Published:Updated:

புத்தம் புது காலை : மனைவிக்காக தாஜ்மகால் கட்டவில்லை… மலைகளை உடைத்த தசரத் மான்ஜியின் கதை!

தசரத் மான்ஜி
தசரத் மான்ஜி

தந்தை உட்பட ஊரார் அனைவரும் கேலி செய்கிறார்கள். ''வேண்டாம்'' என்று அறிவுறுத்துகிறார்கள். பிடிவாதமாக நிற்கிறார் தசரத் மான்ஜி. வறுமை, பசி, மழை, வெயில் என எதுவும் அவரது மன உறுதியை ஒன்றும் செய்துவிட முடியவில்லை. எறும்பு ஊற, கல்லும் தேயும் என்பார்கள்.

உலகின் 50% மக்கள் தொகை வசிப்பது கிராமங்களில் தான்... அதுவும் வறுமையில்!
அப்துல் கலாம்

1959-ம் ஆண்டு... முப்பது வயதில் தன் வாழ்வில் அப்படி ஒரு சோகம் நிகழும் என்று நினைக்கவில்லை தசரத் மான்ஜி.

பீகார் மாநிலத்தின் கயா மாவட்டம் கெலோவர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி இந்த தசரத் மான்ஜி. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான அவரும் மற்றவர்களும் அந்த கிராமத்து மலையடியில் குடிசை போட்டுத் தங்கிவந்தனர். அவர்கள் வாழ்ந்த கெலோவர் கிராமம் போல அந்த மலையின் கீழே பல கிராமங்கள் உண்டு. தண்ணீரோ, விறகோ அவர்களுக்குத் தேவையானதை மலையிலிருந்து கொண்டு வந்துவிடலாம் என்றாலும், மலைக்கு அந்தப்பக்கம் இருக்கும் சந்தைக்கோ, மருத்துவமனைக்கோ போகவேண்டுமென்றால் சரியான சாலையில்லை. எவ்வளவு அவசரம் என்றாலும் மலையைச் சுற்றி 70 கிமீ வரை பயணிக்க வேண்டும்.

இந்த சூழலில்தான், தண்ணீர் கொண்டுவர மலைக்குச் சென்ற தசரத்தின் மனைவி ஃபால்குனி தேவி பாறை உச்சியிலிருந்து தவறி விழுந்து காயமடைய, மலையைச் சுற்றி மருத்துவமனையை அடைவதற்குள் காப்பாற்ற முடியாமல் உயிரிழக்கிறார்.

மாஞ்சி - மலை
மாஞ்சி - மலை

இரு குழந்தைகளுடன் நிராதரவாக நின்ற தசரத் மான்ஜிக்கு கண்முன்னே இறந்த தன் மனைவியைக் காப்பாற்ற முடியாமல் போனது, தாங்க முடியாத வேதனையைத் தருகிறது. ஒருகட்டத்தில், தனது மனைவிக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்று தீர்மானித்தவர் தனது கைகளில் உளி, சுத்தியல் மற்றும் கடப்பாரையை எடுத்துக்கொண்டு, தனது கிராமத்தை மறைத்து நின்ற அந்த கெலோவர் மலையை உடைத்து ஒரு புதிய பாதையை அமைக்கப் புறப்படுகிறார்.

தந்தை உட்பட ஊரார் அனைவரும் கேலி செய்கிறார்கள். ''வேண்டாம்'' என்று அறிவுறுத்துகிறார்கள். பிடிவாதமாக நிற்கிறார் தசரத் மான்ஜி. வறுமை, பசி, மழை, வெயில் என எதுவும் அவரது மன உறுதியை ஒன்றும் செய்துவிட முடியவில்லை. எறும்பு ஊற, கல்லும் தேயும் என்பார்கள். தசரத் மான்ஜி கடினமான பாறைகள் நிறைந்த அந்த மலையை, தனிமனிதனாக தினமும் காலை முதல் மாலை வரை தொடர்ந்து தனது கைகளால் தகர்த்து கடைசியில் ஒரு எளிய பாதையை உருவாக்கியே விட்டார்.

கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் ஒரு மனிதன் அயராது உழைத்து, 360 அடி நீளமும், 30 அடி அகலமும், 30 அடி உயரமும் கொண்ட அந்தச் சாலையை உருவாக்கி தனது கிராமத்துக்கு அதைத் தந்தார்.

1982-ம் ஆண்டு!

தசரத் மான்ஜியின் கடின உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் பலன் கிட்டியது. பீகார் அரசாங்கம், அந்த மலை மனிதனின் மாபெரும் சாதனையை அங்கீகரித்து, முழுமையான சாலை வசதியை அந்த கிராமத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்தது. அதுவரை எழுபது கிலோமீட்டர் பயணித்த அந்த ஊர் மக்கள், இப்போது எட்டு கிலோ மீட்டர் தொலைவிலேயே தங்களது அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் முடிந்தது.

அனைத்தையும் தனிமனிதனாகச் செய்த தசரத் மான்ஜி, 2007-ம் ஆண்டு பித்தப்பை புற்றுநோயால் மரணம் அடைந்தார்.

மலைப்பாதை
மலைப்பாதை

தசரத் மான்ஜியின் சாதனையை அரசாங்கம் ஒருபக்கம் அவர் அமைத்த சாலைக்கு அவரது பெயர்சூட்டி பாராட்டியதோடு, பத்மஸ்ரீ விருதிற்குப் பரிந்துரை செய்தும், அவரது பெயரில் அஞ்சல் தலை வெளியிட்டும் சிறப்பித்தது. அதேசமயம் பத்திரிகை மற்றும் சினிமாத் துறை அவரது வாழ்க்கையைப் பற்றி தொடர்ந்து எழுதியும், பயோபிக் சினிமாவாக எடுத்தும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

ஆனால், நல்லவர்கள் செய்யும் செயல் அத்தோடு முடிவதில்லை‌. அது தொடர்ந்து பயனளிக்கும் என்பார்கள். அதேபோல, தசரத் மான்ஜியின் உளிகள் மலையை மட்டும் நகர்த்தவில்லை. பல மனிதர்களின் மனதையும் சேர்த்தே தான் நகர்த்தியிருந்தது என்பது பிற்பாடுதான் தெரிந்தது.

ஒடிசாவின் கும்சாஹி கிராமத்தைச் சேர்ந்த ஜலந்தர் நாயக், தனக்கு படிப்பறிவு இல்லையென்ற போதிலும், தனது குழந்தைகள் கல்வி பயில்வதற்கு வேண்டி பள்ளிக்குச் செல்லும் 15 கிலோமீட்டர் பாதை ஒன்றை உருவாக்கி வருகிறார்.

தசரத் மான்ஜி, நித்திஷ் குமார்
தசரத் மான்ஜி, நித்திஷ் குமார்

தண்ணீர் இல்லாமல் பெரும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பீகாரின் பெலாகஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த சத்யேந்தர மான்ஜி, கடந்த பதினைந்து வருடங்களில், அந்த மண்ணின் தாவரமான கொய்யா செடிகள் பத்தாயிரம் நட்டு, மண்வளத்தைப் பராமரித்து வருகிறார்.

மஹூர் டிபிரியா என்ற மற்றொரு விவசாயி, தனது தோட்டத்தோடு மற்றவர்கள் தோட்ட நீர்ப்பாசனத்திற்கும் சேர்த்து மூங்கில்களை மட்டும் பிளந்து வாய்க்கால் அமைத்திருக்கிறார். இதன்மூலம் கிட்டத்தட்ட இரண்டு கி.மீ தூரம் உள்ள நீர்நிலையில் இருந்து, தண்ணீர் வெகுசுலபமாக இவர்கள் தோட்டத்தை அடைகிறது.

தங்களது முயற்சிகளுக்கு உந்துசக்தியாகத் திகழ்வது தசரத் மான்ஜி என்ற தனி மனிதனின் முயற்சி தான் என்று இவர்கள் ஒவ்வொருவரும் கூறுகின்றனர்.

இதோ...

சமீபத்தில் கூட தசரத் மான்ஜியின் சொந்த ஊரான கெலோவரில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது, அங்கு வசிக்கும் அமீத் குமார், தக்க நடவடிக்கைகளை எடுத்து, அங்கு வசிக்கும் மக்களின் தாகத்தைத் தீர்த்து வைத்துள்ளார்.

உண்மையில் தசரத் மான்ஜி இறந்துவிட்டார். ஆனால் அவரது சுயநலமற்ற பணி இறக்கவேயில்லை. அது, இன்றுவரை நூற்றுக்கணக்கான மக்களை தன்னலமற்று சிந்திக்கவும், தொடர்ந்து செயல்படவும் வைத்துக் கொண்டேதான் இருக்கிறது.

ஆம்...

ஆயிரம் மெழுகுவர்த்திகளை ஒளி ஏற்ற ஒற்றை மெழுகுவர்த்தியே போதும்… தசரத் மான்ஜி போல!

அடுத்த கட்டுரைக்கு