Published:Updated:

கானா பாடினேன்; காதல் வந்தது!

மணி தன் ‘சென்னைக்குரலில்’ பாட ‘வாசொன்னே இன்னாபின்னே...’ என்று நண்பர்கள் கோரஸ் பாட, களைகட்டுகிறது திரு.வி.க நகர்!

பிரீமியம் ஸ்டோரி

பளபளப்புக்கும் பரபரப்புக்கும் பேர்போன தேனாம்பேட்டை அண்ணா சாலையை ஒட்டியிருக்கிறது திரு.வி.க நகர்.

கூவத்தின் வாடையும் குப்பைகளுமாக நிறம் மங்கியிருக்கும் அந்நகரின் முகப்பிலிருந்து எந்நேரமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது கானா.

“இதோ இந்த மூடின கிணறு இருக்குல்ல... இதுதான் எங்க ஸ்டூடியோ... பல பாட்டுகள் இங்கதான் தலைவா உருவாகியிருக்கு...” என்றபடி உடனிருக்கும் கலைஞர்களை அறிமுகம் செய்கிறார் மணி. ‘தேனாம்பேட்டை போட்டி கானா மணி’ என்றால் பலருக்கு முகம் மலரும். கம்பீரக் குரலில் பாடும் பிரபல கானாப் பாட்டுக்காரர். நடிகர் ஆதியோடு இணைந்து மணி பாடிய ‘நியூ இயர்’ பாட்டும், மணி எழுதி டான்ஸ் மாஸ்டர் சாண்டி பாடிய ‘என்னங்க நடக்குது நாட்டுல’ என்ற கொரோனாப் பாட்டும் செம வைரல். மணிக்கு அடையாளம் ‘போட்டி கானா’. சாவு வீடோ, கல்யாண வீடோ இரண்டு கானாப் பாடகர்கள் அமர்ந்து பாடத் தொடங்கினால் ஒருகட்டத்தில் அனல் பறக்கும். பாட்டை, குரலை, ஆளைக் கேலி செய்து ஒருவருக்கொருவர் பாட, இரு பக்கமும் அணிதிரண்டு அடிதடிகூட ஆகிவிடும்.

கானா பாடினேன்; காதல் வந்தது!

“போட்டி கானாங்கிறது விளையாட்டாப் பாடுறது. பாட்டுல இட்டுக்கட்டி சண்டை போட்டுக்கிட்டாலும் நிகழ்ச்சி முடிஞ்சபிறகு தோள்ல கைபோட்டுக்கிட்டு மாமா, மச்சான்னு பேசிக்கிட்டுப் பிரிவோம். இது ஒருகட்டத்துல நிறைய எதிரிகளை உருவாக்கிருச்சு. இனிமே போட்டியே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டு இப்போதான் தலைவா சரியான பாதையில போய்க்கிட்டிருக்கேன்” என்று சொல்லும் மணி, 9 வயதில் கானா பாடத் தொடங்கியிருக்கிறார்.

கானா பாடினேன்; காதல் வந்தது!

“எங்க தாய்மாமா கானாப்பாட்டு ஆர்வலர். ஆயிரம்விளக்கு செல்வம், புண்ணியர் பாட்டையெல்லாம் போட்டுக் கேட்டுக்கிட்டிருப்பார். அப்படித்தான் எனக்கு கானா அறிமுகம். அந்த வயசுலயே சினிமாப் பாட்டுகளை வார்த்தை மாத்திப் பாடப் பழகிட்டேன். அந்தக் காலத்துல நாட்டுப்புறப் பாட்டு மாதிரிதான் கானாவும். எந்தப் பாட்டை யாரு வேணும்னாலும் பாடலாம். பொதுச்சொத்து மாதிரி. யாராவது சாகப்போறாங்கன்னு தெரிஞ்சா, ‘எப்படா முடியும்’ன்னு உக்காந்திருந்து, செத்தவுடனே பசங்களைக் கூட்டிக்கிட்டுப் பாடப் போயிருவேன். ஒரு கட்டத்துல தேடிவந்து கூப்பிட ஆரம்பிச்சாங்க. கூட்டிக்கிட்டுப் போறவர் துட்டு வாங்கிக்கிட்டு, நமக்கு டீ, போண்டா வாங்கிக்குடுத்து அனுப்பிருவார். அப்படித்தான் ஆரம்பிச்சுச்சு.

குடும்பத்துடன் மணி
குடும்பத்துடன் மணி

வாரத்துக்கு நாலஞ்சு சாவு விழுந்தாலும் பிழைப்பு இதுதான்னு சொல்ல வருமானமில்லை. குடும்பத்துல 7 புள்ளைங்க. அப்பா திடீர்ன்னு காணாமப்போயிருவார். ஆளைக் காணும்னு பேப்பர்ல விளம்பரமெல்லாம் கொடுத்திருக்கோம். திடீர்ன்னு ஒருநாள் வீட்டுல வந்து நிப்பார். கைநிறைய பணம் கொண்டு வர்றதால அம்மா ‘எங்கே போனீங்க’ன்னுகூடக் கேக்காது. இப்படித்தான் எங்க வாழ்க்கை. படிப்பு ஏறலே. ஹவுஸ் கீப்பிங் வேலைக்குப் போனேன். கார்ப்பரேஷன்ல குப்பை அள்ளுனேன். ஆபீஸ்பாய் வேலை பாத்தேன். எல்லாம் ஒவ்வொரு வருஷம்தான். ஆனா எல்லாக்காலத்திலயும் கானா மட்டும் கூடவே வந்துச்சு. கூட, காதலையும் தந்துச்சு.

ரோஸிக்கு எஸ்.எம் நகர்ல வீடு. அங்கெல்லாம் போயி நாம பாடுறதுண்டு. பாட்டுல மயங்கிருச்சு ரோஸி. காதல் பத்திக்கிச்சு. தேனாம்பேட்டை ‘பேனா’ பிரேம்ஜி அண்ணன் பாட்டு எழுதித் தருவார். நான் பாடுவேன். அந்த நேரத்துலதான் நிறைய லவ் சாங்க் பாடுனேன். எல்லாத்திலயும் ரோஸிதான் ஹீரோயின். யூடியூப் வந்தபிறகு, அதுல பாட்டுப் போட்டாதான் கானா பாடுறவன்னு ஆகிப்போச்சு. ஆனா, ரெக்கார்டிங், இன்ஸ்ட்ரூமென்ட் செலவுன்னு நிறைய தேவைப்படும். ரோஸிதான் வீட்டுக்குத் தெரியாம சீட்டுப் போட்டு பணம் தருவா. அப்போ போட்டதுதான் ‘நான் ஒரு ஏடாகூடம்’ பாட்டு. அதுதான் இன்னிவரைக்கும் நமக்கு அடையாளம்” - அதே வீச்சில், கச்சா டோலக்கைத் தட்ட, அந்தப் பாட்டைப் பாடிக்காட்டுகிறார் கானா மணி.

கானா பாடினேன்; காதல் வந்தது!

திருமணத்துக்கு வீட்டில் எதிர்ப்புக் கிளம்ப, இரண்டு பேரும் எஸ்கேப் ஆகி நண்பர்கள் உதவியுடன் திருமணம் முடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள், காவ்யா, இசை, ரிதம்...

“தொடக்கத்துல நண்பர்களோட யூடியூப் சேனல்களுக்குப் பாடிக்கொடுத்தேன். பிறகு நானே ‘போட்டி கானா’ன்னு ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு பாட்டுப்போட ஆரம்பிச்சேன். லட்சக்கணக்குல ஃபாலோயர்ஸ் வந்தாங்க.

இப்போ முழுநேரமும் கானாதான். பெரிய பெரிய மேடைகளெல்லாம் கிடைக்குது. சினிமாவுலயும் பாடியாச்சு... மாசத்துக்கு ரெண்டு மூணு கச்சேரிக்குப் போயிட்டு வந்தாலே போதும்னு இருக்கு. தம்மாத்துண்டு வீடாயிருந்தாலும் புள்ளைகளை ஏசி போட்டுத் தூங்கவைக்க முடியுது. இதோ இந்தப் புள்ளிங்கல்லாம் எப்பவும் அண்ணன், தம்பி, மச்சான், மாமான்னு கூட நிக்குதுங்கோ... அதுங்க கொடுக்கிற உற்சாகமும் தைரியமும்தான் நம்மை அடுத்து அடுத்துன்னு ஓடவைக்குது. விடிஞ்சா இந்தக் கிணத்தடியில உக்காந்து, நண்பர்கள்கூட பேசிக்கிட்டே ரெண்டு மூணு டியூன் போட்டு பாட்டு எழுதிருவோம். கச்சேரின்னா கூட்டமாக் கிளம்பிருவோம். வாழ்க்கை சிறப்பா போய்க்கிட்டிருக்கு...”

உற்சாகமாகச் சொல்கிறார் மணி. கச்சா டோலைத் திருப்பி வாசிக்க

‘வா மச்சான் ஒண்ணா சேந்து கொண்டாடலாமா

கஷ்டத்தைக் கால்ல போட்டுப் பந்தாடலாமா

விட்டுக் கொடுத்துப் பேசமாட்டோம்

சாதி மதம் பாக்க மாட்டோம்

மச்சான்னு தோளுமேல கையதான் போட்டோம்

பிகரு வந்து ப்ரபோஸ் பண்ணா

பிரண்டை விட்டுக் கொடுத்து ஏத்துக்கமாட்டோம்”

மணி தன் ‘சென்னைக்குரலில்’ பாட ‘வாசொன்னே இன்னாபின்னே...’ என்று நண்பர்கள் கோரஸ் பாட, களைகட்டுகிறது திரு.வி.க நகர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு