்துக் கடுமையாக எச்சரித்திருக்கிறார். இது ‘வாலு போய் கத்திவந்த கதை’யாக வேறொரு பிரச்னையை ஏற்படுத்திவிட்டது. அதாவது, ‘இந்தப் பிரச்னைகளை ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை. அப்படியானால், விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவிகளைப்போலத்தான் எல்லாரும் இருப்பீங்கபோல’ என்று சொல்லி, தகாத வார்த்தைகளில் திட்டினாராம் நந்திவர்மன். இப்படி பொதுவாகத் திட்டியதால் அப்பாவி மாணவிகளும் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவி வேதனையில், நாள் முழுவதும் சாப்பிடாமல் அழுததில் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்ந்து ‘ட்ரிப்ஸ்’ ஏற்றுமளவுக்குப் போய்விட்டது. கோபமடைந்த மாணவிகளில் ஒருவர், ஆசிரியர் குறித்து சைல்டு லைனுக்கு போன் செய்து புகார் அளித்துவிட்டார்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

அதனடிப்படையில், மாவட்ட குழந்தைகள் நல பெண் அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அப்போது ஆசிரியர் நந்திவர்மன், “மாணவிகளின் நலன் கருதித்தான் கொஞ்சம் ஓவராகப் பேசிட்டேன். விரைவில் ஓய்வுபெறப்போகிறேன்” என்று சொல்லி பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருக்கிறார். அந்த மூன்று மாணவிகள் எதற்காக விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று விசாரித்தபோது அதிர்ச்சியான தகவல் கிடைத்திருக்கிறது. “அந்த மூன்று மாணவிகளும் வெளியே உள்ளவர்களிடம் எல்லைமீறிப் பழகியதுதான் காரணம்” என்று சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணை அறிக்கை கலெக்டர் கவனத்துக்குச் சென்றதும், டி.ஆர்.ஓ தலைமையில் கமிட்டி அமைத்து, தனி விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும், தகவல் வெளியானால் பலரும் பாதிக்கப்படுவார்கள், அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படும் என்று பிரச்னையை மூடிமறைக்க ஏற்பாடுகள் நடந்தன. ஜூ.வி இந்த விஷயத்தில் தலையிட்டதைத் தொடர்ந்து, மாணவிகளிடம் அத்துமீறிய நான்கு இளைஞர்கள்மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு, அடுத்த நாளே அவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நடந்த சம்பவங்கள் குறித்து விடுதிக் காப்பாளர் அமுதாவிடம் பேசினோம். “நான் பணிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. இங்குள்ள மாணவிகளில் சிலரை ‘கன்ட்ரோல்’ செய்ய முடியவில்லை. விடுதிக்குள் சிகரெட் அடிப்பது, மஞ்சள் கயிறுவைத்து தாலி கட்டி விளையாடுவது, சுவர்களில் ஆபாசமான படங்கள் வரைவது, எழுதுவது என அட்ராசிட்டி செய்தனர். பள்ளிக்குச் சென்றுவிட்டு தாமதமாக விடுதிக்குத் திரும்பினர். அதனால்தான் அவர்களில் மூன்று பேரை விடுதியைவிட்டு வெளியேற்றினோம்” என்றார்.

விடுதி, கட்டுப்பாடின்றி இருந்ததுதான் இந்தப் பிரச்னைக்கான காரணமாகக் கூறப்படுகிறதே என மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகத்திடம் கேட்டோம். “சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர் அமுதா, காவலாளி விஜயா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றாக புதிதாகக் காப்பாளர், காவலாளி நியமிக்கப் பட்டுள்ளனர். இதற்குமேல் இது தொடர்பாகப் பேச விரும்பவில்லை” என்றார்.

அமுதா
அமுதா

பழநி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கவிதாவிடம் பேசினோம். “விடுதியின் பின்புறமுள்ள தெருவில் வசிக்கும் டிரைவர் ராகுல் (25), கேட்டரிங் தொழிலாளி பரந்தாமன் (24), டிரம்ஸ் கலைஞர் கிருபா (23), கல்லூரி மாணவர் ஒருவர் என நான்கு பேர் மாணவிகளைக் காதலிப்பதுபோல நடித்துள்ளனர். கல்லூரி மாணவர் தவிர மற்ற மூவரும் திருமணம் ஆனவர்கள். ஆனால், தங்களுக்குத் திருமணமாகவில்லை எனப் பொய் சொல்லி, பழகியிருக்கிறார்கள். இவர்களில் ராகுல், கிருபா, கல்லூரி மாணவர் மூவரும் உறவினர்கள். ராகுல் அந்தப் பகுதியில் புதிதாக வீடு கட்டிவருகிறார். கட்டுமானப் பணி நடந்துவரும் அந்த வீட்டுக்கு மாணவிகளை வரவழைத்து மாணவிகளுடன் ஒன்றாக இருந்துள்ளனர்” என்றார்.

தமிழ்நாடு முழுவதுமிருக்கும் மாணவிகள் விடுதிகளின் பாதுகாப்பு குறித்து, முழு வீச்சில் ஆய்வுசெய்ய வேண்டும் அரசு!