Published:Updated:

அமெரிக்கா: உண்மையில் வசதியான நாடா? பெரியண்ணன் நாட்டில் ஏழைகள் - மர்மங்களின் கதை | பகுதி 6

மர்மங்களின் கதை

அமெரிக்காவின் கனவு வாழ்க்கையில் அனைவருக்கும் வீடு இருக்கும். கார் இருக்கும். உடுத்தும் உடை இருக்கும். உணவு இருக்கும். சுகபோகம் நிறைந்திருக்கும். ஆனால் அனைத்துமே கடனில் இருக்கும்.

அமெரிக்கா: உண்மையில் வசதியான நாடா? பெரியண்ணன் நாட்டில் ஏழைகள் - மர்மங்களின் கதை | பகுதி 6

அமெரிக்காவின் கனவு வாழ்க்கையில் அனைவருக்கும் வீடு இருக்கும். கார் இருக்கும். உடுத்தும் உடை இருக்கும். உணவு இருக்கும். சுகபோகம் நிறைந்திருக்கும். ஆனால் அனைத்துமே கடனில் இருக்கும்.

Published:Updated:
மர்மங்களின் கதை

-  ஆர்.எஸ்.ஜெ

2017-ம் ஆண்டு. நவம்பர் மாதத்தின் ஓர் இரவு. (பிலேடெல்ஃபியா)Philadelphia நெடுஞ்சாலை.

பிலேடெல்ஃபியாவில் இருந்து நியூ ஜெர்சிக்குச் சென்று கொண்டிருந்தார் கேட் மெக்க்ளூர். யாருமற்ற வெளியில் சட்டென கார் வேகம் குறையத் தொடங்கியது. எரிபொருள் குறைந்திருந்தது. சுற்றுவட்டாரத்தில் எரிபொருள் நிலையம் எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை. கார் ஓடுவது இனி கேட்டின் கையிலும் இல்லை. தட்டுத் தடுமாறி நிற்கும் நிலைக்கு கார் சென்றுகொண்டிருந்தது. நெடுஞ்சாலை என்பதால் வேறு வழியின்றி காரை சாலையோரத்துக்குக் கொண்டு செல்கிறார் கேட். கார் போராடித் தன் மூச்சை நிறுத்தியது. வாகனங்கள் மின்மினிகளாக நெடுஞ்சாலையில் பறந்துகொண்டிருந்தன. மொபைல்போனும் இறந்திருந்தது. நடுநிசி கேட்டை பதட்டப்படுத்திக்கொண்டிருந்தது.

அமெரிக்கா
அமெரிக்கா

அமெரிக்க நெடுஞ்சாலைகளின் இரவுகள் அச்சம் நிறைந்தவை. மனித அறிவுக்கு உட்பட்ட எல்லா குரூரங்களின் வாய்ப்புகளும்கொண்டவை. ஏதும் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருக்க மட்டுமே முடிந்தது கேட்-டால். திடுமென சாலையோரத்தில் ஓர் அரவம். எலும்பும் தோலுமாக தாடி நீண்டு ஒரு மனிதன் காரை நோக்கி வந்துகொண்டிருந்தான். சப்த நாடியும் ஒடுங்கியது கேட்டுக்கு. தாடி மனிதன் காரை நெருங்கினான். சாலையோரவாசிபோல்தான் அவனும் இருந்தான். எது நடந்தாலும் உதவிகூடக் கோர முடியாத சூழலில் அமர்ந்திருந்தார் கேட். காரருகே வந்தவன் குனிந்து, கார் கண்ணாடி வழியாக கேட்டைப் பார்த்தான். `கதவைப் பூட்டிக்கோங்க... இங்கே திருட்டு பயம் ஜாஸ்தி!’ கேட் சட்டெனக் கதவைப் பூட்டிக்கொண்டார். தாடி மனிதன் காரைவிட்டு அகன்றான். திரும்ப வருவானா என்றெல்லாம் தெரியவில்லை. பயம் மட்டும் நெஞ்சை அரித்துக்கொண்டிருந்தது. சென்றவன் எங்காவது ஒளிந்துகொண்டு நோட்டமிடுகிறானா?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சடாரென தாடி மனிதன் வெளிப்பட்டான். கையில் ஒரு சிவப்பு கேன் இருந்தது. அவன் யார் என்னவென்றேல்லாம் கேட்டுக்குத் தெரியாது. ஆனால் கேட்டின் கார் கிளம்புவதற்காகத் தன் கைவசம் இருந்த கடைசி 20 டாலர் பணத்தைக்கொண்டு எரிபொருள் வாங்கி வந்திருந்தான். தாடி மனிதனின் உதவியில் கேட் பத்திரமாக அந்த இரவு வீடு சேர்ந்தார். ஓர் அற்புதக் கதையாக பிற்காலத்தில் பேசப்பட்ட அந்தச் சம்பவத்தில் வந்த தாடி மனிதனின் பெயர் ஜானி பாப்பிட் ஜூனியர். முன்னாள் ராணுவ வீரர். எந்தத் தன்னலமும் கருதாமல் கேட்டுக்கு பாப்பிட் உதவிய சம்பவம் அமெரிக்காவையே நெகிழவைத்தது.

சாலையோரவாசிகளைப் பற்றிய அமெரிக்காவின் பொது பிம்பத்தை அசைத்துப் பார்த்தது. அமெரிக்காவைப்போலவே கேட்டுக்கும், அவர் கணவர் மார்க் டி எமிகோவுக்கும் (Mark D'Amico) பாப்பிட் மீது அபிமானம் பிறந்தது. அமெரிக்காவின் சாலையோரவாசிகளின் முகமாக பாப்பிட் ஊடகங்களில் கொண்டாடப்பட்டார். சாலையோரவாசத்திலிருந்து பாப்பிட்டை மீட்டு தங்களின் கைம்மாறைச் செய்ய கேட்டும் டி எமிகோவும் உறுதி பூண்டார்கள். பாப்பிட்டுக்கென ஒரு வீடும் நல்லதொரு வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்க விரும்பினர்.

அமெரிக்கா
அமெரிக்கா

கேட்டும் டி எமிகோவும் இணையத்தில் நிதியுதவி திரட்ட அழைப்பு விடுத்தனர். பாபிட்டுக்கு நல்லதொரு வாழ்க்கையும் கிடைக்கும் என்ற எண்ணத்தை முன்வைத்து நிதி திரட்டத் தொடங்கினார்கள். நிதித் தேவையாக அவர்கள் அறிவித்திருந்தது 10,000 டாலர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை அமெரிக்க மக்கள் தாண்டிச் சென்றனர். சில வாரங்களிலேயே 4,00,000 டாலர் நிதி திரண்டது. இணையம்வழி திரண்ட மனித நேயத்தை ஊடகங்கள் கொண்டாடின. பல சாலையோரவாசிகளுக்கு பாப்பிட் பெரும் நம்பிக்கையாக இருந்தார். கேட்டையும் டி எமிகோவையும் மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால், சாலையோரவாசிகளின் தேவை வெறும் நிதியோ கருணையோ அல்ல என்பதை அந்தச் சம்பவம் வெகு சீக்கிரமே உணர்த்தவிருந்தது.

வசதியான நாடா அமெரிக்கா?

மேற்கு நாடுகளிலேயே வசதியான நாடாக அறியப்படும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் வாழ்க்கைச்சூழல் உலகின் எல்லா மக்களுமே அடைய விரும்பும் கனவாக இருக்கிறது. Freedom, American Dream என்றெல்லாம் அமெரிக்க வாழ்க்கை பல ஆபரணங்களையும் அடைமொழிகளையும்கொண்டது. அதே அமெரிக்காவில்தான் வீடுகளுக்குக்கூட வழியின்றி சாலையோரம் வசிக்கும் பெரும் கூட்டமும் இருக்கிறது.

ஜானி பாப்பிட் ஜூனியரைப் போன்ற பல சாலையோரவாசிகளுக்கு அமெரிக்கா சூட்டியிருக்கும் பெயர் Homeless. `ஹோம்லெஸ் மக்கள்’ என அழைக்கப்படும் சாலையோரவாசிகள் யார் தெரியுமா... அமெரிக்காவின் ஏழைகள்!

அமெரிக்கா
அமெரிக்கா
AP

சாலையோரவாசம் அமெரிக்காவில் மிகச் சாதாரணமாக காணப்படுவதென்றாலும் அதிகமாகத் தொடங்கியது 1930 -களின்போதுதான். 1929-ம் ஆண்டு அமெரிக்க பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. வரலாறு காணாத பொருளாதாரப் பின்னடைவை அமெரிக்கா சந்தித்தது. பங்குச் சந்தையைச் சார்ந்து இயங்கிய தொழில்களும் நிறுவனங்களும் கடுமையான முடக்கத்துக்கு உள்ளாகின. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பெரும் பகுதி மக்கள் வேலைகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வீட்டு உரிமையாளர்களும் வாடகையை அளவுக்கதிகமாக உயர்த்தினார்கள்.

அமெரிக்காவின் கனவு வாழ்க்கையில் அனைவருக்கும் வீடு இருக்கும். கார் இருக்கும். உடுத்தும் உடை இருக்கும். உணவு இருக்கும். சுகபோகம் நிறைந்திருக்கும். ஆனால் அனைத்துமே கடனில் இருக்கும். வங்கிகள் தங்களின் வரவை மக்கள் அடைக்கப்போகும் நாளை முன்வைத்தே சம்பாதித்துவந்தன. வங்கி, வீடு என எல்லா இடங்களிலும் கடன் என்ற வார்த்தை மட்டுமே இருக்கும். கத்தையாக நாமே நம் கையில் ஸ்பரிசித்து உணரும் பணம் எங்குமே இருக்காது.

இல்லாததை நம்பி இல்லாததைக் கொடுக்கும் கதை!

பலமுறை வரலாற்றில் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தாலும் வால்ஸ்ட்ரீட்டில் இயங்கும் நிறுவனங்கள் திவாலாகாமல் காப்பாற்றுவதை மட்டுமே தன் பணியென அமெரிக்க அரசு செய்துவருகிறது. ஒரே தவற்றைத் திரும்பத் திரும்ப செய்து, அவற்றிலிருந்து தப்பிக்கும் வழியை மட்டுமே விதவிதமாகத் தேடுகிறது. அதிலொரு விதம்தான் அமெரிக்கா சந்திக்கும் பொருளாதாரப் பின்னடைவைப் பிற நாடுகளுக்கும் பரப்புவது. எந்தப் பின்னடைவின்போதும் தெருவுக்குத் தள்ளப்படும் அமெரிக்கர்களைப் பற்றி அரசு கண்டுகொண்டதே இல்லை. அது பாப்பிட்டை போன்ற முன்னாள் ராணுவ வீரராக இருந்தாலும்கூட. 10,000 டாலர் தேவையெனத் தொடங்கிய நிதித் தேடல் 4,00,000 டாலரைக் குவித்த பிறகு தொடங்கியது பிரச்னை.

அமெரிக்கா
அமெரிக்கா

2018-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஒரு பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்தார் பாப்பிட். பணத்தில் தனக்கு மிகச் சொற்பமான பங்கு வழங்கப்பட்டதாகப் புகார் தெரிவித்தார். மீண்டும் தெருவுக்கு வந்துவிட்டதாகச் சொல்லியிருந்தார். போதைப் பழக்கமும் தொடர்ந்திருக்கிறது. திரண்ட நிதியில் கேட்டும் டி எமிக்கோவும் பாப்பிட்டுக்கு வீடு வாங்கிக் கொடுக்கவில்லை. உபயோகிக்கப்பட்ட ஒரு வேனை மட்டும் வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். இருவரும் இருக்கும் வீட்டுக்கு அருகே ஜூன் மாதம் வரை அந்த வாகனத்தில் பாப்பிட் தங்கி வாழ்க்கை ஓட்டலாம் எனச் சொல்லியிருக்கிறார்கள். அதேநேரத்தில், டி எமிக்கோவும் கேட்டும் புது BMW கார் வாங்கியிருக்கிறார்கள். வெளியூர்களுக்கு உல்லாசப் பயணங்கள் சென்றிருக்கின்றனர். சூதாட்டங்கள் விளையாடியிருக்கின்றனர். பேட்டி வெளியானதும், கேட்டின் தரப்பிலிருந்து பதில் தரப்பட்டது. பாப்பிட்டுக்கு கொடுக்கப்பட்ட 25,000 டாலர் பணத்தை அவர் சில வாரங்களிலேயே போதை மருந்துக்குச் செலவழித்து விட்டார் எனக் குற்றம்சாட்டப்பட்டது.