Ipl-2021 banner
Published:Updated:

புத்தம்புது காலை : ஃப்ராய்டின் பூவா, தலையா கான்செப்ட்டும், CSK கேப்டன் தோனி வென்றுள்ள டாஸ்களும்!

தோனி டாஸ்
தோனி டாஸ்

''நாணயம் மேலே காற்றில் அலையும்போது கவனித்தால் உங்கள் மனது எதை விரும்புகிறது என்பதும் புரிந்துவிடும்."

நேற்றைய ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ்க்கு எதிராக தோனி டாஸில் தோற்றிருந்தாலும் இதுவரை அதிக அளவில் டாஸை வென்ற அணித்தலைவர் அவர்தான். கிளப் கிரிக்கெட்டில் அவர் டாஸ் வெற்றி 60 சதவிகிதத்துக்குமேல் முதல் இடத்தில் இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்ட்டிங் அதிகளவில் டாஸ் வென்றிருக்கிறார்.


பிரிட்டனில் ஒரே எண்ணிக்கையில் இருவர் வாக்குகள் பெற்றுவிட்டால் பூவா தலையா போட்டுப் பார்த்து வென்றவரை முடிவு செய்கிறார்கள். அமெரிக்க செனட்டர் தேர்தலிலும், பூவா தலையா போட்டு முடிவெடுப்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழக்கம்தான்!

விளையாட்டுப் போட்டிகளின்போதும், சில சமயங்களில் முக்கியமான பிரச்னைக்கு தீர்வுகாண இயலாத சூழ்நிலையிலும் ஒரு நாணயத்தை எடுத்து சுண்டிவிட்டு, "பூவா தலையா" போடும் இந்த வழக்கம் எப்படி வந்தது என்பதற்கு, ரோமானியர்களைக் கைகாட்டுகிறது வரலாறு.

குழப்பமான சமயத்தில் முடிவெடுக்க ரோமானியர்கள், ''Navia aut Caput...'' அதாவது நாணயத்தில் ''கப்பலின் முகப்பா அல்லது மன்னரின் தலையா?'' என்று கேட்டு, அதில் வரும் முடிவை கடவுளின் ஆணையாகவே கருதி ஏற்றுக் கொண்டார்கள். பிற்பாடு இதனைப் பின்பற்றிய ஆங்கிலேயர்களும், இந்த பூவா தலையாவை, Cross or Pile என பின்பற்றியுள்ளனர்.

தோனி - கோலொ
தோனி - கோலொ

நம்மிடையேயும் இதேப்போல, குழப்பமான சூழ்நிலைகளில் கடவுளிடம் பூ கேட்பது, சைவர்கள் தேவாரத்தில் கயிறு சார்த்திப் பார்ப்பது போன்ற வழக்கங்கள் உள்ளன. கிறிஸ்துவர்கள் இதேமுறையில் பைபிளைத் திறந்து, திறக்கப்படும் பக்கத்தில் இருக்கும் வசனத்தை வைத்து முடிவெடுப்பர்.


இப்படி வரலாறெங்கும் முக்கிய முடிவுகளை எடுக்கவும், நமது அன்றாட வாழ்வில் சில குழப்பங்களில் முடிவுகளை எடுக்கவும் இந்த பூவா தலையா மட்டுமன்றி பல வழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

'The Gamblers Fallacy' என்று அழைக்கப்படும் இந்த வகையான கணிப்பை நம்புவோருக்கு, ''உலகில் இல்லாத பேரறிவின் மீது பாரத்தைப் போட்டு முடிவை எதிர்பார்ப்பவர்கள்'' என்று பொருள்.

தற்போது பகுத்தறிவாளர்கள் கூட ஏற்றுக்கொள்ளும் இந்த முறையை, சரியா தவறா என்பதை விவாதிக்கும் முன், அதை எப்படி அணுக வேண்டுமென்று உளவியலின் தந்தையான டாக்டர் சிக்மண்ட் ஃபிராய்ட் தந்துள்ள 'Toss the Coin' உலகப் பிரசித்தமான கொள்கையைத் தெரிந்து கொள்வோம்.

சிக்மண்ட் ஃப்ராய்ட்
சிக்மண்ட் ஃப்ராய்ட்

"பூவா தலையா போட்டுப் பாருங்கள் என்று நான் சொல்வது முடிவு எடுப்பதற்காக அல்ல... முடிவை எடுப்பவர்கள் தங்களை உணர்ச்சிப்பூர்வமாக தெளிவுபடுத்திக் கொள்வதற்காகத்தான் இவ்வாறு போட்டுப் பார்க்கச் சொல்கிறேன். ஒரு மனிதன் முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒரு நாணயத்தை சுண்டும்போது, அவன் பூ என்று நினைத்து பூவே விழுந்து விட்டால் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதா, வருத்தமா? மகிழ்ச்சி ஏற்பட்டால் அந்தக் காரியத்தை செய்யலாம். வருத்தம் ஏற்பட்டால் அதை நிறுத்தி விடலாம். மேலும் நாணயம் மேலே காற்றில் அலையும்போது கவனித்தால் உங்கள் மனது எதை விரும்புகிறது என்பதும் புரிந்துவிடும்" என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட்.


ஆம்... டாஸ் போடுவது மூடநம்பிக்கையா இல்லை அறிவியல் தானா என்ற குழப்பம் ஏற்படுகிறதா? ஒரு நாணயத்தை காற்றில் சுண்டுங்கள். அது என்ன தீர்வைத் தருகிறது என்பதைக் காட்டிலும், அது காற்றில் சுழலும்போது, உங்கள் மனம் எதை எதிர்பார்க்கிறது என்பதைக் கவனியுங்கள். அதுதான் உங்கள் உள்ளார்ந்த ஆசை என்பது உங்களுக்கு விளங்கிவிடும்... சிஎஸ்கே அணியின் வெற்றி உட்பட!

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு