Published:Updated:

நியூஸ் எம்பஸி

உலகம் முழுவதும் விண்வெளி தொடர்பான பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன

பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

பிரான்ஸ் நாட்டிலுள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில், கடந்த 70 ஆண்டுகளில் 3,30,000 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. இது தொடர்பாக ஆய்வுசெய்த தன்னாட்சி அதிகாரம்கொண்ட விசாரணைக்குழு, 2,500 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 1950-லிருந்து நடந்துவரும் இந்தக் கொடூரச் சம்பவங்களில், சுமார் 3,000 பேர் ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறது அந்த அறிக்கை. குற்றச்செயலில் ஈடுபட்ட மூன்றில் இரண்டு பங்கினர் மதகுருமார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் தேவலாயப் பணியாளர்கள் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் சிறுவர்கள் என்றும் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில், குற்றம்புரிந்தவர்களில் உயிரோடிருப்பவர்களைக் கண்டறிந்து கைதுசெய்யவிருக்கிறது பிரான்ஸ் அரசு!

நியூஸ் எம்பஸி

உலகம் முழுவதும் விண்வெளி தொடர்பான பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், முதன்முறையாக விண்வெளியில் சென்று படப்பிடிப்பை நடத்தவிருக்கிறது ரஷ்யா. கடந்த ஆண்டே நாசா உதவியுடன் டாம் க்ரூஸ் நடிக்கும் படத்தை விண்வெளியில் படமாக்கத் திட்டமிடப்பட்டிருந்தது அமெரிக்கா. ஆனால், அமெரிக்காவை முந்திக்கொண்டு விண்வெளியில் படமெடுப்பதற்காக, அக்டோபர் 5-ம் தேதி பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது ரஷ்யப் படக்குழு. இயக்குநர் கிளிம் ஷிபென்கோ, நடிகை யூலியா பெரசில்டு ஆகியோருடன் இணைந்து, பிரபல விண்வெளி வீரரான ஆன்டன் ஷ்காபல்ராவும் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். `தி சேலஞ்ச்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை, ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையமான ரோஸ்கோஸ்மோஸும், அரசுத் தொலைக்காட்சியான `சேனல் ஒன்’னும் இணைந்து தயாரிக்கின்றன. திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருக்கும் விண்வெளி வீரர் ஒருவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பெண் மருத்துவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் `தி சேலஞ்ச்’ படத்தின் கதை அம்சமாம்!

நியூஸ் எம்பஸி

உலகின் விலையுயர்ந்த கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான `டெஸ்லா’வின் அலுவலகம், அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் அமைந்திருக்கிறது. அங்கு 2015, 2016 காலகட்டத்தில் லிஃப்ட் ஆபரேட்டராகப் பணியாற்றிய கறுப்பினத்தைச் சேர்ந்த ஓவன் டியாஸ் என்பவரை பணியாளர்கள் பலரும் கிண்டல் செய்திருக்கின்றனர். இது தொடர்பாக, ‘அலுவலகத்தில் இனப்பாகுபாடு இருக்கிறது. என்னை இனரீதியான வார்த்தைகளைச் சொல்லி துன்புறுத்துகின்றனர்’ என்று புகார் அளித்திருக்கிறார் ஓவன். ஆனால், ஒப்பந்தப் பணியாளரான ஓவன் அளித்த புகாரில் டெஸ்லா நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஓவன். நான்கு ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் தற்போது, ``டெஸ்லா நிறுவனம், ஓவனுக்கு 137 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1,000 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க வேண்டும்’’ என்று தீர்ப்பளித்திருக்கிறது சான் ஃபிரான்சிஸ்கோ நீதிமன்றம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு