Published:Updated:

2 ரூபாய் தோசை கடை

2 ரூபாய் தோசை கடை
பிரீமியம் ஸ்டோரி
2 ரூபாய் தோசை கடை

- கௌசல்யா

2 ரூபாய் தோசை கடை

- கௌசல்யா

Published:Updated:
2 ரூபாய் தோசை கடை
பிரீமியம் ஸ்டோரி
2 ரூபாய் தோசை கடை

“நாலுபேரு வயிறாரச் சாப்பிட்டு வாழ்த்துவாங்க இல்லையா... அந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை எதுவுமே கிடையாதுங்க. கோடி ரூபா சம்பாதிச்சாலும் அந்த வாழ்த்து தர்ற சந்தோஷத்தைத் தராது! போறப்போ பணத்தையா கொண்டுபோகப்போறோம், சொல்லுங்க..?’’ - வெள்ளந்தியாய்ப் பேசத் தொடங்குகிறார் சின்னத்தம்பி.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள கோனாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, பிழைப்புக்காக ஊரு விட்டு ஊரு வந்து, திருச்சி மாவட்டத்தின் உறையூர்ப் பகுதியில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்துவருகிறார். கடந்த ஐந்து வருடங்களாக உறையூரில் தன் வீட்டின் அருகே சிறிய அளவில் பத்துக்குப் பத்து சைஸில் உணவகம் நடத்திவருகிறார். ‘ரெண்டு ரூபா தோசைக்கடை’ என்றால் உறையூரில் பிரபலம். கொரோனா காலத்திலும் விலையை ஏற்றாமல், சாதா தோசை 2 ரூபாய்க்கும், பொடி தோசை 3 ரூபாய்க்கும், மசாலா தோசை 4 ரூபாய்க்கும் விற்கிறார். பொருளாதாரச் சிக்கல்கள் வந்தபோதும் 5 வருடங்களாக தன்னுடைய உணவகத்தில் விலையேற்றம் செய்யவில்லையாம்!

2 ரூபாய் தோசை கடை

``நாங்க நல்லா வாழ்ந்த குடும்பம்தான். எங்க அப்பா புதுக்கோட்டையில பெரிய ஓட்டல் நடத்தின ஆளு. எங்க வீட்டுல என்னுடன் சேர்ந்து ஐந்து குழந்தைங்க. நல்லா போய்க்கிட்டிருந்த நேரத்தில, அப்பா இறந்துட்டார். அப்போ நான் மூன்றாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அதுக்குப் பிறகு குடும்பச் சூழ்நிலையாலும், மேற்கொண்டு குடும்பத்தினைச் சுமக்கும் பொறுப்பு வந்ததாலும் நானும் என் அண்ணனும் அதே ஓட்டல்ல வேலை செஞ்சோம். ஆனாலும் நடத்த முடியல. அதன்பின் திருமணம் முடிச்சு திருச்சிக்கு வந்த நான் பல இடங்களில் சர்வரா வேலை பார்த்து கடைசியாத்தான் இந்த ஓட்டலை நடத்த ஆரம்பிச்சேன்.

ஓட்டல் ஆரம்பிச்ச புதுசுல பெருசா வருமானம் பார்க்கணும்னு எண்ணமெல்லாம் இல்லை. வெளியில போய் ஒரு ஓட்டல்ல வேலை செஞ்சா கிடைக்கும் சம்பளம் அளவே இதுல கிடைச்சாப் போதும்னு நினைச்சேன். இப்பவும் அப்படித்தான் நினைக்கிறேன். அதனாலதான் என்னால் குறைஞ்ச விலையில உணவை விற்பனை செய்ய முடியுது.

ஆரம்பத்துல எல்லாக் கடைகளிலேயும் விற்பனை செய்யும் அதே விலையிலதான் நானும் டிபன் விற்பனை செஞ்சேன். ஒரு நாள் உள்ளூர்ல கோயில் விசேஷத்துக்கு ஆர்டர் எடுத்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் செஞ்சு கொடுத்த அன்னதான உணவுல எங்களோட பங்களிப்பா பணம் வாங்காம சின்ன தோசைகளை வித்தியாசமா செஞ்சு கொடுத்து அனுப்பினோம். குழந்தைகளுக்கு அந்த டேஸ்ட் பிடிச்சுப்போயிருச்சு. விசேஷத்துக்கு வந்தவங்க அதைப் பாராட்ட, இந்த கான்செப்ட்டை எடுத்துக்கிட்டேன். குறைந்த விலை தோசைப் பயணத்தை ஆரம்பிக்க அந்தக் கோயில் விசேஷம்தான் காரணம்.

2 ரூபாய் தோசை கடை

முக்கியமா, சின்ன வயசுல நாங்க பட்ட கஷ்டங்கள் எல்லாம் கண் முன்னாடி வந்து போச்சு. மற்றொரு நாள் என் ஓட்டலுக்கு சாப்பிட வந்தும், பணம் இல்லாம ஒருத்தர் திரும்பிப் போனதைப் பார்த்தேன். இனி அப்படி யாரும் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துட்டே உள்ளே வரக்கூடாதுன்னு முடிவெடுத்தேன். இலவசமா கொடுத்தா கட்டுப்படியாகாது. ஆனா, குறைஞ்ச விலையில சாப்பாடு கொடுக்கலாம்னு தோணுச்சு. ஆனாலும் சிறு தயக்கம். ‘இரண்டு பெண் குழந்தைகளை வைத்திருக் கிறோம். வருங்காலத்துல அவங்களுக்கு பெருசா நகை நட்டு செய்துபோட முடியாதில்ல’ன்னு யோசனையும் இருந்தது.

ஆனால் என் பெண்குழந்தைங்கதான், ‘அப்பா, பலபேர் பசியால் வாடுறப்போ நாம சேர்த்து வைச்சு என்ன செய்யப்போறோம். நம்ம கடைக்கு இப்ப ரெண்டு ரூபா தோசைக்கடைனே பேராகிடுச்சுப்பா! தாராளமா அதையே நம்ம அடையாளமா ஆக்கிக்குவோம்’னு சொன்னாங்க. இருந்தாலும் சின்னதா ஒரு தயக்கத்தோடுதான் நானும் என் மனைவியும் குறைஞ்ச விலையில் விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். ஊர் மக்களின் ஆதரவும், எளியவர்களின் பசியினைப் போக்கிய நிம்மதியும் கிடைச்சுது. மனசளவில் இவை மட்டுமே போதும்னு எண்ணம் வந்தது. தயக்கங்கள் உடைய ஆரம்பிச்சது. இன்னிக்கும் என் பிள்ளைகளும் மனைவியும் இதே எண்ணத்துல இருக்காங்க’’ என்று சிரிக்கிறார். சின்னத்தம்பியை ஆமோதிப்பதுபோல் குடும்பமே அவரைப் பெருமை பூக்கப் பார்க்கிறது.

2 ரூபாய் தோசை கடை

``இப்ப சாயங்காலம் 7 மணியிலிருந்து 11 மணிவரை டிபனோட முடிச்சுக்கிறோம். வேலைக்கு ஆள் வைச்சா வாடிக்கையாளர்களை உபசரிப்பார்களான்னு கவலை. நான், என் மனைவி மற்றும் என் குழந்தைகள்தான் முழுக்க முழுக்கக் கடையைப் பார்த்துக்கொள்கிறோம்.

ப்ளஸ் 2, பத்தாம் வகுப்பு படிக்கிற என் மகள்கள் பள்ளிக்கூடம் போயிட்டு எங்களுக்கு உதவி பண்ண கடைக்கு வந்துடுறாங்க... சிறுகக் கட்டி பெருக வாழ்னு வாழ்றோம். அடுத்து மதியச் சாப்பாடும் 10 ரூபாய்க்குக் கொடுக்குற திட்டம் இருக்கு. பெருசா லாபம் இல்லை தான். எதிர்காலத்துக்காக எங்களுக்கு சேமிச்சு வைக்கவும் தோணல. தினசரி செலவுகளைச் சரிசெய்யக் கிடைச்சதே போதும்னு இருக்கு. அந்த மனத் திருப்தி வேற எதிலும் கிடைக்கவே இல்லை. குடும்பத்தோட இதை ஒரு சேவையாவே செய்றோம்!’’ என்கிறார்கள் ‘ரெண்டு ரூபாய் தோசைக் கடை’ குடும்பத்தினர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism