Published:Updated:

அவருக்கான விருது அதுதான்!

 அப்துல் ஜப்பார்
பிரீமியம் ஸ்டோரி
அப்துல் ஜப்பார்

ஆசிப் மீரான்

அவருக்கான விருது அதுதான்!

ஆசிப் மீரான்

Published:Updated:
 அப்துல் ஜப்பார்
பிரீமியம் ஸ்டோரி
அப்துல் ஜப்பார்

புகழ்பெற்ற தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் சமீபத்தில் மறைந்தார். அவர் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்துகொள்கிறார் அவரின் மகன் ஆசிப் மீரான்.

சிறுவயதில் பொங்கல் நாள்களில் வாப்பாவின் கிரிக்கெட் வர்ணனையை நண்பர்களோடு கேட்ட அனுபவம் அலாதியானது. நான் மட்டுமல்ல, என் நண்பர்களும் அதைப் பெருமையோடு கருதிய காலம் அது. ஆனால் அப்போதெல்லாம் அதுகுறித்து அப்பாவிடம் நான் எதையும் பேசியதில்லை.

அந்தக் காலகட்டத்தில் ‘ஸ்போர்ட்ஸ் ஸ்டார்’ ஆங்கில விளையாட்டு வார இதழ் ஒவ்வொரு கிரிக்கெட் அணியும் இந்தியாவிற்கு வரும்போது வீரர்களின் புகைப்படங்கள், அவர்களது சாதனைகள் அடங்கிய ஒரு சிறப்புப் புத்தகத்தை வெளியிடும். இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்தபோது, இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் அந்தப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கி அதைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார் அப்பா. “இதுல உனக்குப் பிடிச்ச இயான் போத்தம் கையொப்பம் போட்டிருக்காரு” என அவர் சொன்னபோது உடல் சிலிர்த்தது. அநேகமாக அந்தத் தருணம்தான் உணர்வுபூர்வமாக அப்பாவோடு என்னை நெருங்க வைத்தது என்றுகூடச் சொல்லலாம்.

நாகர்கோவில்-நெல்லை நெடுஞ்சாலையில் வள்ளியூர் அருகே முப்பிடாரி அம்மன் கோயில் இருக்கும் இடத்தில் கடந்து செல்லும் பேருந்துகள் அரை நிமிடம் நிற்கும். பேருந்தில் இருப்பவர்கள் ஜன்னலுக்கு வெளியே காணிக்கைத் தட்டில் காசு போட்டு, அங்கே தட்டில் இருக்கும் திருநீற்றை எடுத்து இட்டுக்கொள்வார்கள். ஒருமுறை சாத்தான்குளம் சென்றுகொண்டிருந்தபோது, நான் ஜன்னல் ஓரம் இருந்தேன். பேருந்து நின்றதும் அப்பா என்னிடம் பணம் தந்து தட்டில் இடச் சொல்லி திருநீற்றை வாங்கி அருகிலிருந்த பெரியவருக்குக் கொடுத்தார். பெரியவர் பயபக்தியோடு வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டார். நான் கேள்விக்குறியோடு அப்பாவைப் பார்த்தேன். “இறைவனுக்கு மிக உகந்த விஷயம் நம் அருகில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டும்தான். இதுவும் அதுபோல ஒன்றுதான்” என்றார் வாப்பா. அவருக்கு மத அடையாளங்கள் கடந்தும் ஏராளமான நண்பர்கள் ஏன் இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது.

அவருக்கான விருது அதுதான்!

மேற்கிந்தியத் தீவுகள் அணி சென்னைக்கு வந்திருந்தபோது மைக்கேல் ஹோல்டிங்கைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் அப்பா. அப்போது ஹோல்டிங் “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார் “நீங்கள் ஆங்கிலத்தில் செய்வதைத்தான் நான் தமிழில் செய்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார் அப்பா. அதற்கு ஹோல்டிங், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டிருக்கிறார். அப்பாவுக்குப் பேரதிர்ச்சி. தமிழ்நாட்டின் தலைநகரில் நின்றுகொண்டு தமிழ் என்றால் என்ன என்று ஒருவர் கேட்டால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்?

நான் ஒரு பெண்ணை நேசிக்கிறேன் என்று அறிந்தபோது முதலில் அதிர்ந்து, பின்னர் ஆசுவாசப்பட்டுக்கொண்டு எங்கள் வீட்டில் எனக்கு ஆதரவாகப் பேசி, என் குடும்பத்தினரைச் சமாதானப்படுத்தி, எங்கள் திருமணம் நடைபெறுவதற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர் அப்பாதான். நான் முதன்முறை வளைகுடாப் பயணம் சென்றபோது என் மனைவி கர்ப்பமாக இருந்ததால் தனியாகத்தான் சென்றேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்தபோது என் மகனுக்கு ஒன்றேகால் வயதாகியிருந்தது. விடுமுறை கழிந்து நான் மீண்டும் பயணத்திற்குத் தயாரானபோது என்னை அழைத்து, “நீ மீண்டும் இங்கே வரும்போது உன் மனைவியையும் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு செல்வதற்கான வாய்ப்பு இருந்தால் மட்டும் வளைகுடாவிற்குச் சென்றால் போதும். அல்லது இங்கேயே இருந்து உன் மனைவி மக்களோடு சேர்ந்து வாழ முடிவெடு. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. இளமையைத் தின்றுவிட்டு பணத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு ஒரு புண்ணியமும் இல்லை. வாழும் காலத்தில் வாழ வேண்டும். அதுவும் நீயே விரும்பி நேசித்த ஒரு பெண்ணை இப்படி விட்டுவிட்டுச் சென்று விட்டால் அது முறை இல்லை” என்றார். சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பம்தான் எங்களுடையது. என்றபோதும்கூட பணத்தைவிடவும் குடும்ப வாழ்க்கையும் குடும்பமும்தான் தலையானது என்பதை அழுத்தமாக எனக்குள் பதிவு செய்த மறக்கவே முடியாத நிகழ்வு அது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மிகப்பெரிய விசிறி அவர். ஒருமுறை துபாயில் ஒரு மேடையில் ஒரு மிமிக்ரி கலைஞர் சிவாஜியைக் கிண்டல் செய்தபோது கடும் கோபம் கொண்டு “நீங்கள் எந்தக் கலைஞனை வேண்டுமானாலும் கேலி செய்யுங்கள். ஆனால் சிவாஜி என்ற கலைஞனின் அருகில்கூட வந்துவிடாதீர்கள். அதற்குண்டான அருகதை எவருக்கும் இல்லை” என்று மேடையிலேயே சொல்லுமளவிற்கு அதி தீவிர ரசிகர்.

அவர் தாண்டி வராத சிக்கல்கள் இல்லை. ஆனாலும் அவர் கண்ணீர் உகுத்து நிலைகுலைந்துபோனது என்றால் செஞ்சோலை கிராமத்தின் மீது சிங்களப் பேரினவாதம் குண்டுகளைப் பொழிந்து அங்கிருந்த சிறார்களைக் கொன்றொழித்தபோதுதான். மிகுந்த பதற்றத்தோடு அவர் கடந்து சென்ற நாள்கள் அவை.

பொதுவாகத் தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற பெயரில் மட்டுமே தமிழ்நாட்டில் அறியப்படுகிறவராக இருந்தாலும், இலங்கையில் ஒரு காலத்தில் வானொலிக் கலைஞராக அவர் கோலோச்சியதை எஸ்.பொ போன்ற எழுத்து ஆளுமைகளின் வழியாகவும் பி.எச்.அப்துல் ஹமீது போன்ற வானொலி ஆளுமைகளின் வழியாகவும் பின்னாளில் அறிந்தேன். அதைப்போலவே ஐபிசி லண்டன் வானொலிக்காகத் தயாரித்து வழங்கிய ‘இந்தியக் கண்ணோட்டம்’ இலங்கைத் தமிழர்களுக்கு இடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஐரோப்பிய, ஆஸ்திரேலிய மற்றும் கனடா ஈழத்தமிழர்களிடையே அவர் ஊடகவியலாளராகவே அறியப்படுகிறார்.

இந்நிகழ்ச்சிக்குத் தீவிர ரசிகர்களில் ஒருவர்தான், புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன். சர்வதேச பத்திரிகையாளர்கள் மாநாட்டிற்குச் சென்ற அப்பாவை அழைத்து அணைத்து “நான் உங்கள் தீவிர ரசிகன் ஐயா!” என்று சொன்ன விஷயங்கள் ஜூனியர் விகடன் வழியாக லட்சக்கணக்கானவர்களைச் சென்றடைந்தது வரலாறு. அதே வேளையில் அன்றைக்குப் புலிகளின் மீது கடும் கோபம் கொண்டிருந்த ஜெயலலிதாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்ததால், அந்தச் சந்திப்பின் காரணமாக தனக்கோ தன் குடும்பத்திற்கோ ஏதேனும் சிக்கல்கள் வரக் கூடுமோ என்று ஒரு சராசரி குடும்பத் தலைவனாக மிகுந்த பதற்றத்திலும் மன உளைச்சலிலும்தான் இருந்தார் அவர். ஏனெனில் என் தம்பியின் திருமணம் நடக்கவிருந்தது அப்போது. அந்தச் சந்திப்பு குறித்து அவரை விசாரிப்பதற்காக ஒரு காவல் உயர் அதிகாரி வந்திருந்தார். அப்பாவிடம் பல கேள்விகளையும் கேட்டு, ‘இந்தச் சந்திப்பு திட்டமிட்டு நிகழ்ந்தது அல்ல. மாறாக உண்மையில் தமிழ்மீது இருந்த காதலின் காரணமாக பிரபாகரனும் அப்பாவும் சந்தித்துக் கொண்டார்கள்’ என்ற உண்மையை உணர்ந்துகொண்ட காவல் அதிகாரி விடைபெற்றுச் செல்லும்போது அப்பாவின் கையை ஏந்திக்கொண்டு, “நான் அரசு சொன்னதற்காகவே உங்களைக் குறுக்கு விசாரணை செய்தேன். அதுதான் என் கடமையும்கூட! ஆனால், ஒரு மாபெரும் தலைவனைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள்!’’ என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அவரை நெகிழ வைத்த சம்பவங்களில் அதுவும் ஒன்று.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு விருதுகளும் பெற்றிருந்தாலும் அவர் மனம் உவந்து ஏற்ற விருது எது தெரியுமா? அவர் பிறந்து வளர்ந்த சாத்தான்குளத்திற்கு அருகே பரமன்குறிச்சி என்ற சிற்றூரில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது அங்கே நடந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் ஆட்டத்தை வர்ணனை செய்து கொண்டிருந்த ஒருவர், யாரோ ஆட்டமிழந்ததைச் சொல்லிவிட்டு, “ஐயோ! இந்த அழகான தருணத்தைப் பற்றி வர்ணனை செய்ய சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் இங்கே நம்மிடம் இல்லையே?” என்று சொன்னதைக் கேட்டுவிட்டு “அதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது” என்று சொல்லிக்கொண்டிருப்பார். இப்போது நடைபெறும் கிரிக்கெட் தமிழ் வர்ணனைகளைப் பார்த்துவிட்டுப் பெரும்பாலானவர்கள் சொல்வதும் இதுவே என்பதுதான் அவரது ஆளுமையின் அடையாளம்.