Published:Updated:

“அவள் இல்லாமல் நானில்லை!” - ஆர்யா - சாயிஷா டூயட் பேட்டி

ஆர்யா - சாயிஷா டூயட் பேட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்யா - சாயிஷா டூயட் பேட்டி

எனக்கு இதைவிட ஒரு வாழ்க்கை அமைஞ்சிடும்னு தோணலை. எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.

“அவள் இல்லாமல் நானில்லை!” - ஆர்யா - சாயிஷா டூயட் பேட்டி

எனக்கு இதைவிட ஒரு வாழ்க்கை அமைஞ்சிடும்னு தோணலை. எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.

Published:Updated:
ஆர்யா - சாயிஷா டூயட் பேட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்யா - சாயிஷா டூயட் பேட்டி

அடிச்சது லக்கி பிரைஸ்!

நம்ம ஆர்யாவுக்கு அருமையாக அமைந்திருக்கிறார் சாயிஷா. இரண்டு இதயங்களும் கைகோத்தபடி வர, ஆயிரம் வாட்ஸில் புன்னகைக்கிறார் ஆர்யா. நூலகத்தில் கேட்கும் சிறு சப்தம்போல சிரிக்கிறார் சாயிஷா. அண்ணா நகர் வீட்டில் ‘இதோ மை ஸ்வீட் ஹார்ட்’ என ஆர்யா அறிமுகப்படுத்தியதும் சாயிஷா சிந்திய புன்னகையில் வீடே வெளிச்சம் பெற்றதை என் இரண்டு கண்களால் பார்த்தேன். தன் காதல் மனைவியின் கைப்பற்றியபடி நிதானமாகப் பேசுகிறார் ஆர்யா.

“அவள் இல்லாமல் நானில்லை!” - ஆர்யா - சாயிஷா டூயட் பேட்டி

“ரொம்ப விளையாட்டுப் போக்கா இருந்தேன். சினிமாவைக்கூட பெரிதாக நினைச்சேன்னு சொல்லமுடியாது. அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமா சினிமாவோட முக்கியத்துவம் தெரிஞ்சது. லட்சம் பேர் சினிமாவுக்கு வரணும்னு திரியும்போது, இங்கே கொஞ்சம் பேர் உட்காரத்தான் ஆடிட்டோரியம் இருக்கு. விளையாட்டாக இருந்தவங்க, சாய்ஞ்சு சரிஞ்சு உட்கார்ந்தவங்க எல்லாம் இதில் ரொம்பக் கஷ்டப்பட்டிருக்காங்க. அப்படிப்பட்ட இடத்தின் அருமை புரிஞ்சதால இப்போ ரொம்பவும் எச்சரிக்கையாக இருக்கேன். மிகுந்த கவனத்துடன் படங்களை செலக்ட் பண்றேன்.

“அவள் இல்லாமல் நானில்லை!” - ஆர்யா - சாயிஷா டூயட் பேட்டி

அப்படித்தான் இப்போ ‘டெடி.’ நாம ஆசையா வச்சிருக்கிற ‘டெடி’க்கு உயிர் வந்தால் எப்படி இருக்கும்னு யோசித்துப் பார்த்தால் அதான் படம். அப்படி ஒரு கதை சொன்னார் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். ஏற்கெனவே ‘டிக் டிக் டிக்’ படத்தை ஜெயம் ரவியோடு அருமையாகச் செய்திருந்தார். ஒரு படத்தை அக்கறையா எடுத்துக்கிட்டு செய்கிற அவர் மனோபாவம் ரொம்பப் பிடிச்சது. ஒரு டெடி கூட இருக்கிற மாதிரி மெடிக்கல் த்ரில்லர்... டெடியும் நம்மோடு இறங்கி உதவுறது மாதிரி அம்சங்கள்னு ரொம்பவும் பிடிச்சது. யார் ஹீரோயின்னு கேட்டால் ‘சார்... சாயிஷா மேடமே இருக்கட்டும்’ன்னு டைரக்டர் சொன்னார். அவங்க சாய்ஸ் சாயிஷாவாகவே இருந்திருக்கு. ‘ஆஹா’ன்னு நானும் ஜோடியாகக் கிளம்பிட்டேன்...” என்றவரிடம், ‘சார்பட்டா பரம்பரை’ பற்றிக் கேட்டால் மேலும் மலர்கிறார்.

“நமக்கு விளையாட்டுன்னா ரொம்ப இஷ்டம். கால்பந்து, சைக்கிளிங்னு அடுத்தடுத்து தாண்டிக்கிட்டே இருப்பேன். நடுவில் பாக்ஸிங் பிடிக்குதுன்னு இரண்டு வருஷமாக அதில் ஈடுபாட்டோடு இருந்தேன். அப்பதான் இயக்குநர் பா.இரஞ்சித்கிட்ட பாக்ஸிங் கதை ஒண்ணு இருக்குன்னு கேள்விப்பட்டேன். அப்புறம் கலையரசன் உயிரை எடுத்து ‘டேய் மச்சான், இரஞ்சித்கிட்டே என்னை அறிமுகப்படுத்து’ன்னு சொல்லி அவரைச் சந்தித்தேன். கொஞ்சநாள் கழிச்சு இரஞ்சித்தே ‘சார்பட்டா’ கதையைச் சொல்லி என்னை அதற்குள் கொண்டு வந்தார்.

அவர் அந்தக் கதையில் வைத்திருந்த உயிர் என்னையும் தூண்டியது. இப்ப மாறியிருக்கிற சினிமாவில் எல்லா மாற்றத்திற்கும் நாம் சேர்ந்து வரணும்னு தீர்மானத்தில் இறங்கிட்டேன். அவருக்கு சினிமாவில் இருக்கிற ஆர்வம் சொல்லி மாளாது. என்னை அசல் குத்துச்சண்டை வீரனாக மாற வச்சதெல்லாம் அவர்தான்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

“உங்கள் காதல் கதையைச் சொல்லுங்களேன்” எனக் கேட்டால் ஆர்யா சிரிக்கிறார்.

“நானும் இடையில் எவ்வளவோ லவ் பண்ணிப் பார்த்தேன். எதுவும் அமையலை. அப்புறம்தான் சாயிஷாவை ‘கஜினிகாந்த்’ படப்பிடிப்பில் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சது. அவளைப் பார்த்துப் பழகியது, காதலானது, அன்பைப் பகிர்ந்துக்கிட்டதுன்னு இதெல்லாம் எந்தப் புள்ளியில் ஆரம்பிச்சதுன்னு சொல்ல முடியலை. அவள் இல்லாமல் நான் முழுமையா இல்லைன்னு புரிஞ்சது. நேரே அவங்க அம்மாகிட்டபோய் ‘எனக்கு சாயிஷாவைத் திருமணம் செய்து வையுங்கள்... நல்லா வச்சுப்பேன்’ என்றேன். ‘நான் இதில் எதுவும் முடிவு பண்ண முடியாது... சாயிஷாகிட்டே கேட்டுச் சொல்றேன். அவள் வாழ்க்கை பத்தி அவளேதான் முடிவு பண்ணணும்’னு சொன்னாங்க. மறுநாளே சாயிஷாகிட்டே கேட்டு நல்ல முடிவு சொன்னாங்க.

“அவள் இல்லாமல் நானில்லை!” - ஆர்யா - சாயிஷா டூயட் பேட்டி

நான் இதற்கு முன்னே எனது ஆட்டத்தைத் தொடங்கியிருந்தேன். அவகிட்டே போய் ‘ஐ லவ் யூ’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அவ நான் காமெடி பண்றேன்னு நினைச்சிருந்திருக்கா. நாங்க இரண்டு பேரும் பிரியக் கூடாதுன்னு கடவுளின் பார்வையும் கருணையும் எங்க பக்கம் இருந்திருக்கு. எனது உலகமே இப்ப இவளை மையப்படுத்திதான் இயங்கிக்கிட்டு இருக்கு. எங்களோடது ஹானஸ்ட் அண்ட் பியூட்டிஃபுல் ரிலேஷன்ஷிப். ‘நான் கொடுத்து வச்சவன்’ என்று சொன்னால் அது நிச்சயமா பழைய வார்த்தை. ஆனால், அதுதான் நிஜம். எங்கள் இரண்டு பேருக்கும் நடுவில் இருப்பது balanced attitude. அதுவே பெரிய வெற்றி.

“அவள் இல்லாமல் நானில்லை!” - ஆர்யா - சாயிஷா டூயட் பேட்டி

‘சார்பட்டா’ படத்தின்போது என்னை அக்கறையா கவனிச்சுக்கிட்டது, என் ஹெல்த்தைப் பார்த்துக்கிட்டது எல்லாம் அம்மாவும் சாயிஷாவும்தான். அம்மாவுக்கும் அவளுக்கும் இருக்கிறது ஆழமான பிரியம். மும்பையில் பிறந்து, வளர்ந்து, பழகி, படிச்சு, இப்போ எனக்காக இடம்பெயர்ந்து வந்ததெல்லாம் அன்பால் செய்த காரியம். இன்னைக்கு எங்க அம்மாதான் அவளுக்கும் அம்மா. ‘நீ அவனைக் கவனிச்சுக்கோ’ என்ற ஒரே அட்வைஸ்தான் அம்மாவிடமிருந்து சாயிக்கு வருது” என்றவர், “ஹேய், நான்தான் பேசிக்கிட்டே இருக்கணுமா? நீ பேசு சாயிஷா” எனக் கன்னம் தட்டுகிறார் ஆர்யா.

“எனக்கு இதைவிட ஒரு வாழ்க்கை அமைஞ்சிடும்னு தோணலை. எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். அவர் ‘உன்னை ரொம்பப் பிடிக்கும்’னு சொல்லும்போதெல்லாம் படத்தோட டயலாக் போலன்னு நினைச்சிருக்கேன். அப்புறம் அம்மாவே என்னிடம் இதுபற்றிக் கேட்டாங்க. உடனே சரின்னு சொல்லிட்டேன். பிரியத்தை அப்படியே நெருக்கமாகக் காட்டுவார். நிறைவான நாகரிகம், சுமுகமான அன்பு அவர்கிட்ட பிடிக்கும்...” - வார்த்தைகளைக் கோத்து அழகாகப் பேசுகிறார் சாய்ஷா.

“அப்படியா டார்லிங்” என ஆர்யா சொல்ல, சாய்ஷா செல்லமாக அடிப்பதுபோல துரத்த, ஆர்யாவும் அவ்வளவு மெதுவாக ஓடுகிறார். இளமை விளையாட்டுக்கு இதுதானே நேரம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism