Published:Updated:

“தூங்காதே தம்பி தூங்காதே!” - ஸ்ட்ராங் ரூம் சுவாரஸ்யங்கள்...

ஓட்டுப் பெட்டி பாதுகாப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
ஓட்டுப் பெட்டி பாதுகாப்பு

ஏற்கெனவே வாக்கு எண்ணும் மையத்துக்குள் கழிவறைகள் இருக்கும்போது, எதற்காக இந்த லாரிகளைக் கொண்டு வந்தீர்கள்..

தமிழக அரசியல் தலைவர்கள் அத்தனை பேரின் கவனமும் ஓட்டுப் பெட்டிகளின் மீதே இருக்கிறது. ‘ஒரு மாசத்துல மாத்திடுவாங்களாமே... உண்மையா?’ என தமிழகம் முழுக்க மக்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது. அதே பயத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் நிர்வாகிகளை வைத்து ஷிஃப்ட் முறையில் இரவு பகலாக ஓட்டுப் பெட்டி பாதுகாக்கப்படும் மையங்களைக் கண்காணித்து வருகின்றன.

இந்தநிலையில்தான் ஏப்ரல் 13-ம் தேதி நள்ளிரவு, கோவை ஜி.சி.டி கல்லூரியிலுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த இரண்டு கன்டெய்னர் லாரிகளை தி.மு.க கூட்டணிக் கட்சியினர் தடுத்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில், நடமாடும் கழிவறைகள்கொண்ட லாரிகள் அவை என்று தெரியவந்தது. “ஏற்கெனவே வாக்கு எண்ணும் மையத்துக்குள் கழிவறைகள் இருக்கும்போது, எதற்காக இந்த லாரிகளைக் கொண்டு வந்தீர்கள்... அதுவும் நள்ளிரவில் கொண்டு வர வேண்டிய அவசியமென்ன?” என்று தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர். முடிவில், அந்த லாரிகள் வெளியேற்றப்பட்டன.

“தூங்காதே தம்பி தூங்காதே!” - ஸ்ட்ராங் ரூம் சுவாரஸ்யங்கள்...

பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டார். பண்ருட்டி தொகுதி வாக்குப்பெட்டிகள், அங்குள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்துக்கு லேப்டாப் சகிதம் மூன்று இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். விசாரித்ததற்கு, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்க வந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். ‘கல்லூரியே மூடியிருக்கும்போது இவர்களுக்கு இங்கே என்ன வேலை’ என வேல்முருகனின் ஆதரவாளர்கள் கேள்வி கேட்க, ‘அவர்களிடம் பாஸ் இருக்கிறது’ என்றார்களாம் போலீஸார். வாக்குப்பெட்டிகளை ஏதோ செய்யவே அவர்கள் வந்தார்கள் என பகீர் குற்றச்சாட்டு கிளப்புகிறார் வேல்முருகன்.

வாக்கு எண்ணும் மையங்களை கட்சிகள் எப்படிக் கண்காணிக்கின்றன? ஒரு வேட்பாளருக்கு இரண்டு முகவர்கள் பாஸ் வழங்கப்படும். எட்டு மணி நேரம் ஷிஃப்ட் முறையில் முகவர்களை மாற்றிக்கொள்ளலாம். தினமும் காலை 11 மணிக்கு இந்த முகவர்கள் முன்னிலையில், வாக்குப்பெட்டிகள் வைக்கப் பட்டிருக்கும் ‘ஸ்ட்ராங் ரூம்’ சீல் சேதமடையாமல் இருக்கிறதா என்பதைத் தேர்தல் நடத்தும் அலுவலர் பரிசோதிக்கிறார். ‘ஸ்ட்ராங் ரூமை’ச் சுற்றிலும் மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி., தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோருக்கு மட்டுமே எந்நேரமும் ‘ஸ்ட்ராங் ரூம்’ பகுதிக்குச் செல்ல அனுமதி உண்டு. மையத்தின் வளாகத்தில் ஆயுதப்படைக் காவலர்களும், வெளிப்புறத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறையினரும் பாதுகாப்பு அளிக்கின்றனர்.

வேட்பாளர்களின் முகவர்களுக்கு மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நாள் வரை ஒரு சவாலான காலகட்டமாக மாறியிருக்கும் நிலையில், சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியின் பொது முகவரான ஸ்டாலினிடம் பேசினோம். “நான் மாருதி பாலிடெக்னிக் கல்லூரியில் கண்காணிப்புப் பணியில் இருக்கிறேன். மையத்தைச் சுற்றிலும் 86 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. கேமரா காட்சிகளை முகவர்கள் பார்ப்பதற்காக எல்.இ.டி திரை, வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அங்கேதான் தங்கிக்கொள்ள வேண்டும். ‘ஸ்ட்ராங் ரூம்’ அறையின் கதவை மூன்று இடங்களில் பூட்டி சீல் வைத்து, அந்த சீல்களை முகவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியிருக்க வேண்டும். தமிழகத்தின் பல இடங்களில் இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. பல இடங்களில் டி.வி-க்கள் இரவில் அணைந்துவிடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இவ்வளவு கேமராக்கள் இருந்தும் வாக்குப்பெட்டி உள்ள அறைக்குள் மட்டும் எந்த கேமராவும் இல்லை. இதைப் புகாராக அளித்திருக்கிறேன்.

ஸ்டாலின் - அண்ணாதுரை
ஸ்டாலின் - அண்ணாதுரை

முகவர்களுக்கு பாத்ரூம், வாகன நிறுத்தம் வசதி ஏற்பாடுகள் சரிவரச் செய்யப்படவில்லை. அவசரத்துக்கு ஒதுங்க வெளியே போய்விட்டு வருவதற்குள் எதிர்க்கட்சிக்காரர்கள் புகுந்து ஏதாவது சதி செய்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. வாக்கு எண்ணிக்கைக்கு வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்களைப் பயன்படுத்துவதுதான் வழக்கம். இந்தமுறை உள்ளாட்சி அதிகாரிகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, உள்ளாட்சி மற்றும் சொசைட்டி பிரதிநிதிகளுக்கு மையத்துக்குள் அனுமதியில்லை என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்தச் சூழலில், தேர்தல் அனுபவமில்லாத உள்ளாட்சி அதிகாரிகளை வாக்கு எண்ணிக்கைக்குப் பயன்படுத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறோம்” என்றார்.

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதி தி.மு.க வேட்பாளர் டாக்டர் எழிலனின் முகவர் எஸ்.எம்.கே.அண்ணாதுரையிடம் பேசினோம். “நான் லயோலா கல்லூரியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன். என்னதான் போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்புப் போட்டிருந்தாலும் யாரையும் நம்ப முடியாது. ஷிஃப்ட் முறையில் ஒவ்வொருத்தரும் கிட்டத்தட்ட 12 மணி நேரம் வெச்ச கண் வாங்காமல் கண்காணிக்கிறோம். அப்படி இருக்கும்போதே ஏப்ரல் 7-ம் தேதி இரவு 11.45 மணியளவில் திடீரென்று இரு ட்ரங்க் பெட்டிகளை உள்ளே தூக்கிச்சென்றார்கள். நான் ஓடிப்போய் பார்த்தபோது, 17-சி ஃபார்ம்கள் இருந்தன. ‘எங்களிடம் சொல்லாமல் எப்படிக் கொண்டு செல்லலாம்?’ என்று சத்தம் போட்டோம். 24 மணி நேரமும் கல்லூரியைச் சுற்றிச் சுற்றிக் கண் காணிக்கிறோம். மே 2 வரை வாக்குப் பெட்டிகளைப் பாதுகாப்பது எங்கள் கடமை என்பதால், பசி, தூக்கம் எல்லாம் இல்லை” என்றார்.

தமிழ்நாடு முழுவதும் தி.மு.க., அ.ம.மு.க கட்சிகளின் முகவர்கள் விழிப்புடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதே ஈடுபாடு இதர கட்சியினரிடம் இல்லை. குறிப்பாக, ‘அ.தி.மு.க முகவர்களை வாக்கு எண்ணும் மையத்தின் பக்கம் பார்க்க முடிவதில்லை’ என்கிற புகார் அந்தக் கட்சியின் தலைமை வரை சென்றிருக்கிறது என்கிறார்கள்.

மே 2-ம் தேதி காலை வரைக்கும் ‘தூங்காதே தம்பி... தூங்காதே!’ பாட்டைக் கேட்டு பொழுதுபோக்குவதைத் தவிர வேறு வழியில்லை!