Published:Updated:

ராஜா என் லைஃப்... ரஹ்மான் என் லவ்!

அமித் த்ரிவேதி
பிரீமியம் ஸ்டோரி
அமித் த்ரிவேதி

அவருடைய ‘ராஞ்சானா’, ‘ஷமிதாப்’ என் பெரு விருப்பங்கள். கேரக்டராகவே மாறும் மெத்தட் ஆக்டிங் செய்கிறார். சில தமிழ்ப் படங்கள் பார்த்திருக்கிறேன்.

ராஜா என் லைஃப்... ரஹ்மான் என் லவ்!

அவருடைய ‘ராஞ்சானா’, ‘ஷமிதாப்’ என் பெரு விருப்பங்கள். கேரக்டராகவே மாறும் மெத்தட் ஆக்டிங் செய்கிறார். சில தமிழ்ப் படங்கள் பார்த்திருக்கிறேன்.

Published:Updated:
அமித் த்ரிவேதி
பிரீமியம் ஸ்டோரி
அமித் த்ரிவேதி
மித் த்ரிவேதி... பாலிவுட்டின் Heart throb இசையமைப்பாளர். அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருது என்ற உச்சபட்ச அங்கீகாரத்தைப் பெற்ற இருவரில் ஒருவர். (மற்றொருவர் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்). தனக்கெனப் புதுப் பாணியை வைத்துக்கொண்டு கலக்கிவரும் அமித் த்ரிவேதி, பாலிவுட் தாண்டி மாநில மொழி சினிமாக்களிலும் கொடியேற்றி வருகிறார்.

‘தேவ் டி', ‘வேக்கப் சித்', ‘இங்லீஷ் விங்லீஷ்', ‘சில்லார் பார்ட்டி', ‘நோ ஒன் கில்டு ஜெஸிக்கா', ‘அய்யா', ‘கய் போ சே', ‘குயின்', ‘சாந்தார்', ‘ஃபிதுர்', ‘உட்தா பஞ்சாப்', ‘டியர் ஜிந்தகி', ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்', ‘பேட் மேன்', ‘ப்ளாக்மெய்ல்', ‘அந்தாதூன்', ‘மன்மர்ஸியான்', ‘கேதர்நாத்', ‘ஃபேனிகான்' போன்ற மனதை மயக்கும் ஆல்பங்களுக்கு சொந்தக்காரர். தமிழுக்கும் இசையமைக்க வரும் அமித் த்ரிவேதியுடன் பேசினேன்.

``எல்லாப் பேட்டிகளிலும், ‘நான் இசையமைப்பாளர் ஆவேன் எனக் கனவிலும் நினைக்கவில்லை’ என்றே கூறுகிறீர்கள். அப்புறம் எப்படி அந்த இனிய விபத்து நிகழ்ந்தது?’’

‘‘நிஜமாகவே இசையமைப்பாளர் ஆவதெல்லாம் மிகப்பெரிய விஷயம் என்றுதான் என் மனதில் ஆரம்பத்தில் எண்ணமிருந்தது. நம்மால் அந்த இலக்கை அடைய முடியாது. நாமும் அதற்குத் தகுதியான ஆள் இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். என் வாழ்க்கையை மாற்றியது அனுராக் காஷ்யப்தான். ‘தேவ் டி' படத்துக்கு இசையமைக்க அவர் என்னை அழைக்கும்வரை, இசை குறித்த என் பார்வையே முற்றிலும் வேறு. ‘ஓம்' என்ற பேண்டில் நானும் அங்கமாக இருந்தேன். சினிமா அல்லாத ஆல்பங்களில் ஆர்வம் காட்டினேன். நூற்றுக்கணக்கான ஜிங்கிள்ஸ் எனப்படும் விளம்பரங்களுக்கு இசையமைத்தேன். அவ்வளவுதான் நம் இசை கரியர் என வாழ்ந்துகொண்டிருந்தேன். பாடகியான என் தோழி ஷில்பாராவ், இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அனுராக்கே என்னை அழைத்தார். மிகவும் தயக்கத்தோடு இருந்த என்னை அவர் அணுகிய விதம் ஆச்சர்யமாக இருந்தது. பாலிவுட் என்றால் பிரமாண்டம் என்ற நினைப்பையே மாற்றினார். அந்த ட்ரெண்ட் செட்டிங் படத்தில் என் பங்களிப்பை அவர் உறுதி செய்தவிதம், ஒரு நல்ல ஆசிரியரைச் சந்தித்த மாணவன் பெற்ற அனுபவம் போல இருந்தது. ரொம்பவே மெனக்கெட்டு 18 பாடல்களை அந்தப் படத்துக்காகப் போட்டுக் கொடுத்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜானர். 2008-ல் தாமதமாக ரிலீஸான அந்தப் படத்துக்கு முன்பே அனுராக் காஷ்யப் என்னை ராஜ்குமார் குப்தாவின் ‘ஆமிர்' படத்துக்குப் பரிந்துரை செய்தார். ஆனாலும் ‘தேவ் டி' அதே ஆண்டு ரிலீஸாகி என்னை ஓர் இரவில் முக்கியமான இசையமைப்பாளர்கள் பட்டியலில் சேர்த்தது. சத்தியமாக அவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என நானே நினைக்கவில்லை. தேசிய விருது உட்பட 13 விருதுகள் எனக்குக் கிடைத்தன. அதன் பிறகு இன்றுவரை ரிலே ரேஸ்போல் ஓடிக்கொண்டிருக்கிறேன்!’’

``2008-லிருந்து ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். பாலிவுட்டில் நீங்கள் மட்டும் தனித்துத் தெரிகிறீர்களே... எப்படி?’’

‘‘ அதற்கு எனக்குக் கிடைத்த இயக்குநர்கள்தான் காரணம். விக்ரமாதித்ய மோத்வானே, அனுராக், ராஜ்குமார் குப்தா என சினிமாவை இன்னொரு வடிவத்தில் அணுகும் நபர்களிடம் நான் ஆரம்பக் கட்டத்தில் வேலை பார்த்ததன் தாக்கம் இன்னும் இருக்கிறது. ஒருவேளை மசாலா படங்களில் அறிமுகமாகியிருந்தால், இந்நேரம் காணாமல் போயிருப்பேன்.

நான் திட்டமிடாமலே கதையம்சம் உள்ள, பட்ஜெட் அதிகம் தேவைப்படாத படங்களுக்கே இசையமைப்பதால், ஓர் எளிமை என் இசைக்குள் வந்துவிட்டதாய் நினைக்கிறேன். மெலோடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் நிறைய பண்ணிவிட்டேன். எனக்கும் பிரமாண்டமான படங்களுக்குப் பண்ண ஆசைதான். ‘பாம்பே வெல்வெட்' போல சில படங்களுக்குப் பண்ணினேன். 50-60களில் கோலோச்சிய ஜாஸ் வடிவத்தை அந்தப் படத்துக்காகப் பயன்படுத்தினேன். இன்றும் உலகம் முழுவதும் யாராவது தொடர்புகொண்டு அதை வியக்கிறார்கள். தெலுங்கில் சிரஞ்சீவி சாருக்காக ‘சை ரா நரசிம்ம ரெட்டி' அப்படிப் பண்ணியதுதான். நானி நடிப்பில் ‘வி' என்ற ஆக்‌ஷன் மூவிக்கு இசையமைத்தேன். பரிசோதனை முயற்சிகள் அவை. எல்லாவற்றையும்விட ‘அந்தாதூன்' போல கதையம்சம் உள்ள ஒரு படத்துக்கு இசையமைக்கும்போது சிறப்பான இசை வெளிவந்துவிடுகிறது. காரணம், படத்தில் வரும் அந்தப் பியானோ கலைஞன் நானேதான்!என் இசையால் இயக்குநர் நினைக்கும் உணர்வுகளைக் கொண்டுவருவதே எனக்கான சவால். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதுப்புது ஓசைகள் பேட்டர்ன்களாக இசையில் உலகம் முழுவதும் வந்துவிடுகின்றன. அந்த ஓட்டத்தில் இணைந்து விடுகிறேன். சவாலான பணிதான். ரசித்துச் செய்வதால் தாக்குப்பிடித்து ஓட முடிகிறது.’’

``உங்கள் இசை மிக நுணுக்கமானது என எல்லோருக்கும் தெரியும். நீங்கள் ஒரு படத்துக்கு இசையமைக்கும் முறையைப் பற்றிச் சொல்ல முடியுமா?’’

‘‘ஒரு படத்தின் கதையைக் கேட்டபிறகே கமிட் ஆவேன். அந்தக் கதை என்னை எந்த உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறது என ஒருநாள் முழுவதும் யோசிப்பேன். ‘அந்தக் கதை என்முன் நிகழ்ந்தால் என் மனதில் என்னென்ன உணர்வுகள் வரும், படத்தின் கேரக்டர்களை சந்திக்கும்போது என்னவெல்லாம் நினைப்பேன்’ என யோசிப்பேன். உதாரணத்துக்கு விக்ரமாதித்யா இயக்கிய ‘லூட்டேரா' படத்தின் கதையைக் கேட்டவுடன் மேற்கு வங்காளம் மனக் கண்ணில் விரிந்தது. 60களில் நடக்கும் கதை என்பதால் எஸ்.டி.பர்மனை வீடு முழுவதும், காரில் பயணிக்கும்போதும், எல்லா நேரங்களிலும் என்னைச் சுற்றிக் கசிய விட்டேன். கிட்டத்தட்ட அவர் இசையைக் கேட்டுக் கேட்டு ஒரு ஜென் நிலைக்குப் போனபிறகே கீபோர்டு முன் உட்கார்ந்தேன். ‘காதல்-களவு' போன்ற சம்பந்தமில்லாத இரண்டு விஷயங்கள் என்ன மாதிரியான கம்பிக் கருவிகளைக் கேட்கும் என யோசித்துப் பயன்படுத்தினேன். நம்ப மாட்டீர்கள், அரை நாளில் பாடல்களுக்கான வேலை முடிந்தது. அப்புறம் முக்கியமான ஒரு விஷயம். இசையமைக்கும் நேரம் தவிர மீதி நேரங்களில் குடும்பத்தோடு இருப்பேன். அப்போது இசையைப் பற்றி யோசிக்கவே மாட்டேன். அதுவே என் சக்சஸ் பார்முலா!’’

அமித் த்ரிவேதி
அமித் த்ரிவேதி

``தமிழ் இசையின் ரசிகராமே நீங்கள்... நிஜமா?’’

‘‘ஆமாம். நான் இளையராஜாவின் வெறித்தனமான ரசிகன். இளையராஜா என் லைஃப். ஏ.ஆர்.ரஹ்மான் என் லவ். கல்லூரி நாள்களில் என் இசை கேட்கும் ஆர்வத்துக்குத் தீனி போட்டவர்கள் இவர்கள்.

ராஜா, ரஹ்மான்... இருவரின் இசையையும் ஆத்மார்த்தமாகக் கேட்கும் யாருமே இசையமைப்பாளராகலாம். நானே சாட்சி. அந்த அளவுக்கு அவர்கள் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். ராஜா சாரின் பாடல்களை அவ்வப்போது ‘டியர் ஸிந்தகி' போன்று என் படங்களில் பயன்படுத்தவும் செய்தேன். நம் காலத்தில் வாழும், நாம் இன்னும் இன்னும் கொண்டாடவேண்டிய மேதை ராஜா சார்!’’

``ரஹ்மான் என் லவ் என்றீர்களே... அவருடன் பழகிய அனுபவம் பற்றிச் சொல்ல முடியுமா?"

‘‘பணிவு என்பதன் அர்த்தம் ரஹ்மான் சார் தான். மும்பையில் சந்தித்தபோது தயக்கத்தோடு அவரிடம் பேசினேன். ‘உன் இசை நல்லா இருக்கு. யுனிக் சவுண்ட். நான் அடிக்கடி கேட்பேன்' என்று சொல்லித் திக்குமுக்காட வைத்தார். ரஹ்மான் சார் எல்லா ‘வுட்’டுக்கும் இசையமைக்கும் அசாத்திய ஞானமுள்ளவர். அவர் பாராட்டியதே பெருமை. இன்றும் என்னோடு டச்சில் இருக்கிறார். இவர்கள் தவிர தமிழில் ஜி.வி.பிரகாஷ், யுவன், அனிருத் இசை எனக்கு ரொம்பவே பிடிக்கும்!’’

அமித் த்ரிவேதி
அமித் த்ரிவேதி

``உங்களுக்கு தனுஷை ரொம்பப் பிடிக்குமாமே?’’

‘‘அவருடைய ‘ராஞ்சானா’, ‘ஷமிதாப்’ என் பெரு விருப்பங்கள். கேரக்டராகவே மாறும் மெத்தட் ஆக்டிங் செய்கிறார். சில தமிழ்ப் படங்கள் பார்த்திருக்கிறேன். ‘ஆடுகளம்' எனக்கு ரொம்பப் பிடித்த படம். தேர்ந்த நடிகர். ‘The Extraordinary Journey of The Fakir’ ஹாலிவுட் படத்திலேயே அவருடன் சேர்ந்து வேலை பார்ப்பேன் என நினைக்கவில்லை. அந்தப் படத்துக்கு மூன்று பாடல்களை சென்னையில் ரஹ்மான் சார் ஸ்டூடியோவில்தான் கம்போஸ் செய்தேன். அதிலும் தமிழ் வெர்ஷன். அப்போது தனுஷுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்டார் என்ற பந்தா துளியும் இல்லாத மனிதர். இப்போது நல்ல நண்பராகிவிட்டார். இன்னும் உயரங்கள் தொடப்போகும் நல்ல நடிகர்!’’

``தமிழுக்கு முழுமையாக எப்போது வருகிறீர்கள்?’’

‘‘தமிழும் தமிழ்க் கலாசாரமும் வியக்க வைப்பவை. தமிழ் ரசிகர்கள் ரசனை மிகுந்தவர்கள். என்னுடைய மிகச் சிறந்த இசையைக் கொடுக்க இங்கு வர வேண்டும். நல்ல புராஜெக்ட்டுகளுக்காக வெயிட்டிங். நடிகரும் இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் ‘பாரிஸ் பாரிஸ்' படத்தின் மூலம் தமிழுக்கு என்னை அழைத்து வந்திருக்கிறார். இந்தியில் நான் பண்ணிய ‘குயின்' படத்தின் ரீமேக் என்றாலும், தமிழுக்காக இசையமைப்பில் நிறையவே மாற்றியிருக்கிறேன். நல்ல ரீச். நிறைய கதைகள் தமிழிலும் மலையாளத்திலும் கேட்கிறேன். நேரம் ஒதுக்கி விரைவில் வருவேன்!’’