லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

வாரத்தில் மூன்று நாள்கள் பாரம்பர்ய சமையல் மணக்கட்டும்! - டாக்டர் செஃப் தாமு

டாக்டர் செஃப் தாமு
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் செஃப் தாமு

ருசி அறிந்த மனிதர்

டாக்டர் செஃப் தாமு... தென்னிந்திய சமையலின் முன்னோடி முகம். தமிழகப் பாரம்பர்ய சமையல் முறைகளைக் கடல் கடந்து பல நாடுகளுக்கும் எடுத்துச்சென்றவர். அவள் விகடனுக்காக அவரிடம் பேசியதிலிருந்து...

சமையல் ஆர்வம் எந்த வயதில் வந்தது?

எங்கள் கூட்டுக் குடும்பத்தில் அம்மா, அண்ணி எல்லோரும் சேர்ந்து சமைப்பார்கள். அப்போதெல்லாம் விறகு அடுப்பு அல்லது பம்ப் ஸ்டவ்தான். அதில் சாதம் வடித்து, உருளைக்கிழங்கு மசால் செய்து, சாம்பார், ரசம் வைக்க மூன்று மணி நேரம் ஆகும். ஓர் அடுப்பில் சாதம் வேக, கொடி அடுப்பில் பருப்பு வேக, அந்த அடுப்புகள் அணையாமல் பார்த்துக்கொள்ள எனத் திணறிக்கொண்டிருப்பார்கள். 10 வயதில் தட்டில் கிடைக்கும் உணவைத் தாண்டி அடுப்படியில் நடக்கும் சமையலையும் கவனிக்க ஆரம்பித்தேன். அந்த ஆர்வம்தான் இப்போது என்னை இப்படி உங்கள் முன் நிறுத்தியுள்ளது.

வாரத்தில் மூன்று நாள்கள் பாரம்பர்ய சமையல் மணக்கட்டும்! - டாக்டர் செஃப் தாமு

இன்று வீட்டில் சமையல் செய்வது குறைந்து விட்டதே...

இது ரொம்பவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்தான். உடல்நிலை, மனநிலை, சூழ்நிலைக் காரணங்களால் சமைக்க இயலாத நாள்களில் வெளியிலோ, ஆன்லைனில் ஆர்டர் செய்தோ சாப்பிட்டுக்கொள்ளலாம். ஆனால், வெளி உணவைச் சாப்பிடும் உந்துதலாலேயே வீட்டில் சமைக்காமல் இருப்பது கூடாது. இப்படியே போனால் நம் பாரம்பர்ய உணவுப் பழக்கவழக்கங்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இவை எல்லாமே நம் கையைவிட்டுப் போய்விடும். ஆரோக்கியம் பேணப்பட வேண்டும் என்றால், வீட்டுச் சமையலே சிறந்தது. வாரத்தில் மூன்று நாள்களாவது பாரம்பர்ய சமையல் மணக்க வேண்டும். அவை உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் அமையும்.

யூடியூபில் சமையல் கற்றுக்கொள்வது பற்றி...

முன்பெல்லாம் இளைய தலைமுறையினர் அம்மா, மாமியார் என்று சமையல் கற்றுக் கொண்டார்கள். இன்று சமைக்க ஆரம்பிக்கும் வயதில் அவர்களை விட்டு நீங்கி வெளியூர், வெளிநாடு என்று சென்றுவிடுகிறார்கள். மேலும் சிலருக்கு வழக்கமான சமையலைத் தாண்டி ரெஸ்ட்டாரன்ட் உணவுகள் முதல் கான்டினென்டல் உணவுகள்வரை விதவிதமாகச் சமைக்க ஆர்வம் ஏற்படுகிறது. இவர்களுக்கெல்லாம், யூடியூப் சமையல் வீடியோக்கள் கைகொடுக்கின்றன. அவற்றில், அளவு சிலருக்குப் பிடிபடாமல் இருக்கலாம். என் வீடியோக்களில், ‘கால் கிலோ தக்காளி, கொஞ்சம் இஞ்சி, பூண்டு, தேவையான அளவு வெங்காயம், சிறிதளவு மிளகாய்த்தூள், ஒரு பின்ச் மஞ்சள்தூள்...’ என என் கை அளவில் எடுத்துப்போட்டுக் காட்டுவேன். சமையலில் அளவு என்பது, கைப்பழக்கத்தில் வந்துவிடும். ஆர்வம்தான் முக்கியம்.

வாரத்தில் மூன்று நாள்கள் பாரம்பர்ய சமையல் மணக்கட்டும்! - டாக்டர் செஃப் தாமு

சமையலறைக்குச் செல்வதில் ஆண்களுக்கு இன்னும் தயக்கம் நீங்கவில்லையே...

ஆணும் பெண்ணும் சேர்ந்து சமைக்கும் போது, அவர்களுக்கு இடையேயான அந்நியோன்யம் அதிகரிக்கும் என்பது உளவியலாளர்கள் சொல்வது. உதாரணமாக, பிரியாணி தயாரிக்கும்போது இருவரும் சேர்ந்து அதன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு, இறுதியாக பிரியாணி சாப்பிட இருவரும் சேர்ந்து அமரும்போது, அந்த மணம், சுவை எல்லாம் வழக்கத்தைவிட நிச்சயம் சிறப்பாக இருக்கும். எனவே, ஆண்களும் சமையல் செய்வது அவசியம். கணவன் மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் குடும்பங்களில் அது அத்தியாவசியமானதும்கூட.

நீங்கள் அடிக்கடி வீட்டில் திடீர் சமையல் செய்வீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆம்... என் வீட்டில் அடிக்கடி சமைப்பேன். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் எனக்கு மிகவும் பிடித்த தோசையும் மட்டன் குருமாவும் காலை உணவாகத் தயாரிப்பேன். எப்போதும் எங்கள் வீட்டில் பிரியாணி தயாரிப்பது நான்தான். என் மனைவிக்கு அது மிகவும் பிடிக்கும். வீட்டில் தொடர்ந்து சமையல் செய்ய எனக்கு நேரம் கிடைப்பதில்லை. ஒருவேளை கிடைத்தால், தினமும்கூட நான் சமைப்பேன்.

நல்ல மனநிலையில் சமைக்கும்போது அந்த உணவின் சுவை கூடுதலாக இருக்கும் என்று வழக்கமாகக் கூறப்படுவது பற்றி...

இது நூற்றுக்கு நூறு உண்மை. கைமணம், கைப்பக்குவம் என்று சொல்லப்படுவதெல்லாம் இப்படி உள்ளன்போடு சமைக்கும்போதுதான் அமையப்பெறும். ‘இதை எப்போதான் சமைச்சு முடிக்கிறது’ என்று அலுப்புடன் சமைத்தால், அந்த உணவில் சுமை மிகுவதில்லை.

குழந்தைகளுக்குச் சமையல் கற்றுக்கொடுக்க வேண்டியது எவ்வளவு அவசியம்?

இது மிகவும் முக்கியமான கேள்வி. நம் பிள்ளைகளை கை நிறைய சம்பாதிக்கத் தயார்படுத்துகிறோம். ஆனால், வயிறாரச் சாப்பிடத் தயார்படுத்துகிறோமா... படிப்பு, வேலை என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு நம் பிள்ளைகளை அனுப்பிவைப்பதற்கு முன், அடிப்படைச் சமையலை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது முக்கியம். ஏனென்றால், அங்கெல்லாம் அவர்களே சமைத்துச் சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே, தங்களுக்கான உணவைச் சிரமமில்லாமல் தயாரிக்க அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால், காலையில் பிரெட், மதியம் கோக், இரவுக்கு கேக் என்றுதான் அவர்கள் வயிறு பாழாகும்.

உங்கள் பிள்ளைக்கு 15 வயது ஆகிவிட்டது எனில், குக்கரில் சாதம் வைப்பது, சாம்பாருக்குப் பருப்பு வைப்பது, ரசம் வைப்பது, சமைத்த உணவை வேறு பாத்திரத்துக்கு மாற்றுவது, தேநீர் தயாரிப்பது... இப்படி எளிய வேலைகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என அனைவருக்கும் இவற்றைப் பழக்க வேண்டியது அவசியம்.

நன்றாகச் சமைக்கத் தெரிந்தவர்களின் வாழ்க்கையில், உணவுக்குத் திண்டாட்டம் இருக்காது. இன்று லட்சங்களில் சம்பாதிப்பவர் களும்கூட வாழ்க்கை முறை மாற்றங்களால் சரியான உணவு முறை அமையாததால், நல்ல உணவு கிடைக்காததால், தங்கள் வயிற்றை மட்டும் ஏழையாகவே விட்டிருக்கிறார்கள்!

உலகம் சுற்றிய அனுபவத்தில் சொல்லுங்கள்... உங்களுக்கு மிகவும் பிடித்த சமையல் எது?

நான் உலகம் முழுக்க 36 நாடுகளுக்குச் சென்றுவந்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன்... நம் தமிழ்நாட்டுச் சாப்பாடுதான் பெஸ்ட். காரணம், அதன் வகைகள். 5,000 வகையான உணவுகள் நம் தமிழகத்தில் இருக்கின்றன. சுவையோடு நின்று விடாமல் மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய உணவு வகைகளாக இருக்கின்றன. ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்’, ‘அகத்தைச் சீராக்குவது சீரகம்’ என, நம் சமையலின் சேர்மானப் பொருள்கள் எல்லாம் உணவை மருத்தாக்க வல்லவை.

வெளிநாடுகளில் பெரும்பாலும் பாதி சமைத்த உணவுகள், பச்சை உணவுகள் என்பதுபோல இருக்கும். உணவின் வகைகளும் மிகவும் குறைவாகவே இருக்கும். வட இந்தியாவில் நம் அளவுக்குச் சமையலில் வகைகள் இல்லை. அதோடு, அவர்கள் சேர்க்கும் வாசனைப் பொருள்கள் உணவைத் திகட்ட வைத்துவிடும். அதனால்தான் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என்று சுற்றிவந்த பின்னர் என் அம்மாவிடம், ‘ஒரு ரசம் சாதம் வைம்மா, இட்லிக்கு வேர்க்கடலை சட்னி அரையேன்’ என்பேன். தமிழ்நாட்டுச் சமையலைப்போல சிறப்பானது உலகில் எங்கும் இல்லை. இதை தமிழனாகச் சொல்லவில்லை, ருசி அறிந்த மனிதனாகச் சொல்கிறேன்.