
#Motivation
இந்தியாவின் மிகவும் வயது குறைந்த மேயர் என்ற வரலாற்றுப் புகழுடன் கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் மேயராகப் பதவி ஏற்றிருக்கிறார் 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன். 100 கவுன்சிலர்களை கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் 54 கவுன்சிலர்களின் வாக்குகளோடு சமீபத்தில் பதவிப்பிரமாணம் எடுத்த ஆர்யா, வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். அவள் விகடனுக்காக ஆர்யாவை சந்தித்தபோது, தேர்ந்த அரசியல் வாதியாகப் பொறுமையுடன் பதிலளித்தார் ஆல் செயின்ட் கல்லூரியின் இந்த பி.எஸ்ஸி இரண்டாம் ஆண்டு மாணவி.
இன்று நாடே திரும்பிப் பார்க்கும் ஆர்யா ராஜேந்திரன், நேற்றுவரை யார்?
அப்பா எலெக்ட்ரீஷியன், அம்மா எல்.ஐ.சி ஏஜென்ட். இருவரும் நீண்ட நாள்களாக சி.பி.எம் (CPI - The Communist Party of India (Marxist) கட்சியில் இருக்கிறார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே அப்பாவோடு கட்சிக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். சி.பி.எம் கட்சியின் குழந்தைகள் அமைப்பான பாலசங்கத்தில், ஐந்தாம் வகுப்பிலிருந்து பங்குபெற்று வருகிறேன். கல்லூரியில் சேர்ந்த போது, சி.பி.எம்மின் மாணவ அமைப்பான எஸ்.எஃப்.ஐ (SFI - Students Federation of India)-ல் உறுப்பினராகச் சேர்ந்து பணியாற்றினேன். அது, தேர்தல் நேரத்தில் மக்களை சந்திப்பதில் எனக்குக் கைகொடுத்தது.

21 வயதில் கேரளத் தலைநகருக்கு மேயர்... எப்படி உணர்கிறீர்கள்?
மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. எதிர்க்கட்சியையும் இணைத்துக் கொண்டு, மக்களின் பங்களிப்பையும் பெற்று அனைத்துச் செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். 100 வார்டும் எனது வார்டு என்ற பொறுப்புடன், செய்ய வேண்டிய பணிகள் எல்லாம் இப்போதே மூளையில் ஓடத்தொடங்கிவிட்டன.
கல்லூரிப் படிப்பு, கட்சிப் பொறுப்பு, மேயர் பதவி... மூன்றையும் எப்படி நிர்வகிப்பீர்கள்?
ஏற்கெனவே கல்லூரிப் படிப்புடன் இயக்கப் பணிகளையும் செய்துகொண்டு தானே இருந்தேன்... அதுபோல, இப்போது மேயர் பதவிக்கான கடமைகளையும் சேர்த்து செய்வேன். மல்ட்டி டாஸ்க்கராக சிறப்பாகச் செயலாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
கல்லூரி திறந்த பிறகு, வகுப்பறையில் இருக்கும் அதே நேரம், மேயர் இருக்கையிலும் அமர வேண்டுமே?
என் ஆசிரியர்களின் ஆதரவு எனக்கு எப்போதும் கிடைக்கும். அதனால்தான் பள்ளி, கல்லூரியில் படித்துக்கொண்டே அமைப்புகளிலும் என்னால் செயல்பட முடிந்தது. அதேபோல இப்போதும் ஆசிரியர்களும் கல்லூரி நிர்வாகமும் என் அரசியல் செயல்பாடுகளுக்கு எனக்குத் துணையாக இருப்பார்கள். ஜனவரி 4-ம் தேதி எனக்குக் கல்லூரி திறக்கிறது. கவுன்சிலுக் குப் போக வேண்டிய நேரத்தில் அங்கு இருப்பேன்.

நீங்கள் மேயர் ஆவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா?
நிச்சயமாக இல்லை. எனக்கு 21 வயது ஆனபோது, கவுன்சிலராகப் போட்டியிட வேண்டும் எனக் கட்சி கூறியது. இயக்கப் பணிகளைச் சிரத்தையுடன் செய்யும் ஒரு சகாவுக்கு (தோழருக்கு), கட்சி வழங்கிய வாய்ப்பு அது. கட்சி விரும்பியபடி வெற்றியும் பெற்றேன். மக்கள் விரும்பும்படி செயல்பட வேண்டும் என்ற அறிவுரையுடன் இப்போது மேயர் என்ற அங்கீகாரத்தை கட்சி அளித்துள்ளது.

கேரள உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் இம்முறை இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் வழிவிட்டது அரசியல் மாற்றத்துக்கான தொடக்கமா?
உள்ளாட்சித் தேர்தலில் சி.பி.எம் கூட்டணியில்தான் அதிகளவு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் போட்டியிட்டார்கள். கட்சியில் மூத்தவர்களின் இயக்கப்பணி அனுபவங்களும், இளைஞர்களின் வேகமும் இணையும்போது ஒரு நல்ல நிர்வாகத்தைக் கொடுக்க முடியும். இளைஞர்களும் இளம்பெண்களும் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர் களாக, அரசியலின் அங்கமாக மாற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். மாறுவோம், மாற்றுவோம்.

மேயராக உங்கள் முதல் பணி என்னவாக இருக்கும்?
எங்கள் எல்.டி.எஃப் (The Left Democratic Front - LDF) கூட்டணிக்கு மாநகரத்துக்கான நலத்திட்டங்கள் குறித்த பல சிந்தனைகள் உண்டு. மக்களுக்கு முதலில் செய்ய வேண்டிய பணி பற்றி ஆலோசித்து, அதற்கான திட்டத்தை செயல்படுத்துவோம். ஒரு மாணவியாக நான் கருதும் முதல் பிரச்னை, குப்பைகள். குப்பை இல்லாத நகரமாகத் திருவனந்தபுரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.
வாழ்த்து..?
காங்கிரஸ் தலைவர் சசிதரூர், அதானி குரூப்பின் சேர்மன் கௌதம் அதானி என்று பலரும் சமூக வலைதளத்தில் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். நடிகர் மோகன்லால் போன் செய்து வாழ்த்தினார். மிகவும் சாதாரணமாக, ஒரு குழந்தை மனதின் எளிமையோடு பேசினார். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்துகொண்டே இருக்கின்றன.
ஊரில் என்ன சொல்கிறார்கள்?
‘முடவன்முகலில் மோகன்லாலின் வீடு இருப்பதால், இதுவரை அவர் பெயராலேயே அது அறியப்பட்டது. இப்போது, ‘இந்தியாவின் மிகவும் வயது குறைந்த மேயரின் ஊர்’ என அறியப்படும்போது, அதற்குக் காரணமான, வாக்களித்த மக்களுக்கு அது பெருமையாக உள்ளது.
21 வயது இளம்பெண்ணால் மேயர் பதவியை வகிக்க முடியுமா என்ற நெட்டிசன் களின் விமர்சனங்கள் பற்றி..?
விமர்சனம் மட்டுமா... மீம்ஸ்வரை பகிர்கிறார்கள். வயது ஒருவரின் திறமைக்கான அளவுகோல் இல்லை. மேலும், கல்லூரி, வீடு என்றிருக்கும் மாணவி இல்லை நான். சிறுவயது முதலே இடதுசாரி அமைப்பில் இருந்து வந்து, இப்போது பாலசங்கத்தின் மாநிலத் தலைவராகவும், எஸ்.எஃப்.ஐ-யின் மாநிலக் குழு உறுப்பினராகவும் இருக்கிறேன். இந்த 21 வயதில் எனக்குக் கிடைத்திருக்கும் கள அனு பவங்கள் நிறைய. மேயர் பதவியில் இன்னும் கற்றுக்கொண்டே, சிறப்பாகச் செயலாற்றுவேன்.