Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

- பைலட் பிரேம்

நியூஸ் எம்பஸி

- பைலட் பிரேம்

Published:Updated:
நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

பண மோசடி புகார்... பற்றியெரியும் வாடிகன்!

நியூஸ் எம்பஸி

3,000 கோடி ரூபாய் பண மோசடி விவகாரத்தால் பற்றியெரிகிறது வாடிகன். தற்போதைய போப் பிரான்சிஸுக்கு நெருக்கமான ஜியோவன்னி ஏஞ்செலோ பெக்யூ மீதுதான் இந்தப் புகார் எழுந்துள்ளது. வாடிகனுக்கு தானமாக வழங்கப்படும் சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஏஞ்செலோ பெக்யூ ஏற்றிருந்தார். கடந்த 2014-ல் இங்கிலாந்தின் செல்சியா நகரில் கிடங்கு ஒன்று வாடிகன் சார்பில் வாங்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில்தான் மோசடி செய்து, லண்டனில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஏஞ்செலோ பெக்யூ வாங்கிவிட்டார் என்பது ஒரு குற்றச்சாட்டு. தவிர, வாடிகனின் நிதியை இத்தாலியின் சார்டினியா தீவிலுள்ள தன் சகோதரர்களின் வியாபார நிறுவனங்களுக்கு மடைமாற்றியதாகவும் அவர்மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, ஏஞ்செலோ பெக்யூவை பதவிநீக்கம் செய்தார் போப் பிரான்சிஸ். தற்போது இந்தப் பண மோசடியில் மேலும் ஒன்பது பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்திருப்பதால், இந்த விவகாரம் போப்புக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது!

நியூஸ் எம்பஸி

ஆப்கன்: அமெரிக்கா வெளியே... சீனா உள்ளே!

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள், தற்போது அங்கிருந்து வெளியேறிவருகின்றன. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் ராணுவத்துடனான தாலிபன்களின் மோதல் தீவிரமடைந்த நிலையில், நாட்டின் 85 சதவிகித பகுதியைப் பிடித்துவிட்டதாக தாலிபன்கள் கூறுகின்றனர். ஆனால், அதை மறுக்கும் அஷ்ரஃப் கானி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு, ‘சில பகுதிகளை மட்டுமே தாலிபன்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். அவற்றை மீட்கவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம்’ என்கிறது. இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக உள்ளே நுழைந்திருக்கிறது சீனா. சில நாள்களுக்கு முன்பு தாலிபன்களின் பிரதிநிதிகள், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை சீனா செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. மொத்தத்தில், ஆப்கனிலும் தொடங்கிவிட்டது சீனாவின் சர்வதேச அரசியல் ஆட்டம்!

நியூஸ் எம்பஸி

சூடாகும் துனிஷியா!

துனிஷியா நாட்டின் அதிபரான கைஸ் சையதுக்கு எதிராக அந்த நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. 2019-ம் ஆண்டு மக்களின் பெரும் எதிர்பார்ப்புடன் அதிபர் பதவியில் அமர்ந்த கைஸ் சையத், அடுத்த சில மாதங்களிலேயே நாட்டின் சர்வ அதிகாரங்களையும் தன் கைப்பிடிக்குள் கொண்டுவரத் தொடங்கினார். குறிப்பாக, துனிஷியாவின் பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை, நீதித்துறை அமைச்சர்களை கைஸ் சையத் நீக்கியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. துனிஷியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைதுசெய்வதற்கு அந்த நாட்டின் விதிகளில் இடமில்லை. அந்த விதிகளைத் திருத்தி, ‘புகார்கள் பெறப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைதுசெய்யலாம்’ என்ற உத்தரவையும் கைஸ் சையத் பிறப்பித்திருக்கிறார். இதை எதிர்த்து எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். “நான் சர்வாதிகாரியாக விரும்பவில்லை. ஜனநாயகத்தை மதிக்கிறேன். அரசு நிர்வாகத்தில் சில மாற்றங்கள் தேவைப் படுவதால், இது போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன” என்று கைஸ் சையத் விளக்கம் அளித்தாலும், மக்களும் எதிர்க்கட்சிகளும் அதை நம்பவில்லை. அதிபருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதால், துனிஷியாவில் அரசியல் களம் சூடாகியிருக்கிறது!

நியூஸ் எம்பஸி

கியூபா போராட்டம் அமெரிக்க சதியா?

கியூபாவின் பெரும்பாலான பகுதிகளில், `சர்வாதிகாரம் வேண்டாம்; விடுதலை வேண்டும்’ என்ற முழக்கங்களுடன் ஆளும் கம்யூனிச அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. உணவுத் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி, கொரோனாவைச் சரியாகக் கையாளாத போக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அரசுமீது வைக்கின்றனர் போராட்டக்காரர்கள். போராட்டம் குறித்துக் காட்டமாக பேசியிருக்கும் கியூபா அதிபர் மிகேல் தியாஸ் கானெல், ``இங்கு போராடுபவர்கள் அனைவரும் அமெரிக்காவின் கூலிப்படைகள்’’ என்றிருக்கிறார். அமெரிக்காவோ, ``கியூப மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். கியூப அரசாங்கம், மக்கள் பிரச்னைகளைச் செவி கொடுத்துக் கேட்க வேண்டும்’’ என்று போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இது பற்றிக் கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட்கள், ``ஐ.நா-வில், கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டுமெனப் பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும், தடையை நீக்க அமெரிக்கா மறுக்கிறது. ஆனாலும், 60 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தாக்குப்பிடித்து நிற்கிறது கியூபா. காஸ்ட்ரோ கட்டியெழுப்பிய கம்யூனிச சாம்ராஜ்ஜியத்தை யாராலும் வீழ்த்த முடியாது’’ என்கிறார்கள்.

நியூஸ் எம்பஸி

ஆசிரியர் டு அதிபர்... ஏற்றம் காணுமா பெரு?

பெரு நாட்டின் புதிய அதிபராக பெட்ரோ காஸ்டில்லோ பொறுப்பேற்றுள்ளார். பள்ளி ஆசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கி, அரசியல் அதிகாரத்தின் உச்சத்தைத் தொட்டிருக்கும் பெட்ரோ காஸ்டில்லோவின் பயணம் வியக்கவைக்கிறது. 2017-ம் ஆண்டு நாடு தழுவிய ஆசிரியர்கள் போராட்டத்தில், தொழிலாளிகள் யூனியன் ஒன்றின் தலைவராக முக்கியப் பங்காற்றிய பெட்ரோ காஸ்டில்லோ, 2021-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற்றிருக்கிறார். உலகத்திலேயே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடுகளில் ஒன்று பெரு. “அதிபர் பதவிக்குரிய சம்பளம் எனக்கு வேண்டாம். ஆசிரியராக என்ன சம்பளம் வாங்கினேனோ, அது மட்டுமே எனக்கு போதும்” என்று பெட்ரோ காஸ்டில்லோ அறிவித்திருப்பது அந்நாட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதிபர் மாற்றம், நாட்டின் ஏற்றத்துக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism