Published:Updated:

பயணம்... அநிருத் பாடல்கள்... வெஜ் பிரியாணி... ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஃபேமலி ஷேரிங்ஸ்

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

சந்திப்பு

பயணம்... அநிருத் பாடல்கள்... வெஜ் பிரியாணி... ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஃபேமலி ஷேரிங்ஸ்

சந்திப்பு

Published:Updated:
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
“சண்டே காலையில வாங்க...” என்று அழைத்திருந்தார் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். திருவான்மியூரில் இருக்கும் அவரது வீட்டுக்கு நானும் கேமராமேன் ராகேஷும் சென்றபோது காலை 8:30 மணி.

கார் பார்க்கிங் சைடில் இருந்த வாஷ் பேஷினில் கைகளைக் கழுவிக்கொண்டு, வீட்டின் கதவருகே இருந்த சானிடைஸரால் மீண்டும் கைகளைச் சுத்தப்படுத்திக்கொண்டோம். “கிரவுண்ட் ஃப்ளோர் கெஸ்ட் ரூம்... இங்கே வெயிட் பண்ணுங்க” என்று செக்யூரிட்டி அமரவைத்தார். டேபிளிலேயே மாஸ்க், சானிடைஸர் என்று ஒரு செட் இருந்தது. “வர்றவங்க கொண்டு வர்றாங்களோ இல்லையோ... நம்ம வீட்லயும் இப்படிவெச்சுக்கறது நல்லது...” என்ற குரலோடு வரவேற்றார் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

நிதித்துறை, வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி ஆணையர், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் தலைமை அதிகாரி மற்றும் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, போக்குவரத்துத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற பல்வேறு துறைச் செயலராக பணியாற்றி, தற்போது தமிழக சுகாதாரத்துறைச் செயலராக கொரோனாவுக்கெதிரான போரில் முன்களத்தில் தளபதியாக நிற்கிறார் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

பயணம்... அநிருத் பாடல்கள்... வெஜ் பிரியாணி... ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்  
ஃபேமலி ஷேரிங்ஸ்

“ஃபோட்டோல்லாம் எடுக்க இந்த இடம் ஓகேவா... இல்லை... மாடிக்குப் போயிடலாமா?” என்று நம் இறுக்கத்தைத் தணித்தார். மாடியில் அவரது மனைவி கிருத்திகா, மகன் அர்விந்த் ஆகியோரும் நம்மை வரவேற்றனர். வீட்டின் இன்டீரியரி லிருந்து நம் கண்களை வெகுநேரத்துக்கு எடுக்க முடியவில்லை.

“மனைவி கிருத்திகா சமையல்கலை வல்லுநர். இந்த இன்டீரியர்லாம் அவங்க ரசனைதான். இப்போ பொதிகை டி.வி-யில குக்கரி ஷோ செஞ்சுக்கிட்டிருக்காங்க. ஒன்பது புக்ஸ் எழுதியிருக்காங்க. டாகுமென்டரீஸ் சிலது எடுத்திருக்காங்க. பையன் அர்விந்த் எம்.பி.பி.எஸ் படிச்சு முடிச்சுட்டு ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டி ருக்கார். போஸ்ட் கிராஜுவேஷன் பண்ணப்போறார். டி.வி விளம்பரங்கள்ல கூட நடிச்சிருக்கார்” என்று அவரது குடும்பத்தை நமக்கு அறிமுகப் படுத்தினார்.

“நீங்க ரெண்டு பேரும் மொதல்ல சந்திச்சது எப்போ?” கிருத்திகாவிட மிருந்து கேள்வியைத் தொடங்கினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“அரேஞ்டு மேரேஜ்தான்” முகம் நிறைய புன்னகையுடன் ஆரம்பித்தார் அவர். “என் அப்பா நரம்பியல் மருத்துவர் நாகராஜன், மதுரையில அரசு டாக்டர். அம்மா மோகனராணி. அப்பாவைப் பார்க்கப் பல அரசு அதிகாரிகள் வருவாங்க. அந்த மாதிரிதான் இவரோட ஃபேமலியும் வந்தாங்க. பெண் பார்க்கிற படலம் மாதிரியே இல்லை. ஏதோ ஃப்ரெண்ட்ஸ் மீட் மாதிரி கேஷுவலா இருந்தது. முதல் சந்திப்பிலேயே பிடிச்சுப் போச்சு. அன்பும், நல்ல புரிதலும் இருக்குற ஒருத்தர் எனக்குக் கணவரா வரணும்னு நெனைச்சேன். இப்பவரைக்கும் அப்படித்தான் பயணிக்குது” என்றார்.

பயணம்... அநிருத் பாடல்கள்... வெஜ் பிரியாணி... ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்  
ஃபேமலி ஷேரிங்ஸ்

“தூத்துக்குடியில வேலை செய்யறப்போ தெரிஞ்ச நண்பர் மூலமா வரன் வந்து, பொண்ணு பார்த்தோம். எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அடுத்த ஆறு மாசத்துல தூத்துக்குடியில நிச்சயதார்த்தம் நடந்தது. 1996-ம் ஆண்டு மதுரையில திருமணம் நடந்தது” என்று உடன் சேர்ந்தார் ராதாகிருஷ்ணன்.

“உங்க சொந்த ஊர்?”

“சென்னைதாங்க. ஆவடி ராணுவ மருத்துவமனையில்தான் பிறந்தேன். அப்பா ஜெகந்நாதன் இந்திய விமானப்படையில் வாரன்ட் ஆபீஸரா இருந்து ரிட்டயர்டு ஆனவர். அம்மா திரிபுரசுந்தரி டெலிபோன் டிபார்ட்மென்ட்ல இருந்தாங்க. என் அண்ணன் வைத்தியநாதன், இப்போ சென்னையில தனியார் பேங்க் ஒண்ணுல துணைத் தலைவரா இருக்கார். எங்க பூர்வீக வீடு இன்னும் ஆவடியில் இருக்கு.”

“ஐ.ஏ.எஸ் படிக்கணும்கிற எண்ணம் எப்படி, எப்போ உருவாச்சு?”

“அப்பாவுக்கு விமானப்படையில வேலைங்கிறதால அடிக்கடி இடமாறுதல் ஆகும். கான்பூர், சண்டிகர், நாசிக், டியோலாலி, மகாராஷ்டிரா அப்படினு பல்வேறு மாநிலங்களில் நான் படிச்சேன். அப்புறமா பெங்களூரில் இருக்குற கால்நடை மருத்துவக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பு. மிக அழகான கல்லூரி அது. ரொம்ப ஆர்வமா படிச்சேன். அதுக்கப்புறம் கேரளா கால்நடை மருத்துவக் கல்லுரியில் உதவிப் பேராசிரியரா பணி. அங்கேயே மேற்படிப்பு.

நான் பெங்களூர்ல படிச்சுக் கிட்டிருந்தேன் இல்லியா... அப்போ என் வீட்டின் அருகிலிருந்த அண்ணன் ஒருத்தர் யூ.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்து எனக்கும் யூ.பி.எஸ்.சி தேர்வுகளுக்குத் தயாராகணும்னு ஆசை வந்துச்சு. என் அண்ணன் வங்கி போட்டித் தேர்வில் தேர்ச்சியடைந்தார். அதே சமயத்துல நான் யூ.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். காலேஜ் டைம் போக பெரும்பாலான நேரம் கங்கை நகர் பொது நூலகத்தில்தான் இருப்பேன்.

1989-ம் ஆண்டு முதன்முறை தேர்வு எழுதினேன், ப்ரிலிமினரி, மெயின் தேர்வுகள்ல தேர்ச்சியடைஞ்சு நேர்முகத்தேர்வுல செலக்ட் ஆகலை. 1990-ம் ஆண்டு தேர்வில் ப்ரிலிமினரி தேர்விலேயே தோல்வி. அடுத்த முறை கவனமா என் தவறுகளைத் திருத்திக் கிட்டுப் படிச்சேன். 1992-ம் ஆண்டு இந்திய அளவில் 7-ம் இடத்தில் தேர்ச்சி பெற்றேன்.”

“ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்னாலே கும்பகோணம் தீ விபத்து சமயத்துலயும், சுனாமி சமயத்துலயும் நீங்க பணியாற்றினதுதான் மக்களுக்கு நினைவுக்கு வரும்... அந்த அனுபவம்?”

அமைதியாகிறார். “இருக்கலாம். ஆனா ரெண்டுமே நான் மறக்க நினைக்கிற கொடுமையான நிகழ்வுகள். பல குடும்பங்களின் கண்ணீர், அழுகை, பிஞ்சுக் குழந்தைகளின் சடலம்னு நினைக்கவே பதற்றம் தரும் விஷயங்கள் அவை. நான் மட்டுமல்ல. பல்வேறு தன்னார்வலத் தொண்டு நிறுவனங்கள், காவல்துறை, சுகாதாரத்துறைனு பலரும் இணைஞ்சு போராடின தருணம். சுனாமியைப் பொறுத்தவரை நாகை பெரும் பாதிப்பைச் சந்தித்திருந்தது. எந்த அளவுக்குன்னா, சுனாமியால் தமிழகத்தில் ஏற்பட்ட மொத்த மரணங்களில் 76% மரணம் நாகையில்தான். நாங்க மீட்புப் பணியில இருக்குறப்போ ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளரா இருந்த பில் கிளின்டன் நாகை வந்திருந்தார். சுனாமி மீட்புப் பணிகள் குறித்துப் பேசும்போது, நம்மையும் பாராட்டினார். 2005-ம் ஆண்டு அமெரிக்க கல்வித்துறையிட மிருந்து சுனாமி மீட்புப் பணிகள் பத்திப் பேச அழைப்பு வந்தது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், கலந் துரையாடல்களில் கலந்துக்கிட்டேன். அப்புறமா 2009-2012-ம் ஆண்டு ஐ.நா-வின் வளர்ச்சித் திட்ட தலைமை அதிகாரியா பணியாற்றினேன்.”

பயணம்... அநிருத் பாடல்கள்... வெஜ் பிரியாணி... ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்  
ஃபேமலி ஷேரிங்ஸ்

அவர் நம்மோடு பேசிக் கொண்டிருக்கும்போதே கமகம வாசனையோடு காபியும், பிஸ்கட்டும், வந்தன. “வீட்லயே செஞ்சது” என்றார் கிருத்திகா. அருகில் அமர்ந்திருந்த மகன் அர்விந்திடம் “உங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்டா?” என்று கேட்டதும், “சேச்சே...” என்று உடனடியாக மறுத்தார். “இதுவரைக்கும் அடிச்சதோ... ஏன்... திட்டினதுகூட இல்லை. ஃப்ரெண்ட் மாதிரிதான் நாங்க ரெண்டு பேரும்” என்று அர்விந்த் சொன்னதை தலையாட்டி ஆமோதித்தார் கிருத்திகா.

“எவ்வளவு வேலை இருந்தாலும், எங்களோடு நேரம் செலவிடுவார். எனக்கும் அப்பாவுக்கும் பயணம்னா ரொம்பப் பிடிக்கும். நேரம் கிடைக்கறப்பல்லாம் எங்கேயாவது காரை எடுத்துக்கிட்டுக் கெளம்பிடு வோம். கார்ல அநிருத் பாட்டுக் கேட்டுட்டே லாங் டிரைவ் போறது அவருக்குப் பிடிக்கும். அதே மாதிரி திடீர்னு பிளான் பண்ணி சினிமாவுக்குப் போவோம். ஆனா, பல நேரங்கள்ல பாதிப் படத்துல அவசரமா கெளம்பிடுவார்” என்றார் அர்விந்த்.

“நீங்க ஒரு சமையல் கலை வல்லுநர். உங்க சமையல்ல அவருக்குப் பிடிச்சது எது... அலுவலக நாள்கள்ல வீட்ல இருந்துதான் சாப்பாடு எடுத்துட்டுப் போவாரா?” கிருத்திகாவிடம் கேட்டேன்.

``வெஜ் பிரியாணி, நார்த் இந்தியன் மீல்ஸ் அவருக்கு ரொம்ப பிடிக்கும். பெரும்பாலான நாள்கள் ஆபீஸுக்கு வீட்டுச் சாப்பாடுதான் எடுத்துட்டுப் போவார்.’’

“உங்க பர்சனல் இன்ட்ரஸ்டான புக்ஸ் எழுதறது, குக்கரி ஷோவுக்கெல்லாம் அவர் எந்த அளவுக்கு உதவுவார்... பார்த்துட்டு விமர்சனம் பண்ணியிருக்காரா?”

``அவர் உதவி பண்றதாலதான் என்னால இந்த அளவுக்கு எல்லாத்தையும் பண்ண முடியுது. ஒவ்வொரு விஷயத்திலும் ரொம்ப உதவியா இருப்பார். ஒரு ஷோ பண்றப்போ எந்த டிரெஸ் போட்டா நல்லா இருக்கும்கறதுல தொடங்கி, டிராவல்ஸ் ஷோ பண்றப்போ வீடியோ எடுக்கிறது வரைக்கும் எல்லாவிதமான உதவியும் அவர்கிட்டருந்து கிடைக்கும். எப்பவுமே இன்னும் எப்படி பெஸ்ட்டா பண்றதுன்னு சொல்லுவார்.’’

“டிராவல் பிடிக்கும்னீங்க... மூணு பேரும் சேர்ந்து போன டூர்ல மறக்க முடியாத டூர் எது?”

``மறக்கவே முடியாத ட்ரிப்னா `யூரோப் ட்ரிப்’தான். அந்த ட்ரிப் மட்டும்தான் முழுசா என்ஜாய் பண்ணினோம். ஃபுல் ஃபன், என்ஜாய்மென்ட்னு ரொம்ப ஜாலியா போச்சு. பெரும்பாலும் எல்லா இடத்தையும் நடந்தே சுத்திப் பார்த்தோம். ரொம்ப தூரம்னா டாக்ஸி எடுக்காம பப்ளிக் டிரான்ஸ்போர்ட் பயன்படுத்தினோம்... அந்த ட்ரிப் என்னால மறக்கவே முடியாது.’’

“உங்க வீட்டு தீபாவளி பத்திச் சொல்லுங்க...”

``கோலாகலமாக இருக்கும். காலையிலயே எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சு... புது டிரெஸ் போட்டுக்கிட்டு சாமி கும்பிட்டுட்டு கொஞ்சமா வெடி வெடிப்போம். அப்புறம் அவரோட அண்ணன் வீட்டுக்குக் கெளம்பிடு வோம். மாலை கிளம்பி, ஃப்ரெண்ட்ஸ் மீட்... அவங்களுக்கு ஸ்வீட்ஸ் குடுக்கறதுனு கலகலனு போகும். இந்த முறை கோவிட் காரணமா எப்படி இருக்கும்னு தெரியலை.”

நாம் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும்போதே வந்த அழைப்புகளுக்கு மிகச் சுருக்கமாக பதில் சொல்லி, நம் நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். போட்டோ கிராபர் கேட்டுக் கொண்டதற்கிணங்க உடைகளை மாற்றி மாற்றி வந்து, புகைப்படம் எடுக்க முழு ஒத்துழைப்பு கொடுத்தார். ``இத்தனை வேலைப்பளுவுக்கு இடையிலும் இவ்வளவு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி’’ என்று நாம் சொன்னதும் முகம் நிறைய புன்னகையோடு இடைமறித்தார் அவர் மனைவி கிருத்திகா.

“கொரோனா ஆரம்பிச்சதுல இருந்து செம டென்ஷனாவே இருந்தார். ரொம்ப நாள் கழிச்சு இவ்ளோ நேரம் மூணு பேருமா உட்கார்ந்து பேசிச் சிரிச்சுட்டிருக்கோம். இன்னிக்கே தீபாவளி மாதிரிதான் இருக்கு எங்களுக்கு. நாங்கதான் நன்றி சொல்லணும்” என்று அவர் சொல்ல மகிழ்ச்சியோடு விடைபெற்றோம்.