Published:Updated:

மாற்றங்களின் மருத்துவர்!

முகமது உமர்
பிரீமியம் ஸ்டோரி
முகமது உமர்

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், முன்பெல்லாம் வருடத்துக்கு இரண்டு பிரசவங்கள் நடந்தா பெரிய விஷயம்.

மாற்றங்களின் மருத்துவர்!

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், முன்பெல்லாம் வருடத்துக்கு இரண்டு பிரசவங்கள் நடந்தா பெரிய விஷயம்.

Published:Updated:
முகமது உமர்
பிரீமியம் ஸ்டோரி
முகமது உமர்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, முட்செடிகளால் சூழப்பட்டுப் புதர் மண்டிக் கிடந்தது அந்த ஆரம்ப சுகாதார நிலையம். பெயரில் இருந்த சுகாதாரம், அந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கே இல்லை. ஆனால் இப்போது மத்திய அரசின் `காயகல்ப்’ விருதுக்குத் தேர்வாகும் அளவுக்கு மாறியிருக்கிறது, நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி அருகே வடுவூரில் உள்ள அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இதற்கு ஒற்றைக்காரணம் என்று ஊரே சொல்லும் பெயர் முகமது உமர்.

“அந்த ஆஸ்பத்திரி பக்கமே போக மாட்டோம். குறிப்பா கர்ப்பிணிப்பெண்கள். சுகப்பிரசவம் ஆகணும்னு இங்கேயிருக்கிற ஐயனார் கோயிலில் ஆடு, கோழி வெட்டி சாமி கும்பிடறதோட சரி” என்கிறார்கள் ஊர் மக்கள். பின் எப்படி ஒட்டுமொத்தமாக மாற்றிக் காட்டினார் உமர்?

“சென்னையில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த, எழுதப் படிக்கத் தெரியாத பெற்றோரின் பிள்ளை நான். பள்ளிப் படிப்பைக்கூட ஒரு வருடம் தொடர முடியாமல் வீட்டில் இருந்தேன். என்னுடைய சித்தி ஹபீப் நாச்சியார் கொடுத்த ஊக்கத்தில் மருத்துவம் படித்தேன்.

மாற்றங்களின் மருத்துவர்!

மருத்துவம் படித்து முடித்தபிறகு இங்கே வேலை கிடைத்தது. இங்கே வந்த பின்புதான் இதை பனிஷ்மென்ட் ஏரியாவாகப் பலரும் பார்த்ததை உணர முடிந்தது. அதை மாற்ற முடிவு செய்தேன். சக ஊழியர்களை அழைத்து, உற்சாகப்படுத்தினேன். ‘மக்கள் உயிர் காக்கும் புனிதமான பணியைச் செய்கிறோம்’ என்பதைப் புரியவைத்தேன்” என்று ஆரம்பித்தார் உமர்.

முள் புதர்களுக்குள் கிடந்த ஆரம்ப சுகாதார நிலையம், இப்போது மரங்கள் சூழப் பசுமையாகக் காட்சியளிக்கிறது. தனியார் பள்ளித் தாளாளர் ஒருவர் முயற்சியில், மாணவர்கள், கிராம மக்கள் உதவியுடன் நீண்டதூரம் குழாய் அமைத்துக் குடிநீர் வசதி ஏற்படுத்தியுள்ளனர். அத்துடன், இணையதள வசதி, சோலார் மின் விளக்கு வசதி உள்ளிட்டவையும் கொண்டு வரப்பட்டுள்ளன.

“இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், முன்பெல்லாம் வருடத்துக்கு இரண்டு பிரசவங்கள் நடந்தா பெரிய விஷயம். நான் வந்த பிறகும் நோயாளிகள் யாருக்கும் பெரிதாக நம்பிக்கை வரவில்லை. அருகில் இருக்கும் கிராமங்களுக்கு நானும் எங்கள் மருத்துவக் குழுவும் சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

மாற்றங்களின் மருத்துவர்!

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ், கர்ப்பிணிப் பெண்கள் கருவுற்ற மூன்று மாதத்தில் இங்கு வந்து பதிவு செய்தால் 2,000 ரூபாயும், 2,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பெட்டியும் கிடைக்கும் தகவலைச் சொன்னோம். நான்காவது மாதத்தில் மீண்டும் 2,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பெட்டியும் பிரசவ காலத்தில் 4,000 ரூபாயும் கிடைக்கும். பிறந்த குழந்தைக்கு இரண்டு தடுப்பூசிகள் போட்டவுடனே 4,000 ரூபாய் கிடைக்கும். ஒன்பது மாதத்துக்குப் பிறகு மீண்டும் தடுப்பூசி போட்டபின்பு 2,000 ரூபாய் கிடைக்கும். அரசு அளிக்கும் இந்தச் சலுகைகளை எல்லாம் மக்களுக்கு எடுத்துச்சொல்லிப் புரியவைத்தோம்.

நாங்கள் சொந்தப் பணத்திலும், சிலரிடம் கிடைத்த உதவி மூலமாகவும் கம்ப்யூட்டர், இணையதள சேவை ஆகியவற்றைக் கொண்டு வந்தோம். கர்ப்பிணிகளுக்காக வாட்ஸ்அப் சேவை தொடங்கி சுகப்பிரசவம் நடைபெற உதவும் யோகா போன்றவற்றையும் ஆலோசனையாகக் கொடுக்கிறோம். வருடத்துக்கு இரு பிரசவங்கள் நடந்த இந்த ஆஸ்பத்திரியில் இப்போது மாதம் 10 பிரசவங்கள் நடக்கின்றன. வெளியூர்களிலிருந்தும் கர்ப்பிணிகள் நம்பிக்கையோடு வருகிறார்கள்” என்றார்.

இந்த மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக்கொண்ட ஜெயசூர்யா என்பவரிடம் பேசினோம். ``எனக்குத் தலைப்பிரசவம்ங்கிறதால ரொம்பவே பயமா இருந்தது. ஆனா, மூணு மாசத்திலிருந்தே என்னை அவங்க வீட்டுப் பெண்ணா நெனைச்சு, நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. தாய் வீட்டுக்கு வந்து பிரசவம் பார்த்துக்கிட்ட மாதிரிதான் இருந்துச்சு” என்றார் உணர்ச்சிப்பெருக்குடன்.

மாற்றங்களின் மருத்துவர்!

கஜா புயலால் மருத்துவமனை வளாகத்தில் இருந்த சில மரங்கள் சரிந்துவிட்டதால், இப்போதெல்லாம் இங்கு பிரசவம் முடிந்து வீட்டுக்குச் செல்வதற்கு முன் ஒவ்வொரு தாயும் ஒரு மரத்தை நட்டுவிட்டுச் செல்கிறார். “எதிர்காலத்தில் இந்த மரங்களெல்லாம் அந்தக் குழந்தைகளின் வயதைச் சொல்லும் அல்லவா! அதற்காகத்தான் இந்த ஏற்பாடு” என்று சொல்லிச் சிரிக்கிறார் டாக்டர் முகமது உமர். இவரின் மனைவி இர்பான் பேகம் பல் மருத்துவர். அவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கணவருக்கு உதவியாகப் பணியாற்றுகிறார்.

ஒரு தனிநபரால் ஒரு மாபெரும் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியும் என்பதற்கான உதாரணம் உமர்.