Saravanakarthikeyan Chinnadurai
இந்தியச் சமூகத்தில் பொதுவாகவே காதல் குறைந்து வருகிறது எனத் தோன்றுகிறது. பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் அதிகரித்து வருவதும் பெண்கள் மீதான ஆண்களின் சார்பு குறைந்து வருவதும் இதற்குக் காரணம் என்பது போல் மேம்போக்காகத் தோன்றினாலும், அதைத் தாண்டி பொதுவாக அன்புக்கான தேவை என்பதே 2000-க்குப் பின் உருவான தலைமுறைகளுக்கு அவசியமில்லை என்றாகி வருகிறது என்றே பார்க்கிறேன்.
கல்யாணம் என்பது எல்லோருக்குமான தேவை என்ற கற்பிதம் உடைபடுகிறது. ஆனால், இதை உணராத முந்தைய தலைமுறை தம் கடமையை நிறைவேற்றும் பொருட்டு பாரபட்சமின்றி எல்லோரையும் திருமணத்தில் பிடித்துத் தள்ளுகிறது. அதை மறுக்கும் துணிவும் தெளிவும் புதிய தலைமுறைக்கு இல்லை. திணிக்கப்பட்டது வாந்தியெடுக்கப்படுவது போல் இந்தக் கட்டாயத் திருமணங்கள் உடைகின்றன. இணைத் தேர்வு சரியில்லை என்பதல்ல காரணம், கல்யாணமே அவர்களுக்கு அவசியமில்லை என்பதே விஷயம். மறுமணமும் கள்ளக் காதலும்கூட இந்நிலையில் கசக்கவே செய்யும்.
இம்மனநிலை மாற்றத்தை மேற்குலகம் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அடையத் தொடங்கியது. நாம் இப்போது ஆரம்பித்திருக்கிறோம். இதன் காரணமாக வரும் ஆண்டுகளில் திருமணம் செய்யா திருப்பதும், குழந்தை இருந்தாலும் விவாகரத்து செய்வதும், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதும் அதிகரிக்கும். திருமணம், பிள்ளைப் பேறு என்பவை எல்லோருக்கும் கட்டாயம் என்பதும், திருமணம் மொத்த வாழ்க்கைக்குமான ஒற்றை முடிவு என்ற புனிதப்படுத்தலும், குழந்தைகளின் பொருட்டு சகித்தபடி இணைகள் சேர்ந்து வாழ்தலும் நம் நாட்டிலும் அருகத் தொடங்கிவிடும். இதில் நன்று, தீது ஒன்றுமில்லை. இது ஒரு பண்பாட்டு மாற்றம். எல்லாம் கிடைத்த ஓர் இனம் சலிப்படையத் தொடங்கும் சொகுசு.
Karthik (யாத்திரி)
பெரிதான காதலோ பிரியமோ உன்மீது இல்லைதான்.
நீ வழங்கும் காதலுக்குள் இருக்க வேண்டி
அநேக பொய்கள் சொன்னேன்.
உன்னை எப்படி எல்லாம் காதலிக்கிறேன் என்று.
நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்று.
நாம்தான் சிறந்த காதலர்கள் என்று.
பிறகெப்போதென தெரியவில்லை...
மேற்காணும் யாவையும்
உன்னிடம் சொல்வதை நிறுத்தி இருந்தேன்.
அப்போதிலிருந்து
உன்னைக் காதலிக்கத்
தொடங்கியிருந்தேன்.
Aruna Raj
வாழ்ந்துக்கொண்டிருக்கும்போதே
தொலைந்து போகிறது வாழ்க்கை.
Primya Crosswin
கை நிறைய தனிமையைத் திணித்து, விளையாடிக்கொண்டிருக்கச் சொல்லிவிட்டு, ஒவ்வொரு வராகச் சென்றுவிடுகின்றனர்... நானும் சலிப்பின்றி வாசல் பார்த்தவண்ணம் தனிமையை குழைத்தபடி, தானாய் பேசிக்கொண்டிருக்கின்றேன்!
Revathy Ravikanth (Rev)
KGF-2 பார்த்துட்டு சின்னது கார்ல வரும்போது வாழ்க்கை முழுசும் உன்னைய பெருமைப்படுத்துவேன்னு உணர்ச்சிவசப்பட்டு சொல்ல நானும் எமோஷனலா.. தீரா தீரா வாள் வீசும் கரிகாலான்னு மனசுக்குள்ள பாடிட்டு வீட்டுக்கு வந்ததும் ஹப்பாடான்னு ஒக்காந்து யப்பா...ராக்கி! அந்தத் தண்ணி பாட்டில கொண்டா (கேரக்டராவா மாறுன புவர் மீ) தாகமெடுக்குன்னு சொன்னா... போம்மா... போய் நீயே எடுத்துக்கன்னுது... மொபைல் கேம்ஸ் வெளாண்டுகிட்டே...
டாய்..க(கி)ரிகாலா...
க்ருஷ்ண லக்ஷ்மி (நாச்சியார்)
புலம்பலே தீர்வு என நினைக்கும் வரை
யாரோ ஒருவரின் காதுக்கு
கையேந்திதான் நிற்க வேண்டும்.
ikrthik
எங்க இருக்க?
என்ன பண்ற?
எப்போதும் நீ என்னிடம்
வினவும் வினாக்கள்
இவையாகத்தான் இருந்தது
இன்று
“எப்படி இருக்கிறாய்?”
என்று கேட்டாய்
நம்முள் உண்டாகிப்போன தொலைவை -
பகிரங்கப்படுத்தும்
உன் நலவிசாரிப்புக்குப் பின்
நான் நன்றாகயில்லை.
asdbharathi
காத்திருப்புகள் கொடியவை அல்ல, எத்தனை காலம் என்று தெரியாத காத்திருப்புகளே கொடியவை.
manipmp
மிக்ஸி நின்றவுடன் கிடைக்கும் ஆசுவாசத்துக்கு
ஈடு இணை ஏதுமில்லை.