Published:Updated:

`தப்பித்து ஓடவில்லை... மொரீஷியஸில் படிக்கிறார்'- நீட் ஆள்மாறாட்ட வழக்கில் இர்ஃபான் சரணடைந்தார்!

``நீட் தேர்வு எழுதினாரா, இல்லையா? என்பதெல்லாம் தற்போது சொல்ல முடியாது. அது அனைத்தும் விசாரணையின் போதே தெரியவரும்.''

இர்ஃபான்
இர்ஃபான்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதாக தர்மபுரி மருத்துவக் கல்லூரி மாணவர் இர்ஃபானை சி.பி.சி.ஐ.டி போலீஸார் தேடி வந்த நிலையில் இன்று தன் உறவினர்களோடும், வழக்கறிஞரோடும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை, வரும் 9-ம் தேதி வரை சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இர்ஃபான்
இர்ஃபான்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உதித் சூர்யாவை அடுத்து படிப்படியாக பலரும் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதாகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தர்மபுரி மருத்துவக் கல்லூரி மாணவர் இர்ஃபானும் ஆள் மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்துள்ளதாக அவர் மீது கூட்டுச்சதி, மோசடி, ஆள் மாறாட்டம் என மூன்று வழக்குகள் பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் தேடி வந்தார்கள்.

இர்ஃபான் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர். அவரது தந்தை மருத்துவர் ஷஃபி. இவரை சி.பி.ஐ.டி., போலீஸார் கைது செய்தார்கள். இர்ஃபான் மொரீஷியஸ் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. அதையடுத்து இன்று நீதிமன்றத்திற்கு உறவினரோடும், வழக்கறிஞர் சீனிவாசனோடும் சேலம் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நீதிபதி சிவா முன்பு சரணடைந்தார். இர்ஃபானை வரும் 9-ம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதையடுத்து இர்ஃபான் சேலம் மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டார்.

வழக்கறிஞர் சீனிவாசன்
வழக்கறிஞர் சீனிவாசன்

இதுபற்றி இர்ஃபானின் வழக்கறிஞர் சீனிவாசன், ``இர்ஃபான் மொரீஷியஸில் உள்ள மருத்துவக் கல்லூரியில் கடந்த நவம்பர் மாதத்தில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது நீட் ஆள் மாறாட்டம் பிரச்னையில் அவரது தந்தை கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக மொரீஷியஸிலிருந்து இங்கு வந்திருக்கிறார். அவர் மொரீஷியஸுக்குத் தப்பித்தெல்லாம் ஓடவில்லை. இர்ஃபான் தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் படிக்கவில்லை.

நீட் தேர்வு எழுதினாரா, இல்லையா? என்பதெல்லாம் தற்போது சொல்ல முடியாது. அது அனைத்தும் விசாரணையின் போதே தெரியவரும். நீட் ஆள் மாறாட்ட சம்பவத்திற்கும் இர்ஃபானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று என்னிடம் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை சட்டபூர்வமாகச் சந்திக்கவும் தயாராக இருக்கிறார்'' என்றார்.