Published:Updated:

கே.ஆர்.நாராயணன் - ஜனநாயகம் காத்த ஜனாதிபதி!

க.வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ்

பிரீமியம் ஸ்டோரி

னக்கு முன்னும் பின்னும் எடுத்துக்காட்டத்தக்க உதாரணங்கள் இல்லாத நிகழ்வுகளை உருவாக்கி, தானே அத்தகைய உதாரணங்களுள் ஒன்றாக மாறியவர்களைக் காலம் ஒருபோதும் மறந்துவி டுவதில்லை. அவ்வகையில், காலம் நமக்கு இப்போது நினைவூட்டியிருக்கும் ஆளுமை கே.ஆர்.நாராயணன். அக்டோபர் 27, 1920 கே.ஆர். நாராயணன் பிறந்த தினம். இப்போது நூற்றாண்டு. இந்தத் தினத்தில் நாட்டின் பல்வேறு தரப்பினரால் அவர் நினைவுகூரப்பட்டிருக்கிறார்.

கேரளாவின் திருவாங்கூர் (இன்றைய கேரளப் பல்கலைக்கழகம்) பல்கலைக்கழகத்தின் முதல் மாணவராகத் தேர்வான முதல் தலித் எனத் தன் வரலாற்றைத் தொடங்கிய கே.ஆர். நாராயணன், இந்திய நாட்டின் குடியரசுத்தலைவரான முதல் தலித் என்ற வரலாற்றுப் பெருமையை வந்தடைந்தார். கேரளாவின் உழவூர் என்னும் சிற்றூரில் பட்டியலினச் சமூகத்தில் பிறந்த கே.ஆர். நாராயணன் இந்திய நாட்டின் முதல் குடிமகனாக ஆனது வரையிலான அவரது வாழ்க்கைப் பயணம் பல முன்மாதிரிகளைக்கொண்டது.

கே.ஆர்.நாராயணன் - 
ஜனநாயகம் காத்த ஜனாதிபதி!

கே.ஆர். நாராயணன் இந்திய நாட்டின் பத்தாவது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட காலம் (1997-2002) இந்திய அரசியல் தேசிய அளவில் நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருந்த காலம். நரசிம்மராவுக்குப் பிறகு வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால், மீண்டும் வாஜ்பாய் என்று சில நாள்கள் மற்றும் சில மாதங்கள் என்று பிரதமர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாறிக்கொண்டிருந்த காலகட்டம். முன்னெப்போதும் இல்லாத அளவு நிலையான ஆட்சியைத் தரவியலாத சூழலில் தேசிய அரசியல் தத்தளித்துக்கொண்டிருந்தது. இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயக முறையின் மீது பல்வேறு விமர்சனப் பார்வைகள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான நெருக்கடியும் கொந்தளிப்பும் நிறைந்த காலகட்டத்தின் பின்னணியில் இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்னும் நிலையிலிருந்து எடுத்த முடிவுகளும், மேற்கொண்ட நடவடிக்கைகளும்தான் கே.ஆர். நாராயணனை மறக்காமல் இந்திய நாடு இன்றும் நினைவில் வைத்துப் போற்றிக் கொண்டிருக்கிறது.

‘அரசியலின் இலக்கணம்’ என்னும் உலகப் புகழ்பெற்ற நூலை எழுதிய பேராசிரியர் ஹெரால்டு லாஸ்கியின் மாணவராக லண்டன் பொருளாதாரப் பள்ளியில் அரசியல் அறிவியல் துறையில் கற்றுக்கொண்ட கல்வி, ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றிப் பெற்ற சர்வதேச அரசியல் அறிவு, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் மத்திய இணை அமைச்சராக மூன்று துறைகளில் வகித்த பொறுப்புகள் வழங்கிய நிர்வாக அனுபவம், மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், துணைக் குடியரசுத்தலைவராகவும் பணியாற்றியதால் கிடைக்கப்பெற்ற அரசியல் அனுபவம் என எல்லாம் இணைந்து இந்திய நாட்டின் மற்றும் உலக நாடுகளின் வரலாறு, சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பைப் பற்றிய ஆழ்ந்த புரிதலைப் பெற்றிருந்த குடியரசுத் தலைவராக அவரை உருவாக்கியிருந்தது.

கே.ஆர்.நாராயணன் - 
ஜனநாயகம் காத்த ஜனாதிபதி!

நாட்டின் முதல் குடிமகனாக இருந்தபோதிலும் குடியரசுத்தலைவருக்கான அதிகாரங்கள் கட்டுப்பாடுகளுக்கும், சில வரம்புகளுக்கும் உட்பட்டது. அந்த வரம்புகளுக்குள்ளும் குடியரசுத்தலைவர் திறம்படச் செயல்பட முடியும் என்று சாதித்துக்காட்டியதுதான் கே.ஆர். நாராயணனை வழமைகளை உடைத்துப் புதிய மரபுகளை உண்டாக்கியவராக இந்திய வரலாறு பதிவு செய்திருக்கிறது. வெவ்வேறு காலங்களில் மத்திய அமைச்சரவை உத்தரப்பிரதேசம், பீகார் மாநில ஆட்சியைக் கலைக்கப் பரிந்துரைத்து அனுப்பிய தீர்மானங்களை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்பி வைத்தார். ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காத சூழலில் ஆட்சியமைக்கக் கோரியவர்களிடம் போதுமான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் தெரிவிக்கும் எழுத்துபூர்வமான கடிதங்களைச் சமர்ப்பிக்கச் சொன்னார்.

அவருடைய எல்லா முடிவுகளுக்கும் அடிப்படையாக அரசியலமைப்புச் சட்டம் இருந்தது. ‘நான் அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்குள் செயலாற்றுபவன்’ என்பதைச் சொல்லியதோடு மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் செய்தும் காட்டினார். நாடு அரசியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருளுக்குள் தள்ளப்பட்ட போதெல்லாம் அரசியலமைப்புச் சட்டம் என்னும் விளக்கின் ஒளியில் அதனைத் தெளிவுபடுத்தினார்.

கே.ஆர்.நாராயணன் - 
ஜனநாயகம் காத்த ஜனாதிபதி!

அரசியலமைப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய முயன்ற நேரத்தில் ‘அரசியலமைப்புச் சட்டம் நம்மைத் தோற்கடித்ததா? அரசியலமைப்புச் சட்டத்தை நாம் தோற்கடித்தோமா?’ என்று எதிர்க்கேள்வி கேட்டார். பாபர் மசூதி, குஜராத் கலவரம் முதலான நாடு எதிர்கொண்ட பிரச்னைகளில் தன்னுடைய கருத்துகளைப் பொதுவெளியில் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அன்றைய பிரதமர்கள் ஜவகர்லால் நேருவால் ‘மிகச் சிறந்த ராஜதந்திரி’ என்றும், இந்திராகாந்தியால் ‘சிக்கலான சூழலில் திறமையுடன் செயல்படும் தலைமைப் பண்பு நிறைந்த நிர்வாகி’ (இந்திய-சீனப் போருக்குப் பிறகு சீனாவின் இந்தியத் தூதராக மிகச் சிறப்பாகச் செயல்பட்டவர் கே.ஆர். நாராயணன்) என்றும் பாராட்டு பெற்றவர். தன்னுடைய அதிகாரங்களை வெளிப்படையாகச் சூழலுக்கேற்பவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தத் தயங்காதவர்.

கே.ஆர்.நாராயணன் பற்றிப் பேசும் எவரும் அவரின் மேற்கண்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து மட்டுமே பேசுகின்றனர். ஆட்சி, அரசு, நிர்வாகம் என்பதையும் தாண்டி நாட்டின் சமச்சீரான வளர்ச்சியின் மீது தீராத அக்கறையுள்ள சமூக நீதிச் சிந்தனையாளராகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர் அவர். தான் காந்தியக்கொள்கையில் நம்பிக்கைகொண்டவன் என்று சொல்லிக்கொண்டாலும் இந்தியச் சமூகக் கட்டமைப்பையும், சமூகச் சிக்கல்களையும் புரிந்துகொள்வதில் இடதுசாரிக் கோட்பாட்டுப் பார்வை தனக்கு உண்டு என்றும் ஒத்துக்கொண்டவர் நாராயணன். தன்னுடைய பேச்சுகளிலும் எழுத்துகளிலும் அவர் அதிகம் மேற்கோள் காட்டியவை காந்தி, நேரு மற்றும் அம்பேத்கரின் கருத்துகளாகும். `ஒருவருக்கு ஒரே வாக்கு. ஒரு வாக்கு ஒரே மதிப்பு என்று அரசியல் சமத்துவத்தை உறுதிப்படுத்திய நாம் எத்தனை நாளைக்குத்தான் சமூக மற்றும் பொருளாதாரத் தளங்களில் இந்த சமத்துவத்தைத் தராமல் மறுக்கப்போகிறோம்?’ என்று அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு ஆற்றிய உரையில் அம்பேத்கர் எழுப்பிய அதே கேள்வியை ஐம்பது ஆண்டுகள் கழித்து எழுப்பினார். இந்திய நாட்டின் சமூக அமைப்பை நன்கு புரிந்து வைத்திருந்தவர் என்ற வகையில் நாடு சுதந்திரமடைந்து ஐம்பது ஆண்டுகள் ஆகியும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இந்தியச் சமூகத்தில் முழுமையாக மலரவில்லை என்ற வேதனையைப் பகிர்ந்துகொள்ளவும், அவற்றைக் குடியரசு தின உரை போன்ற மிகமுக்கிய நிகழ்வுகளில் பேசுவதற்கும் தயங்கவில்லை. இதைப்போலப் பல இடங்களில் அம்பேத்கரியப் பார்வையையும் வெளிப்படுத்தியவர் கே.ஆர்.நாராயணன். ‘நாடு சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும்’ என்று குடியரசு தினப் பொன்விழா நாளன்று மக்களைக் கேட்டுக்கொண்டார். நவீன வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்றாலும், அது சுற்றுப்புறச் சூழலையும், மக்களையும் பாதிப்பதாக இருக்கக் கூடாது. குறிப்பாக, பழங்குடியினரையும் ஏழைகளையும் அப்புறப்படுத்துவதாக இருக்கக் கூடாது. இன்றைய இந்தியா பொறுப்பற்றதாகவும், கருணையற்றதாகவும் ஆகிவிட்டது. நம்முடைய பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் எல்லா மக்களுக்கும் சீராகப் போய்ச் சேரவில்லை என்று சுட்டிக் காட்டினார். இந்த வளர்ச்சி பிராந்திய மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தீர்க்கவில்லை. இந்தச் சீரற்ற வளர்ச்சி சமூகத்தின் அடித்தட்டு மக்களான பெண்களையும் தலித்துகளையும் பழங்குடிச் சமூகத்தையும் மிகவும் பாதிக்கிறது. அவர்களின் கோபம் வன்முறைப் பாதையை நோக்கிச் செல்கிறது என்ற அபாயத்தைச் சுட்டிக்காட்டினார். `சுயவிமர்சனத்தின் மூலம் நம்மைச் சரிசெய்துகொள்ளத் தவறினால் ஏற்படும் விபரீத விளைவுகள் குறித்து ‘நீண்ட துன்புறுத்தலுக்கும் பொறுமைக்கும் உள்ளான மக்களின் கோபம் வெடிக்கும். ஜாக்கிரதை!’ என்று கடுமையாக எச்சரிக்கவும் செய்தார். அரசாங்கம் ஜனநாயகத்திற்கு எதிரான அல்லது மக்களின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதாக உணரும். வேளை களில், `கே.ஆர்.நாராயணன் இருந்திருந்தால் இதை அனுமதித்திருக்க மாட்டார்’ என்னும் வார்த்தைகள் நூறாண்டுகள் தாண்டியும் இந்திய நாடெங்கும் ஒலிக்கிறது. இதுதான் அவரின் தனிச்சிறப்பும், வாழ்நாள் சாதனையும். நாம் ஒவ்வொரு வரும் பின்பற்ற வேண்டியதும் ஆகும்.

கே.ஆர்.நாராயணனே குறிப்பிட்டதைப் போல இந்தியப் பாராளுமன்ற ஜனநாயக முறை பிரிட்டிஷ் அரசாங்கத்திலிருந்து அப்படியே நகல் எடுக்கப்பட்ட தில்லை. நம் இந்திய மரபிலிருந்து முகிழ்த்தது. புத்தரின் சங்கமும், அதன் நடைமுறைகளும்தான் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளிலும் பின்பற்றப்படுகிறது என்றார். புத்தரில் தொடங்கி இந்திய ஜனநாயகச் சிந்தனை மரபைக் கட்டிக்காத்து வந்த இந்தியச் சிந்தனையாளர்களின் வழிவந்தவர்களில் ஒருவராக கே.ஆர்.நாராயணனை இந்திய வரலாற்றில் நிறுத்துவது என்றென்றைக்கும் பொருத்தமாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு