Published:Updated:

அவ்வளவு துயரிலும் அணையாத புன்னகை!

முன்ஸிர் அல்-நசால், அவரின் மகன் முஸ்தபா
பிரீமியம் ஸ்டோரி
முன்ஸிர் அல்-நசால், அவரின் மகன் முஸ்தபா

மனிதர்களை, உணர்வுகளை ஒளிப்படம் எடுப்பதில் தீவிர ஈடுபாடு கொண்டிருக்கிறேன்.

அவ்வளவு துயரிலும் அணையாத புன்னகை!

மனிதர்களை, உணர்வுகளை ஒளிப்படம் எடுப்பதில் தீவிர ஈடுபாடு கொண்டிருக்கிறேன்.

Published:Updated:
முன்ஸிர் அல்-நசால், அவரின் மகன் முஸ்தபா
பிரீமியம் ஸ்டோரி
முன்ஸிர் அல்-நசால், அவரின் மகன் முஸ்தபா

ஒரே ஒரு ஒளிப்படம். கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி, உலகின் மனசாட்சியை உலுக்கியது. வலது கால் ‘துண்டிக்கப்பட்ட’ நிலையில், ஊன்றுகோல் துணையுடன் நிற்கும் தந்தை ஒருவர், பிறவியிலேயே கைகால்கள் இரண்டும் இல்லாமல் பிறக்க ‘நேர்ந்த’ தன் மகனை ஆகாயத்துக்குத் தூக்கிக் கொஞ்சுகிறார். அவ்வளவு துயரிலும் மழைத்துளி போல் மேலிருந்து விழும் மகனின் புன்னகை, ஒட்டுமொத்த மானுட குலத்தின் மீதும் கவிகிறது.

அவ்வளவு துயரிலும் அணையாத புன்னகை!

பார்த்த நொடியில் காண்போரைக் கரைத்துவிடும் இந்த ஒளிப்படத்தில் இருப்பவர்கள் சிரியாவைச் சேர்ந்த முன்ஸிர் அல்-நசாலும், அவரின் மகன் முஸ்தபாவும். வரலாற்றில் உறைந்துவிட்ட இந்த ஒளிப்படத்தை எடுத்தவர், துருக்கியைச் சேர்ந்த ஒளிப்படக் கலைஞர் மெஹ்மத் அஸ்லான்.

அளக்க முடியாத ஆழத்துக்குப் போரின் பாதிப்பையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஒருங்கே வெளிப்படுத்தும் இந்த ஒளிப்படத்துக்காக, மதிப்புமிக்க சியெனா சர்வதேச ஒளிப்பட விருதுகள் அமைப்பின் (SIPA - சிபா), 2021-க்கான ‘சிறந்த ஒளிப்படக்கலைஞர்’ விருதைப் பெற்றிருக்கிறார் அஸ்லான். ‘Hardship of Life’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஒளிப்படம் சர்வதேச சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியிருக்கிறது.

மெஹ்மத் அஸ்லானிடம் பேசினேன். “மனிதர்களை, உணர்வுகளை ஒளிப்படம் எடுப்பதில் தீவிர ஈடுபாடு கொண்டிருக்கிறேன். துருக்கியின் ரெய்ஹான் மாவட்டத்தில் இருக்கிறது சிரிய அகதிகள் முகாம். இங்குதான் முன்ஸிர் அல்-நசால் குடும்பத்தை 2021 ஜனவரியில் முதன்முறையாகச் சந்தித்தேன். என் சொந்த ஊருக்கு அருகில் இருக்கிறது அந்த இடம். சிரியாவில் போர் உக்கிரமடைந்து, சிரிய மக்கள் அதிக அளவில் துருக்கிக்கு அகதிகளாக வரத் தொடங்கிய காலகட்டத்தில், சிரியா-துருக்கி எல்லையில் அமைந்திருக்கும் இப்பகுதிக்கு அடிக்கடி போவேன். அப்படியான ஒரு பயணத்தில்தான் இவர்களைச் சந்தித்தேன்” என்கிறார் மெஹ்மத்.

அரபு வசந்தத்தின் தொடர்ச்சியாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் ஏற்பட்ட கிளர்ச்சி, சமகாலத்தின் மாபெரும் மானுடப் பேரவலம். இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கும் சிரியா உள்நாட்டுப் போரினால், துருக்கியில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தோரின் எண்ணிக்கை 2021 மே மாதத்தில் 36 லட்சத்தைக் கடந்திருக்கிறது; இதில் 12 லட்சம் குழந்தைகளும் அடக்கம். போரின் தாக்கத்தால் இவர்கள் கடும் உடல், உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய தரைக்கடலின் கரையில் ஒதுங்கிய, சிரியாவைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவன் அலன் குர்தியின் சடலம் நம் நினைவுகளில் அல்லவா புதைக்கப்பட்டிருக்கிறது?

“நான் முன்ஸிரிடம் பேச வேண்டும்?” என்று மெஹ்மத்திடம் கேட்டபோது, “அவருக்கு அரபியைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாது” என்றபடி முன்ஸிரின் எண்ணைப் பகிர்ந்தார்.

சட்டென மனதில் ஒரு யோசனை உதித்தது. கூகுள் டிரான்ஸ்லேட்டரைத் திறந்தேன். முன்ஸிரிடம் நான் கேட்க விரும்பிய கேள்விகளை ஆங்கிலத்தில் உள்ளீடு செய்து அரபி மொழிக்கு மாற்றினேன். அதை மீண்டும் ஆங்கிலம் வழி தமிழுக்கு மொழிமாற்றம் செய்ததில், சொல்ல வந்த செய்தி துல்லியமாக இருந்தது. தாள முடியாத ஆச்சரியத்துடன், அதை முன்ஸிருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினேன்.

நம்பமுடியாத வகையில் சில நிமிடங்களில் முன்ஸிரிடமிருந்து அரபியில் பதில் வந்தது. அதைக் கூகுள் டிரான்ஸ்லேட்டரில் உள்ளீடு செய்ய, “இறைவனின் சாந்தியும் கருணையும் ஆசீர்வாதமும் உங்கள்மீது உண்டாகட்டும்” என்று தமிழ்ப்படுத்தியது. நான் கரைந்துவிட்டேன்.

அவ்வளவு துயரிலும் அணையாத புன்னகை!

கூகுள் டிரான்ஸ்லேட்டர் உதவியுடன் முன்ஸிரிடம் உரையாடினேன். “இந்தியாவிலிருந்து என்னைத் தொடர்புகொண்டதில் நெகிழ்ச்சி” என்று முன்ஸிர் பேசத் தொடங்கினார்.

“நான் பண்ணைகளில் நிச்சயமில்லாத வேலைகளைச் செய்துவந்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் ஜெய்னப்பைத் திருமணம் செய்துகொண்டேன். அதன்பின் வாழ்வின் மீது நம்பிக்கை பிறந்தது. ஆனால், சிரியாவில் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வந்தது. அது 2014. நான் வேலை விஷயமாகக் கடைவீதிக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கு பயங்கர குண்டுவெடிப்புத் தாக்குதல் நிகழ்ந்தது. அந்தத் தாக்குதலில் என் வலது கால் துண்டிக்கப்பட்டது. ஒரு மாத காலம் வரை என்னால் எதையும் உணரமுடியவில்லை. நடந்தது குறித்து நான் மிகுந்த அதிர்ச்சியில் இருந்தேன்” முன்ஸிரின் சொற்களில் இருந்த துயரம், மொழிகளைத் தாண்டி கனக்கிறது.

“கால் இல்லாத வாழ்க்கைக்கு ஒருவாறு பழகிக்கொண்டேன். சிரியாவில் பெரும்பாலான குடும்பங்கள் இப்படிப் பழகிக்கொண்டிருக்கின்றன. அப்போது நாங்கள் காஹ்ன் ஷிகோன் நகரில் வாழ்ந்துவந்தோம். 2017 ஏப்ரல் 4 அன்று அரசுப் படைகள் எங்கள் நகரத்தில் விஷவாயுத் தாக்குதல் நடத்தின. கர்ப்பிணியாக இருந்த என் மனைவி இந்த விஷவாயுத் தாக்குதலில் பாதிப்புக்கு உள்ளானாள். நான் தவித்துப் போனேன். கடுமையான மருந்துகள் மற்றும் சிகிச்சையின் பக்க விளைவுகளால், சில மாதங்கள் கழித்து கைகால்கள் இல்லாமல் ஆண் குழந்தை பிறந்தது. பார்த்த நொடியில் நாங்கள் துடிதுடித்துப் போனோம். ஆனால், மனம் தளர்ந்துவிடவில்லை. அவனுக்கு முஸ்தபா என்று பெயரிட்டோம்” முன்ஸிரின் கண்கள் ஈரம் சொரிந்திருக்கக் கூடும்.

அவ்வளவு துயரிலும் அணையாத புன்னகை!

“Tetra-amelia syndrome என்ற குறைபாடு. இந்தக் குறைபாட்டுடன் வாழ செயற்கைக் கைகால்களைப் பொருத்தும் மருத்துவ வசதிகள் ஐரோப்பாவில்தான் இருக்கின்றன. முன்ஸிர் குடும்பமோ அகதிகள் முகாமில் அடுத்தவர் தயவை எதிர்பார்த்து நிற்கிறது. இந்தக் குறையைத் தாண்டி முஸ்தபாவின் ஆற்றல் என்னை பிரமிக்கச் செய்கிறது. ஒளிப்படங்கள் எடுக்கும்போது மிகவும் உணர்வுபூர்வமான பல தருணங்களுக்கு நாங்கள் ஆட்பட்டோம். எங்களுடைய தற்போதைய நோக்கம், இந்த ஒளிப்படத்தின் மூலம் உருவாகியிருக்கும் கவனத்தைக் கொண்டு முஸ்தபாவுக்குச் செயற்கைக் கைகால்கள் ஏற்படுத்தித் தரும் சாத்தியங்களை உருவாக்குவது. இது அவன் எதிர்காலத்தில் ஒளி பாய்ச்சுவதற்கான நற்செயல் என ஆழமாக நம்புகிறேன்” என்கிறார் மெஹ்மத்.

“சிரியாவில் வாழ முடியாத சூழல் ஏற்படவே, குடும்பத்தை அழைத்துக்கொண்டு துருக்கியில் தஞ்சம் புகுந்தேன். துருக்கி குடியரசு மருத்துவமனையில் முதுகு, இடுப்பு, கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். முஸ்தபாவின் வருகை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. நான் என் கால்களைப் பற்றியோ, வலிகளைப் பற்றியோ கவலைப்படுவதில்லை என்று தீர்மானித்தேன். குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள முன்னெப்போதையும்விட மிகக் கடினமாக முயல்கிறேன். முஸ்தபா விரைவில் மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவான். எல்லோரையும் போல பள்ளிக்குத் தனியாகச் செல்வான். போரின் காரணமாக எனக்குத் தடைப்பட்ட கல்வி அவனுக்கு முழுமையாகக் கிடைக்கும் என்று நம்புகிறேன்” ஆறாயிரம் கி.மீ-களுக்கு அப்பாலிருக்கும் முன்ஸிரின் சொற்களில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றை நான் தரிசித்தேன்.

“விரைவில் அனைத்தும் சீராகி, முஸ்தபா பள்ளிக்குச் செல்வான். முஸ்தபாவைச் சந்திக்கும் வாய்ப்பைக் காலம் எனக்கு வழங்கும் என்று நம்புகிறேன்” என்று உலகின் தொன்மையான மொழி ஒன்றிலிருந்து, தொழில்நுட்பத்தின் உதவியுடன், மற்றொரு தொன்மையான மொழிக்கு அன்பைப் பகிர்ந்தேன்.

அடுத்த நொடி அவரிடமிருந்து பதில், “அன்புச் சகோதரா, என் மகன் முஸ்தபா அல்-நசால் மீது அன்பு காட்டியதற்கு நன்றி. இறைவனின் சாந்தியும் கருணையும் ஆசீர்வாதமும் உங்கள் மீது உண்டாகட்டும்!”