Published:Updated:

“இவங்களைக் கனவு காண வைக்கணும்!”

செரினா
பிரீமியம் ஸ்டோரி
செரினா

மொட்டை அக்கா, சரண்யாக்கா, சர்ணாக்கா எனத் தங்களுக்கு வசதியான பெயர்களில் அழைக்கின்றன குழந்தைகள்.

“இவங்களைக் கனவு காண வைக்கணும்!”

மொட்டை அக்கா, சரண்யாக்கா, சர்ணாக்கா எனத் தங்களுக்கு வசதியான பெயர்களில் அழைக்கின்றன குழந்தைகள்.

Published:Updated:
செரினா
பிரீமியம் ஸ்டோரி
செரினா

கல்பாக்கத்திலிருந்து வாயலூர் செல்லும் குத்துக்கல் சாலையில் கடற்கரையை ஒட்டியிருக்கிறது, காரத்திட்டு இருளர் குடியிருப்பு. சுனாமி மறுவாழ்வுத் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் காரை பெயர்ந்து சிதைந்திருக்கின்றன. குடியிருப்பின் முகப்பில் அழகாகக் கட்டப்பட்ட ஒரு குடில்... ஒரு பக்கம், கொட்டங்கச்சியில் கலைப்பொருள்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் பெண்கள். இன்னொரு பக்கம் குழந்தைகளுக்கு வகுப்புகள் நடக்கின்றன. வெளியில் குட்டிக்குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறார் செரினா.

“இவங்களைக் கனவு காண வைக்கணும்!”

செரினா வடசென்னையில் பிறந்தவர். பெங்களூரில் வளர்ந்தவர். அப்பா, கேட்டரிங் தொழில் செய்தார். சமீபத்தில் அவர் காலமாகிவிட, அம்மாவும் தம்பியும் தொழிலை எடுத்து நடத்துகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் புதுப்பட்டினத்தில் இருக்கும் தன் பெரியம்மாவின் வீட்டுக்கு வந்த செரினா, இந்த இருளர் குடியிருப்பில் வாழும் குழந்தைகளைப் பார்த்து இங்கேயே தங்கிவிட்டார். முதலில் ஏற்றுக்கொள்ளத் தயங்கிய மக்கள், காலப்போக்கில் தங்கள் இன்னல் போக்கவந்த தேவதையென்று உணர்ந்து தங்கள் குடியிருப்பிலேயே இடம் தந்து செரினாவை அரவணைத்துக்கொண்டார்கள். குழந்தைகளுக்கு இரவுப்பள்ளி, பெண்களுக்குத் தொழிற்பயிற்சி, பெரியவர்களுக்கான சுகாதார விழிப்புணர்வு என அந்த மக்களுடனே வாழ்ந்து அவர்கள் வாழ்க்கையைப் புதிதாக்கிவருகிறார் செரினா.

“இவங்களைக் கனவு காண வைக்கணும்!”

செரினா என்கிற பெயர் வாயில் நுழையவில்லை. மொட்டை அக்கா, சரண்யாக்கா, சர்ணாக்கா எனத் தங்களுக்கு வசதியான பெயர்களில் அழைக்கின்றன குழந்தைகள்.

‘‘கொஞ்சநாள் முன்னாடி தலைமுடியை புற்றுநோயாளிகளுக்காக டொனேட் பண்ணி மொட்டை அடிச்சிருந்தேன். அப்போலருந்து இவங்கெல்லாம் மொட்டை அக்கான்னுதான் கூப்பிடுவாங்க...’’ சிரிக்கிறார் செரினா.

‘‘நான் எம்.எஸ்.டபிள்யூ படிச்சேன். படிக்கும்போதே நிறைய வேலைகளெல்லாம் வந்துச்சு. எனக்கு ஒரு நிறுவனத்தோட பின்புலத்துல வேலை செய்யப் பிடிக்கலே. எங்கோ உதவி கிடைக்காமத் தவிக்கிற மக்களுக்கு, தேடிப்போய் வேலை செய்யணும். ஒவ்வொரு வருஷமும் விடுமுறைக் காலங்கள்ல பெரியம்மா வீட்டுக்கு வருவேன். அங்கிருக்கிற மீனவர் குழந்தைகளை எனக்கு ரொம்பப் பிடிச்சுருந்துச்சு. அவங்களுக்காக ஒரு இரவுப்பள்ளியைத் தொடங்கினேன். ஆனா, குழந்தைகள் தொடர்ந்து வரலே. யோசிச்சுப் பாத்தா, அவங்களுக்கு எல்லாமே கிடைக்குது. பெற்றோர் ஓரளவுக்குப் படிச்சிருக்காங்க... அந்தக் குழந்தைகளுக்கு நாம தேவையில்லைன்னு உணர்ந்தேன். சரி, பெங்களூரு போயிடலாம்னு முடிவு செஞ்சேன்.

“இவங்களைக் கனவு காண வைக்கணும்!”
“இவங்களைக் கனவு காண வைக்கணும்!”

மனச்சோர்வோட இந்தப்பகுதியில நடந்து வந்துக்கிட்டிருந்தப்போ அண்ணாமலைங்கிற குட்டிப்பையனைப் பார்த்தேன். அழுக்கா இருந்தான். என்னைப் பார்த்துச் சிரிச்சான். மொபைல்ல போட்டோஸ் எடுத்தேன். நல்லா போஸ் கொடுத்தான். கேட்ட கேள்வி எதுக்கும் பதில் சொல்லலே... விரலைப் பிடிச்சு இந்தக் குடியிருப்புக்குக் கூட்டிக்கிட்டு வந்தான். இந்தச் சூழலே வித்தியாசமா இருந்துச்சு. வீடுகள் இருந்தாலும் எல்லோரும் வெளியில மண்தரையில படுத்திருந்தாங்க. அந்த ஒரு மணி நேரத்துல அண்ணாமலை என்கூட ரொம்பவே ஒட்டிக்கிட்டான்... நாம தேடிக்கிட்டிருந்த இடம் இதுதான்னு முடிவு பண்ணிட்டேன்...’’ தமிழும் ஆங்கிலமும் கலந்துபேசுகிறார் செரினா.

காரத்திட்டு இருளர் குடியிருப்பில் 65 குடும்பங்கள் வசிக்கின்றன. 45 குழந்தைகள் பள்ளிக்கும் 20 குழந்தைகள் அங்கன்வாடிக்கும் செல்கின்றன. ஒவ்வொரு குழந்தையைப் பற்றியும் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறார் செரினா.

“இவங்களைக் கனவு காண வைக்கணும்!”
“இவங்களைக் கனவு காண வைக்கணும்!”

‘‘குழந்தைகள் சீக்கிரம் ஒட்டிக்கிட்டாங்க. பெரியவங்கதான் சேர்த்துக்க பயந்தாங்க. பழங்குடிகளோட இயல்பு இது. அவங்களுக்கு நம்பிக்கையை உருவாக்கணும்... இந்தப் பசங்ககூடவே சுத்தினேன். மீன் பிடிக்கப் போவோம். அங்கேயே நெருப்பு மூட்டி மீனைச் சுட்டுக்கொடுப்பாங்க... பெங்களூரையே மொத்தமா மறந்துட்டேன். நான் பசங்க பின்னாடியே சுத்துறதைப் பார்த்த பெரியவங்க ஒரு கட்டத்துல புரிஞ்சுக்கிட்டாங்க.

நான் இங்கேயே தங்கி வேலை செய்யப்போறேன்னு நண்பர்கள்கிட்டயும் அம்மாகிட்டயும் சொன்னேன். எல்லோருமே 'நல்லவிஷயம், செய்'ன்னு சொன்னாங்க. நிறைய பேர் உதவ முன்வந்தாங்க. எல்லாரையும் ஒருங்கிணைச்சு ‘அலை'ன்னு ஓர் அமைப்பைத் தொடங்கினோம்.

சுகாதாரம் பத்தி கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கொடுத்தோம். எங்க குடில்ல நிறைய விளையாட்டுப் பொருள்கள் வாங்கி வச்சோம். குழந்தைகள் உள்ளே வந்து விளையாடணும்னா குளிச்சு, எண்ணெய் தேய்ச்சு தலைசீவிட்டுத்தான் வரணும்னு சொன்னோம். வாரந்தோறும் பெரியவங்களை ஓரிடத்தில் கூட்டி மதுவைத் தவிர்க்கிறது, குழந்தைகளோடு நேரம் செலவிடுறது, கெட்ட வார்த்தைகளைத் தவிர்க்கிறது பத்தியெல்லாம் பேசுவோம். வெளியிலிருந்து நிறைய உதவிகள் கிடைக்குது. ஒரு கல்லூரி மூலம் கொட்டாங்கச்சியில கலைப்பொருள்கள் செய்ற பயிற்சி கொடுத்தோம். பத்துப் பெண்கள் இப்போ முழுமையா அதுல ஈடுபடுறாங்க. வாயலூர் பஞ்சாயத்தோட முன்னாள் தலைவர் உசேன் அங்கிள் நிறைய உதவி செய்றார். ஹரிகுமார், சங்கர், ஆதித்யா, அருண், திவ்யான்னு நல்ல தம்பி தங்கைகள் கிடைச்சிருக்காங்க.

இந்தக் குழந்தைகளுக்குக் கனவுகள் காணக்கூடத் தெரியாது. வெளியுலகத்துல என்னென்ன வாய்ப்புகள் இருக்குன்னும் தெரியாது. அவங்களைக் கனவு காண வைக்கணும்... பெரிய பெரிய வாய்ப்புகளை உருவாக்கித்தரணும். லேசா தூண்டிவிட்டா இவங்க பெரிய எல்லைகளைத் தொடுவாங்க. கூடைப்பந்துப் பயிற்சி கொடுக்கிறோம். டான்ஸ் கத்துக்கொடுக்கிறோம். ஒரு தொலைக்காட்சி நடனப்போட்டியில கடைசிக்கட்ட ஆடிஷன் வரைக்கும் ஒரு பொண்ணு போய் வந்திருக்கா. எட்டாம் வகுப்போடு இடைநின்ற பிள்ளைகள் ப்ளஸ் டூ வரைக்கும் போக ஆரம்பிச்சிருக்காங்க. இன்னும் பெரிசா மாற்றங்கள் வந்திடலே... ஆனா நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கிடுச்சு’’ என்கிறார் செரினா.

சங்கர், திவ்யா, உசேன், ஹரிகுமார்
சங்கர், திவ்யா, உசேன், ஹரிகுமார்

‘‘எங்கேயோ பெறந்த பொண்ணு... உறவுகளையெல்லாம் விட்டுட்டு எங்ககூடவே கெடந்து வதங்குது. அப்பா அம்மா பாத்துக்கிறதைவிட இந்தப் பொண்ணு எங்க பிள்ளைகளைப் பாத்துக்குது. பிள்ளைகளுக்கு நெகம் வெட்டிவிடும். குளிக்காம வகுப்புக்கு அனுப்பினா வீடு தேடி வந்து திட்டும். அதுக்கு பயந்தே நாங்க குளிக்கவச்சு அனுப்புவோம். கொரோனா நேரத்துல அந்தப் புள்ள இல்லேன்னா பல குடும்பங்கள் தவிச்சுப் போயிருக்கும். பிள்ளைங்க சத்துக்குறைவா இருக்குன்னு சத்துமாவு கொண்டாந்து வாரத்துல மூணுநாள் கஞ்சி காச்சி ஊத்துது... எங்கூரைக் காக்க வந்த தேவதையாத்தான் நாங்க இந்தப் புள்ளையப் பாக்குறோம்...’’ என்கிறார் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த செந்தாமரை.

‘‘இந்தக் குடியிருப்புல இருந்து ஒரே ஒரு குழந்தையைப் பெரிய ஆளாக்கிட்டா என் கடமை முடிஞ்சிடும்... அந்தப் பிள்ளை இவங்களைப் பாத்துக்கும்... அதுவரைக்கும் இந்தக் குடியிருப்பை விட்டுப் போகமாட்டேன்...’’

நம்பிக்கையும் ஸ்நேகமுமாகக் கரம் பற்றி விடை கொடுக்கிறார் செரினா. சுற்றிச்சூழ்ந்து நின்ற குழந்தைகள் முகத்தில் அவ்வளவு வெளிச்சம்!