Published:Updated:

ஆட்டம்காட்டும் சர்வதேச ஹேக்கர் ஸ்ரீகி... கிடுகிடுத்துப்போன கர்நாடக அரசியல்!

பெங்களூருவைச் சேர்ந்த 26 வயதான ஸ்ரீகி என்கிற ஸ்ரீகிருஷ்ணா ரமேஷ், ‘ஹேக்கிங்’ மூலமாகப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களைக் கொள்ளையடித்திருக்கிறான்.

பிரீமியம் ஸ்டோரி

கர்நாடகா அரசியலுக்கும், முதல்வர் பதவிக்கும் ராசியே இல்லை போலிருக்கிறது. அங்கு கடந்த 1977-க்கு பிறகு சித்தராமையாவைத் தவிர ஐந்தாண்டுகளை முழுமையாகப் பூர்த்திசெய்த முதலமைச்சர் ஒருவர்கூட இல்லை. அதிலும் 2018-ல் பா.ஜ.க-வின் எடியூரப்பா வெறும் ஆறு நாள்கள் மட்டுமே முதல்வர் பதவியிலிருந்த கூத்தெல்லாம் அரங்கேறியிருக்கிறது. இந்தநிலையில்தான் முதல்வராக பா.ஜ.க-வின் பசவராஜ் பொம்மை பொறுப்பேற்று 100 நாள்களைக் கடந்திருக்கும் நிலையில், ‘கிரிப்டோகரன்சி’ கொள்ளை விவகாரம் ஒன்று அவரது நாற்காலியை ஆட்டம்காணவைத்துள்ளது. இந்தமுறை அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துவைத்திருக்கிறான் சர்வதேச ஹேக்கர் `ஸ்ரீகி’ என்கிற ஸ்ரீகிருஷ்ணா ரமேஷ்!

ஆட்டம்காட்டும் சர்வதேச ஹேக்கர் ஸ்ரீகி... கிடுகிடுத்துப்போன கர்நாடக அரசியல்!

இந்தியாவில் கிரிப்டோகரன்சியை அனுமதிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு, “இந்த கரன்சியைப் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கலாமே தவிர, தடை விதிக்கக் கூடாது’’ என்று பரிந்துரைத்திருக்கிறது. இதையடுத்து, கிரிப்டோகரன்சிக்குத் தடை விதிப்பதற்கு பதிலாக அதைக் கட்டுப்படுத்தத் தயாராகிவருகிறது மத்திய அரசு. இந்த நிலையில்தான், கர்நாடகாவில் நடைபெற்றுள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘பிட்காயின்’ (கிரிப்டோகரன்சியின் கீழ்வரும் வர்த்தகம்) கொள்ளை, அந்த மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. ‘இந்திய அளவில் நடந்துள்ள மிகப்பெரிய பிட்காயின் கொள்ளை’ என்று வர்ணிக்கப்படும் இந்தக் குற்றத்தில் கர்நாடக ஆளும் பா.ஜ.க-வுக்குத் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த 26 வயதான ஸ்ரீகி என்கிற ஸ்ரீகிருஷ்ணா ரமேஷ், ‘ஹேக்கிங்’ மூலமாகப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களைக் கொள்ளையடித்திருக்கிறான். போதைப்பொருள் தொடர்பான வழக்கு ஒன்றில் நவம்பர் 6-ம் தேதி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டான் ஸ்ரீகி. அவனிடம் விசாரணை நடத்தியபோதுதான் ஸ்ரீகியின் சர்வதேச ‘ஹேக்கிங்’ குற்றப் பின்னணியைக் கண்டு அதிர்ந்துபோனார்கள் போலீஸார். தவிர, பிட்காயின் கொள்ளையைத் தாண்டி, அவனது ஹேக்கிங் கரங்கள் கர்நாடகா அரசின் இணையதளம் வரை நீண்டிருக்கின்றன. 2019-ல் கர்நாடகா அரசின் ‘மின்னணு கொள்முதல்’ இணையதளம் ஹேக் செய்யப்பட்டது. அதிலிருந்த வங்கிக் கணக்குகளின் விவரங்கள் திருடப்பட்டு, அந்த வங்கிக் கணக்குகளிலிருந்து பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. தற்போதைய போலீஸ் விசாரணையில், அந்தக் கொள்ளையை நடத்தியதும் ஸ்ரீகிதான் என்பது தெரியவந்துள்ளது.

ஆட்டம்காட்டும் சர்வதேச ஹேக்கர் ஸ்ரீகி... கிடுகிடுத்துப்போன கர்நாடக அரசியல்!

பள்ளியில் படிக்கும்போதே ‘ஹேக்கிங்’ செய்வதில் கைதேர்ந்த ஸ்ரீகி, 2016-ல் சர்வதேச அளவில் ஹேக்கிங் மூலம் பிட்காயின்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கினான். கோடிகள் கொட்டவே... பல நாடுகளுக்கும் பறந்தவன் நட்சத்திர விடுதி, மது போதை, பெண்கள் என உல்லாசத்தில் திளைத்தான். 2019 நவம்பரில் கர்நாடகா போலீஸ் இவனைக் கைது செய்தபோதிலும், ஜாமீனில் வெளியே வந்தவன் விமானங்களில் வலம்வந்தபடியே தனது ஹேக்கிங் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினான். அப்படித்தான் நெதர்லாந்தில் தங்கியிருந்தபோது, ‘பிட்ஃபிநெக்ஸ்’ என்ற மிகப்பெரிய பிட்காயின் எக்ஸ்சேஞ்சை ஹேக் செய்த விவகாரம் தற்போது இன்டர்போல் விசாரணை வரை இழுத்துவிட்டிருக்கிறது.

ஆட்டம்காட்டும் சர்வதேச ஹேக்கர் ஸ்ரீகி... கிடுகிடுத்துப்போன கர்நாடக அரசியல்!

கர்நாடக காவல்துறை, மத்திய அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவற்றைத் தாண்டி கர்நாடக அரசியல் வட்டாரத்தையும் இந்த விவகாரம் அல்லோலகல்லோலப் படுத்தியிருப்பதுதான் தற்போதைய ஹாட் நியூஸ். இதில், முதல்வர் பசவராஜ் பொம்மைக்குத் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா, “உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலரும், “ஆளும் பா.ஜ.க அரசின் ஆதரவு இல்லாமல் ஸ்ரீகி இவ்வளவு தூரம் சுதந்திரமாக வலம்வந்திருக்க முடியாது” என்று குற்றம்சாட்டினார்கள். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “பிட்காயின் ஊழல் பெரியது... அதைவிடப் பெரியது பிட்காயின் ஊழலை மறைக்கும் கர்நாடக பா.ஜ.க அரசின் முயற்சி... எதையோ மூடிமறைக்கப் பார்க்கிறார்கள்” என்று கடுமையாக விமர்சிக்கவே, கர்நாடகா அரசியலில் அனல் பறந்தது.

அதிர்ந்துபோன பசவராஜ், டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியையும், நட்டா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களையும் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார். ஆனாலும், பசவராஜ் டெல்லி சென்றுவந்த மறுநாளே, பா.ஜ.க-வின் முன்னாள் முதல்வரான ஜெகதீஷ் ஷட்டர் டெல்லி சென்றதும், ‘முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படுமோ...’ என்று கர்நாடகா பா.ஜ.க-வினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆட்டம்காட்டும் சர்வதேச ஹேக்கர் ஸ்ரீகி... கிடுகிடுத்துப்போன கர்நாடக அரசியல்!

பா.ஜ.க மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் முதல்வர் பசவராஜ், “இந்த விவகாரம் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. பல ஆண்டுகளாக ஸ்ரீகி இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் நிலையில் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அவர்மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் பா.ஜ.க தரப்பினர் சிலர், “காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் மகனுக்கு ஸ்ரீகியுடன் தொடர்பு இருக்கிறது. அது பற்றியும் விசாரிக்கப்பட வேண்டும்” என்று குரல் உயர்த்தியிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் “பிட்காயின் பணத்தில் போதைப்பொருள்களைத் தருவித்து வி.ஐ.பி-க்களுக்கு ஸ்ரீகி சப்ளை செய்திருக்கிறான். ஐ.பி.எஸ் அதிகாரிகள், நடிகர், நடிகைகள் சிலருக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. ஸ்ரீகியின் கோடிக்கணக்கான முதலீடுகள் வெளிநாடுகளில் குவிந்துள்ளன” என்று போலீஸ் விசாரணை வெவ்வேறு கோணங்களில் சூடுபிடித்துக்கொண்டிருக்க... கைதான நான்கே நாள்களில் ஜாமீனில் வெளியே வந்த ஸ்ரீகி, ஜாலியாக ஊர்சுற்றிக்கொண்டிருக்கிறான்... அவனது அடுத்த ஹேக்கிங் எங்கே என்று திகிலில் உறைந்திருக்கிறது கிரிப்டோகரன்சி உலகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு