வெளிநாட்டவர்களைத் திருப்பி அனுப்பும் குவைத்!
பா.ஜ.க நிர்வாகி நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்துகளை வெளியிட்டதால், இந்தியாமீது இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் கடும் கோபத்திலிருக்கின்றன. வளைகுடா நாடுகளுள் ஒன்றான குவைத்தில், நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், குவைத் நாட்டு குடிமக்கள் இல்லை என்பதைக் கண்டறிந்திருக்கிறது அந்நாட்டு அரசு. குவைத் நாட்டுச் சட்டப்படி, குடிமக்கள் அல்லாதவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது. அதை மீறிப் போராட்டம் நடத்தினால், அவர்களது விசா ரத்துசெய்யப்பட்டு, சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை, அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பிவருகிறது குவைத் அரசு. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சில இந்தியர்களும் திருப்பி அனுப்பப்பட்டுவருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன!
வாட்ஸ்அப் வதந்தியால் உயிரிழந்த அரசியல் ஆலோசகர்!
மெக்ஸிகோ நாட்டின் நாடாளுமன்ற சட்டக்குழுவின் ஆலோசகராகச் செயல்பட்டுவந்தவர் டேனியல் பிகாசோ. 31 வயதான இவர், மெக்ஸிகோவின் பியூப்லா பகுதியைச் சேர்ந்தவர். இவரது புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்து, `இவன் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்பவன்’ என்று வதந்தி பரப்பப்பட்டது. இந்த வாட்ஸ்அப் தகவல் உண்மையா என்று சிந்திக்காமல், பொதுமக்கள் பலர் டேனியல் வசிக்கும் பகுதிக்குக் கும்பலாகச் சென்று அவரைச் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், டேனியலை மீட்டு தங்களது வாகனத்தில் ஏற்றினர். காவல்துறையினரையும் மீறி, அவரை வாகனத்திலிருந்து இறக்கிய கும்பல் மீண்டும் டேனியலைத் தாக்கி, உயிருடன் பெட்ரோல் ஊற்றி அவரை எரித்துவிட்டது. துடிதுடித்து இறந்துபோனார் டேனியல். இதையடுத்து சம்பந்தப்பட்ட அனைவர்மீதும் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறது உள்ளாட்சி நிர்வாகம். வாட்ஸ் அப் வதந்திக்கு மேலை நாட்டு மக்களும் இரையாகிறார்கள் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறது இந்தச் சம்பவம்!
சூட்கேஸில் சேகரிக்கப்படும் புதினின் கழிவுகள்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்துப் பல்வேறு செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், புதின் குறித்த திடுக்கிடும் தகவல் ஒன்றை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தனியார் ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. ``புதின், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது தனது சிறுநீர், இயற்கை உபாதைக் கழிவுகள் ஆகியவற்றைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்வதற்காக தன்னுடன் ஆறு, ஏழு பாதுகாவலர்களை அழைத்துச் செல்கிறார். அந்தப் பாதுகாவலர்கள், புதினின் கழிவுகளைப் பிரத்யேக சூட்கேஸில் எடுத்துக்கொள்வார்கள். கழிவுகளைப் பரிசோதித்து, தனது உடல்நலப் பிரச்னைகள் குறித்து எதிரிகள் யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் இப்படிச் செய்கிறார்கள்’’ என்கிறது அந்தச் செய்தி!