Published:Updated:

தாயுமானவர்... தந்தையாய் காப்பவர்!

பேத்திகளுடன் தமிழ்மாறன்
பிரீமியம் ஸ்டோரி
பேத்திகளுடன் தமிழ்மாறன்

அப்பா முகம் மறந்துபோச்சு. எங்களுக்குத் தாத்தாதான் அப்பா அம்மா எல்லாமே

தாயுமானவர்... தந்தையாய் காப்பவர்!

அப்பா முகம் மறந்துபோச்சு. எங்களுக்குத் தாத்தாதான் அப்பா அம்மா எல்லாமே

Published:Updated:
பேத்திகளுடன் தமிழ்மாறன்
பிரீமியம் ஸ்டோரி
பேத்திகளுடன் தமிழ்மாறன்

”சொத்து சுகம் எதுவும் இல்லைன்னாலும் என் பேத்திங்களைப் பாத்துக்கிற ஆயுசையும் தெம்பையும் மட்டும் அந்த ஆண்டவன் கொடுத்தாப் போதும். இவங்கள என் முதுகுல ஏத்திக்கிட்டு இளவரசிகள் மாதிரி வளர்த்து ஆளாக்கிவிட்டிடுவேன்’’ என்கிறார், மூன்று பேத்திகளைத் தாயாக இருந்து அரவணைத்துவரும் தாத்தா, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டிலுள்ள தமிழ்மாறன்.

சாலை விபத்து ஒன்றில் மருமகனைப் பறிகொடுத்து, கொரோனாவுக்கு மகள், மனைவியை இழந்த நிலையிலும் மனம் தளராமல் பேத்திகளைச் சீராட்டி வளர்த்துவருகிறார் தமிழ்மாறன். சமைப்பது முதல் பேத்திகளின் துணிகளைத் துவைப்பது, இரவு அவர்களைத் தூங்க வைப்பது வரை தமிழ்மாறனின் பாசப் பிணைப்பு பெற்றெடுத்த தாய்க்கு நிகராக இருக்கிறது. பெண் பிள்ளைகளும் தாத்தாவை விட்டு ஒரு நிமிடம்கூடப் பிரிந்திருப்பதில்லை.

தமிழ்மாறனின் வீட்டுக்குச் சென்றோம். வீடு முழுவதும் நிசப்தம் நிலைகொண்டிருந்தது. வாடிய முகத்துடன் மூன்று சிறுமிகளும் தாத்தாவைச் சுற்றி நின்றிருந்தனர்.

எழிலரசி
எழிலரசி

‘‘நான் தோல் பதனிடுகிற கம்பெனியில வேலை செஞ்சிக்கிட்டிருந்தேன். 63 வயசாகிடுச்சு. வேலைக்கெல்லாம் போக முடியலை. தற்சமயம், வட ஆற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்துடைய பேரணாம்பட்டு நகரத் தலைவரா இருக்கேன். அதுல கிடைக்கிற சந்தாப் பணத்துலதான் பிழைப்பு ஓடுது. எனக்கு மூணு பொண்ணு, ஒரு பையன். மூத்த பொண்ணு எழிலரசி. பேருக்குப் பொருத்தமா மகாலட்சுமி மாதிரி இருப்பா. கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜில நர்சிங் முடிச்ச எழிலரசிக்கு, 2003-ல கோபாலகிருஷ்ணனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சேன். எழிலரசி குழந்தைங்கதான் இந்த மூணு பேத்திகளும். ஹரிணி, ரோகிணி, மோகனப்பிரியான்னு நான்தான் பேரு வச்சேன்.

மூணாவது பேத்தி பொறக்கிற நேரத்துல கருத்துவேறுபாட்டுல மருமகன் என் மகளை விட்டுட்டுத் தனியா போயிட்டாரு. இடுப்புல ஒண்ணும் கையில ரெண்டுமா என் பொண்ணு யார் ஆதரவைத் தேடிப் போறதுன்னு தெரியாமல் விரக்தியில் நின்றிருந்தாள். நான் போய் குழந்தைகளை வாங்கிக்கிட்டு ‘வாடாம்மா... அப்பா இருக்கேன்டா’ன்னு சொல்லி வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்துட்டேன். என் பொண்ணு வளந்த வீட்டிலேயே பேத்திகளும் வளர்றாங்க. என் பொண்ணுக்குக் குடியாத்தம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டல நர்ஸ் வேலை கிடைச்சது. மருமகனும் மறுபடி பேச ஆரம்பிச்சாரு. போதாத காலமான்னு தெரியலை. 2010-ல நடந்த சாலை விபத்துல மருமகன் இறந்துபோயிட்டாரு. இதனால, இவங்கள என் கூடவே நிரந்தரமா தங்க வச்சிக்கிட்டேன். என் பொண்டாட்டி பாப்பம்மா பேத்திங்க மேல உசுரையே வச்சிருந்தாள். ‘ஆயா ஆயா’ன்னு, பேத்திங்க ஒரு நிமிஷம்கூட அவளை விட்டுட்டு இருக்க மாட்டாங்க. பாப்பம்மாளும் குழந்தைகளுக்குப் பிடிச்சதெல்லாம் செஞ்சு தருவாள்.

யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலை. குடும்பம் இப்ப சின்னாபின்னமாகிக் கிடக்குது. கொரோனா வந்த பின்னாடி, என் பொண்ணு நைட்டு பகலுன்னு பாக்காம ஹாஸ்பிட்டலே கதின்னு கிடந்தாள். கொரோனா வார்டுல சுழற்சி முறையில டூட்டி போட்டிருந்தாங்க. அவளும் கொரோனா டூட்டி முடிஞ்சதுக்குப் பின்னாடி தனிமைப்படுத்திக் கொள்வாள். மே மாசம் 14-ம் தேதி திடீர்னு பொண்ணு எழிலரசிக்குத் தொற்று அறிகுறி தெரிஞ்சது. உடனடியா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனாள். அப்புறம் சீரியஸ்னு சொல்லி வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாத்துனாங்க. அங்கிருந்து சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்குப் போகச் சொல்லிட்டாங்க. பத்து நாள் ட்ரீட்மென்ட் எடுத்தும் மே 24-ம் தேதி நடுராத்திரி 12 மணிக்கு எங்களையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாள்னு தகவல் மட்டும் வந்துச்சு. அதே நாள்ல என் பொண்டாட்டி பாப்பம்மாளும் கொரோனாவுல செத்துட்டாள்’’ என்று சொல்லும்போதே உடைந்துபோய், பேத்திகளைக் கட்டிப்பிடித்து அழத் தொடங்கினார் தமிழ்மாறன்.

ஆசுவாசப்படுத்திய பின், துக்கத்தின் வலியைத் தொடர்ந்தவர், ‘‘எங்களால தாங்கிக்கொள்ள முடியாத பெருந்துயரம் என்னன்னா, கடைசியா ஒரு முறைக்கூட என் பொண்ணு, பொண்டாட்டியுடைய முகத்தைப் பாக்க முடியலை என்கிறதுதான். நான் வாழ்ந்து முடிஞ்சவன். இந்தக் குழந்தைங்க என்ன பாவம் செஞ்சாங்க? ஹாஸ்பிட்டல்ல இருந்த பத்து நாள்ல ஒருமுறைகூட அவ அம்மாவைப் பேத்திங்க பார்க்கலை. எல்.கே.ஜி-யிலிருந்து நான்தான் படிக்க வச்சிக்கிட்டு இருக்கிறேன். பெரிய பாப்பா காலேஜ் போகப்போறா. ரெண்டாவது பாப்பா ப்ளஸ் ஒன், சின்னப் பாப்பா எட்டாம் வகுப்பும் போறாங்க.

தாயுமானவர்... தந்தையாய் காப்பவர்!

என் பேத்திங்களுக்காத்தான் உசுரையே கையில பிடிச்சிக்கிட்டு இருக்கேன். சொத்து, சுகம் எதுவும் இல்லைன்னாலும் என் பேத்திங்களைப் பாத்துக்கிற ஆயுசையும் தெம்பையும் மட்டும் அந்த ஆண்டவன் எனக்குக் கொடுத்தால்போதும். அம்பாரியில் அமர்த்தி இளவரசிகளாக வளர்ப்பேன். என்னை விட்டா இவங்களைப் பாத்துகிறதுக்கு வேற ஆளில்லை. காலையில தூங்கி எழுந்திருக்கும்போதே தாத்தான்னுதான் கூப்பிடுவாங்க. நான் பக்கத்திலேயே இருக்கணும். எங்கயாவது போயிட்டு வர்றதுக்கு லேட் ஆகிட்டாலும் போன் போட்டு ‘சீக்கிரம் வா’ன்னு கூப்பிடுவாங்க. அவங்க அம்மா, பாட்டி ஆசைப்பட்ட மாதிரி படிக்க வச்சு பெரிய ஆபீஸரா ஆக்குற வரைக்கும் இந்தக் கட்டை வேகாது. காலையில எழுந்திரிச்ச உடனே சமைக்கிறது, பேத்திங்க துணியைத் துவைக்கிறது, அவங்களுக்கு என்னென்ன தேவையோ பக்கத்துலயே இருந்து செய்யிறதுன்னு நாள் ஓடிடும்’’ என்றார்.

பேத்திகளிடம் தாத்தாவைப் பற்றிக் கேட்டபோது, ‘‘அப்பா முகம் மறந்துபோச்சு. எங்களுக்குத் தாத்தாதான் அப்பா அம்மா எல்லாமே’’ என்றனர் தமிழ்மாறனின் தோளில் சாய்ந்தபடி..!