Published:Updated:

ஒளியில்லை, வழியுண்டு! - ஆச்சர்யம்கூட்டும் `அகவிழி' தம்பதி!

 ரஜினிகாந்த் -  உமாமகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினிகாந்த் - உமாமகேஸ்வரி

வழிகாட்டிகள்

ஒளியில்லை, வழியுண்டு! - ஆச்சர்யம்கூட்டும் `அகவிழி' தம்பதி!

வழிகாட்டிகள்

Published:Updated:
 ரஜினிகாந்த் -  உமாமகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினிகாந்த் - உமாமகேஸ்வரி
“தன் வாழ்க்கை, தன் குடும்பம்னு இருந்துட்டா, இந்தச் சமூகத்தை எப்படி மேம்படுத்துறது. அந்தப் பணியில் நாம எல்லோருக்கும் பங்கு இருக்குல்ல?” - அழுத்தமாகக் கூறும் உமாமகேஸ்வரி - ரஜினிகாந்த் தம்பதி, பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள். போராட்டமான வாழ்க்கையையும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, இன்று அரசுப் பள்ளி ஆசிரியர்களாக முன்னேறியுள்ளனர். பள்ளியுடன் தங்கள் பணியை முடித்துக்கொள்ளாதவர்கள், சமூக முன்னேற்றத்துக்குத் தங்களாலான மாற்றத்தையும் விதைத்து வருகிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“சேலம் என் பூர்வீகம். பிறக்கும்போதே எனக்கும் என் தங்கைக்கும் பார்வைத்திறன் இல்லை. அரசுப் போக்குவரத்துக் கழகத்துல செக்யூரிட்டி கார்டா வேலைசெஞ்சார் அப்பா. ஒருநாள் வேலையிலிருந்தபோது அவர்மீது பஸ் எதிர்பாராமல் ஏறியதுல இறந்துவிட்டார். பிறகு, எங்களை வளர்க்க அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டாங்க.

ராமநாதபுரத்தில் ஒரு குக்கிராமத்துல பிறந்து வளர்ந்த என் கணவரும் என்னைப் போலவே நிறைய கஷ்டப்பட்டிருக்கார். ஆரம்பகாலத்தில் சொந்தக் குடும்பத்தில்கூட இவருக்கு எந்த ஊக்கமும் கிடைக்கலை. நிறைய தடைகள் துரத்தினாலும், பல ஊர்கள் மாறி ஸ்கூல் படிப்பை முடிச்சார். வெற்றி பெற்றே ஆகணும் என்கிற வைராக்கியத்துடன் வெறும் 150 ரூபாயுடன் பஸ் ஏறினார். வந்திறங்கிய சேலம் இவருக்கு வசிப்பிடமானது’’ என்று உமாமகேஸ்வரி சொல்ல, இயலாமை நிறைந்த சூழலையும் வெல்லும் வைராக்கியத்துடன் தான் எடுத்த முயற்சிகள் பற்றிச் சொன்னார் ரஜினிகாந்த்.

‘`ஆரம்பத்துல ஒரு முறுக்குக் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு நாளைக்கு 15 ரூபாய் சம்பளம். ‘நேசக் கரங்கள்’ சங்கத்தில் வேலைகேட்டுப் போனேன். அங்கேயே தங்க இடம்கொடுத்து கல்லூரியில் படிக்கவும் உதவினாங்க. இதற்கிடையில் நடிகர் விசுவின் அரட்டை அரங்கம் உட்பட ஏராளமான மேடைகள்ல பேச்சாளராகக் கலந்துகிட்டேன். பெரியார் பல்கலைக்கழக அளவில் கோல்டு மெடல் வாங்கி பி.ஏ முடிச்சேன். நான் எம்.ஏ படிச்ச சேலம் அரசு ஆர்ட்ஸ் காலேஜ்ல, உமாவும் எம்.ஏ சேர்ந்தாங்க. ஆறு மாசப் பழக்கத்துல எங்களுக்குள் காதல் மலர்ந்துச்சு’’ - சிறு புன்னகை ரஜினிகாந்த்திடம்.

 குடும்பத்தினருடன்...
குடும்பத்தினருடன்...

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றதால் எம்.ஏ படிப்பை நிறுத்திக்கொண்டு ஆசிரியர் பணிக்குச் சென்றிருக்கிறார் உமாமகேஸ்வரி. ‘`2010-ல் இவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றார். அடுத்த வருஷமே எங்களுக்குக் கல்யாணம். பிறகு அஞ்சல்வழி படிப்பைத் தொடர்ந்தவர், இதுவரை 5 எம்.ஏ முடிச்சிருக்கார்” - கணவரின் திறமைகளைச் சொல்லும் உமாமகேஸ்வரியின் முகம் பெருமிதத்தில் பூரிக்கிறது.

சேலம் மாவட்டம், வீராணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரஜினிகாந்த்தும் அம்மாப்பேட்டை நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உமாமகேஸ்வரியும் ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். மேலும், ‘அகவிழி’ என்ற அமைப்பின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்துக்குப் பெரிதும் உதவுகின்றனர்.

“பழைய கஞ்சிக்கும் கிழிஞ்சுபோன உடைக்குமே ஏங்கிய காலமுண்டு. பார்வைதான் இல்லை, வாழ்க்கையிலாவது வெளிச்சம் பிறக்காதான்னு இளமைக்காலத்துல ஏங்கியிருக்கோம். ரொம்பவே கரடு முரடான பாதையில் பயணிச்சுதான், இன்றைய நிலைக்கு உயர்ந்திருக்கோம். எங்க வெற்றிக்குப் பின்னால பலரின் ஊக்கம் இருக்கு. இன்னிக்கு நல்ல வேலை, நிறைவான சம்பளம் வாங்கறோம். நாலாவது படிக்கும் எங்க பையன் கிரிதரன் எந்தக் குறைபாடும் இல்லாம நல்லா இருக்கான். வாழ்க்கையில வெற்றி கிடைச்சுடுச்சேன்னு எங்க சந்தோஷத்துடன் ஒதுங்கிடுறது சரியா... எங்களுக்கு உதவிய சமூகத்துக்குக் கைம்மாறு செய்யுறதுதானே நியாயம்... அதனாலதான் ‘அகவிழி’ அமைப்பை 2015-ல் தொடங்கினோம்.

நலிவடைந்த பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நண்பர்கள் சிலரின் ஆதரவுடன் இந்த அமைப்பின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உதவி, ஆதரவற்ற பார்வைக்குறைபாடுள்ளோர் இறந்தால் அவங்க உடலை நல்லடக்கம் செய்யுறது, மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றம்னு சேவை நோக்கத்துடன் உதவுறோம்.

 ரஜினிகாந்த் -  உமாமகேஸ்வரி
ரஜினிகாந்த் - உமாமகேஸ்வரி

150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் எங்க அமைப்பின் மூலம் வேலைவாய்ப்புக் கிடைச்சு பயனடைஞ்சிருக்காங்க. சாக்பீஸ், சோப்பு, கலைப்பொருள்கள் தயாரிப்புன்னு இப்ப 30 மாற்றுத்திறனாளிகள், எங்க அமைப்பி லேயே சாக்பீஸ், சோப்பு, கலைப்பொருள்கள் தயாரிப்புனு வேலை செய்யறாங்க. கல்வி, வேலைவாய்ப்புக்கு உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் எங்களை அணுகினால், இயன்ற உதவிகளை நிச்சயமா செய்வோம்” - மனம் நிறைந்து கூறுகிறார்கள் ரஜினிகாந்த்தும் உமாமகேஸ்வரியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism