Published:Updated:

மூலிகைகளின் வண்ணச் சங்கமம் கலம்காரி!

ஓவியர் ஏகன்
பிரீமியம் ஸ்டோரி
ஓவியர் ஏகன்

கலை

மூலிகைகளின் வண்ணச் சங்கமம் கலம்காரி!

கலை

Published:Updated:
ஓவியர் ஏகன்
பிரீமியம் ஸ்டோரி
ஓவியர் ஏகன்

“ஒரு கலையை மீட்டெடுப்பதென்பது

நம் வரலாற்றை மீட்டெடுப்பது”

“நாம் இயற்கையோடு இணைந்த வாழ்விலிருந்து நீண்டதூரம் வந்துவிட்டோம். அதனால்தான் கலைகளில்கூடப் போலி செய்கிறோம். இயற்கையான முறையில் கலைப்படைப்புகளைச் செய்வதென்பது ஆரோக்கியமும் அழகும் அற்புதமுமான விஷயம்” - உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் ஓவியர் ஏகன்.

இளங்கலை வரலாறு பயின்று, பின்பு நுண்கலையியலில் டெக்ஸ்டைல்ஸ் துறையில் முதுகலை பெற்றிருக்கிறார் ஓவியர் ஏகன். தற்போது முனைவர் பட்ட ஆய்வைத் தமிழ்நாடு இசைக்கல்லூரியில் மேற்கொள்கிறார். திரைத்துறையில் ஆடைவடிவமைப்பாளராகத் திகழ்கிறார். இருமுகன், காஷ்மோரா, புலி போன்ற திரைப்படங்களில் பணியாற்றியிருக்கும் இவருக்கு, கவின் கலைகள்மீது ஆர்வம். அதிலும் கலம்காரி ஓவியங்கள் என்றால் தனித்துவமான காதல். நாயக்க மன்னர்கள் காலத்தில் தமிழகத்தில் செழித்து வளர்ந்திருந்த இந்தக் கலை தற்போது பெரிதும் அருகிவிட்டது. தமிழகத்தில் ஓரிருவர் மட்டுமே அதை மேற்கொள்கிறார்கள். ‘கலம்காரி ஓவியங்களின் பெருமையும் அழகும் அற்புதமானவை. அவற்றை மீட்டெடுக்க வேண்டும்’ என்ற ஆர்வத்தோடு செயல்படும் ஏகன், கலம்காரி ஓவியங்கள் குறித்தும் அதை முன்வைத்து அவர் எடுக்கும் கலைமுயற்சிகள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

மூலிகைகளின் வண்ணச் சங்கமம் கலம்காரி!

‘‘ஆலயங்களில், தேர்களில் திரைச்சீலைகளாக, தொம்பைகளாக, வாசல் மாலைகளாக நாம் கலம்காரி ஓவியங்களைப் பார்த்திருப்போம். கலம் என்றால் பேனா. காரி என்றால் மை. துணியில் மை கொண்டு எழுதும் ஓவியங்கள் என்பதுதான் இதன் பொருள். தமிழ்நாடு, ஆந்திராவில் இதைக் `கலம்காரி' என்கிறோம். குஜராத்தில் இதன்பெயர் மதானி பச்சடி. ஒடிசாவில் பட்டசித்ரா. ஊருக்கு ஊர் பெயர் மாறலாம். ஆனால், அதன் அழகும் தன்மையும் மாறாது. அந்தந்த ஊருக்கான கலை அடையாளங்களோடு செழித்து விளங்குகிறது.

ஆதிகாலத்தில் எகிப்த், சீனா, ரோம் ஆகிய நாடுகளில் எல்லாம் இதேபோன்று துணிகளில் வரையும் கலைமுறை இருந்தது. பாரசீகக் கலைவடிவங்களில் முக்கியமானது இது. துணிகளில் தங்கள் நாட்டின் குலக்குறி, அடையாளம் போன்றவற்றை வரைவது எகிப்தின் வழக்கம். அதன்பின் உடைகளில் அதையே செய்தனர். ஓவியங்கள் தீட்டப்பட்ட உடைகளை அரச குடும்பத்தினர் விரும்பி அணிந்தனர்.

மூலிகைகளின் வண்ணச் சங்கமம் கலம்காரி!

நம் நாட்டைப் பொறுத்தவரை, மன்னர்களின் மகுடத் தோரணங்கள் எனப்படும் அரசுச் சின்னங்களில் இந்த ஓவியங்கள் காணப்பட்டாலும் பெரும்பாலும் ஆலயங்களோடு தொடர்புடையதாக மாறிவிட்டது. கோயில்களைப் பொறுத்தவரை அங்கு ஒவ்வொரு கலையையும் மிகவும் துல்லியமாகப் பயன்படுத்தியது நம் மரபு. கோயில் கோபுரங்களைப் பார்க்கிறோம். அவற்றில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. ஆனால், அதில் ஓர் அமைப்பு முறையை நம் முன்னோர்கள் பின்பற்றினர். இந்தத் தளத்தில் இன்னின்ன சிற்பங்கள் இருக்க வேண்டும் என்பது வரையறை. ஒரு தளத்தில் தலபுராணம் சார்ந்த சிற்பங்களை வைப்பது மரபு. அதேபோலத்தான் கலம்காரி ஓவியங்களுக்கும் ஓர் அமைப்பு உண்டு.

மூலிகைகளின் வண்ணச் சங்கமம் கலம்காரி!

ஆலயம் செல்கிறோம்; சுவாமி சந்நிதானத்தில் தரிசனம் செய்கிறோம்; அபிஷேகம் முடிந்ததும் திரையிட்டுவிடுவார்கள். இவ்வளவு நேரம் சுவாமி தரிசனம் செய்ததும் ஏதோ ஒரு வண்ணத் திரையைத் தொங்கவிடுவதற்கு பதிலாக, அந்தத் திரைச்சீலையில் அந்தத் தலவரலாறு தொடர்பான ஓர் ஓவியம் இருந்தால், அது பக்தர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும். இதுதான் ஆலயங்களில் உள்ள கலம்காரி திரைச்சீலைகளின் கான்சப்ட்.

அந்தக் காலத்தில் சந்நிதித் திரைச்சீலைகள், தேர்த் திரைச்சீலைகள், தொம்பைகள், பந்தல்துணி என எல்லாமே கலம்காரி ஓவியங்களோடுதான் அமைக்கப்பட்டன. அவையும் அரக்கு, மஞ்சள், பிரௌன், கறுப்பு, அவுரி நீலம் ஆகிய கண்ணுக்குக் குளுமையான வண்ணங்களில் அமைந்திருக்கும். உண்மையில் இந்தக் கலை எவ்வளவு மகத்துவமானது என்றால், இது இயற்கையோடு இணைந்த பெருமைகொண்டது. இன்று சூழல் மாறிவிட்டது. நாம் அனைத்துக்கும் வேதிப்பொருள்களை நாடிச் செல்கிறோம். இன்று வண்ணம் என்றாலே அது ரசாயன வண்ணம்தான். ஆனால், கலம்காரி ஓவிய வண்ணம் இயற்கையானவை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் இயற்கையான மூலிகைகளைக் கொண்டு வண்ணம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தது. ஒவ்வொரு மூலிகையும் ஒரு வண்ணத்தைத் தரும். அதைத் தேடி எடுத்துவந்து ஊறவைத்து அரைத்து வண்ணம் செய்ய முடியும். கடுக்கா, மஞ்சுஸ்டா, செவெளிக்கொடி, சுருளிப்பட்டை, காசிக்கட்டி, கத்தாழை, ஆவரம்பூ, ஆரஞ்சுப்பழத் தோல், மாதுளம் தோல், கடுக்காய்ப்பூ, அவுரி இலை ஆகியவற்றைக் கொண்டு வண்ணங்களைத் தயாரிக்க முடியும். அவுரி நீலம் என்பது அவுரி இலைகளால் உருவாகும் இண்டிகோ வண்ணம்தான். சில வண்ணங்களைக் கலந்து புதிய வண்ணங்களையும் இவற்றால் தயாரிக்கமுடியும். குறிப்பாக, மஞ்சளும் நீலமும் சேர்த்தால் பச்சை வண்ணம் கிடைக்கும்.

இன்று அனைத்துக்கும் ரசாயனப் போலிகள் வந்துவிட்டன. இயற்கையாகப் பொருள்களைத் திரட்டி அதைப் பதப்படுத்தி வண்ணங்களாக்கச் செலவு பிடிக்கிறது. அதேபோல், அந்த நிறங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் தன் நிறத்தை இழந்துவிடும். ஆனால், கெமிக்கல் கொண்டு வண்ணங்கள் தயாரிக்க மிகக்குறைந்த செலவே ஆகும். அதே நேரம் நீண்ட நாள்கள் வரும் என்பதால், மக்கள் பெயின்ட்களை நாடுகிறார்கள்.

இயற்கைப் பொருள்களால் உருவாக்கப்பட்ட கலம்காரித் துணி ஒரு மீட்டர் 300 ரூபாய் என்றால், கெமிக்கல் கொண்டு உருவாக்கப்பட்ட கலம்காரியின் போலி பிரின்டிங் துணி 100 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதனால், மக்கள் சிக்கனம் கருதி அதை நாடுகிறார்கள். கோயில்களில் இறைவழிபாட்டில் அனைத்துமே இயற்கைப் பொருள்களால் ஆனவையாக இருக்கும். காரணம், இறைவனும் இயற்கையின் வடிவமாகவே திகழ்பவன் இல்லையா..!

பாரம்பர்யமான முறையில் இதைச் செய்ய வேண்டும். இந்தக் கலையை அனைவரும் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம். அதைக் கற்க முன்வருகிறவர்களுக்கு நானே சொல்லிக்கொடுக்கிறேன். என் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் கிராமம். அங்கு வாழும் என் ஊர்ப்பெண்களுக்கு இந்தக் கலையைத் தற்போது சொல்லிக்கொடுக்கிறேன். உண்மையைச் சொன்னால் இந்தக் கலைக்கு வெளிநாட்டில் நல்ல மரியாதை இருக்கிறது. இதை விற்க ஒரு நல்ல சந்தையும் இருக்கிறது. பல கல்லூரிகளுக்குச் சென்று அங்கிருக்கும் பேஷன் டெக்னாலஜி மாணவர்களோடு உரையாற்றுகிறேன். `பொதுவாக பிரெஷ் கொண்டு ஓவியம் தீட்டுவார்கள்... இவர் என்ன மூங்கில் கொண்டு ஓவியம் தீட்டுகிறார்' என்று வியந்து பார்க்கிறார்கள். அவர்களிலும் ஒருசிலரே இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ளும் ஆவலோடு நாடிவருகிறார்கள். அப்படி வருபவர்களுக்கு கற்றுத்தரத் தயாராக இருக்கிறேன்.

இன்று கலம்காரிப் புடவைகள் என்று பிரின்டிங் டிசைனில் புடவைகள் வருகின்றன. ஒன்றுபோலவே மற்றவையும் இருக்கும் ப்ளாக் பிரின்டிங் முறையில் செய்யப்பட்ட செயற்கைக் கலம்காரிப் புடவைகள். ஆனால், தஞ்சாவூர் பாணி கலம்காரிப் புடவைகள் ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை. சரபோஜி மன்னர் தன் மனைவிக்குக் கருப்பூர் என்ற இடத்திலிருந்து கோடாலிக் கறுப்பு நிறத்தில் ஒரு புடவை செய்து தந்தார். அந்தப் புடவை தற்போதும் எழும்பூர் மியூசியத்தில் இருக்கிறது.

பார்க்கக் கண்கொள்ளா அழகோடு திகழும் ஒரிஜினல் கலம்காரிப் புடவைகளுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது. 1935-ம் ஆண்டு கலாக்ஷேத்திராவில் கலம்காரிப் புடவைகளை உருவாக்கத் தொடங்கினர். அதற்கென ஆந்திராவிலிருந்து கலைஞர்களை அழைத்து வந்தனர். இன்றும் அதைச் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் உருவாக்குவது ஆந்திரா பாணி கலம்காரி. தமிழ்நாட்டுக்கு என நாயக்கர் காலத்தில் உருவான ஒரு தனித்துவமான ஸ்டைல் உள்ளது. அது மிகவும் அழகானது. அதைத்தான் நாம் உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

கலைமேல் விருப்பம் கொண்ட இளைஞர்களுக்குச் சொல்கிறேன். இது ஏதோ கலைச் சேவையாக முடிந்துவிடக் கூடியதல்ல. நல்ல வருமானமும் கிடைக்கும். வெளிநாடுகளில் மட்டுமல்ல இன்றைக்கு நம் ஊரிலும் ஆர்க்கி டெக்ட்டுகள் வீடுகளை அழகுசெய்ய கலம்காரி ஓவியங்களையும் திரைச்சீலைகளையும் வாங்குகிறார்கள். விற்பனை நோக்கமில்லை, பொழுதுபோக்காக ஒரு கலையைக் கற்கலாம் என்று நினைப்பவர்களும் வரலாம். நம் வீட்டுக்குத் தேவையான திரைச்சீலைகள், பூஜை அறைத் தோரணங்கள், கைப்பைகள் என நமக்கு வேண்டிய அனைத்தையும் நாமே தயாரித்துக்கொள்ளலாம்.

சினிமாத் துறையில் நான் செய்யும் காஸ்ட்யூம் டிசைனர் தொழில் எனக்கு வருமானத்தைத் தரும். அதிலிருந்துதான் இந்தக் கலையை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கான பணத்தைப் பெறுகிறேன். என்னைப் பொறுத்தவரை, இந்தக் கலையை மீண்டும் உயிர்ப்பூட்டித் தமிழகம் எங்கும் புத்துணர்வு கொள்ளச் செய்ய வேண்டும். ஒரு கலையை மீட்டெடுப்பதென்பது நம் வரலாற்றைப் பண்பாட்டை, கலாசாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி. அதை நான் முன்னெடுக்கிறேன். விரைவில் அதற்கு இளம் தலைமுறையிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார் ஏகன்.

கலையைப் பணமாக்க முயலும் ஒரு சில கலைஞர்களுக்கு மத்தியில் கலையை மீட்டெடுக்க முனையும் ஏகன் ஓர் அபூர்வம். வாழ்த்துகள் ஏகன்!