Published:Updated:

பிப்ரவரிக்கு ஒரு நாள் போனஸாய் வழங்கும் லீப் ஆண்டு... தெரிந்ததும் தெரியாததும்!

Representational Image
Representational Image ( pexels )

நான்கு வருடத்துக்கு ஒருமுறை 29 நாள்கள் வராத வருடங்களும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

2020 லீப் வருடம் (Leap Year) என்பதும், நான்கு வருடத்துக்கு ஒருமுறை வரும் இந்த லீப் வருடத்தில் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாள்கள் இருக்கும் என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நான்கு வருடத்துக்கு ஒருமுறை 29 நாள்கள் வராத வருடங்களும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

அது எந்த வருடங்கள், ஏன் அதில் பிப்ரவரிக்கு 29 நாள்கள் வரவில்லை என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன், லீப் வருடம் என்றால் என்ன, அதன் வரலாறு என்ன என்பதைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காலண்டரின் பெயர் கிரிகோரியன் காலண்டர். இதைப் பிரபலப்படுத்தியவர் போப் பதிமூன்றாம் கிரிகோரி என்பதால் இந்தக் காலண்டர் இவரது பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

ஆனால், லீப் வருடம் என்பது இந்த கிரிகோரியன் காலண்டருக்கும் முந்தைய ஜூலியன் காலண்டரிலேயே இருந்தது என்றும் முதன்முதலில் இந்த லீப் வருட யோசனையைக் கொண்டு வந்தது அன்றைய ரோமாபுரி மன்னன் ஜூலியஸ் சீஸர் என்றும் கூறப்படுகிறது.

வேலை செய்யும்போது போர் அடிக்குதா? இந்த விளையாட்டுகளை ட்ரை பண்ணிப் பாருங்களேன்! #Games

கிரிகோரியன் காலண்டருக்கு முந்தைய ஜூலியன் காலண்டரை உருவாக்கிய ஜூலியஸ் சீஸர், கி.மு. 45-ம் ஆண்டில் ரோமாபுரியை ஆண்ட அரசர். அக்காலத்தில் அவர்கள் பயன்படுத்திய காலண்டர் பத்து மாதங்கள் கொண்டதாகவும், பிப்ரவரி கடைசி மாதமாகவும் இருந்து, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 22 நாள்களைக் கொண்ட ஒரு மாதம் புதிதாகச் சேர்க்கப்பட்டு வந்தது.

இரண்டு வருடத்துக்கு ஒருமுறை 22 நாள்கள் குழப்பத்தைத் தீர்க்க, ஜூலியஸ் சீஸர், தனது அரசவையின் சொசிஜீன்ஸ் (Sosigenes) என்ற வானவியலாளரின் உதவியை நாட, அப்போது சொசிஜீன்ஸ் தயாரித்த காலண்டரில்தான் முதன்முறையாக ஆண்டுக்கு 365 நாள்களும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடைசி மாதமாக இருந்த பிப்ரவரியில் கூடுதலாக ஒரு நாளைச் சேர்க்கும் வழக்கமும் அறிமுகமானது.

ஜூலியன் காலண்டர் பிற்காலத்தில் கிரிகோரியன் காலண்டராக மாறியபோது, கிறிஸ்து பிறந்த நாளை மையமாக வைத்து கி.மு, கி.பி என வருடங்களையும் மாதங்களையும் கணக்கிட ஆரம்பித்ததால், ஜனவரி முதல் மாதமாகவும் பிப்ரவரி இரண்டாம் மாதமாகவும் மாறியது. அதுமட்டுமன்றி காலண்டரில் புதிதாய் ஜூலை, ஆகஸ்ட் என்ற இரண்டு மாதங்கள் சேர்க்கப்பட்டதும், ஒரு வருடத்தில் 12 மாதங்கள் என ஆனதும் அப்போதுதான்.

Intercalary day - அதாவது காலண்டரின் இடையே சேர்க்கப்படும் நாளான பிப்ரவரி 29 லீப் தினமாக மாறியதும் அப்போதுதான்.

Feb 29
Feb 29

மேலும், இந்த பிப்ரவரி 29-ம் தேதியின் சின்னம் தவளை என்பதுடன், தவளை தாவுவதைப்போல லீப் நாளும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, காலண்டரில் திடீரென்று தாவி வருவதால், அந்த ஆண்டை லீப் ஆண்டு எனவும் பெயரிட்டு அதைப் பழக்கத்துக்குக் கொண்டு வந்தது தற்போதைய நமது காலண்டரை உருவமைத்த போப் கிரிகோரிதான்.

சூரியன் சுற்றுவதை அடிப்படையாகக் கொண்டு 1582-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் காலண்டர் முறை, கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டாலும், கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் கழித்துதான் அமெரிக்காவும் இங்கிலாந்தும் இதை அங்கீகரித்தனவாம். பிறகு, சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்களும் இதைப் பின்பற்ற ஆரம்பித்த பிறகுதான் இது உலக அளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, முறையாகப் பின்பற்றப்பட்டும் வந்துள்ளது.

என்னதான் சிறப்பு நாளாக, லீப் நாள் இருந்தாலும், ஆரம்பத்தில் இந்த நாளை பல நாடுகளில் அமங்கலமான நாளாகத்தான் கருதியுள்ளனர். லீப் வருடத்தில் திருமணம் செய்வதும், லீப் தினத்தன்று குழந்தை பிறப்பதும் அதிர்ஷ்டமற்றவை என்றும் நம்பப்பட்டுள்ளது.

ஆனால், அயர்லாந்து நாட்டில் பெண்கள் தன் மனதுக்குப் பிடித்தவனிடம் தன்னை மணந்துகொள்ளுமாறு கேட்பதற்கு உகந்ததாக இந்த லீப் வருடம் இருந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், லீப் வருடத்தில் தனது காதலைச் சொன்ன பெண்ணை ஏற்றுக்கொள்ளாத ஆண்மகன், 12 ஜோடி கையுறைகளை அந்தப் பெண்ணுக்கு வாங்கித் தர வேண்டும் என்றும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. மோதிரம் அணியாத விரல்களை ஒரு வருடத்துக்காவது மறைக்க இந்தக் கையுறைகள் உதவும் என்பதால் இந்த ஏற்பாடாம்.

Leap Year
Leap Year

சரி, இப்போது தொடக்கத்தில் முன்வைத்த கேள்விக்கு வருவோம்.

எந்தெந்த வருடங்களில் நான்கு வருடத்துக்கு ஒருமுறை பிப்ரவரியில் 29 நாள்கள் இல்லாமல், 28 நாள்கள் மட்டுமே கொண்டிருக்கிறது என்பதையும், அது ஏன் என்பதையும் இப்போது பார்ப்போம்.

பொதுவாக நமது காலண்டரும் பூமி சூரியனைச் சுற்றி வரும் நாள்களும் சமம் என்றாலும், உண்மையில் பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றிவர சரியாக 365 நாள்கள், 5 மணி, 48 நிமிடம், 46 விநாடி ஆகிறது. இந்த அதிகப்படியான நேரத்தை நான்கு வருடத்துக்கு ஒருமுறை ஒரு நாளைக் கூட்டி, லீப் வருடம் என்று கணக்கிட்டாலும், இதிலும் ஒவ்வோர் ஆண்டும் 11 நிமிடம் 14 விநாடி வித்தியாசம் இருப்பதைச் சரி செய்ய, நான்கு நூறு ஆண்டுகளில் மூன்று முறை லீப் ஆண்டுகளைத் தவிர்த்து விடுகிறது இந்த கிரிகோரியன் காலண்டர். அதாவது, எப்படி 1, 2, 3-ம் வருடங்கள் லீப் வருடங்களாய் இல்லாமல் 4-ம் வருடம் லீப் வருடம் ஆனதோ, அதேபோல நூறின் மடங்கு வருடங்களில் 100, 200, 300-ம் வருடங்கள் லீப் வருடங்களாய் இல்லாமல் 400-ம் வருடம் மட்டும்தான் லீப் வருடமாய் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

நம் டிஜிட்டல் வாழ்க்கைக்கும் `உயில்' அவசியம்! எழுதுவது எப்படி?

உதாரணமாக, நாம் கடந்து வந்த 2000 வருடமானது லீப் வருடமாக இருந்தாலும், இதற்கு முந்தைய 1900, 1800, 1700 லீப் வருடங்கள் இல்லை என்பதும், இதற்கு அடுத்த 2100, 2200, 2300-ம் லீப் வருடங்களாக இருக்காது என்பதும், இனி 2400-ம் வருடம் மட்டுமே லீப் வருடமாக இருக்கும் என்பதும் இந்த நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் வருடத்தின் சிறப்பு.

இப்படி எத்தனை துல்லியமாகக் கணக்கிட்டாலும் இந்த கிரிகோரியன் நாட்காட்டியும் சரியானது இல்லை என்ற கருத்தும் அறிஞர்களிடையே உள்ளது என்பதும் கூடுதல் தகவல் நமக்கு.

Leap Year
Leap Year

ஒவ்வொரு நாளைப் போலவே, கிட்டத்தட்ட 3.5 லட்சம் பேர் இன்று புதிதாகப் பிறக்கிறார்கள் என்றாலும் இவர்கள் அனைவரும் தங்கள் பிறந்த நாளை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சரியான நாளில் கொண்டாட முடியும் என்பதுதான் இதில் சோகம். இந்தியாவில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் (1896), கலாக்‌ஷேத்ரா நிறுவனர் ருக்மணி அருண்டேல் (1904), ஹாக்கி பிரபலம் ஆடம் சிங்ளேர் (1984) ஆகியோர் பிப்ரவரி 29-ம் தேதி பிறந்தவர்களில் முக்கியமானவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு