Published:Updated:

2K kids: ‘என்ன இந்த வாழ்க்கைனு வாழ்ந்து பார்த்துடலாம்!’

முத்துபாரதி
பிரீமியம் ஸ்டோரி
முத்துபாரதி

- காயத்ரி இசக்கி

2K kids: ‘என்ன இந்த வாழ்க்கைனு வாழ்ந்து பார்த்துடலாம்!’

- காயத்ரி இசக்கி

Published:Updated:
முத்துபாரதி
பிரீமியம் ஸ்டோரி
முத்துபாரதி

தென்காசி மாவட்டம், கீழப்புலியூர் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லிக் கடை நடத்தி வருகிறார், 44 வயதாகும் முத்துபாரதி. கணவரின் மறைவு, கைக்குழந்தையுடன் ஆதரவற்று நின்றது, வளர்ந்ததும் விலகிச்சென்ற பையனை வாழ்த்தி அனுப்பியது, தன் 78 வயது அம்மாவைக் குழந்தையாக இப்போது பராமரித்து வருவது என, அவரது கதையில் துயரங்களே அதிகம். ஆனாலும் விதி மீது குறை சொல்லாமல், ‘சரி வாழ்ந்துட்டுப் போவோம் இப்போ என்ன...’ என்று எப்போதும் சுறுசுறுவென இருப்பவரிடம் பேசினோம்...

தம்பிராட்டி
தம்பிராட்டி

‘`எங்க குடும்பத்துல நாலு தலைமுறையா இட்லி வியாபாரம் பண்ணுறோம். எனக்குப் படிக்க ஆசை. ஆனா, வறுமையினால ஒருவேளை சாப்பிடுறதே எங்களுக்குப் பெரிய விஷயமாயிருந்துச்சு. அதனால படிக்கவும் வழியில்ல. நான் பள்ளிக்கூடம் பக்கம்கூட போனது இல்ல. அம்மாவோட இட்லிக் கடைதான் என்னை வளர்த்துச்சு. 19 வயசுல எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. வீட்டுக்காரர் மாரியப்பன் கூலி வேலை பார்த்தாரு. என் பையன் இசக்கி பிறந்தான். எனக்கு 21 வயசு ஆனப்போ, என் கணவர் இறந் துட்டாரு. ஒரு வயசுல இருந்த என் பையனை வெச்சுட்டு எங்கம்மா தம்பிராட்டிகிட்ட வந்தேன். அம்மா இட்லி வித்து கையில வெச்சிருக்கும் காசை என்கிட்ட திணிச்சுட்டு, இட்லிக் கடை போடக் கிளம்பிப்போவாங்க. அத்தனை வருஷமா என்னைச் சுமந்த அம்மாவுக்கு, நான், என் குழந்தைனு இன்னமும் சுமையைக் கூட்டுறது நியாயமில்லனு தோணுச்சு. கூலி வேலைகளுக்குப் போனேன். ஆனா, எந்த வேலைக்குப் போனாலும், ஒத்தப் பொம்பளையா வாழுறது எவ்வளவு கஷ்டம்னு இந்த உலகம் புரியவெச்சுட்டே இருந்துச்சு. ஒரு முடிவெடுத்து, அம்மாவை வீட்டுல இருந்து புள்ளையைப் பார்த்துக்கச் சொல்லிட்டு, இட்லி வியாபாரத்தை நான் பார்க்க ஆரம்பிச்சேன். கஞ்சியக் குடிச்சாலும் என் கடைக்கு நான்தான் முதலாளி. யாரோட தயவும் தேவை யில்ல. 20 வருஷத்துக்கு முன்னாடி, இட்லிக் கடையில ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு வியாபாரம் ஆனா பெரிய விஷயம். காலையில 3 மணிக்கு நாள் ஆரம் பிக்கும். உடம்பு உழைக்கச் சளைக்கல. இன்னொரு கல்யாணம் பண் ணிக்க எனக்குத் தோணல. நான், பையன், அம்மானு மூணு பேரையும் என்னால பார்த்துக்க முடியும்னு தோணுச்சு. மகனை வளர்க்குறதுல கஷ்டத்தை சந்திக்கும் போதெல்லாம், எங்கம்மாவைதான் நினைச் சுப்பேன். அந்த மனுஷி தனியாளாதானே நம்மள வளர்த்துக் காட்டினா, நாமளும் கரை சேர்ந்துடலாம்னு மனசுல நம்பிக்கையை வெச்சுக்கு வேன்.

21 வயசுல ஓட ஆரம்பிச்சேன். 23 வருஷங்களாச்சு... இன்னும் ஓட்டம் நிக்கல. மகனைப் படிக்க வெச்சேன். அங்க பேசி, இங்க சொல்லினு அவனுக்கு ஒரு வேலையை வாங்கிக் கொடுத்தேன். அவன் வேலைக்குப் போக ஆரம்பிச்சப்போ, என் விதியை நான் ஜெயிச்சுட்ட மாதிரி அப்புடி ஒரு சந்தோஷம். இனி அவன் என்னைப் பார்த்துக்குவான்னு நினைச்சேன். ஆனா அவன் தன்னோட வாழ்க்கையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டான். அதனால என்ன, அவன் நல்லா இருந்தா போதும்.

2K kids: ‘என்ன இந்த வாழ்க்கைனு வாழ்ந்து பார்த்துடலாம்!’

கோயம்புத்தூர்ல இப்போ வேலைபார்க்குறான். ‘நான் உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தேன்’னு பிள்ளைககிட்ட கணக்குப் பேச இது வியாபாரம் இல்ல, வாழ்க்கை. அவங்களுக்குப் பிடிச்சதை, சரினு படுறதை அவங்கவங்க வாழட்டும் அவ்வளவுதான்’’ என்று போகிற போக்கில் வாழ்க்கைப் பாடத்தை எடுத்துவிட்டு நம்மை அசரடித்தவர், தொடர்ந்தார்...

``இப்போ இட்லிக் கடையில ஒரு நாளைக்கு 100 ரூபாய், 150 ரூபாய் கிடைக்குது. இப்போ இட்லி, அப்பம், பூரினு போடுறேன். காலையில 3 மணிக்கு எழுந்து, 6 மணிக்குள்ளே சமைச்சு முடிச்சு, தலையில பொட்டியை வெச்சுக்கிட்டு 7 மணிக்கு வியாபாரத்துக்குக் கிளம்பிடு வேன். ‘அம்மா இட்லி வேணுமா’னு கேட்டுட்டே தெருவெல்லாம் சுத்திட்டு, 11 மணிக்கு வியாபாரத்தை முடிச்சுட்டு வீட்டுக்குப் போனா... அங்க ஒரு குழந்தை எனக்காகக் காத்திருக் கும். எங்கமாவைதான் சொல்றேன். அம்மாவைக் குளிக்க வைக்கிறது, சாப்பாடு கொடுக்குறது, வீட்டு வேலைகளைப் பார்க்குறதுனு நாள் ஓடும். வியாபாரத்துக்குப் போகும்போது, வீட்டு வாசலுக்குப் பக்கத்துல அம்மாவைப் படுக்கவெச்சுட்டு, சாப்பாடு, மருந்து எல்லாம் அவங்க பக்கத்துல வெச்சுட்டுப் போவேன்.

கடன் இருக்குறதால, கையில வர்ற காசு வட்டிக்கே போயிடுது. அதனால, சனி, ஞாயிறுகள்ல வியாபாரம் முடிச்சுட்டு சில வீடுகள்லயும் வேலைக்குப் போவேன். ‘எனக்கு ஏன் இவ்ளோ கஷ்டம்’னு தோணாது. கை கால் சுகத்தோட, உசுரோட இருக்குறதே பெரிய வரம்தான். இருக்குறவரை எம்புட்டு முடியுமோ வாழ்ந்துட்டுப் போவோம்!”

- முத்துபாரதி பேசி முடித்தபோது, வாழ்க்கையை எந்தக் கட்டத்திலும் கோளாறு சொல்லாமல் வாழ வேண்டும் என்ற பாடம் மனதில் மிக மிக நன்றாகவே பதிந்தது.