Published:Updated:

2K kids: தியாகதுருகம்: ஒரு குன்றும் பல ஆச்சர்யங்களும்!

தியாகராஜன்.க

பிரீமியம் ஸ்டோரி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கிறது, தியாக துருகம் பேரூராட்சி. `அதோ தெரியுது பாருங்க ஒரு குன்று... அதுக்கு மேல ஒரு கோட்டை தெரியுதா..? அதான் இந்த ஊரோட வரலாற்றுச் சிறப்பு' என்றார்கள் ஊர்க்காரர்கள். இந்தக் குன்று 18-ம் நூற்றாண்டில் ஹைதர் அலி கட்டுப்பாட்டில் இருந்தது என்றும், பின்னர் ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பின்னர், குன்றை மீட்க திப்பு சுல்தான் போர் புரிந்துள்ளார். தொடர்ந்து, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோட்டை ராணுவத் தளமாக நிறுவப்பட்டிருக்கிறது. தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது இவ்விடம். இந்தக் குன்றில் அடங்கியிருக்கும் பல ஆச்சர்யங்களை நம்மிடம் பகிர்ந்தார்கள் அவ்வூரைச் சேர்ந்தவர்கள்.

2K kids: தியாகதுருகம்: ஒரு குன்றும் பல ஆச்சர்யங்களும்!

நகர்த்த முடியாத பீரங்கிகள்!

திப்பு சுல்தானை வென்ற ஆங்கிலேயர்கள் இம்மலைக் கோட்டையை ராணுவத் தளமாக மாற்றி அமைத்தபோது அவர்கள் பயன்படுத்திய மூன்று பீரங்கிகளில் ஒன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளது. மற்ற இரண்டில் ஒன்று குன்றின் மேலும், மற்றொன்று குன்றின் அடிவாரத்திலும் உள்ளன. அருங்காட்சியகத்தில் வைக்க குன்றின் மேல் இருந்து அடிவாரம்வரை ஆள்களின் உதவியுடன் கொண்டு வரப்பட்ட பீரங்கியை, அதற்கு மேல் ஒரு அடிகூட நகர்த்த இயலவில்லை என்கிறார்கள் ஊர்மக்கள். `ஏதோ மர்ம சக்தியாம். அப்புறம், ராத்திரி நேரமெல்லாம் இந்தக் கோட்டையில ராஜாக்கள் நடமாடுவாங்களாம்' என்று த்ரில்லர் கதை சொல்கிறார்கள் ஊர்ச் சிறுவர்கள்.

சூரியன் தீண்டாத சுனை!

சூரிய வெளிச்சமே படாத, எல்லா காலங்களிலும் நீர் இருந்துகொண்டே இருக்கும் சுனைநீர்க் கிணறு ஒன்று, இந்தக் குன்றின் மேல் உள்ளது. அக்காலத்தில் ராணிகள் நீராடும் இடமாக அது இருந்திருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. இயற்கை தன்னை அறிவியல் கூறுகளுடன் நிறுவிக்கொள்ளும் ஆச்சர்யத்துக்கு அது மற்றுமொரு சான்று.

2K kids: தியாகதுருகம்: ஒரு குன்றும் பல ஆச்சர்யங்களும்!

உச்சிப் பாதை!

குன்றின் உச்சியில், குதிரைகள் கட்டுமிடம், அரசன், அரசி ஊரின் அழகை ரசிப்பதற்காக அமைக்கப்பட்ட இளைப்பாறல் மேடை எனப் பார்த்தபோது, அந்த பிரமாண்டக் காட்சிகளை ஒருமுறை மனக்கண்ணால் பார்த்துத் திரும்பியதுபோல சில்லிட்ட ஓர் உணர்வு ஏற்பட்டது.

புதையல் புரளி!

ஆங்காங்கே பல கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கல்வெட்டுகள் சொல்லும் ரகசியக் குறிப்புகளில், திப்பு சுல்தான் மறைத்து வைத்திருந்த புதையல் ரகசியம் இருப்பதாகக் கதை ஒன்று சுற்றி வருகிறது. 2012-ம் ஆண்டு, புதையலைப் பாதுகாக்கவெனக் கூறி பேரூராட்சி தலைவர் தலைமையில் அங்கு யாகம் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சில நேரங்களில் வரலாறுகள் அமானுஷ்யங்களாக்கப் படுவது வழக்கம்தானே?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு