Published:Updated:

வினோத ரஸமஞ்சரி முதல் விக்கிரமாதித்தன் கதை வரை... ‘ட்ரங்க் பொட்டி’ - பாலகணேஷ்

பாலகணேஷ்
பிரீமியம் ஸ்டோரி
பாலகணேஷ்

சேகரிப்பு

வினோத ரஸமஞ்சரி முதல் விக்கிரமாதித்தன் கதை வரை... ‘ட்ரங்க் பொட்டி’ - பாலகணேஷ்

சேகரிப்பு

Published:Updated:
பாலகணேஷ்
பிரீமியம் ஸ்டோரி
பாலகணேஷ்

ணம், நகை... எனப் பொருள் சேர்ப்பதை மட்டுமே பிரதானமாகக் கொண்டுள்ள உலகில் புத்தகங்களைச் சேகரிப்பதையே வாழ்வாக்கிக்கொண்ட அற்புத மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர். பாலகணேஷ் அப்படியான அற்புதங்களில் ஒருவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த தொடர்கள், நாவல்கள், தீபாவளி மலர்கள் உள்ளிட்டவற்றைச் சேகரித்து வரும் பால கணேஷை சென்னை, ஆழ்வார்திருநகரிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்... புத்தகக் குவியலுக்கு மத்தியில்... புத்தக வாசனை கமழத் தொடங்கியது உரையாடல்...

“நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது... எப்படித் தொடங்கியது இந்தப் பயணம்?”

“சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் என்றால் எனக்குப் பித்து. நம்மால் முடியாததை அநாயசமாகச் செய்துவிடும் வல்லமை கொண்டவர்கள் ஓவியர்கள். அந்தக் காலத்தில் விகடனிலும் கல்கியிலும் வெளிவந்த தொடர்களில் இடம்பெறும் ஓவியங்கள் பிரமாதமாக இருக்கும். அந்த ஓவியங்களுக்காகத்தான் நான் ஆரம்பத்தில் பத்திரிகைகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். பத்திரிகைகளில் இடம்பெறும் ஓவியங்கள் எழுத்துகளுக்கான தூண்டில் போலத்தானே... ஓவியங்களை ரசிப்பதுடன் நிற்காமல் வாசிக்க ஆரம்பித்து ஒருகட்டத்தில் தீவிர வாசகனாக மாறினேன். அதன் பிறகு, பல புத்தங்களையும் சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன்.”

வினோத ரஸமஞ்சரி முதல்
விக்கிரமாதித்தன் கதை வரை... ‘ட்ரங்க் பொட்டி’  - பாலகணேஷ்

“எங்கேயிருந்தெல்லாம் புத்தகங்களை வாங்குவீர்கள்?”

“எனக்குச் சொந்த ஊர் மதுரை. சென்னைக்கு வந்து 20 வருடங்கள்தான் ஆகின்றன. நான் மதுரையிலிருந்தபோது மீனாட்சி கோயில் தரிசனம் முடித்து வந்தால், நியூ சினிமா தியேட்டருக்குப் பின்புறமிருக்கும் சந்து, பழைய புத்தக வியாபாரிகளால்தான் நிரம்பியிருக்கும். அங்கே நிறைய புத்தகங்கள் வாங்குவேன். பின்பு, ஒரு நாளிதழில் வேலைக்குச் சேர்ந்தேன். வெவ்வேறு ஊர்களுக்கு பணிமாறுதல் கிடைத்தது. கோவை டவுன்ஹால் பகுதியில், திருநெல்வேலி இரண்டடுக்குப் பாலத்தின் கீழ், திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில்... இப்படி ஒவ்வோர் ஊரிலும் பழைய புத்தகங்களுக்கென்றே சில ஏரியாக்கள் உண்டு. அங்கே போய் அலசி ஆராய்ந்து பழைய புத்தகங்களை அள்ளி வருவேன்.’’

வினோத ரஸமஞ்சரி முதல்
விக்கிரமாதித்தன் கதை வரை... ‘ட்ரங்க் பொட்டி’  - பாலகணேஷ்

“புத்தகங்களுக்கு நிறைய செலவிட்டிருப்பீர்கள் போலவே... விற்பனைக்கு வரும் ஒரு பழைய புத்தகத்தின் விலையை எப்படி மதிப்பிடுவீர்கள்?”

இப்போது அச்சில் இல்லாத புத்தகங்கள் என்றால் தங்கத்துக்கு நிகரான விலை சொல்வார்கள். அவர்கள் சொல்கிற தொகையைக் கொடுத்து பலர் வாங்குவார்கள். ஆனால், நான் அப்படி இல்லை. புத்தகத்துக்கு நியாயமான விலை எதுவென்று எனக்குத் தோன்றுகிறதோ அந்த விலை கொடுத்தால்தான் வாங்குவேன். அநியாய விலை சொன்னால் நிச்சயமாக வாங்க மாட்டேன்.

உங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால், 1962-ல் அச்சான ஒரு புத்தகம், அன்றைய விலையில் 1.25 பைசா என்று வைத்துக்கொள்ளுங்கள். இன்று அதைப் பதிப்பித்தால் அதிகப்பட்சம் 25 அல்லது 30 ரூபாய் வரலாம். ஆனால், 2,000 ரூபாய், 3,000 ரூபாய் சொல்வார்கள். அதையெல்லாம் நான் தவிர்த்துவிடுவேன்.

வினோத ரஸமஞ்சரி முதல்
விக்கிரமாதித்தன் கதை வரை... ‘ட்ரங்க் பொட்டி’  - பாலகணேஷ்

ஒருமுறை `என்னிடம் பழைய ராணி முத்து நாவல்கள் 80 இருக்கின்றன. விலைக்குத் தரத் தயார்' என ஒருவர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அவரைத் தொடர்புகொண்டு பேசினேன். `அத்தனையையும் மொத்தமாகத்தான் தர முடியும்' என்றார். என் கலெக்‌ஷனில் பல இருக்கக்கூடும் என்றாலும், பரவாயில்லை என்று வாங்கச் சம்மதித்து விலை கேட்டேன். `20 ரூபாய் எதிர்பார்க்கறேன்' என்றார் அவர். அவசரமாக மனக்கணக்குப் போட்டேன். 1600 ரூபாய். `சரிங்க சார் போஸ்டேஜுக்கு 200 ரூபா சேர்த்து 1,800 தந்துடறேன்...' என்றேன். `சரியாப்போச்சு... நான் சொன்னது 20,000-ம்ங்க...' என்றார். அவர் சொல்லும் கணக்குப்படி ஒரு புத்தகம் 250 ரூபாய். யப்பாடி... வேண்டாம் என்று விட்டுவிட்டேன். இப்படி நிறைய அனுபவங்கள் உண்டு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“உங்களிடம் உள்ளவற்றில் சிறந்த கலெக்‌ஷன்கள் என்று எவற்றையெல்லாம் சொல்வீர்கள்?”

“சொல்வதில் பல அபாயங்கள் உண்டே சார்...” என்று சிரித்தவர் “ஆமாம்..! முதல் ஆபத்து, உங்களுக்குத் தரும் லிஸ்ட்டைப் பார்த்து, ‘இவற்றை யெல்லாம் நான் படித்ததில்லையே’ என்று பழகியவர்கள் இரவல் கேட்கலாம். இரண்டாவது ஆபத்து, என் போன்ற புத்தகம் சேகரிப்போர் விலைக்குக் கோர நேரலாம். இருந்தாலும் நீங்கள் கேட்டதால், நான் மதிக்கும் சில புத்தகங்களைச் சொல்கிறேன்... வினோத ரஸமஞ்சரி இதழ் தொகுப்பு (1933), பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை, கலைமகள் 1945, 1946 ஆண்டு இதழ் தொகுப்பு, குறைந்த விலையில் போட்டிருந்ததன் வெளியீடுகள், சுதேச மித்திரனில் வெளிவந்த சரத்சந்திரரின் ‘சுபதா’ தொடர், தினமணி கதிரில் வெளிவந்த தி.ஜா-வின் செம்பருத்தி, தமிழ்வாணன் போன்றோரின் தொடர்கள், மங்கள நூலகம் வெளியிட்ட கல்கி, எஸ்.ஏ.பி போன்றோரின் புத்தகங்கள், 1950 முதல் 1960-கள் வரை வந்த விகடன், கல்கி, அமுதசுரபி தீபாவளி மலர்கள் எனப் பட்டியல் நீளும்.”

வினோத ரஸமஞ்சரி முதல்
விக்கிரமாதித்தன் கதை வரை... ‘ட்ரங்க் பொட்டி’  - பாலகணேஷ்

“புத்தகங்கள் சேகரிப்பதில் ஆட்சேபனைகள், பிரச்னைகள் வந்ததுண்டா?”

“அதெல்லாம் இல்லாமலா... சொந்த வீடு இல்லாத என் போன்ற ஆசாமிகள் புத்தகச் சேகரிப்பில் ஈடுபட்டால் முதல் எதிர்ப்பு வீட்டிலிருந்துதான் வரும். ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும் புத்தக மூட்டைகளை இடம் மாற்றுவதே பெரிய வேலை. வீட்டில் நமக்கு அர்ச்சனைகள் நடக்கும். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்தான் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. திருச்சியில் என் அண்ணனுக்குச் சொந்தவீடு அமைந்ததும் அதுவரை சேகரித்த கலெக்‌ஷன்களை அங்கே ஓர் அறையில் குவித்து வைத்துவிட்டு, சென்னையில் புதிதாகச் சேர்க்க ஆரம்பித்தேன். இப்போது சமீபத்தில் வீடு மாற்றியபோது புத்தகங்களுக்கு மட்டும் 18 மூட்டைகள் தேவைப்பட்டன. ஆட்சேபனைகள் இப்படி என்றால் பூச்சிகள், எலிகள் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். அவற்றிடமிருந்து புத்தகங்களைப் பாதுகாப்பது பெரும் சவால்.”

“இத்தனை சிரமங்களை மீறிச் சேகரிக்கிறீர்களே... இதில் நமக்கென்ன பிரயோஜனம் என்று எப்போதாவது நினைத்த துண்டா?”

“அப்படி நினைத்தால் இதை சேகரிக்க முடியுமா... இதையெல்லாம் தூக்கிப்போட எனக்கு மனசே வராது. முன்பெல்லாம் எந்தப் புத்தகம் யார் கேட்டாலும் இரவல் தந்து வந்தேன். நிறைய திரும்பாமல் போனதால் இப்போதெல்லாம் தருவதற்குத் தயக்கமாக இருக்கிறது. உறுதியாக வேண்டும் என்று கேட்பவர்களுக்கு ஜெராக்ஸ் செய்தும் அல்லது பிடிஎஃப் ஆக மாற்றியும் தருகிறேன்.

இப்படி பழைய புத்தகங்களில் கிடைக்கும் ரசமான துணுக்குகள், விளம்பரங்கள், ஜோக்குகள் போன்ற வற்றைத் தொகுத்து ‘ட்ரங்க் பொட்டி’ என்ற பெயரில் புத்தகமாகத் தொகுத்து, சென்ற ஆண்டு வெளியிட்டது போல் அடுத்தடுத்து சில புத்தகங்களை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். இது படிக்கிற ஆர்வமுள்ள அடுத்த தலைமுறையைச் சென்றடையும் என்பது என் திடமான நம்பிக்கை” என்று முடித்தார்.