அலசல்
Published:Updated:

நியூஸ் எம்பஸி

ஃபேஸ்புக் பார்த்தால் அறை விழும்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபேஸ்புக் பார்த்தால் அறை விழும்

சில நாடுகளில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மூன்றாவது டோஸான `பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது

கின்னஸ் பேபி!

அமெரிக்காவைச் சேர்ந்த செல்லி பட்லர் என்ற பெண், கடந்த ஆண்டு தொடக்கத்தில் கர்ப்பம் தரித்திருந்தார். 2020, நவம்பர் 11-ம் தேதியைப் பிரசவநாளாக மருத்துவர்கள் குறித்திருந்த நிலையில், ஜூலை 4, 2020 அன்று அந்தப் பெண்ணுக்கு வயிற்றுவலி ஏற்படவே, அவரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அப்போது அறுவை சிகிச்சை செய்து சிசுவை வெளியில் எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாகப் பிரசவகாலம் 40 வாரங்கள். ஆனால், இந்தக் குழந்தை 21 வாரங்களிலேயே, அதாவது பிரசவிக்கும் நாளிலிருந்து 132 நாள்களுக்கு முன்பாக ஜூலை 5-ம் தேதியே பிறந்துவிட்டது. வெறும் 420 கிராம்கள் மட்டுமே இருந்த அந்தக் குழந்தை, உள்ளங்கையில்வைத்துத் தூக்கும் அளவுக்குச் சிறிதாக இருந்திருக்கிறது. `இந்தக் குழந்தை இன்னும் சில நாள்களில் இறந்துவிடும்’ எனக் கைவிரித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். இருந்தும், மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில்வைக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையின் உடல்நலம் மெல்ல மெல்லத் தேறியது. ஏப்ரல் 6, 2021 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இந்தக் குழந்தைக்கு, `கர்ட்டிஸ்’ (Curtis) எனப் பெயர் சூட்டியிருக்கின்றனர். கடந்த வாரத்தில், `மிகவும் குறைந்த மாதப் பிரசவத்தில் பிறந்து, உயிர்பிழைத்த முதல் குழந்தை’ என்ற கின்னஸ் உலக சாதனைப் பட்டம் அந்தக் குழந்தைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

நியூஸ் எம்பஸி
Rachel Marble

பூஸ்டர் டோஸ் என்பது ஓர் ஊழல்!

உலகம் முழுவதும் கொரோனாவை எதிர்கொள்ளத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. சில நாடுகளில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மூன்றாவது டோஸான `பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், ``பூஸ்டர் டோஸ் என்பது ஓர் ஊழல்’’ என்று தனது கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ். ``ஏழை நாடுகளில், முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசிகூட செலுத்தாமல் இருக்கின்றனர். ஆனால், வளர்ந்த நாடுகளோ இரண்டு தடுப்பூசி பெற்று ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திவருகின்றன. ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்ட பின்னர், குறைந்தது ஓராண்டு கழித்து பூஸ்டர் டோஸ்கள் குறித்து வளர்ந்த நாடுகள் முடிவெடுக்க வேண்டும். அதுவரை பூஸ்டர் டோஸ்களை நிறுத்திவையுங்கள்’’ என்றிருக்கிறார் டெட்ரோஸ்.

நியூஸ் எம்பஸி

ஃபேஸ்புக் பார்த்தால் அறை விழும்!

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர் மணீஷ் சேத்தி. பேவ்லாக் ஃபிட்னெஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனர். இவர், ஒரு பெண்ணிடம் அறை வாங்குவதைப்போல ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். தன்னை அறைவதற்காகவே அந்தப் பெண்ணை வேலைக்கு வைத்திருக்கிறாராம். எப்போதெல்லாம் அவர் வேலை செய்வதை விட்டுவிட்டு, ஃபேஸ்புக் பயன்படுத்துகிறாரோ அப்போதெல்லாம் அந்தப் பெண் அவரை அறைய வேண்டும். இதற்காக, அந்தப் பெண்ணுக்கு ஒரு மணி நேரத்துக்கு 8 அமெரிக்க டாலரைச் சம்பளமாக வழங்குகிறார். இப்படிச் செய்துவருவதால் 35-40 சதவிகிதமாக இருந்த அவரது நிறுவனத்தின் வளர்ச்சி, தற்போது 98 சதவிகிதமாக மாறியிருப்பதாகச் சொல்கிறார் மணீஷ். இவரது ட்விட்டர் பதிவைக் கண்ட டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், ஃபயர் எமோஜிகளைப் பறக்கவிட்டிருக்கிறார். 2012-ம் ஆண்டிலிருந்து, ஃபேஸ்புக் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக இந்த முறையைப் பின்பற்றிவரும் மணீஷ், ``எனது ட்வீட், எலான் மஸ்க்கின் கவனத்தைப் பெற்றிருப்பதுதான் நான் தொட்ட மிகப்பெரிய உயரம்’’ என்றிருக்கிறார்.

நியூஸ் எம்பஸி

மனிதத்தன்மையற்ற பெண் இன்ஸ்பெக்டர்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள குவெட்டா நகர் காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்துவருகிறார் ஷபானா இர்ஷத் என்ற பெண். ஜின்னா டவுன் பகுதியில் குழந்தை ஒன்று கொலைசெய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்காகப் பெண் ஒருவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தார் ஷபானா. ஒரு கட்டத்தில், ஷபானாவும் அங்கிருந்த காவலர்களும் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட பெண்ணின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி, பாடல் ஒன்றை ஒலிக்கச் செய்து அந்தப் பெண்ணை நடனமாட வைத்தனர். அதோடு பெண்ணின் நடனத்தை செல்போனில் வீடியோவாகவும் எடுத்திருக்கிறார் ஷபானா. இந்த விவகாரம் காவல்துறை துணை ஐ.ஜி முகமது அசாரின் காதுகளுக்கு எட்ட, சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை நியமித்திருக்கிறார் துணை ஐ.ஜி. அருவருக்கத்தக்க இந்தச் செயலில் ஈடுபட்ட ஷபானாவை முதலில் பணியிடை நீக்கம் செய்த காவல்துறை, பிற்பாடு எதிர்ப்புகள் வலுக்கவே கட்டாய ஓய்வும் பெறச் செய்திருக்கிறது. மேலும், அவரோடு சம்பவ இடத்திலிருந்த ஐந்து பெண் காவலர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டிருக் கின்றனர். பெண் காவலர் ஒருவரே பெண்ணை நிர்வாணமாக்கி, நடனமாடச் செய்த சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறைக்குள் கலவரம்!

கொள்ளை, திருட்டு, போதைப்பொருள் கடத்தல் என ஈக்வடார் நாட்டில் அதிக குற்றச் சம்பவங்கள் நடக்கும் நகரமாக இருந்துவருகிறது குவாயாகில் (Guayaquil). இந்த நகரிலுள்ள சிறைச்சாலையில் நவம்பர் 13-ம் தேதி அன்று, போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்யும் இரு வேறு கைதிகள் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டுகள், கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு இரு குழுவினரும் சரமாரியாகத் தாக்கிக்கொண்டதில் சுமார் 70 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். சிறையிலுள்ள வர்களின் குடும்பத்தினர் பலரும் சிறைச்சாலைக்கு வெளியே கூடி நின்று, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு எதுவும் நடந்திருக்கக் கூடாது என வேண்டிக் கொண்டிருந்தனர். குவாயாகில் சிறையில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது வழக்கமாக மாறிப்போயிருக் கிறது. இந்த ஆண்டில் மட்டும் சிறைச் சாலையில் நடந்த கலவரத்தில், 300-க்கும் அதிகமானோர் கொல்லப் பட்டிருக்கின்றனர். இந்தச் சிறையில், 5,300 கைதிகளுக்கு மட்டுமே இடமிருக்கிறது. ஆனால், அங்கு சுமார் 8,500 கைதிகள் அடைக்கப்பட்டிருக் கின்றனர். ``விசாரணை நடத்தி இந்தச் சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றிருக்கிறார் ஈக்வடார் அதிபர் கியர்மோ லாஸோ.