Published:Updated:

நியூஸ் எம்பஸி!

இந்திய - அமெரிக்கரான ராகுல் துபேவை `ஹீரோஸ் 2020’ பட்டியலில் சேர்த்து கௌரவித்திருக்கிறது டைம்ஸ் இதழ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

டெல்லி விவசாயிகள் போராட்டம் நாளுக்குள் நாள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவருகிறது. இந்தப் போராட்டத்தை உன்னிப்பாக கவனித்துவருவதாக தெரிவித்திருக்கிறது இங்கிலாந்து. இந்தநிலையில், அந்நாட்டு நாடாளு மன்றத்தில் சீக்கிய எம்.பி தன்மன்ஜீத் சிங் தேசாய் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் போரீஸ் ஜான்சன் சம்பந்தமே இல்லாமல், “இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னை அவர்களின் உள்நாட்டு விவகாரம். அது அவர்கள் தரப்பில் பேசித் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டியது” என்று கூறியது, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக் குள்ளானது. இதையடுத்து இங்கிலாந்து அரசுத் தரப்பில், “எம்.பி-யின் கேள்வியைப் பிரதமர் தவறாகப் புரிந்துகொண்டார்” என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. #சரியா கேக்கலை!

இந்திய - அமெரிக்கரான ராகுல் துபேவை `ஹீரோஸ் 2020’ பட்டியலில் சேர்த்து கௌரவித்திருக்கிறது டைம்ஸ் இதழ். கடந்த 2020, ஜூன் மாதம் கறுப்பின இளைஞரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீஸாரால் கொல்லப்பட்டதை எதிர்த்து அமெரிக்காவில் பெரும் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டோருக்குத் தனது வீட்டில் இடமளித்துக் காப்பாற்றியதற்காக ராகுல் துபேவுக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறது டைம்ஸ். வாஷிங்டனில் போராட்டம் நடத்தியவர்களைச் சுற்றிவளைத்த போலீஸார், அவர்கள்மீது பெப்பர் ஸ்பிரே, கண்ணீர் புகை குண்டுகளை வீசித் தாக்கியிருக்கிறார்கள். அப்போது தனது வீட்டின் கதவுகளைத் திறந்து, போராட்டக்காரர்களைத் தங்க அனுமதித்துக் காப்பாற்றியிருக்கிறார் சுகாதாரத்துறைப் பணியிலிருக்கும் துபே. #சல்யூட்!

நியூஸ் எம்பஸி!

டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த டாட் - ஸ்டேஸி பேக்லி தம்பதியினர் கொலை வழக்கில் கடந்த 1999-ம் ஆண்டு தண்டனை அறிவிக்கப் பெற்ற பிராண்டன் பெர்னார்டு என்பவருக்கு டிசம்பர் 11-ம் தேதி விஷ ஊசி செலுத்தி, மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது அமெரிக்க அரசு. ‘பிராண்டன் கொலை செய்யவில்லை; கொலையைச் செய்தது அவரின் கூட்டாளி கிறிஸ்டோபர் வியால்வாதான்’ என்று டி.வி நட்சத்திரம் கிம் கார்டஷியன் உட்பட பலரும் கூறியதை அரசு ஏற்கவில்லை. ஜோ பைடன் பதவியேற்கும் முன்பாக மேலும் நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது. அவை நடக்கும்பட்சத்தில், கடந்த 100 ஆண்டுகளில் தனது பதவிக்காலத்தில் அதிக மரண தண்டனைகள் (13) நிறைவேற்றப்பட்ட அதிபராக ட்ரம்ப் அறியப்படுவார். #ஒழியட்டும் மரண தண்டனைகள்!

கொரோனாவின் பிறப்பிடமாக அறியப்படும் சீனாவின் வூஹான் நகர விலங்குகள் சந்தைக்குள் ஓராண்டாகியும் மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அந்தச் சந்தை குறித்து உலக அளவில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில், உலக சுகாதார அமைப்பு இதுவரை அங்கு ஆய்வு நடத்தவில்லை. இதனால், சந்தை மூடியே கிடக்கிறது. `வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருள்களில் ஏதேனும் ஒன்றால் அந்த வைரஸ் இங்கு வந்திருக்கலாம். நிச்சயமாக இங்கு உருவாகியிருக்க வாய்ப்பில்லை’ என்று வூஹான் மக்கள் சத்தியம் செய்கிறார்கள். சீன அரசும் அதையேதான் சாதிக்கிறது! #சாச்சுப்புட்டீங்களே மக்கா!

நியூஸ் எம்பஸி!

ராணுவ வீரர்களுக்கு மாத்திரைகள் மூலம் அதிகம் வலியைத் தாங்கவும், கேட்கும் திறன் அதிகரிக்கவும், நீண்ட நேரம் தூங்காமல் விழித்திருக்கவும் செய்யத் திட்டமிட்டிருக்கிறது ஃபிரான்ஸ். மைக்ரோ சிப் மூலம் மூளையின் திறன் அதிகரிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதன்மூலன், போரில் காயமடைந்தாலோ அல்லது எதிரிநாட்டு ராணுவத்திடம் சிக்கிக்கொண்டாலோ, அவர்களின் சித்ரவதைகளைத் தாங்கும் வலிமை ராணுவ வீரர்களுக்குக் கிடைக்கும் என்கிறார்கள். இது தவிர, ஃபிரான்ஸ் வீரர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களை கண்காணிக்கும் வகையிலான சிப்களை தயாரிக்கவும் ஆய்வுகள் நடக்கின்றன. சீனா ஏற்கெனவே இதுபோன்ற ஆய்வுகளில் ஈடுபட்டுவருவதாக கூறியிருக்கிறது அமெரிக்கா! #எந்திரன்கள்!

நியூஸ் எம்பஸி!

அமெரிக்கா, ஐரோப்பாவைத் தொடர்ந்து `திடீர்’ மர்ம உலோகத் தூண் ஒன்று போலந்திலும் முளைத்திருக்கிறது. போலந்து தலைநகர் வார்சாவிலுள்ள விஸ்டுலா ஆற்றங்கரையோரத்தில் தோன்றிய அந்த உலோகத்தூண் சுமார் பத்தடி உயரத்தில் முக்கோண வடிவில் இருக்கிறது. ஆற்றங்கரையோர மணலில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் உலோகத்தூணுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. அந்தப் பகுதியில் அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டவர்கள் கண்ணில் இது படவே, அவர்கள் அரசு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். விசாரணை தொடர்கிறது. #பூலோகத்தில் புதிய உலோகம்... ஒண்ணுமே புரியலை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு