அலசல்
Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் எம்பஸி

கடந்த ஆண்டு மே மாதத்தில், இராக் பிரதமராக அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்பட்டார் முஸ்தபா அல்-கதிமி.

நியூஸ் எம்பஸி

இங்கிலாந்தின் கார்ன்வால் மாகாணத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவனான ஹியூ பில்லிங் சாலைகள், கடற்கரைகளில் மக்கள் வீசிச் செல்லும் குப்பைகளைச் சேகரித்து குப்பைத் தொட்டியில் போடுவதில் அதீத ஆர்வம் காட்டிவருகிறான். சுற்றுச்சூழல்மீது அதிக அக்கறைகொண்ட பில்லிங்கின் 63 வயது தாத்தா ஜான், எங்கு குப்பையைப் பார்த்தாலும் அதைச் சேகரித்து, குப்பைத் தொட்டிகளில் போடுவதை வழக்கமாகக்கொண்டவர். அவரைப் பார்த்துத்தான் பில்லிங்கும் குப்பைகளைச் சேகரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறான். இந்தப் பணியை ஆங்கிலத்தில் `Litter Picking’ என்கிறார்கள். ஆனால், அதை மழலை மாறாமல் `Glitter Picking’ எனச் சொல்லும் பில்லிங், இங்கிலாந்து மக்களின் கவனத்தைப் பெற்றுவருகிறான். “நாங்கள் இருவரும் எங்கு சென்றாலும் போகும் வழியிலுள்ள குப்பைகளைச் சேகரித்துக்கொண்டே செல்வோம். அவனுக்குச் சூழலியல் பற்றிய விஷயங்களைக் கற்றுத்தர விரும்புகிறேன். அவனுக்கும் அதில் ஆர்வம் இருக்கிறது’’ என்கிறார் பில்லிங்கின் தாத்தா ஜான்.

நியூஸ் எம்பஸி

கடந்த ஆண்டு மே மாதத்தில், இராக் பிரதமராக அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்பட்டார் முஸ்தபா அல்-கதிமி. கடந்த அக்டோபர் 10-ம் தேதி இராக் நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில், அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பலமாக இருந்த இரான் ஆதரவு அரசியல் அமைப்புகள் பெரும் சரிவைச் சந்தித்தன. இதனால் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, தலைநகர் பாக்தாத்தின் உயர் பாதுகாப்புமிக்க பகுதிகளில் போராட்டத்தில் இறங்கினர். போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இருந்தும், தொடர்ந்து இரான் ஆதரவு அமைப்புகள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இந்த நிலையில் நவம்பர் 7-ம் தேதி, இராக் பிரதமர் அல்-கதிமியின் பாக்தாத் பிரதமர் இல்லத்தில் ஆளில்லாத ட்ரோன்கள் மூலம் வெடிபொருள்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில், ``அல்-கதிமி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிவிட்டார்’’ என இராக் பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது. உயர் பாதுகாப்புமிக்க பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்துக்கு, அமெரிக்கா கடும் கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறது.

நியூஸ் எம்பஸி

கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார வீழ்ச்சி, கடன் சுமை ஆகியவற்றால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது பாகிஸ்தான். சமீபகாலமாக, அங்குள்ள டொயோட்டா கார் உற்பத்தி ஆலை, பவர் சிமென்ட் நிறுவனம், நெஸ்ட்லே நிறுவனம் உள்ளிட்ட ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பலரும் வேலையிழந்து வருகின்றனர். உலக நாடுகளின் நிதியுதவி சரிவரக் கிடைக்காததால், பாகிஸ்தான் அரசு பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திண்டாடிவருகிறது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.03 ரூபாய் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.145.82 க்கு (இந்திய மதிப்பில்) விற்பனை செய்யப்பட்டுவருகிறது. தொடர்ந்து, பாகிஸ்தானின் தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்சார விலையை யூனிட்டுக்கு 1.68 ரூபாய் உயர்த்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இம்ரான் கான் அரசின் விலையேற்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. தொடர் விலையேற்றத்தால் பாகிஸ்தான் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

கடந்த வாரத்தில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள ராணுவ மருத்துவமனையில் `கோராசன் பயங்கரவாதிகள்’ என அழைக்கப்படும் ஐ.எஸ்.கே தீவிரவாத அமைப்பினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில், தாலிபனின் மூத்த ராணுவ கமாண்டர் ஹம்துல்லா மோக்லிஸும் ஒருவர். `ஐ.எஸ்.கே பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு மோக்லிஸ் வீர மரணமடைந்துவிட்டதாக’ தாலிபன் அரசு தெரிவித்திருக்கிறது. ஒருகாலத்தில் கோராசன் பயங்கரவாதிகளுடன் நட்புகொண்டிருந்தது தாலிபன் அமைப்பு. பின்னர், ‘தாலிபன்கள் மேற்கத்திய நாடுகளுடன் வசதி வாய்ப்பு படைத்த விடுதிகளில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பேச்சுவார்த்தை நடத்துவதும், வசதி வாய்ப்புகளை நாடிச் செல்வதும் இஸ்லாம் மதத்துக்கு எதிரானது’ என்று சொல்லி தாலிபன்களுடன், கோராசன் பயங்கரவாதிகள் சண்டையிடத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூஸ் எம்பஸி

சீனாவின் முன்னாள் துணை அதிபரும், சீன கம்யூனிஸ்ட்டின் முக்கியத் தலைவருமான ஜாங் ஜி ஓர்லி மீது `மி டூ’ குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் உலகின் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளுள் ஒருவராக இருந்த பெங் ஷுவாய். ``2012 முதல் 2018 வரை என்னைப் பலவந்தப்படுத்தி, பாலியல் தொல்லைகளைக் கொடுத்து வந்தார். என்னை அடிபணியவைத்து சித்ரவதை செய்துவந்தார் ஓர்லி. அவராக என்னிடம் பேசுவதை நிறுத்தும்வரை இந்தத் தொல்லைகளை நான் அனுபவித்தேன். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரமில்லை. ஆனால், ஓர்லியின் மனைவிக்கு இது தெரியும்’’ என்கிற பகிரங்கக் குற்றச்சாட்டைத் தனது `வெய்போ’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் ஷூவாய். சிறிது நேரத்தில் இந்தப் பதிவு நீக்கப்பட்டிருந்தாலும், இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் சுற்றிவருகின்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மிக உயர்ந்த பதவியான ஏழு பேர்கொண்ட `பொலிட் பீரோ’ உறுப்பினர் குழுவில் இடம்பெற்றிருந்தவர் ஜாங் ஜி ஓர்லி. அவர்மீதான இந்தக் குற்றச்சாட்டு சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.