Published:Updated:

“சமகாலத்தை எழுதாதவர் இலக்கியவாதியே கிடையாது!!”

இமையம்
பிரீமியம் ஸ்டோரி
இமையம்

வாழும் காலத்தை, வாழும் சமூகத்தை, வாழும் இடத்தைப் பதிவு செய்வதுதான் என் எழுத்தின் நோக்கம்.

“சமகாலத்தை எழுதாதவர் இலக்கியவாதியே கிடையாது!!”

வாழும் காலத்தை, வாழும் சமூகத்தை, வாழும் இடத்தைப் பதிவு செய்வதுதான் என் எழுத்தின் நோக்கம்.

Published:Updated:
இமையம்
பிரீமியம் ஸ்டோரி
இமையம்
‘செல்லாத பணம்’ நாவலுக்காக 2020-ம் ஆண்டுக்கான ‘சாகித்ய அகாடமி விருது’ எழுத்தாளர் இமையத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருது அறிவிப்பு வந்த நாளில்தான் இமையத்தின் சகோதரர் கணேசன், திட்டக்குடி தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்த இமையத்திடம் பேசினேன்.

“விலங்குகள் தற்கொலை செய்துகொள்வதோ மற்றவர்கள்மீது தீ வைப்பதோ இல்லை. ஆனால், அவை மனித இனத்தில் நடக்கின்றன. காதல் திருமணம் செய்துகொள்கிற ஒரு பெண் ஏன் அல்லலுறுகிறாள், அவள் ஏன் தற்கொலையை நாடுகிறாள் என்பதைச் சொல்வதுதான் ‘செல்லாத பணம்’ நாவல். காதலே எப்படிக் கொலைக்கருவியாக மாறுகிறது என்பதைச் சொல்லும் படைப்புக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 1994-ல் ‘கோவேறு கழுதைகள்’ நாவல் வெளியானபோதே எனக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதற்குப் பிறகு பலமுறை என் பெயர் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் வந்தன. தாமதமாக அளிக்கப்பட்டாலும் விருது, மகிழ்ச்சி அளிக்கிறது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்குப் பிறகு சாகித்ய அகாடமி விருது பெறும் இரண்டாவது திராவிட இயக்க எழுத்தாளர் நான். இந்த விருதைத் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறேன்.”

இமையம்
இமையம்

``உங்கள் எழுத்தின் நோக்கம் எது என்று நினைக்கிறீர்கள்?’’

“வாழும் காலத்தை, வாழும் சமூகத்தை, வாழும் இடத்தைப் பதிவு செய்வதுதான் என் எழுத்தின் நோக்கம். அதுதான் நல்ல எழுத்து என்று நினைக்கிறேன்.”

“சமகாலத்தை எழுதுவது இலக்கியம் அல்ல என்ற கருத்து இருக்கிறதே?”

“சமகாலத்தை எழுதாதவர் இலக்கியவாதியே கிடையாது என்று நான் சொல்கிறேன். உங்களுக்கு முந்தைய காலம் எப்படி இருந்தது என்று தெரியாது. வருங்காலம் எப்படி இருக்கும் என்றும் தெரியாது. அப்படியானால் நீங்கள் வாழும் காலத்தை எழுதுவதுதானே நேர்மையானது? உலகின் சிறந்த இலக்கி யங்கள் சமகாலத்தை எழுதியவைதான்!”

“தி.மு.க அடையாளத்துடன்தான் நீங்கள் நவீன இலக்கிய விழாக்களிலும் தோன்றுகிறீர்கள். அதற்கு என்ன எதிர்வினை இருக்கிறது?”

“திராவிட இயக்கத்துக்காரன் என்றால் இழிவாகப் பார்க்கும் மனநிலை நவீன இலக்கியவாதிகளிடம் இருக்கிறது. ஆனால் நான் அந்த அடையாளத்தைப் பெருமையாகத்தான் பார்க்கிறேன். எல்லோரும் படிக்க வேண்டும், பொதுப்பாதையில் நடக்க வேண்டும், அனைவருக்கும் அர்ச்சகராகவும் வழிபடவும் உரிமை வேண்டும் என்று வலியுறுத்திய இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனக்குப் பெருமைதான். ஆதிதிராவிட மாணவர்களுக்கு முதன்முதலில் விடுதியை ஏற்படுத்தியது நீதிக்கட்சி. அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். கணியன் பூங்குன்றனார், வள்ளுவர், கண்ணகி என்று இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது திராவிட இயக்கம்தானே! மார்க்சிய எழுத்தாளர், பெண்ணிய எழுத்தாளர், தலித் எழுத்தாளர் என்றால் புனிதம், திராவிட இயக்க எழுத்தாளர் என்றால் கேவலமா?”

“ஆனால் திராவிட இலக்கியம் என்பது வெறும் பிரசாரம்தான் என்ற கருத்து இருக்கிறதே?”

“மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல்கூட பிரசாரம்தான். அதைப் புறக்கணித்துவிடுவீர்களா? ‘கம்யூனிச எழுத்தாளர்களை ஒப்புக்கொள்வீர்கள், திராவிட இலக்கியத்தை ஏற்க மாட்டீர்கள்’ என்பது என்ன நியாயம்? எத்தனை பேர் எஸ்.எஸ்.தென்னரசு உள்ளிட்ட திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்திருக்கிறார்கள்? பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ சிறந்த இலக்கியம். அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்’ சிறந்த இலக்கியம். பல நவீன இலக்கியங்களைவிட கலைஞரின் ‘பராசக்தி’ வசனம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதே, அதை இலக்கியம் இல்லை என்பீர்களா?”

“திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் புதுமைப்பித்தனுக்குச் சிலையில்லை. மௌனி, சுந்தர ராமசாமி போன்ற நவீன எழுத்தாளர்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்ற விமர்சனம் இருக்கிறதே?”

“முதலில் மௌனி சிறந்த எழுத்தாளரே இல்லை. புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமியை வைத்து இந்தக் குற்றச்சாட்டை எழுப்புபவர்கள் ஏன் மார்க்சிய எழுத்தாளர்களை அந்தப் பட்டியலில் சேர்ப்பதில்லை? சிறந்த கவிஞரான பாரதிதாசனுக்கு எத்தனை சிலைகள் இருக்கின்றன? எழுத்தாளர் களுக்குச் சிலை வைப்பது அரசின் கடமையில்லை. வேண்டுமானால் சிறந்த இலக்கியங்களைப் பள்ளி மாணவர்களுக்கு அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம்.”

“சமகாலத்தை எழுதாதவர் இலக்கியவாதியே கிடையாது!!”

“திராவிட இயக்க அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் ஏன் தலித் இலக்கியம், தலித் எழுத்தாளர் என்ற அடையாளத்தை மறுக்கிறீர்கள்?”

“சாதி, மத அடையாளம் தேவையில்லை என்று நினைக்கிறேன். தமிழ் பொது அடையாளம். அந்த அடையாளத்தில் இருப்பதுதான் நல்லது.”

“வாசிப்புப் பழக்கம் குறைந்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா?”

“இல்லை. அதிகரித்திருக்கிறது என்றே நினைக்கிறேன். 1980-களில் புத்தகங்கள் எத்தனை பிரதிகள் விற்றன, இப்போது எத்தனை விற்கின்றன என்று பாருங்கள். படிக்கிற மாதிரி எழுதுவது முக்கியம். அதை விட்டுவிட்டு ‘வாசிப்பு குறைந்திருக்கிறது’ என்று குற்றம் சாட்டுவது சரியில்லை. புத்தகங்களின் உருவாக்கமும் உள்ளடக்கமும் மேம்பட வேண்டும்.”

“புதிதாக எழுத வருபவர்களுக்கும் வாசிக்க வருபவர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

“எழுதுவதற்கு முன்பு படியுங்கள். உடனடியாக எழுத வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களை அழவைப்பதை, சிரிக்கவைப்பதை, நீங்கள் வாழும் காலத்தை, சமூகத்தை எழுதுங்கள். உங்கள் எழுத்துகளால் உலகம் மாறிவிடும் என்று நினைக்காதீர்கள். மரபு இலக்கியங்களைப் புறக்கணிக்காமல் படியுங்கள். நவீன இலக்கியம்தான் சிறந்த இலக்கியம் என்ற மூடநம்பிக்கையிலிருந்து வெளியேறுங்கள்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism