Published:Updated:

`சவால்களை எதிர்கொண்டால்தான் வெற்றி!’ - காஷ்மீர் எல்லையில் இருந்து எய்ம்ஸுக்குத் தேர்வான முதல் மாணவி

ராம் பிரசாத்

காஷ்மீரின் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்த சிறுமி எய்ம்ஸ் நடத்திய மருத்துவத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

Irmim Shamim
Irmim Shamim ( ANI )

‘இர்மிம் ஷமீம்’ (Irmim Shamim) என்ற மாணவி, காஷ்மீரில் வசிக்கும் குஜ்ஜார் இன மக்களின் மருத்துவக் கனவை சாத்தியப்படுத்தியிருக்கிறார். கடந்த ஜூன் மாதத்தில் எய்ம்ஸ் நடத்திய மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் எய்ம்ஸில் மருத்துவம் படிக்க இருக்கிறார். காஷ்மீர் எப்போதும் பிரச்னைகள் சூழ்ந்த பிரதேசமாகப் பார்க்கப்படுகிறது. ரஜோரி மாவட்டம், இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.

இவர் வசிக்கும் தனோர் கிராமம் எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ளது. தீவிரவாதிகளின் ஊடுருவல்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்கள் ஆகியவை இந்தப் பகுதியின் ஒன்று. போராட்டங்கள், கலவரங்கள், 144 தடை உத்தரவு, செல்போன், இணையச் சேவை துண்டிப்பு ஆகியவற்றால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிவரும். இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் இர்மிம் ஷமீம் தனது மருத்துவக் கனவை சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

 Kashmir
Kashmir

தனோர் கிராமத்தில் சரியான பள்ளிக்கூடங்கள் இல்லை. இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பள்ளியில்தான் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாகத் தினமும் நடந்தே பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். தற்போது மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றது அவரின் குடும்பத்தினரை மட்டுமல்லாமல் கிராம மக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் மகள் மருத்துவராகி ஜம்மு-காஷ்மீர் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என தங்களது விருப்பத்தையும் தெரிவித்துள்ளனர் ஷமீமின் பெற்றோர்.

“எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அந்தச் சவால்களை எல்லாம் எதிர்கொண்டு நாம்தான் போராட வேண்டும். அப்போதுதான் வெற்றி உங்களைத் தானாகத் தேடி வரும்” என்கிறார் இர்மிம் ஷமீம்.

இதுகுறித்து அவரின் உறவினர் ஷமீம் பேசுகையில், `எங்களது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஜம்மு-காஷ்மீர் சிறுமிகள் தங்களது திறமைகளை அனைத்துத் துறைகளிலும் வெளிக்காட்ட வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்களது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும்' எனப் பேசியிருக்கிறார்.

Irmim Shamim
Irmim Shamim
ANI

மாவட்ட வளர்ச்சி ஆணையர் ஆசாத் மாணவியின் முயற்சிக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். `அவருக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் செய்துதரப்படும்' எனவும் உறுதியளித்திருக்கிறார்.