Published:Updated:

“நாட்டுக்கு நல்லது செய்ய நேர்மை மட்டும் போதாது!”

அமீர்
பிரீமியம் ஸ்டோரி
அமீர்

அரசியல் பக்கம் வராமல் ரஜினி முடிவெடுத்தது தனிப்பட்ட முறையில் அவருக்கு நல்லது. அவரோடு பழகியதில் அவரை உணர்ந்திருக்கேன்.

“நாட்டுக்கு நல்லது செய்ய நேர்மை மட்டும் போதாது!”

அரசியல் பக்கம் வராமல் ரஜினி முடிவெடுத்தது தனிப்பட்ட முறையில் அவருக்கு நல்லது. அவரோடு பழகியதில் அவரை உணர்ந்திருக்கேன்.

Published:Updated:
அமீர்
பிரீமியம் ஸ்டோரி
அமீர்
றுபடியும் அமீர் ஹீரோ! ரத்தமும் சதையுமாக ரணகளப்படுத்திய பருத்திவீரனால் அத்தனை பேரும் ஆச்சர்ய அதிர்ச்சியில் திரும்பினார்கள் அமீர் பக்கம். இப்போது ‘நாற்காலி’யோடு வந்து அமர்கிறார் அமீர்.

“யாருங்க ஹீரோ? ஒவ்வொரு விஷயத்திலும் உண்மையாக நிக்கிறவனும் அன்பைத் தைக்கிறவனும்தானே ஹீரோ? உள்ளே இருக்கிறதை அத்தனை இயல்புகளோடவும் அப்படியே எடுத்துட்டு வர்றவன்தான் ஹீரோ! இப்ப ஸ்கிரீனில் ஆடிப்பாடவும் செய்திருக்கிறேன். ‘நாற்காலி’ வி.இஸட்.துரையின் நல்ல கமர்ஷியல் பொழுதுபோக்குப் படம். எம்ஜிஆர் மன்ற நிர்வாகி. அவரோட ரசிகனாகவும் வர்றேன். என் பெயரே ‘எம்ஜிஆர் பாண்டியன்’தான். ‘அமைதிப்படை’ மாதிரி நிறைய அரசியல் கேலிகள் இருக்கு. காதலியுமே அரசியல்வாதியாக இருக்க, அடுத்தடுத்த பயணத்தில் என்ன ஆகும்னு போகிறது கதை. நடப்பு அரசியலை ஞாபகப்படுத்தும். யாரையும் பெயர் சொல்லிக் குத்தாது. ஆனால், எல்லோரையும் நினைவுபடுத்தும். இறுக்கம் கலைந்த, ஒரு கமர்ஷியல் படத்திற்கு மக்கள் ரெடியாகி வரலாம்...” - கேள்விகளுக்குக் காத்திராமல் தடதடவென ‘நாற்காலி’யில் டேக் ஆஃப் ஆனது உரையாடல்.

“இவ்வளவு இடைவெளி எடுத்துக்கலாமா?”

“வடசென்னைக்குப் பிறகு பிரியப்பட்ட நடிகன் ஆயிட்டேன். அப்புறம் அதேமாதிரி டான் கேரக்டர் எடுத்துட்டு வர்றாங்க. என்னை சரியாகப் புரிஞ்சிருக்கேன். நான் சிம்புவோ, சிவகார்த்தியோ இல்லை. அடிப்படையில் இயக்குநர். நடிப்பு, விரும்பியோ விரும்பாமலோ வந்துருச்சு. நான் ஆடியன்ஸ் மாதிரியே இருக்கேன். அதிகாலையில் எழுந்திருச்சு ‘மாஸ்டர்’ போய்ப் பார்க்கிறேன். ‘சைக்கோ’ வில்லன் கேரக்டர் வந்தது. மறுத்துட்டேன். நான் இமேஜ் பார்க்கிற ஆள் கிடையாது. ஆனா, எந்தக் கதாபாத்திரத்திற்கும் லாஜிக் இருக்கணும். நல்ல சம்பளத்தோடு வந்த ஏழு படங்களை மறுத்தேன். அதில் நாலு படங்கள் ரிலீஸ் ஆச்சு. என்ன படம்னு கேட்காதீங்க. வந்த இடம் தெரியாமல்போச்சு. என் நிலைப்பாடு சரின்னு எடுத்துக்கிறேன். இன்னும் மூணு படம் வர வேண்டியிருக்கு. நான் 100% பாஸா, 80% பாஸான்னு தெரிஞ்சிடும்.”

அமீர்
அமீர்

“இன்னும் பருத்திவீரனில் அடையாளம் காணப்படுகிறீர்கள்...”

“முதல் படம் பார்த்துட்டு டீசண்டா காதல் கதை, காமெடி இல்லையேப்பானாங்க. அடுத்து, ‘ராம்’ல கஞ்சா கருப்பை உருவாக்கினேன். ‘நல்லா இருக்கு’ன்னு சொல்லிட்டு ‘ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லை’ன்னாங்க. ‘பருத்திவீரனி’ல் முத்தழகுன்னு காலத்துக்கும் மறக்க முடியாத ஒரு பொண்ணைக் கொண்டாந்து நிறுத்தினேன். இன்னும் எத்தனை நாளைக்கு சத்யஜித்ரே, அகிரா குரோசோவான்னு சொல்றது! அந்த இடத்திற்கு நாம வரவேண்டாமா? அவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கிற ஈரானிலிருந்து நல்ல படங்கள் வருது. வெறுமனே வேடிக்கை காட்டுகிற படங்களையே எடுக்குறோம். ‘பருத்திவீரன்’ ஒரு பெஞ்ச் மார்க். இப்படி முதலில் நிறுத்துறதுதான் கஷ்டம். அப்புறமா அதை யாரும் சுலபமாகத் தாண்டலாம். பருத்திவீரனைத் திங்கறதுக்குன்னே இன்னொருத்தன் இந்நேரம் தயாராகிட்டிருப்பான். நானே அதன் அம்சங்களோடு ‘சந்தனத்தேவன்’ எடுத்திருக்கேன். ஒரு ஷெட்யூலோட நிக்குது. நடுவில் அரசியல், அரசுத் தளத்தில் பலரையும் பகைக்க, பைனான்ஸுக்குப் பிரச்னை ஆச்சு. அதான் இவ்வளவு இடைவெளி. இப்ப மறுபடியும் வேலை நடக்குது. ‘நம்ம மண்ணை, மக்களைச் சொல்லவும் இன்னும் இடம் இருக்குடா’ன்னு சிந்திக்கிற இளைஞர்களுக்கும் விதை போட்டிருக்கேன். நீங்கள் அக்கறையாகக் கேட்டதுக்கு நியாயமாக நிச்சயமா செய்வேன். அதில் சிரமம் இருக்கு. ஆனால் முடியவே முடியாதுன்னு சொல்லமாட்டேன்.”

அமீர்
அமீர்

“ரஜினியைப் பற்றி சரியா சொல்லிக்கிட்டே இருந்தீங்க....”

“அரசியல் பக்கம் வராமல் ரஜினி முடிவெடுத்தது தனிப்பட்ட முறையில் அவருக்கு நல்லது. அவரோடு பழகியதில் அவரை உணர்ந்திருக்கேன். வந்திருந்தால் இத்தனை ஆண்டு கட்டிக்காத்த புகழ் எல்லாம் சில்லுசில்லா உடைஞ்சிருக்கும். அவரது இந்த முடிவு 200% சரி. அவரை நம்பியிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்பதைவிட அவரை வைத்துப் பிழைக்க நினைத்தவர்களுக்குப் பெரிய ஏமாற்றம். அவரோடு கூட நிக்கிற மாதிரி நின்னு, வேற வகையான தத்துவத்தைத் திணிக்க நினைத்த கூட்டத்திற்கு நல்ல அடி. ரசிகனா இருக்கிறவன், அடுத்த படம் ‘அண்ணாத்த’ பார்க்க இப்பவே ரெடியாகிட்டு இருப்பான்.”

“கமலின் பாதிப்பு எப்படியிருக்கும்...”

“அவர் ‘நேர்மை’ன்னு ஒரு ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார். இது மட்டும் போதுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. நாட்டுக்கு நல்லது செய்ய சுயநலமில்லாத தலைவன் வேணும். பிரச்னைகள் தெரியணும். மண்ணின் வரலாறு புரியணும். அவர் எடுத்து வருகிற நேர்மை, இங்கே பலருக்கும் வேறுபடுது. அதன் அளவுகோல் யாருக்கும் தெரியல. நம்மூர்ல ‘கைநீட்டிக் காசு வாங்கிட்டா செய்து கொடுத்திடுவாரு’ன்னு சொல்வாங்க. இதுகூட நேர்மை என்கிற கணக்கில் வருது. மிருகங்களை வதைக்கக்கூடாதுன்னு சொல்லிவிட்டு, 100 ஆடுகளை வெட்டிட்டு கசாப்புக் கடையில் காசு வாங்க நிற்பாரு ஒருத்தர். அவருக்கு அது நியாயம்தான். வரப்போகிற தேர்தலில் நேர்மையை எப்படி மக்கள் எடுத்துக்கிறாங்கன்னு பார்ப்போம்.”

அமீர்
அமீர்

“சீமானோடு கொஞ்ச நாள் சேர்ந்திருந்தீங்க...”

“ஈழப் போராட்ட சமயத்தில் ஜெயிலிலிருந்து நட்பு மேலும் வலுப்பட்டது. அவர் முழுநேர அரசியல்வாதியாகி, வாக்கு அரசியலுக்குப் போய்விட்டார். எனக்கு அப்படி இல்லை. சக மனிதர்களிடம் அன்பு செலுத்துவதே எனக்கு முக்கியம். இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்பட்டுத் தமிழ்த் தேசியத்தை உருவாக்கவே முடியாதுன்னு நான் நம்பினேன். இதை அங்கிருந்து சொன்னால் பிற தம்பிகளுக்குப் பிடிக்காது. அதனால் தனியாக வந்துவிட்டேன். அன்பும் பாசமும் தொடருது.”

“தேர்தல் வரக்கூடிய சூழலில், சமகால அரசியலை எப்படிப் பார்க்கிறீங்க...”

“கெட்ட பழக்கங்களே கொண்டாட்டமாகப் போய்க்கிட்டு இருக்கிற காலம். நான் குடிக்கிறது தீய பழக்கம்னா அரசு எப்படி அதை விற்கலாம்? லஞ்சம் ஊழல் எல்லாம் அனுமதிக்கப்பட்ட விஷயமாகிவிட்டது. பணம் கொடுத்தால் ஓட்டு வாங்கலாம்னு அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கை வந்துடுச்சு. முன்னாடி ஜெயிலுக்குப் போனால் வெட்கப்படுவோம். ஜெயலலிதா அம்மையார் குற்றவாளின்னு தீர்ப்பளிச்ச பிற்பாடு, ‘அதுதான் தேர்தல்ல தோற்கடிச்சுட்டமே... அப்புறம் எதுக்கு தண்டனை’ன்னு கேட்டாங்க. நினைவிடம், கோயிலோடு, அந்தம்மா வீட்டையும் நினைவு இல்லம் ஆக்குறாங்க. அதேமாதிரி A2 குற்றவாளின்னு சொல்லப்படுறவங்களுக்கு 23 மணி நேர வரவேற்பு. இந்த மனநிலையை எப்படிப் புரிஞ்சுக்கிறது?

எதுக்குமே கோபப்பட்டுக் கொதிக்க மாட்டேங்கிறோம். டோல்கேட்ல இந்தியப் பணத்தையே வாங்க மாட்டேங்குறான். ‘பாஸ்டேக்’குங்ற தனியார் கம்பெனிக்கு அரசு கைகட்டி வேலை செய்யுது. நீதிமன்றங்கள்கூட ஒண்ணும் சொல்லலை. கேசட் வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுகிற நடிகர்கள், டெல்லியில் விவசாயிகள் நடத்தற போராட்டத்தைப் பற்றி வாயே திறக்கலை. மக்களுக்காகக் களத்தில் நின்றால் தேச விரோதி, அதையே தேசியக் கட்சியில் இருந்தால் தேசபக்தன்னு சொல்றாங்க. முதல்ல தப்பு எங்கேன்னு ஒவ்வொருத்தரும் பார்த்துக்கணும். இதையெல்லாம் சரி செய்யாவிட்டால் அடுத்து வருகிற தலைமுறை நம்மைப் பார்த்துச் சிரிக்கும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism