Published:Updated:

“ஓவியம் நிறவெறிக்கு எதிரான என் கேடயம்!”

 ரோகிணி மணி
பிரீமியம் ஸ்டோரி
ரோகிணி மணி

பொதுச் சமூகத்தைப் பத்தி இனி எனக்குக் கவலையில்லை. பிரச்னை வீட்டுக்குள்ள வந்திடக்கூடாது.

“ஓவியம் நிறவெறிக்கு எதிரான என் கேடயம்!”

பொதுச் சமூகத்தைப் பத்தி இனி எனக்குக் கவலையில்லை. பிரச்னை வீட்டுக்குள்ள வந்திடக்கூடாது.

Published:Updated:
 ரோகிணி மணி
பிரீமியம் ஸ்டோரி
ரோகிணி மணி
“அஞ்சாறு வயசுல ஆரம்பிச்சது... இன்னைக்கு வரைக்கும் துரத்திக்கிட்டே இருக்கு. கறுப்புங்கிறது இங்கே தீண்டத்தகாத நிறம்... புறக்கணிக்கிறது மட்டுமல்ல... ஒவ்வொரு அசைவையும் கேள்விக்குள்ளாக்குறது... என் நடை, நான் உடுத்துற உடை, என் காதல், என் திருமணம் எல்லாத்தையும் யார் யாரோ தீர்மானிப்பாங்க. சாதிய அரசியல், மத அரசியல் எல்லாம் இங்கே தீவிரமா விவாதிக்கப்படுது... நிற அரசியலுக்குப் பின்னாடி இருக்கிற வன்மம், வணிகம், தீண்டாமை பத்திப் பேசுறதுகூட இல்லை” - ரொம்பவே ஆதங்கமாகத் தொடங்குகிறார் ரோகிணி மணி.
“ஓவியம் நிறவெறிக்கு எதிரான என் கேடயம்!”

தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த போர்ட்ரெயிட் ஓவியர். சிற்பக் கலைஞர். ‘செல்ஃப் போர்ட்ரெயிட்’ எனப்படும் சுய உருவ ஓவியங்களை நிறபேதத்துக்கு எதிரான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார் ரோகிணி. நடந்து முடிந்த சென்னைப் புத்தகக் காட்சியில் ‘தடாகம்’ ஸ்டாலில் ரோகிணி வைத்திருந்த நான்கு கர கறுப்பு நாயகனின் சிற்பம் வாசகர்களை விழியுயர்த்த வைத்தது.

ஒரு மாலை நேரம், சிறிதும் பெரிதுமான களிமண் சிற்பங்களால் நிறைந்திருந்த அழகிய ஸ்டூடியோவில் ரோகிணியோடு உரையாடினேன்.

 ரோகிணி மணி
ரோகிணி மணி

“ஒரு ரோகிணியில்லை தோழர்... இங்கே பலநூறு ரோகிணிகளுக்கு இந்தப் பிரச்னையிருக்கு. இந்த உணர்வை உங்களால எந்த அளவுக்குப் புரிஞ்சுக்க முடியும்னு தெரியலே. இந்த உலகத்துல எல்லாரும் வேறு யாரையோ சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கு. நான் கறுப்புங்கிறதால அந்தச் சங்கிலி அறுபடுது. தினமும் ஏதோவொரு புறக்கணிப்பையும் அவமதிப்பையும் அனுபவிக்கிறோம். அந்தச் சூழலை அப்படியே உள்வாங்கிக்கிட்டு நகர்ந்து போறது ஒண்ணுதான் எங்களுக்கிருக்கிற தீர்வு...” ரோகிணியின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அவர் எதிர்கொண்ட வலி.

“ஓவியம் நிறவெறிக்கு எதிரான என் கேடயம்!”

காஞ்சிபுரத்தில் பிறந்தவர் ரோகிணி. அப்பா ராணுவத்தில் அதிகாரி. “ஹைதராபாத்ல பத்து ஆண்டுகள் இருந்தோம். நானும் அக்காவும் அப்பாவோட நிறம். 10 வயசுல ஆவடிக்கு வந்தோம். டீன் ஏஜ்ல மத்தவங்க நம்மை கவனிக்கணுங்கிற உந்துதல் வரும் பாருங்க... அதுக்காகவே நம்மை முன்னிறுத்திக்கத் தோணும். ஆனா, எல்லா மேடைகளிலும் பின்னாலயே நிறுத்தப்பட்டேன். ‘நல்லாத்தான் ஆடுறோம்... ஏன் பின்னால நிறுத்துறாங்க’ன்னு யோசிச்சப்பதான் என் கறுப்பு நிறம்தான் காரணம்னு புரிஞ்சுது. இன்னைக்கு வரைக்கும் அது நிகழுது.

“ஓவியம் நிறவெறிக்கு எதிரான என் கேடயம்!”

கல்லூரியில சேர்ந்ததுக்குப் பிறகு பஸ், ட்ரெயின் பயணங்கள் அவசியமாச்சு. அதுவரைக்கும் ஒரு ராணுவ அதிகாரியோட பொண்ணு, டான்ஸர், ஓவியர்ன்னு பல அடையாளங்கள் எனக்கு. இந்தப் பயணங்கள்ல எல்லாமே உடைஞ்சிடுச்சு. ஒரு பொம்மை மாதிரி என்னை நான் உணர்ந்தேன். என் நிறத்தை, என் உடலமைப்பை, என் உயரத்தை, என் பற்களை அக்குவேறு ஆணிவேறா போஸ்ட்மார்ட்டம் பண்றாங்க.

“ஓவியம் நிறவெறிக்கு எதிரான என் கேடயம்!”

என் நடையை நான் மாத்திக்க முடியும். என் தலைமுடியை ஸ்ட்ரெயிட்டன் பண்ணிக்க முடியும்... மத்தவங்க எதிர்பார்க்கிற உடையைக்கூடப் போட்டுக்க முடியும். ஆனா என் நிறம்? அதை எப்படி மாத்துவேன்...? அதுதானே என் மதிப்பைத் தீர்மானிக்குது.

நாங்க இதை வெளியில பேசவே முடியாது. உள்ளுக்குள்ளேதான் பொருமணும். கொஞ்சம் மனத்தளர்வு உள்ளவங்க ரொம்ப உடைஞ்சுபோவாங்க. தற்கொலைகூட நடக்கலாம். இது மிகப்பெரிய மனச்சிக்கல். பொதுவெளியில், கல்வி நிலையங்களில்னு எல்லா இடத்திலயும் இந்தப் பிரச்னை இருக்கு. நான் என்ன படிச்சேன், என்ன தெரிஞ்சுக்கிட்டேங்கிறதையெல்லாம் தாண்டி இன்னும் காயமா இருக்கிறது, நிறத்தை வச்சு நிகழ்ந்த புறக்கணிப்புகள்தான். இப்போவரைக்கும் அதுமாதிரியான கேள்விகளுக்குப் பதில் சொல்றதுதான் என் பயமா இருக்கு...” ரோகிணியின் புன்னகைக் குள்ளே பெரியதொரு சோகம் தெரிகிறது.

“ஓவியம் நிறவெறிக்கு எதிரான என் கேடயம்!”

“இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எப்படிப் பதிலைத் தேடுறதுன்னு நிலை வந்தப்போ நான் கண்ணாடி கிட்ட சரணடைஞ்சேன். என்னை நானே ரசிக்க ஆரம்பிச்சேன். என்னை நானே ஓவியங்களா வரைய ஆரம்பிச்சேன். டிரை பேஸ்ட்டல்ல ஒரு மாதிரி, ஆயில் பேஸ்ட்டல்ல ஒரு மாதிரி, அக்ராலிக்ல ஒருமாதிரின்னு ஒவ்வொரு மீடியம்லயும் என் உடல் வேற வேற அழகைக் காட்டுது.

“ஓவியம் நிறவெறிக்கு எதிரான என் கேடயம்!”

தினமும் கல்லூரிக்குப் போறதுக்கு முன்னாடி ஸ்டூடியோவுக்குப் போய் என்னை ஓவியமா வரைவேன். கல்லூரிக்குப் போன உடனே அங்கேயும் என் ஓவியத்தை வரைவேன். அவ்வளவுதான். அதுக்குப்பிறகு எந்த அவச்சொல்லும் என் காதுல ஏறாது. எனக்கு அது போதுமானதா இருந்துச்சு. எனக்குக் கேடயமா, அரணா இருந்தது ஓவியம். நான் இதுவரைக்கும் என்னை இருநூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரைஞ்சிருக்கேன். அதுல இதுவரைக்கும் கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கு.

பொதுச் சமூகத்தைப் பத்தி இனி எனக்குக் கவலையில்லை. பிரச்னை வீட்டுக்குள்ள வந்திடக்கூடாது. நாளைக்கு ‘என் அம்மா’ன்னு என்னை அவன் சொல்றதுக்குக்கூட சங்கடப் படலாம்.

இந்தப் புறக்கணிப்பைக் கடந்து மேல வர்றது ரொம்பவே சிரமம் தோழர். ரொம்பப் பேர் முடங்கிப் போயிடுறாங்க. எனக்கு ஓவியம்ங்கிற வடிகால் இருந்துச்சு. ஆனாலும் முழுசா கடந்து வந்திருக்கேன்னு சொல்ல முடியாது. ஆனா என்னோட தன்னம்பிக்கை அதிகமாயிருக்கு. என் ஓவியங்கள் திறந்த டைரி மாதிரி. யார் வேணும்னாலும் எடுத்துப் படிக்கலாம். நான் வரைஞ்சு குவிச்சுக் கண்காட்சி வைக்க விரும்பலே. என் ஓவியங்கள்ல அரசியல் இருக்கு. வேட்கை இருக்கு.அதை மத்தவங்க உணரணும்னுகூட இல்லை. எனக்கு இது விடுதலை உணர்வைத் தருது. அது போதும்!

ஒரு பெரும் கனவு இருக்கு தோழர். தி.நகரைக் கடக்கும்போதெல்லாம் அந்தக் கனவு மனசுல மிதந்துக்கிட்டே இருக்கு. ‘நிச்சயம் நானும் ஒருநாள் இங்கிருக்கிற ஏதாவது ஒரு ஹோர்டிங்ல மாடலா எல்லோருக்கும் உயரமான இடத்துல இருப்பேன் பாரு’ன்னு எனக்கு நானே சொல்லிக்கிறேன்...”

மனம் நிறைகிறார் ரோகிணி மணி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism