Published:Updated:

காட்டை அழிக்கும் அந்நியத் தாவரங்கள்... சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்...

மேற்குத் தொடர்ச்சி மலை
பிரீமியம் ஸ்டோரி
மேற்குத் தொடர்ச்சி மலை

நாங்கள் ஒரேயடியாக அனைத்து அந்நிய மரங்களையும் அகற்றச் சொல்லவில்லை. நீதிமன்ற உத்தரவுகளின்படி குறைந்தபட்ச நடவடிக்கையையாவது இந்த அரசாங்கத்தை எடுக்கச்சொல்கிறோம்.

காட்டை அழிக்கும் அந்நியத் தாவரங்கள்... சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்...

நாங்கள் ஒரேயடியாக அனைத்து அந்நிய மரங்களையும் அகற்றச் சொல்லவில்லை. நீதிமன்ற உத்தரவுகளின்படி குறைந்தபட்ச நடவடிக்கையையாவது இந்த அரசாங்கத்தை எடுக்கச்சொல்கிறோம்.

Published:Updated:
மேற்குத் தொடர்ச்சி மலை
பிரீமியம் ஸ்டோரி
மேற்குத் தொடர்ச்சி மலை

`உலகின் மிகத் தொன்மையான மலைத்தொடரில் ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலை. இதிலிருந்துதான் நூற்றுக்கணக்கான ஆறுகளும், நீர்வீழ்ச்சிகளும் தோன்றி தென்னிந்திய தீபகற்பத்தையே உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. அரியவகைத் தாவரங்கள், விலங்குகள், பாலூட்டிகள், பறவைகள், பூச்சியினங்கள் எனப் பல்லுயிரினக் கருவூலமாகவும் இந்தத் தொடர் திகழ்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதிகள், அந்நிய நாட்டு மரங்களால் அழிவைச் சந்தித்துவருகின்றன’ என்று அபயக்குரல் எழுப்புகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!

தமிழ்நாடு வனப்பகுதிகளிலுள்ள அந்நிய மரங்களை அகற்றக் கோரி தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த ஜூன் 30-ம் தேதி விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அமர்வு, ``அந்நிய மரங்களால் தமிழ்நாட்டிலுள்ள வனப் பகுதிகளுக்கும், வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. எதிர்காலத்தில் சரணாலயங்கள் அழிந்துவிடும் அபாயமும் இருக்கிறது. அந்நிய மரங்களால் உள்நாட்டு மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதைத் தமிழ்நாடு அரசும் ஒப்புக்கொள்கிறது. ஆனால், இது பற்றி அறிக்கை தாக்கல் செய்வதைத் தவிர, தமிழ்நாடு அரசு வேறு என்ன ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்திருக்கிறது... ‘டாஸ்மாக்’போல வருமானம் கொட்டினால்தான் வனத்துறை மீதும் அக்கறை காட்டுவீர்களா?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பியதுடன், ``அந்நிய மரங்களை முழுமையாக அகற்றுவது குறித்து மூன்று வாரங்களில் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ எனவும் உத்தரவிட்டது.

காட்டை அழிக்கும் அந்நியத் தாவரங்கள்... சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்...

அந்நிய மரங்களால் நாட்டு மரங்கள் எப்படி பாதிப்படைகின்றன என்பதை அறிய, ‘லாங்கவுட்’ சோலை பாதுகாப்புக்குழு செயலாளர் கே.கே.ராஜுவைத் தொடர்புகொண்டோம். ``நமது உள்நாட்டு கோலி சோடாக்களை எப்படி அந்நிய ‘கோகோகோலா’ காலிசெய்ததோ, அதைப்போலவே அந்நிய நாட்டு மரங்களும் வேகமாக நமது நாட்டுமரங்களை அழித்துவருகின்றன. அதாவது, உள்ளூர் மரங்களை ஜீரணிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இந்த மண்ணில் இருக்கின்றன. அதேபோல வளப்படுத்தக்கூடிய பாக்டீரியாவும் இந்த மண்ணில் இருக்கின்றன. ஆனால், கற்பூரம் (Cyprus), சீகை (Wattle), யூகலிப்டஸ் (Eucalyptus), பைன் (Pine) போன்ற அந்நிய மரங்களை ஜீரணிக்கக்கூடிய பாக்டீரியா நம் மண்ணில் இல்லை. இதனால் எந்தவித எதிர்ப்பும், கட்டுப்பாடுமின்றி அந்நிய மரங்கள் மிகவேகமாகப் பரவி வளர்கின்றன.

அவை நிலத்தடி நீரையும் மிக அதிக அளவுக்கு உறிஞ்சுவதால், நாட்டு மரங்களின் வளர்ச்சி தடைப்படுகிறது. குறிப்பாக, யூகலிப்டஸ், பைன் போன்ற மரங்களிலிருந்து விழும் இலைகளின் வேதிப்பொருள்களால் நாட்டுமரங்களின் விதைகள் முளைக்க முடியாமல் போகின்றன. புல்வெளிகள் வளரவும் இந்த மரங்கள் பெரிதாக அனுமதிக்காததால், பூச்சியினங்களுக்கான வாழ்விடங்களும் சேர்ந்தே அழிகின்றன. பூக்கள், பழங்கள் நிறைந்திருக்கும் நம் நாட்டுமரங்களைச் சார்ந்து வாழ்ந்த பறவையினங்கள், அந்நிய மரங்களில் இது போன்ற உணவாதாரங்கள் இல்லாததால் இடம்பெயர்கின்றன. இப்படி மேற்குத் தொடர்ச்சிமலையின் இயற்கை சமநிலைக்கே, இந்த அந்நிய மரங்கள் சவால் விட்டுக்கொண்டிருக்கின்றன” என்று பாதிப்புகளை அடுக்கினார்.

காட்டை அழிக்கும் அந்நியத் தாவரங்கள்... சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்...

மேலும் தொடர்ந்தவர், ``நாங்கள் ஒரேயடியாக அனைத்து அந்நிய மரங்களையும் அகற்றச் சொல்லவில்லை. நீதிமன்ற உத்தரவுகளின்படி குறைந்தபட்ச நடவடிக்கையையாவது இந்த அரசாங்கத்தை எடுக்கச்சொல்கிறோம். பரிசோதனை நடவடிக்கையாக வெவ்வேறு வனப்பகுதிகளில் ஒரு 1,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு அந்நிய மரங்களை அகற்றிவிட்டு, நாட்டுமரங்களை நட வேண்டும். அவ்வளவுகூட வேண்டாம்; அந்நிய மரங்களை அகற்றினாலே நம் நாட்டு மரங்கள் தானாகவே வளர்ந்துவிடும். அப்படித்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, வனத்துறை உதவியுடன் எங்கள் ‘லாங்கவுட்’ பகுதியில் சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில் அந்நிய மரங்களை நீக்கி, நாட்டுமரங்களை வளரச் செய்து சாதித்திருக்கிறோம். அரசாங்கம் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு. படிப்படியாக அந்நிய மரங்களை அகற்ற முன்வர வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

கிட்டத்தட்ட இதே கருத்தை தாவரவியல் ஆய்வாளர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி, தாவரவியல் பேராசிரியர் டி.நரசிம்மன் உள்ளிட்டோரும் தெரிவித்தனர்.

காட்டை அழிக்கும் அந்நியத் தாவரங்கள்... சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்...

இந்தக் கோரிக்கைகள், கருத்துகள், நீதிமன்றக் கண்டனங்களை முன்வைத்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் விளக்கம் கேட்டோம். ``அந்நியத் தாவரங்களை அகற்றுவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல; லட்சக்கணக்கான பரப்பளவில் இந்தத் தாவரங்கள் பரவிக்கிடக்கின்றன. உயர் நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவுப்படி, முதற்கட்டமாக, சோதனை அடிப்படையில் சுமார் 700 ஹெக்டேர் பரப்பளவில், சத்தியமங்கலம், முதுமலை, ஆனைமலை, தருமபுரி, திண்டுக்கல் மண்டலங்களிலுள்ள அந்நிய மரங்களை அகற்ற திட்டமிட்டிருக்கிறோம். குறிப்பாக, உன்னிச்செடிகள்(Lantana) 200 ஹெக்டேர், சீகை மரங்கள் 200 ஹெக்டேர், சீமைக் கருவேலம் 200 ஹெக்டேர், அந்நியக் கொன்றை வகைச்செடிகள் (Fabaceae) 100 ஹெக்டேர் என மொத்தம் 700 ஹெக்டேர் அந்நியத் தாவரங்களை அகற்றுவதற்காக சுமார் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறோம். இந்தப் பணிகளை முடிக்க குறைந்தது மூன்று மாதங்கள் தேவைப்படும். இந்தச் சோதனை முயற்சி வெற்றிபெற்றால், தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து மற்ற பகுதிகளிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவோம். மேலும், பழங்குடி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தரும் விதமாக, அந்த மக்களைக்கொண்டே உன்னிச்செடிகளை அகற்றும் பணியையும் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

சொல்வதோடு நிற்காமல், செய்து காட்டுங்கள் அமைச்சரே!