Published:Updated:

14 வயதில் நாவலாசிரியர்!

திருப்பதியில இருந்து கர்நாடகாவின் கபினி வரைக்கும் ஒரு யானைப்பாதை இருக்கு.

பிரீமியம் ஸ்டோரி
“நான் ஒண்ணாம் வகுப்பு படிக்கும் போது ஆனந்த விகடன்ல உராங் குட்டான் போட்டோ ஒண்ணு பாத்தேன். பாமாயில் கம்பெனிக்காரங்க சுமத்ரா காட்டுல தீ வச்சதால உராங்குட்டான் குரங்குகள் எரிஞ்சு அங்கங்கே விழுந்து கிடந்த போட்டோ. அதுபத்தி அம்மாகிட்ட கேட்டப்ப ‘கம்பெனிக்காரங்க காடுகளை அழித்து பாமாயில் மரங்களை நட இப்படிக் காடுகளை எரிப்பாங்க’ன்னு சொன்னாங்க. ஒரு உராங்குட்டானா வாழ்றது எவ்வளவு கஷ்டம்னு எனக்குப் புரிஞ்சுச்சு. உராங்குட்டானை ஹீரோவா வச்சுதான் நாவலைத் தொடங்கணும்னு ஆசைப் பட்டேன். ஆனா, உராங்குட்டான் மாதிரி புலி சாந்தமாயிருக்காது. எதிர்க்கும். அதனால புலியை மையமா வச்சு எழுதிட்டேன்” - உற்சாகமாகப் பேசுகிறார் ரமண கைலாஷ்.

ரமணாவுக்கு 14 வயதுதான் ஆகிறது. சூழலியல் பற்றியும் வன விலங்குகளின் துயரங்கள் பற்றியும் விரிவாகவும் அக்கறையாகவும் பேசுகிறார். பாமாயில் சாகுபடிக்காக சுமத்ரா காடுகள் கரியாக்கப் படும் சம்பவத்தை ‘Fire Of Sumatra’ என்ற பெயரில் 198 பக்க நாவலாக எழுதியிருக்கிறார்.

14 வயதில் நாவலாசிரியர்!

“சின்ன வயசுல இருந்தே விலங்குகள், காடுகள் மேல ஆர்வம் உண்டு. மூணாவது படிக்கும்போது பிளாக்ல எழுத ஆரம்பிச்சுட்டேன். அம்மா நிறைய புத்தகங்கள் வாங்கித் தருவாங்க. சுமத்ரா காடுகள் அழிக்கப்படுறது பத்தி நிறைய படிச்சேன். காட்டை எரிக்கும் போது பல நூறு கிலோ மீட்டருக்கு அது பற்றிப் பரவிடும். சின்னச் சின்ன உயிர்ல இருந்து பேருயிர்கள் வரைக்கும் அந்த நெருப்புக்குத் தப்பமுடியாது. ஏற்கெனவே சுமத்ராவில 400 புலிகள், 75 காண்டாமிருகங்கள்தான் இருக்கு. இதேமாதிரி காட்டெரிப்பு நடந்தா இன்னும் சில பத்து ஆண்டுகள்ல சுமத்ரா காடு விலங்குகளற்ற காடா மாறிடும்...” தேர்ந்த சூழலியல் அறிஞனாகப் பேசுகிறார் ரமணா.

14 வயதில் நாவலாசிரியர்!

“லாக்டௌன் சமயத்தில ஆன்லைன் கிளாஸ் போக மற்ற நேரங்கள்ல சும்மாதான் இருந்தேன். சுமத்ரா காட்டெரிப்பால கஷ்டப்படுற புலிகள் மற்றும் உராங்குட்டான் களோட தவிப்பு பத்தி நாவல் எழுதலாம்னு ஆரம்பிச்சேன். மளமளன்னு முடிஞ்சிருச்சு. இந்த நாவல்ல மூன்று பேருடைய பார்வையில காட்டுத்தீ எரியும். ஒரு ஆண் புலி, ஒரு பெண் புலி, வனத்தைக் காக்க நினைக்கிற சில மனிதர்கள்... மூன்று குட்டிகளைப் பிரிஞ்ச தாய்ப்புலி எவ்வளவு கஷ்டப் படுதுன்னு சொல்லியிருக்கேன். காடுகளை அழிக்காமப் பாதுகாக்க என்னென்ன தீர்வுகள் இருக்கமுடியும்னு என் வயசுக்கேத்த சில ஆலோசனைகளையும் இதுக்குள்ள வச்சிருக்கேன்...” என்கிறார் ரமணா.

14 வயதில் நாவலாசிரியர்!

“இந்த நாவலுக்காகப் புலிகளைப் பத்தி நிறைய விஷயங்களைத் தேடித்தேடிப் படிச்சேன். நிறைய டாக்கு மெண்ட்ரிகள் பார்த்தேன். தியடோர் பாஸ்கரன் சார் மொழிபெயர்த்த ‘கானுறை வேங்கை’ங்கிற புத்தகத்துல புலியோட குணங்கள் பத்தி நிறைய இருக்கும். புலி காதை மடக்கினா என்ன அர்த்தம், வாலை ஆட்டினா என்ன அர்த்தம்னு நிறைய விஷயங்கள் அதன்மூலமா தெரிஞ்சு கிட்டேன். ‘சீக்ரெட் லைஃப் ஆஃப் டைகர்’ங்கிற புத்தகத்தில புலிகளின் குடும்ப அமைப்பு பத்திப் படிச்சேன். இதுல யாரையும் நேரடி வில்லனா சித்திரிக்கலே. இந்த உலகத்துல வில்லன்னு யாருமே இல்லை. எல்லாத்தையும் அந்தந்த இடம்தான் தீர்மானிக்குது. நாவலைப் படிக்கிறவங்களே நல்லவங்க யாரு, கெட்ட வங்க யாருன்னு தீர்மானிச் சுக்க முடியும். தியடோர் பாஸ்கரன் சார் என் நாவலுக்கு முன்னுரை எழுதி யிருக்கார்...” என்கிற ரமணா அடுத்து, யானைகளின் உலகத்துக்குள் பயணப்பட விருக்கிறார்.

குடும்பத்துடன் ரமண கைலாஷ்
குடும்பத்துடன் ரமண கைலாஷ்

“திருப்பதியில இருந்து கர்நாடகாவின் கபினி வரைக்கும் ஒரு யானைப்பாதை இருக்கு. அந்தப்பாதை அபாயகரமானது. வயல்கள், ஓசூர் நெடுஞ்சாலை, நிறைய ரிசார்ட்கள் எல்லாத்தையும் தாண்டிதான் யானைகள் கபினிக்குப் போகணும். யானைகள் அந்தப்பாதையில பயணிக்கும்போது எவ்வளவு கஷ்டப்படுதுங்கிறத வச்சுதான் அடுத்த நாவல் எழுதப் போறேன்...” என்கிறார் ரமணா.

ரமண கைலாஷின் அம்மா ரேவதி, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலராக இருக் கிறார். அப்பா சந்திரசேகரன் ஆடிட்டிங் துறையில் பணிபுரிகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு