Published:Updated:

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருக்கு செயலிழந்த கை!

சாத்தான்குளம்
பிரீமியம் ஸ்டோரி
News
சாத்தான்குளம்

எஸ்.ஐ-க்கள், காவலருக்கும் கொரோனா?

சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் மீதான இரட்டைக்கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வந்தார்கள் சி.பி.ஐ போலீஸார். தற்போது சி.பி.ஐ குழுவில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் மதுரை ரயில்வே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விசாரணையில் சற்றே பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இருப்பினும், விசாரணையைத் தடங்கலின்றி தொடர்வதற்கு, கூடுதலாக அதிகாரிகளை அனுப்பும்படி சி.பி.ஐ தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ-யான பால்துரையும் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கிறார். அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எஸ்.ஐ-யான பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோருக்கும் மூச்சுத்திணறல், காய்ச்சல், இருமல் இருந்ததால் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஜெயராஜ் - பென்னிக்ஸ்
ஜெயராஜ் - பென்னிக்ஸ்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் உடல்நிலையும் மோசமடைந்துள்ளது. அவருக்கு இடது கை முழுமையாகச் செயல்படவில்லை. மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் ஸ்ரீதர். இது தொடர்பாக ஸ்ரீதரின் சார்பாக பேசிய அவரின் உறவினர்கள் சிலர், “சில வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு விபத்தில் ஸ்ரீதருக்கு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துவந்தார். ஆனால், சிறையில் அடைக்கப்பட்டதும் அவரால் சிகிச்சை எடுக்க முடியவில்லை. தவிர, அவரால் கட்டிலில்தான் படுக்க முடியும். ஆனால், சிறைத்துறையினரிடம் கட்டில் கேட்டதற்கு கொடுக்கவில்லை. மிகுந்த சிரமத்துடன் தரையில் படுத்ததால், அவருக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டு இடது கை முழுமையாகச் செயல்படாமல் போய்விட்டது. அவருடைய உடல்நிலையைக் கவனத்தில்கொண்டாவது ஜாமீன் வழங்க வேண்டும்” என்றார்கள்.

இன்னொரு பக்கம், சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த தெற்கு பேய்க்குளம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணை வேகம் பிடித்திருக்கிறது. மகேந்திரனின் தாய் வடிவு, சகோதரி சந்தனமாரி ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். தொடர்ந்து பேய்க்குளம் கிராமத்து மக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருக்கு செயலிழந்த கை!

அந்த கிராம மக்களிடம் நாமும் பேசினோம். “சாத்தான்குளம் போலீஸ்காரங்க இதே வேலையாதான் திரிஞ்சாங்க. அதுவும் அந்த எஸ்.ஐ-ங்க ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ரெண்டு பேரும் புல்லட்டுல தோரணையா ஊருக்குள்ள வருவாங்க. அவங்க பின்னாடியே நாலு பைக்குல ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஆளுங்க வருவாங்க. எல்லாருடைய கையிலும் லத்தி இருக்கும். பார்க்கிறப்பவே பயமா இருக்கும். அவங்க கையில் சிக்கி விசாரணைக்கு கூட்டிட்டுப் போனா அவ்வளவுதான்... ஆளு முழுசா வெளியே வர்றது சிரமம். பல நேரங்கள்ல எந்தக் காரணமும் இல்லாம அப்பாவிகளையும் கூட்டிட்டுப்போய் தாக்குறதை வழக்கமா வெச்சிருந்தாங்க” என்றார்கள்.

இதற்கிடையே, பேய்க்குளத்தில் நடந்த மற்றொரு கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ராஜா சிங் என்பவரையும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் தாக்கியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த ராஜா சிங் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளார். மதுரை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் தொடர்பான வழக்கை சாத்தான்குளம் டி.எஸ்.பி-யான குமார் தலைமையிலான போலீஸார் விசரித்துவருகிறார்கள். இந்த வழக்கிலும் ராஜா சிங் பல்வேறு விவரங்களைத் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருக்கு செயலிழந்த கை!

மேற்கண்ட விசாரணைகள் அனைத்திலும் சிக்கியுள்ள காவலர்களைக் காப்பாற்றுவதற்காக, சில தரப்பிலிருந்து விசாரணை அதிகாரிகள் தரப்பில் நைசாகப் பேச்சுக் கொடுத்துள்ளனர். அதற்கு, விசாரணை அதிகாரிகள் தரப்பில், “ஏன் உங்க ஆளுங்களுடன் சேர்ந்து நாங்களும் ஜெயில்ல உட்காரணும்னு ஆசைப்படுறீங்களா?!” என்று காட்டமாகக் கேட்டு மறுத்ததுடன், “எந்த வகையிலும் உதவ முடியாது” என்று கறாராகக் கூறிவிட்டார்களாம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெர்சிக்கு அரசு வேலை!

‘சாத்தான்குளம் விவகாரம், குறிப்பிட்ட சமூகத்தினரிடம் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியிருப்பதாக’ உளவுத்துறையினர் முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலைக்கான உத்தரவை, தன் கையாலேயே வழங்க வேண்டும் என்று விரும்பினாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடந்த வாரமே அதற்கான உத்தரவு தயாராகிவிட்டது.

ஆனாலும், ஜெயராஜின் மூத்த மகள் பெர்சி மற்றும் குழந்தைகளுக்கு அம்மைநோய் ஏற்பட்டதால், அவர்களால் உடனடியாக சென்னைக்குச் செல்ல இயலவில்லை. தற்போது அவர்கள் குணமடைந்துவிட்ட நிலையில் ஜூலை 27-ம் தேதி சென்னைக்கு பெர்சியை வரவழைத்த முதல்வர், தன் கையால் அவருக்கான பணி ஆணையை வழங்கினார். தற்போது அவருக்கு கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.