Published:Updated:

“கஷ்டப்படுறவங்களோட வலி நல்லா தெரியும்!”

இப்படியும் ஒரு பழனிசாமி...

பிரீமியம் ஸ்டோரி
‘‘வீட்டுல இடமில்லாம, திண்ணைலதான் சோறாக்கித் தின்னுக்கிட்டு இருந்தோம். கதவு இருக்காது. சேலையைப் போட்டு மறைச்சுப்போம். இப்படி வீடு இல்லாம இருக்குற கஷ்டம் எனக்கு நல்லா தெரியும்...’’ - பழனிசாமியின் வார்த்தைகளில் இப்போதும் வறுமையின் வலி வெளிப்படுகிறது. இந்தப் பழனிசாமிதான் பல கோடி ரூபாய் மதிப்புடைய தனது நிலத்தை, பட்டியல் சமூக மக்களுக்குக் கொடுத்துவிட்டு எளிய வாழ்க்கை வாழ்ந்துவருகிறார் என்றால் நம்ப முடிகிறதா?

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். கூலி வேலை, இரண்டு மகள்கள், மனைவி, சிறு வீடு என்று எளிய வாழ்க்கை வாழ்கிறார். திடீரென்று ஒருநாள், பழனிசாமியின் தாத்தா உக்கன் பெயரில் 2.99 ஏக்கர் நிலம் இருப்பதாக ஒரு நோட்டீஸ் வரவே, ‘நமக்கேது நிலம்?’ என்று குழப்பமடைந்தார் பழனிசாமி. அலைந்து திரிந்து ஆவணங்களைச் சேகரித்து, ஒருவழியாக நிலத்தைக் கண்டுபிடித்தவர், அதை தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவில்லை... அப்படியே சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடில்லாமல் தவித்த 105 பட்டியல் சமூக குடும்பங்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டார். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்னர். மேட்டுப்பாளையம் மையப் பகுதியிலிருக்கும் அந்த நிலத்தின் மதிப்பு அப்போதே பல கோடிகள்!

“கஷ்டப்படுறவங்களோட வலி நல்லா தெரியும்!”

தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேட்டுப்பாளையம் நகரச் செயலாளராக இருக்கும் பழனிசாமியைச் சந்திக்கச் சென்றோம். நடூரில் சிறிது சிறிதாக மூன்று அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கிறார். அறைகளுக்கு வெளியே உள்ள சிறிய இடத்தில் விறகு அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்தார் பழனிசாமியின் மனைவி வெண்ணிலா.

ஆவணங்களைக் காண்பித்தபடியே, நம்மிடம் பேசத் தொடங்கினார் பழனிசாமி. ‘‘1994-லதான் அந்த நோட்டீஸ் வந்துச்சுங்க தம்பி. ‘அது பஞ்சமி நிலம். அதை எதிரணிக்கு கிரையம் செஞ்சு கொடுத்தது செல்லாது’னு நோட்டீஸ்ல சொல்லியிருந்தாங்க. அப்பதான் எங்க தாத்தா பெரிய உக்கன் பேருல இப்படியொரு நிலம் இருக்குறதே எனக்குத் தெரிஞ்சுது. அந்த நிலம் சம்பந்தமான ஆவணங்களைத் திரட்டினேன். ஆனா, அதுக்கு நான் பட்டபாடு இருக்குதே... கவர்ன்மென்ட் ஆபீஸ்ல காசு வெட்டினாத்தான் வேலையே நடக்கும். அதுக்காக கந்துவட்டிக்குக் கடன் வாங்கியும், பொண்டாட்டி கம்மலை அடகு வெச்சும் பணத்தைப் புரட்டினேன். செப்டிக் டேங்க் சுத்தம் செய்யுற வேலைக்கெல்லாம் போயிருக்கேன். ஒருவழியாக நிலத்தைக் கைப்பத்திட்டேன். மேட்டுப்பாளையம் நகரத்துல அந்த இடம் புதர் மண்டிக் கிடந்துச்சு. அதை யெல்லாம் சுத்தம் செஞ்சு, சுத்துவட்டாரத்துல இருக்குற கணவனை இழந்த பெண்கள், கஷ்டப்படுறவங்கனு பட்டியல் சமூக மக்களைத் தேர்ந்தெடுத்து, அந்த இடத்துல குடிசை போட்டு தங்கிக்கோங்கன்னு சொல்லிட்டேன்.

அப்ப இங்க செல்வாக்கோட இருந்த ஒரு குரூப், ‘நிலம் எங்களோடதுதான்’னு பெரிய பிரச்னை பண்ணினாங்க. ஆரம்பத்துல போலீஸ்காரங்க, அவங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணினாங்க. எங்களை, ‘சுட்டுக் கொன்னுடுவோம்’னு மிரட்டி, குடிசையையெல்லாம் அகற்றப் பார்த்தாங்க. ஆனா, தோழர்கள் உதவியோட அதையெல்லாம் எதிர்த்தோம். அந்த இடம் சம்பந்தமா அவங்ககிட்ட எந்த ஆவணமும் இல்லை. நம்மகிட்ட எல்லாம் கரெக்டா இருந்துச்சு. அதுக்கப்புறம் போலீஸ்காரங்க விலகிட்டாங்க. எதிரணிக்காரங்க அப்பவும் விடலை. வலுக்கட்டாயமா லாட்ஜுக்குக் கூட்டுக்கிட்டுப் போய் சூட்கேஸ் நிறைய பணத்தைக் காட்டி கையெழுத்து கேட்டு மிரட்டினாங்க. ஒருநாள் குடிசைகளுக்குத் தீ வெச்சுட்டாங்க. குடிசைப் பகுதியில பாம்புகளை கொண்டாந்து விட்டாங்க. ஒரு வருஷம்... ரெண்டு வருஷமில்லைங்க தம்பி... 21 வருஷப் போராட்டம். 1994-ல ஆரம்பிச்ச போராட்டம், 2015-லதான் முடிஞ்சுது. ஒருவழியா அரசாங்கத்துகிட்ட நாங்க நிலத்தை ஒப்படைக்கவும், அவங்களே 105 பட்டியல் சமூக மக்களுக்கும் பட்டா கொடுத்துட்டாங்க’’ என்றவரிடம், ‘‘உங்களுக்கு இந்த இடம் வேண்டும் என்ற எண்ணமே வரவில்லையா?’’ என்று கேட்டோம்.

“கஷ்டப்படுறவங்களோட வலி நல்லா தெரியும்!”

‘‘நான் மூணாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். கூலி வேலை செஞ்சுக்கிட்டு இருந்தேன். வீட்ல ரொம்பவே கஷ்டம். திண்ணைலதான் சோறாக்கித் தின்போம். பல அவமானங்களைக் கடந்து வந்துருக்கேன். அதனால எங்களை மாதிரி கஷ்டப்படுறவங் களோட வலி எனக்கு நல்லா தெரியும் தம்பி... அதனாலதான், அந்த நிலத்தை இல்லாதவங்களுக்குக் கொடுக்க லாம்னு முடிவு பண்ணினேன்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

தற்போது நடூர் பகுதியில் பழனிசாமி வசித்துவரும் வீடு ஆரம்பகாலத்தில் அவர் குடிசை போட்டுத் தங்கிய இடம். ஒன்றேகால் சென்ட் பரப்பளவு கொண்ட இந்த இடத்துக்கான பட்டாவையும் போராடியே அவர் வாங்கியிருக்கிறார். பழனிசாமி நிலம் கொடுத்திருக்கும் குடியிருப்புப் பகுதிக்கு அவரின் தாத்தா ‘உக்கன்’ பெயரையே வைத்துள்ளனர். உக்கன் நகருக்கு பழனிசாமியுடன் சென்றபோது, வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அவரிடம் பாசமழை பொழிந்தனர். அவர்களிடம் பேசிவிட்டு, பழனிசாமி மீண்டும் தொடர்ந்தார்.

‘‘ரெண்டு பொண்ணுங்களை நல்லா படிக்கவெச்சுட்டேன். அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெக்கணும். இந்த நிலத்தை மீட்ட வகையில கொஞ்சம் கடன் ஆகிடுச்சு. அதைக் கட்டி முடிச்சிட்டேன்னா கல்யாண வேலைகளைத் தொடங்கிடுவேன். மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரங் கள்ல சுமார் 800 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்புல இருக்கு. அதையெல்லாம் மீட்டுக் கொடுத்தாலே பட்டியல் சமூக மக்கள் நிம்மதியா இருப்பாங்க” என்றார் அழுத்தமாக. எல்லாம் சரி... பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை கதை இப்போது எதற்கு என்கிறீர்களா... இதே பகுதியில் இவரின் சின்ன தாத்தா பெயரில் 2.99 ஏக்கர் நிலம் இருக்கிறதாம். அதையும் இதேபோல இல்லாதபட்ட மக்களுக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார் பழனிசாமி!

அடித்துப் பிடுங்கும் அரசியல்வாதி களுக்கு மத்தியில், தன்னிடமிருந்த அத்தனையையும் அள்ளிக் கொடுத்த பழனிசாமிக்கு தாராளமாக வைக்கலாம் ஒரு ரெட் சல்யூட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு