Published:Updated:

மனிதத்தால் மலர்ந்த மயானம்!

சீதா
பிரீமியம் ஸ்டோரி
சீதா

எங்களுக்காகவே எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக்கிட்டு வாழ்ந்த அம்மாவோட முகத்தைப் பார்த்து ஒரு கை அரிசியள்ளிப்போட்டு அடக்கம் செய்ற வாய்ப்பு எனக்குக் கிடைக்கலே

மனிதத்தால் மலர்ந்த மயானம்!

எங்களுக்காகவே எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக்கிட்டு வாழ்ந்த அம்மாவோட முகத்தைப் பார்த்து ஒரு கை அரிசியள்ளிப்போட்டு அடக்கம் செய்ற வாய்ப்பு எனக்குக் கிடைக்கலே

Published:Updated:
சீதா
பிரீமியம் ஸ்டோரி
சீதா

“எனக்கு இந்த மயானம்தாண்ணா உலகம்... விடியக்காத்தால வந்தா, ராத்திரியாயிடும் இதை விட்டு வெளியேற... அழுகையையும் கண்ணீரையும் தவிர பெரிசா வேறெதையும் பார்த்ததில்லை. முகமறியாத என்னைப்பத்தியும் கவலைப்பட்டு உதவி செய்ய வெளியில இத்தனை பேர் அன்போடவும் கருணையோடவும் இருக்காங்கன்னு நினைக்கிறப்ப கண் கலங்குதுண்ணா...” நெகிழ்ந்துருகிப் பேசுகிறார் சீதா.

சீதாவைப் பற்றி 10.02.2021 ஆனந்த விகடன் இதழில் ‘மயானத்துக்கு வெளியேதான் பயம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். சேலம் நகருக்குள் இருக்கும் டி.வி.எஸ் மயானத்தின் பராமரிப்பாளரான சீதாவின் கதை வாசகர்களை நெகிழவைத்தது.

மனிதத்தால் மலர்ந்த மயானம்!

பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சீதாவின் தந்தை குடிக்கு அடிமையானவர். அம்மாதான் ஒற்றை நம்பிக்கை. ஒரு அண்ணன், இரண்டு அக்காக்கள் எனப் பெரிய குடும்பம் என்பதால் அம்மாவின் வருமானம் பாதி வயிற்றைக்கூட நிரப்பவில்லை. நான்கு பிள்ளைகளும் படிப்பை நிறுத்திவிட்டு, கிடைத்த வேலைக்குப்போக, சம்பாதித்த காசையும் மிரட்டிப் பறித்துக் குடிப்பார் அப்பா. சீதாவுக்கு எட்டு வயதான ஒரு நாளில், அப்பாவின் கொடுமை தாங்காமல் அம்மா தீக்குளித்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அள்ளிச்சென்று மருத்துவமனையில் சேர்க்க, ஒரு மலை கிராமத்தில் இருந்த அக்காவை அழைத்துவரச் சென்றார் சீதா. அந்த இடைவெளியில் அம்மா இறந்துபோக, தீக்குளித்த உடம்பென்பதால் உடனடியாக அடக்கம் செய்துவிட்டார்கள். அம்மாவின் முகத்தைக்கூடப் பார்க்க முடியாமல் தவித்து நின்ற சீதாவுக்கு ஆதரவு தந்தார் ராஜம்மா பாட்டி. சேலம் டி.வி.எஸ் மயானப் பராமரிப்பு அப்போது ராஜம்மா பாட்டியிடம்தான் இருந்தது. ராஜாம்மா பாட்டியின் விரல் பற்றியபோது சீதாவுக்கு வயது எட்டு.

எட்டு வயதில் மயானத்துக்கு வந்து பாட்டிக்கு உதவிகள் செய்த சீதா, உடல்களைப் பெற்று ஆவணங்களைச் சோதிப்பது, குழி வெட்டுவது, அடக்கம் செய்வது, பாலூற்றி சடங்குகள் செய்வது எனப் படிப்படியாகத் தொழில் பழகினார். ஒரு கட்டத்தில் பாட்டிக்கு ஓய்வளித்துவிட்டு, தானே முன்னின்று செய்யத் தொடங்கினார்.

“எங்களுக்காகவே எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக்கிட்டு வாழ்ந்த அம்மாவோட முகத்தைப் பார்த்து ஒரு கை அரிசியள்ளிப்போட்டு அடக்கம் செய்ற வாய்ப்பு எனக்குக் கிடைக்கலே. இப்போ இங்கே வர்ற ஒவ்வொரு உடலையும் அம்மாவோட உடலாத்தான் பாக்குறேன். இந்த இருபது வருஷத்துல பத்தாயிரத்துக்கும் மேல உடல்களை அடக்கம் பண்ணியிருப்பேன். இது ரொம்பப் புண்ணியகாரியம்ணா...” என்று அந்தச் சந்திப்பில் கூறியிருந்தார் சீதா.

மேலும், “ராத்திரி பகல்னு பாக்காம அழைப்பு வரும். வீட்டுல இருந்து சைக்கிள்லதான் வருவேன். ஒரு டூவீலர் வாங்கணும். அதுக்காகத்தான் காசு சேத்துக்கிட்டிருக்கேன். இந்த வேலையை அரசு வேலையா மாத்தி குறைந்தபட்ச மாதச் சம்பளம் கிடைச்சா வாழ்க்கையை ஓட்டிருவேன்” என்று அந்தக் கட்டுரையில் தெரிவித்திருந்தார் சீதா.

கட்டுரை வெளிவந்ததும் நிறைய வாசகர்கள் சீதாவை நேரில் சந்தித்துப் பாராட்டி அத்தியாவசிய உதவிகளை வழங்கினார்கள். பலர் பண உதவியும் செய்தார்கள். ட்விட்டர் நண்பர்களான திண்டுக்கல்லைச் சேர்ந்த பெ.பாலசுப்பிரமணி, பொள்ளாச்சி அரசுப்பள்ளி ஆசிரியர் அமுது, திருநெல்வேலி டாக்டர் லெட்சுமண், சென்னையைச் சேர்ந்த நளினா, ராமுவேல் கந்தசாமி உள்ளிட்ட ஐந்துபேரும் இணைந்து, சீதாவின் பணி அரசுப்பணியாக்கப்பட்டு மாதச்சம்பளம் வழங்கப்படும் காலம்வரை மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்கள்.

மனிதத்தால் மலர்ந்த மயானம்!

‘டூவீலர் இருந்தால் வந்துபோக வசதியாக இருக்கும்’ என்ற சீதாவின் கோரிக்கையையும் விகடன் வாசகர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். வாசகர்கள் அளித்த பங்களிப்போடு ‘அன்பைப் பகிர்வோம்’ என்ற அமைப்பினரும் உதவ 95,000 ரூபாய் மதிப்புள்ள புதிய டூவீலர் கடந்த வாரம் சீதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

துயரத்தில் தவிப்போரின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொல்லி ஆற்றுப்படுத்துவதே மகத்தான மனித சேவை. எந்தப் பிரதிபலனும் பாராமல் சீதா அந்த சேவையைச் செய்து வருகிறார். அவரின் பணியை கௌரவிக்கும் விதத்தில் தேவையைப் பூர்த்திசெய்த வாசகர்களின் கரங்களை நெகிழ்வோடு பற்றிக்கொள்கிறது ஆனந்த விகடன்!