Published:Updated:

“ஒரு கீலி வேணும்னு வந்திருக்கேன்!” - மரபு மாறாத இருளர் திருமணம்

இருளர் திருமணம்
பிரீமியம் ஸ்டோரி
இருளர் திருமணம்

பண்பாடு

“ஒரு கீலி வேணும்னு வந்திருக்கேன்!” - மரபு மாறாத இருளர் திருமணம்

பண்பாடு

Published:Updated:
இருளர் திருமணம்
பிரீமியம் ஸ்டோரி
இருளர் திருமணம்

கோவையின் பூர்வகுடிகள், இருளர் பழங்குடி மக்கள்தான். இருளர்களின் தலைவர், கோவன். அவர் வணங்கிய தெய்வம், கோனியம்மன். அது `கோவன்புத்தூர்’, `கோசர்புத்தூர்’ என்றெல்லாம் மருவி, `கோயம்புத்தூர்’ என்றானது. இப்போது கோனியம்மன், கோவை மாநகரில் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இருளர் பழங்குடிகள் கோவை நகரைவிட்டு விலகி, புறநகர்ப் பகுதிகளில் வசித்துவருகின்றனர்.

பல இனங்களிலும் இடங்களிலும், பாரம்பர்யப் பண்பாட்டுச் சடங்குகள் மறைந்தும் மறந்தும் போய்க்கொண்டிருக்கின்றன. இருளர்கள் அப்படியில்லை. இப்போதும் தங்களது சடங்கு, சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்துவருகின்றனர்.

இருளர்களின் திருமண முறை மிகவும் சுவாரஸ்யம் நிறைந்தது. கோவை ஆனைகட்டி மலை கிராமச் சுற்றுவட்டாரங்களில், இந்தப் பழக்க வழக்கங்களை அதிகமாகக் காண முடியும். விகடன் தீபாவளி மலருக்காக, இருளர்கள் திருமணச் சடங்குகளை ஆவணப்படுத்த முடிவு செய்தோம். ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளில், ஆனைகட்டி அருகேயுள்ள சீங்குழி கிராமத்தில் ஓர் இருளர் பழங்குடித் திருமணம் நடக்கவிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

“ஒரு கீலி வேணும்னு வந்திருக்கேன்!” - மரபு மாறாத இருளர் திருமணம்

மணமகன் பெயர் ரங்கசாமி பி.காம்., மணமகள் பெயர் ரங்கம்மாள் பி.பி.ஏ., என்று திருமண அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. ‘இரண்டு பேரும் பட்டதாரிகள். சடங்குகள், சம்பிரதாயங்கள் எந்த அளவுக்குப் பின்பற்றப்படும்’ என்ற சந்தேகத்துடன் சீங்குழிக்குச் சென்றோம். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம், வளைந்து வளைந்து செல்லும் சாலைகள், தென்னந்தோப்புகள், தோகை விரித்து தங்களது இருப்பை அறிவிக்கும் மயில்களின் அகவல் சத்தம், குளிர்ந்த காற்று எல்லாம் சேர்ந்து, அந்த அதிகாலைப் பொழுதை அழகாக்கின.

சீங்குழி கிராமத்தின் ஒரு சிறிய சாலையில், மிகச் சிறிய ஓட்டு வீடு முன்பு பந்தல் போடப்பட்டிருந்தது. அதுதான் மணமகன் இல்லம். திருமணம் நடப்பதும் அங்குதான். பந்தல், வெயில் படாமல் இருக்க டென்ட், சில சேர்கள், ஆங்காங்கே சில தோரணங்கள், பலூன்கள் என்று மிக மிக எளிமையாகக் காட்சியளித்தது வீடு.

கிராமத்தைச் சேர்ந்த வண்டாரி மருதன் என்பவரிடம் பேசினோம். “கல்யாணம் கட்ட முதல்ல மாப்பிள்ளயோட பட்டில இருந்து (பட்டி என்றால் ஊர்) மூப்பன் (ஊர்த் தலைவர்), குருதலை, வண்டாரி தலைமையில ஊரைக்கூட்டி பொண்ணோட பட்டிக்குப் போவோம். இதேமாதிரி அவங்களோட மூப்பன், குருதலை, வண்டாரி ஊரைக் கூட்டி நிப்பாங்க. நாங்க ஒரு தடியைக் கைல பிடிச்சுக்கிட்டுப் போவோம். அந்தத் தடியை அவங்க கைல குடுப்போம்.

நாங்க பேர் சொல்லியெல்லாம் கூப்பிட மாட்டோம். மாப்பிள்ளை, மாமன், மச்சான்னு தான் பேசிக்குவோம். ‘மச்சான் நீங்க எதுக்கு வந்துருக்கீங்க?’னு அவங்க கேட்பாங்க. ‘மச்சான் நான் துணையாளிய கூப்பிட்டு, தோள் பைய போட்டுட்டு, ஊரைக் கூட்டிட்டு வந்துருக்கேன்’னு பதில் குடுப்பேன். அதுக்கப்புறம்தான் அவங்க பாய் விரிச்சு, உக்காரவெச்சு காபி, டீ ஏதாவது குடுப்பாங்க. அவங்க திரும்பி, ‘மாமனே... மச்சானே... நீங்க எதுக்காக வந்தீங்க’னு கேப்பாங்க. ‘களநாடு கமுங்கு, மாநாடு இஞ்சி மஞ்ச, தென்னாடு தென்னந்தோப்பு, வடநாடு வாழக்காய் மாமனே... மச்சானே... ஒரு கீலி வேணும்னு வந்துருக்கேன்’னு நாங்க சொல்லுவோம். கீலின்னா வாழைக் கிழங்குனு அர்த்தம். பொண்ணக் கேட்கறதைத்தான் நாங்க இப்படிக் கேப்போம். ‘சரி... மாமனே... மச்சானே... தர்றோம்’னு சொல்லுவாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஒரு கீலி வேணும்னு வந்திருக்கேன்!” - மரபு மாறாத இருளர் திருமணம்

இது முடிஞ்சதும் சாப்பாடு கொடுப்பாங்க. அப்புறம் நாங்க குருப்பணம் கொடுப்போம். எங்களோடதுல இருக்க ஏழு சாதியும் சேர்ந்து மூப்பன் கைல காசு கொடுப்பாங்க. அது அப்படியே வண்டாரி, குருதலைனு பல கை மாறி கடைசியா எங்க குருவன் (ஊர் நல்லது கெட்டதுக்கு முன் நிற்பவரை குருவன், குருவத்தி என்றழைப்பர்) மூலமா, அவங்க குருவன் கைக்குப் போகும்.

‘இதுவரைக்கும் நாங்க தேனை பூ கண்ட மாதிரி, பூவை தேன் கண்ட மாதிரி இருந்தோம். இப்ப குரு அருளுக்கு, ஏழடி சாதி சேர்ந்து, ஆறு பணம் வெக்கிறோம்’னு சொல்லி அவங்க குருவன் கைல காசு குடுப்போம். அதுக்கப்புறம் எங்க மூப்பன், குருதலை, வண்டாரி, அவங்க மூப்பன், வண்டாரி, குருதலைக்கு பட்டி பணம் 101 ரூபாய் கொடுப்போம். அங்க இருந்து பொண்ண கூப்பிட்டு வர்றதுக்கு வரி மாதிரி ஒரு சடங்கு.

இந்த மாதிரி, பொண்ணு ஊருக்கு நாங்க ரெண்டு மொற போவோம். பையனோட வீடு வாசல் பார்க்கணும்னு அவங்க ஒரு மொற இங்க வருவாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி நாள், பொண்ணு இங்க வந்துரணும். பொண்ணு ஊர் தாசனூர். நேத்து நைட்டு நாங்க எல்லாம் போய்த்தான் பொண்ண அழைச்சுட்டு வந்தோம். பொண்ணு வெளியூர். அதனால, இந்த ஊர்ல அவங்களுக்கு யாராவது சொந்தக்காரங்க இருந்தா அங்க தங்கலாம். இல்லாட்டி மூப்பன், குருவன் வீட்லதான் தங்க முடியும். வேற எங்கயும் தங்கக் கூடாது. கல்யாணத்தன்னிக்கு காலைல எந்திரிச்சோன மாப்பிள்ள வீட்டு முன்னாடி பொண்ணு வாசல் தெளிச்சு, கோலம் போடணும். தாலி கட்டறதுக்கு முன்னாடி தாய்மாமன், மூப்பன், வண்டாரி, குருதலை, குருவன் எல்லாரும் சேர்ந்து 1,001 ரூபாய் பரிவு பணம் வெப்போம். அது பொண்ணுக்கு நாங்க பாசமா காசு குடுக்கற சடங்கு.

அதுக்கப்புறம், மூப்பனோட வீட்ல இருந்து பொண்ணு குடம் எடுத்துட்டு ஆத்துக்குப் போய் தண்ணி எடுத்துட்டு வரணும். அப்ப மாப்பிள்ளை பையனும் கைல வில்லோட கூட போவாரு. இதுதான் எங்களோட சூரிய வணக்க சடங்கு. கடைசியாக ஊர்க்காரங்க, தாய்மாமன், உறவுக்காரங்க, சாதிக்காரங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து தாலியப் பிடிச்சுக் கொடுப்போம்” என்று முடித்தார்.

முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டதால், அனைவரும் பிஸியாகிவிட்டனர். “டைம் ஆகிட்டே இருக்கு. இன்னும் பொண்ணு வரலயா?’ என்று மாப்பிள்ளை ரங்கசாமி சற்றே டென்ஷன் ஆனார். சரியாக 9:15 மணிக்கு சிரித்துக்கொண்டே என்ட்ரி கொடுத்தார் மணமகள் ரங்கம்மாள். அதன் பிறகு மாப்பிள்ளை சற்று கூல் ஆனார். மூப்பன் வீட்டிலிருந்து குடம் எடுத்தனர். குடம் சரியாக நிற்பதற்காக மணமகள் தலையில் ஒரு வளையத்தை வைத்தனர் (மலைகளில் கிடைக்கும் வெத்து என்ற கொடியால் செய்யப்படும் வளையம்). பிறகு குடத்துக்குள் ஒரு மரக்கரண்டியைப் போட்டு மணமகள் தலையில் வைத்தனர். மணமகன் கையில் ஒரு வில் கொடுக்கப்பட்டது. அதைத் தோளில் போட்டுக்கொண்டு மணமகளுடன் ஆற்றை நோக்கி நடந்தார்.

“ஒரு கீலி வேணும்னு வந்திருக்கேன்!” - மரபு மாறாத இருளர் திருமணம்

முகூர்த்த நேரம் நெருங்கியதால், ஆற்றுக்குச் சென்றால் தாமதமாகிவிடும் என்று அருகில் இருந்த ஒரு குழாய்க்குச் சென்று தண்ணீர் பிடித்தனர். மணமகள் அருகிலிருந்து ஊர் குருவத்தி அவரை வழிநடத்திக்கொண்டிருந்தார். குடத்திலிருந்து கரண்டியால் சிறிது நீரை வெளியே தெளித்து சாமி கும்பிட்டுவிட்டு, மணமகளிடம் குடத்தைக் கொடுத்தார். மணமகன் தன் கையில் இருந்த வில்லைவைத்து நான்கு திசைகளிலும் நான்கு கற்களைப் பறக்கவிட்டார். பிறகு இருவரும் ஜோடியாக வானத்தைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு நடைபோட்டனர்.

மணமகன் ஊர் குருதலை, பெரிய குச்சியை நீட்டி அவர்களைத் தடுத்தார். வண்டாரி, “கொஞ்சிக் கொஞ்சி நட நடந்து... கோண தடியை கைல பிடிச்சு... ஊருக்கு ஒருவாரு... சாதிக்கு ஒருவாரு... வழிவிடு தங்க மாப்பிள்ளை” என்று பாடல் ஒன்றைப் பாடி குச்சியைத் தட்டிவிட்டார். இப்படி குருதலை மூன்று முறை குச்சியை நீட்டுவதும், வண்டாரி அதே பாடலைப் பாடி குச்சியைத் தட்டிவிடுவதும் முடிந்து மணமகன் வீட்டுக்கு வந்தனர். அங்கு மணமகன், மணமகள் இருவரின் தாய்மாமன்கள் வந்து மாலை எடுத்துக் கொடுத்து மணமக்களுக்குப் பொட்டு வைத்தனர்.அதேபோல மணமக்களும் தாய்மாமன், தாய், தந்தை என்று பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தினர். இறுதியாக ஊர்ப் பெரியவர்கள், சாதிக்காரர்கள் இணைந்து தாலியைப் பிடித்து மணமகன் கையில் கொடுத்தனர்.

“கோண... கோண தடி பிடித்து... கொஞ்சிக் கொஞ்சி நட நடந்து... சின்னச் சின்ன பூ பூத்து... செம்மங்கல காய் காய்த்து... மாந்துருவத்துல மதுரை காளி பார்க்க... வேலூரு சுண்ணாம்பு.. தாமரைக் குளத்துல கொடி வெடி பூ பூத்து... காத்தது களி வேங்கை... பூத்தது புலி வேங்கை...வேங்கள பல தாலி... யாரோட தாலி... தேவரோட தாலி... யார் செஞ்ச தாலி... பொன் தட்டன் செஞ்ச தாலி... ஊரு கண்டு... சாதி கண்டு... கட்ட குடியான மாங்கல்யமானது சக்தி முடி... சிவன் முடி... பெருமாள் முடி... மூணு முடி...” என்று வண்டாரி பாடலை அழுத்தி முடிக்க, மணமகன் தாலிகட்டி முடித்தார்.

இதுதான் இருளர்களின் திருமணம். புரோகிதர் இல்லை. ‘மாங்கல்யம் தந்துனானேனா’ எல்லாம் இல்லை. தாலிகட்டி முடிந்தவுடன் ஊர்ப் பெரியவர்கள், உறவுக்காரர்கள் சுற்றி வட்டமாக அமர்ந்துகொள்கின்றனர். மணமக்கள் இருவரும் நடுவே சென்று காலை சற்றுக் கோணலாக வைத்து தரையில் மண்டியிட்டு அனைவரது கால்களையும் தொட்டு ஆசிபெற்றனர். கடைசியாக தேங்காய் உடைத்து, கற்பூரம் காண்பித்து, பொட்டுவைத்தனர். இருளர்கள் தாம்பூலத்தட்டு தொடங்கி அனைத்துச் சடங்குகளுக்கும் தேங்காய், வெற்றிலை, பழங்களுடன் மறக்காமல் புகையிலை வைக்கின்றனர். அதேபோல, ஒருவருக்கு ஒருவர் மரியாதை செய்யும்போது இரண்டு கைகளையும் தரையில் தொட்டு, கைகளை இறுக்கிப் பிடித்து வணக்கம் வைக்கின்றனர்.

இந்தச் சடங்கு முறைகள் குறித்து மணமகன் ரங்கசாமியிடம் கேட்டோம். “நான் கோவை அரசுக் கல்லூரியில டிகிரி முடிச்சுட்டு, ஒரு கம்பெனில வேலை பார்த்துட்டு இருக்கேன். இது லவ் கம் அரேஞ்ச்டு மேரேஜ். இந்தச் சடங்குகளைப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா, பெரியவங்க சொல்றதைக் கேட்டு நடப்போம். எந்தக் காரணத்துக்காகவும் அதை மீற மாட்டோம்” என்றார்.

ரங்கசாமியின் தாய் ரங்கம்மாளிடம் பேசினோம். “அந்தக் காலத்துல இருந்து இந்தச் சடங்குதான். ஏதாவது நேர்த்திக்கடன்னா கோயிலுக்குப் போவோம். மத்தபடி சடங்குகள்ல ஊர்ப் பெரியவங்க ஆசீர்வாதம்தான் முக்கியம். அதனால, அவங்களை வெச்சே எல்லாச் சடங்கையும் பண்றோம்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

“ஒரு கீலி வேணும்னு வந்திருக்கேன்!” - மரபு மாறாத இருளர் திருமணம்

இருளர்கள் சடங்குகளின் அர்த்தம் குறித்து, கண்டிவழி கிராமத்தின் வண்டாரி கடலன் விவரித்தார். “மூப்பன், வண்டாரி, குருதலை எல்லாம் பரம்பரை பரம்பரையாத்தான் வரும். புதுசா யாரும் அப்படி ஆக முடியாது. இருளர்கள்ல ஏழு பிரிவு இருக்கு. ஒரே பிரிவுல கல்யாணம் பண்ணினா அண்ணன், தங்கை முறை ஆகிடுங்கறதால, வேற சாதிலதான் கல்யாணம் கட்டுவாங்க. குடத்துல தண்ணி எடுத்துட்டு வர்றப்ப, வேற ஊருங்கறதால குருதலை குச்சி வெச்சு தடுப்பாரு. ‘அட... நம்ம ஊர்ல கல்யாணம் கட்டிக்கத்தான் வராங்க... சமாதானமா வழிவிடுங்க’னு சொல்றதுக்கு ஒரு பாட்டு பாடுவாங்க. கல்யாணம், காட்சி எதுன்னாலும் குருவன் குருவத்திதான் முதல்ல நிப்பாங்க. கல்யாணத்தப்ப மாப்பிள்ள, பொண்ணுக்கு நல்லது கெட்டது சொல்லித் தருவாங்க. கல்யாணம் முடிஞ்சதும் குருவத்திதான் அடைப்பு கல் வெச்சு சமைக்கணும். பொண்ணு தண்ணி எடுக்கறப்ப காக்கா, குருவி அதை குடிச்சுறக் கூடாதுனு மாப்பிள்ளை வில் எடுத்துட்டுப் போவார். நாலு திசைல இருந்தும் பிரச்னை வரும். அதைச் சமாளிக்கணும்கறதுக்காக நாலு திசையும் அம்பு விடணும். இப்ப அம்பு எல்லாம் வெச்சுக்கறது இல்லை. அதனால கல் விட்டாலே போதும்.

ஊர்ப் பெரியவங்க சம்மதிச்சா, தாலி கட்டாமலும் சேர்ந்து வாழலாம். ஆனா, மனைவி இறந்துட்டா அவங்க கால் கட்டை விரல்ல கணவன் நூல் சுத்தணும். கணவன் இறந்துட்டா. மனைவி அவங்க கால்ல நூல் சுத்தணும். அதே மாதிரி, சடங்குக்காக வளையல் உடைச்சு, பொட்டெல்லாம் அழிப்பாங்க. தாலியை எடுத்தே ஆகணும். நல்லது கெட்டதுன்னா நம்மளச் சுத்தி இருக்கற மனுசங்கதான் வருவாங்க. அதனாலயே, அவங்களைவெச்சுதான் நாங்க எல்லாம் பண்ணுவோம். வேற ஒண்ணுமில்லை சாமி’’ என்று இயல்பாக முடித்தார்.